முன்னோக்கு

ஜேர்மனி இந்தோ-பசிபிக் பகுதியில் தனது படைபலத்தை காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ஃபிரிகேட் பயர்ன் (பவேரியா) திங்கள்கிழமை முதல் இந்தோ-பசிபிக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஜேர்மன் பிரிகேட் ஃபயர்ன்

30,000 கடல் மைல்களுக்கு மேல் மொத்த பயணத்துடன் மேற்கொண்டிருக்கும், இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஜேர்மன் கடற்படையின் மிக விரிவான ஒன்றாகும். பயர்ன் போர்க்கப்பல் வடகடல் மற்றும் ஆங்கிலக் கால்வாய் வழியாக வடகிழக்கு அட்லாண்டிக் வழியாகப் பயணித்து, ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக மத்திய தரைக்கடல் கடலுக்குள் சென்றுள்ளது. அங்கிருந்து, அது சூயஸ் கால்வாய் மற்றும் செங்கடல் வழியாக இந்தியப் பெருங்கடல் ஊடாக மேற்கு பசிபிக் வரை தொடரும். இலையுதிர்காலத்தில் தனது இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பயணத்தின் மிகவும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக அபாயகரமான பகுதி அது திரும்பிவரும் பாதையாகும். இந்த போர்க்கப்பல் தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக திரும்பவுள்ளது. இப்பகுதி, அதன் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக, 'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பெருநாடி' என்று அழைக்கப்படுகிறது.

தென் சீனக் கடல், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ தயாரிப்பின் மையத்தில் உள்ளது. ஜனாதிபதி பைடெனின் கீழ், வாஷிங்டன் தனது ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது, தென் சீனக் கடலில் சீனாவால் உரிமை கோரப்பட்ட கடலில் 'கடல்வழி போக்குவரத்திற்கான சுதந்திரத்தை' பாதுகாப்பது என்ற பெயரில் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்துவதோடு, ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளடங்கலான பல அடர்த்தியாக மக்கள் வாழும் தீவுகளின் கரையோரங்களில் தாக்குதல் ஏவுகணைகளை நிறுவத் தயாராகி வருகிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஜேர்மனியின் தலையீடு இப்பிராந்தியத்தில் போரின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதில் ஒரு புதிய கட்டத்தையும் தொடங்குகிறது.

வில்ஹெல்ம்ஹாவன் (Wilhelmshaven) நகரிலிருந்து பயர்ன் புறப்படும் நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் அன்னெகிரேட் கிராம்ப்-கரென்பவர் (Annegret Kramp-Karrenbauer), பிராந்தியத்தில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தார். 'இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய வர்த்தகராகவும், ஏற்றுமதியாளராகவும் இருப்பதால் சுதந்திர வர்த்தக வழிகளைப் பாதுகாப்பதில் எங்களுக்கு வலுவான ஆர்வம் உள்ளது' என்று அவர் அறிவித்தார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஜேர்மனியின் தலையீடு 'எதற்கும் அல்லது யாருக்கும் எதிரானது அல்ல' என்று கிராம்ப்-கரென்பவர் உறுதியளித்த போதிலும், அவரது பேச்சு சீனா மீதான நேரடித் தாக்குதல் ஆகும். 'செய்தி தெளிவாக உள்ளது, எங்கள் நலன்கள் மற்றும் மதிப்புகளுக்காக நாங்கள் கொடியை உயர்த்துகிறோம்,' என்று அவர் கூறினார். இது 'முக்கியமானது', ஏனென்றால் 'இந்தோ-பசிபிக்கில் உள்ள எங்கள் பங்காளிகளுக்கு கடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடல் பாதைகள் இனி பாதுகாப்பாக இல்லை என்பது ஒரு உண்மை.' 'வலிமையானவர்களின் சட்டத்தின் அடிப்படையில் பிராந்திய உரிமைகோரல்கள் செய்ய முயல்வதை அனுபவம் காட்டுகிறது' என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் பெய்ஜிங்கை நேரடியாக அச்சுறுத்தி, 'நாங்கள் சீனாவுடன் ஒத்துழைக்கலாம், எங்களால் முடிந்த இடத்தில் பின்வாங்குவோம். ஏனெனில் சர்வதேச சட்டத்தை புறக்கணித்து, எங்கள் மீதும் எமது பங்காளிகளின் மீதும் விதிமுறைகளின் மீது புதிய சட்டங்களை திணிக்க முயற்சிக்கும் எவரையும் நாங்கள் உறுதியாக எதிர்ப்போம். புயல்காற்று கடினமாக இருந்தாலும், அதற்கு எதிராக எங்கள் படகுகளை எவ்வாறு செலுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பாதையிலிருந்து எம்மை திசை திருப்ப நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இந்த 'பாதை' எதைக் கொண்டுள்ளது என்பதை கிராம்ப்-கரென்பவர் வெளிப்படையாகக் கூறினார். இந்த பயணத்தின் மூலம், 'இந்தோ-பசிபிக் கோட்பாட்டில் ஜேர்மன் அரசாங்கம் வகுத்ததை நடைமுறையிலும் வெளிப்படையாகவும் படையினர் செயல்படுத்துகின்றனர்,' என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 2020 இல் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மூலோபாயக் கட்டுரை இந்தோ-பசிபிக் '21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச ஒழுங்கமைப்பை உருவாக்குவதற்கான திறவுகோல்' என்று அறிவித்தது. இது பிராந்தியத்தில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்ற ஜேர்மனியின் கோரிக்கையையும் இது தெளிவாக வரையறுத்துள்ளது. 'இமயமலையும் மலாக்கா நீரிணையும் நீண்ட தூரத்தில் இருப்பதாக தோன்றலாம். ஆனால் வரவிருக்கும் தசாப்தங்களில் நமது செழிப்பு மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கு, குறிப்பாக இந்தோ-பசிபிக் அரசுகளுடன் நாம் எவ்வாறு ஒத்துழைக்கிறோம் என்பதைப் பொறுத்தது. 'உலகளவில் செயலூக்கம்மிக்க ஒரு வர்த்தக நாடான' ஜேர்மனி 'ஒரு பார்வையாளரின் பாத்திரத்துடன் தன்னை திருப்திப்படுத்திக்கொள்ள முடியாது.'

கிராம்ப்-காரென்பவரின் வல்லரசு உரையானது, 'வில்ஹெல்ம்ஹாவன் முதல் மத்திய தரைக்கடல் வழியாக இந்தியப் பெருங்கடல் வரை, தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் வரை, இந்தோ-பசிபிக் இராணுவ நடவடிக்கைகளுக்கான நிலைநிறுத்தம் [Indo-Pacific Deployment] ஜேர்மனி எவ்வாறு பொறுப்பேற்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 'பணத்தின் அடிப்படை முக்கியத்துவம்' 'வரும் ஏழு மாதங்களுக்கும் அப்பால்' செல்கிறது. இது 'இந்த விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு மற்றும் கடல்மீது அதிகரித்துள்ள மூலோபாய முக்கியத்துவத்திற்கான ஜேர்மனியின் சுறுசுறுப்பான ஈடுபாடு' ஆகியவற்றைக் குறிக்கிறது.

இது, தென்சீனக் கடலில் அணு ஆயுத சீனாவை எதிர்கொள்ளவும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் இராணுவவாத மரபுகளில் தன்னை ஒரு கடற்படை மற்றும் உலக சக்தியாக நிலைநிறுத்தவும் பேர்லினின் பைத்தியகரமான பெரும் திட்டமாகும்.

ஜூலை 27, 1900 அன்று, ஜேர்மனியின் கைசர் வில்ஹெல்ம் II, பிரேமன்ஹாவன் நகரில் அவரது 'ஹூன் உரையை' (Hun Speech) உரையை நிகழ்த்தினார். அவ்வவுரையில் சீனாவில் பாக்ஸர் கிளர்ச்சியை கொடூரமாக ஒடுக்குவதற்காக அணிதிரட்டப்பட்ட ஜேர்மன் கிழக்கு ஆசியா படைகள் புறப்படும் சந்தர்ப்பத்தில், 'முப்பது ஆண்டுகால விசுவாசமான அமைதியான உழைப்பின்' போக்கில் ஜேர்மன் இராணுவம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

ஜேர்மனியின் அரச தலைவர், சீனா 'தேசங்களின் சட்டத்தை முறியடித்தது' என்றும் 'உலக வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தூதரின் புனிதத்தையும், விருந்தோம்பலின் கடமைகளையும் கேலி செய்தது' என்றும் குற்றம் சாட்டினார். “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் அட்டிலாவின் கீழ் ஹூன்கள் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கினர். இன்றும் அவர்கள் வரலாறு மற்றும் மரபுவழியாக வலிமை வாய்ந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். அதேபோல், ஒரு ஜேர்மானியரை அச்சுறுத்துவதுபோல் பார்க்கும் தைரியம், சீனாவில் எந்த சீனருக்கும் இல்லாத வகையில் ஜேர்மன் என்ற பெயர் உங்களால் உறுதிப்படுத்தப்படும்,” என்று வில்ஹெல்ம் II அந்த இழிபுகழ்பெற்ற அச்சுறுத்தும் உரையில் கூறினார்.

முதல் உலகப் போருக்கு முன்னோடியாக இந்த ஆக்கிரமிப்பு இருந்தது. பாக்ஸர் கிளர்ச்சிக்கு எதிரான தலையீடு, ஆரம்பத்தில் ஒரு கூட்டு நடவடிக்கையாகத் தொடங்கப்பட்டு பின்னர் ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான மோதல்களை தீவிரப்படுத்தியது. ஆகஸ்ட் 1914 இல் உச்சகட்டத்தையடைந்த உலக வரலாற்றில் அக்காலகட்டத்தில் மிகப் பெரிய மக்கள் படுகொலையாக இருந்தது. ஜேர்மன் பேரரசு முந்தைய ஆண்டுகளில் ஒரு பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பாக கடற்படையில் கவனம் செலுத்தும் 'கடற்படை சட்டங்கள்' என்று அழைக்கப்படுவதும் உள்ளடங்குகிறது.

ஆளும் வர்க்கம் மீண்டும் இந்த நோக்கத்திற்காக இயங்குகிறது. கூட்டரசாங்கத்தின் தற்போதைய ஆயுதங்கள் தொடர்பான அறிக்கையில் பல போர்க்கப்பல்களை வாங்குவது அடங்கும். 180தர நான்கு பல்நோக்கு கப்பல்களைக் கட்டுதல், மேலும் இரண்டை வாங்குவதற்கான விருப்பம், பாடன்-வூர்ட்டெம்பேர்க் 125தர கடற்படையை சேவையில் ஈடுபடுத்தல், ஐந்து 130தர வழித்துணைகப்பல்கள் மற்றும் இரண்டு 212தர பொதுவான வடிவமைப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை சேவையில் ஈடுபடுத்தல் இதில் அடங்கும்.

இந்த மறுஆயுதமயமாக்கலுக்கான செலவு பிரம்மாண்டமானது. நான்கு பல்நோக்கு கப்பல்களை வாங்குவதற்கு மட்டும், 5.27 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போரின் போதான பாரிய கடற்படை ஆயுத உந்துதலுக்குப் பின்னர் கடற்படையின் மிகப்பெரிய திட்டமாக அமைகிறது. மேலும் இது ஆரம்பம் மட்டுமே. மார்ச் 2019 இல், கிராம்ப்-கரென்பவரரும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் ஜேர்மனியின் சொந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்கும் திட்டத்திற்கு ஆதரவாக பேசினர்.

2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதற்கான புறநிலை சக்திகளை பகுப்பாய்வு செய்து, ஒரு தீர்மானத்தில் அதன் தாக்கங்கள் குறித்து எச்சரித்தது. முன்னாள் வெளியுறவு அமைச்சரும் தற்போதைய ஜேர்மன் ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கூறிய சில மாதங்களுக்குப் பின்னர், ஜேர்மனி 'உலக அரசியல் பற்றி ஓரத்திலிருந்து கருத்து தெரிவிப்பதிலும் பார்க்க, மிகப் பெரியதும் பொருளாதார ரீதியாக வலிமையானதும்' என்று கூறினார். அப்போது, நாங்கள் இது பற்றி பின்வருமாறு எழுதினோம்:

வரலாறு புயலாக திரும்புகிறது. நாஜிகளின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அதன் தோல்விக்கு ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் கைசரின் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய பெரும் அதிகார அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளது. ... போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் நாஜிக்களின் பயங்கரமான குற்றங்களிலிருந்து ஜேர்மனி கற்றுக்கொண்டு, 'மேற்குலகை நோக்கி வந்துவிட்டது', அமைதியான வெளியுறவுக் கொள்கையைத் தழுவிக்கொண்டு, ஒரு நிலையான ஜனநாயகத்தை வளர்த்தெடுத்திருந்தது என்ற பிரச்சாரங்கள் அனைத்தும் இப்போது பொய்கள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து தீவிரத்தன்மையுடனும், வரலாற்றுரீதியாக தோன்றியது போன்றே, அதன் உண்மையான நிறங்களை மீண்டும் காட்டுகிறது.

ஏழு வருடங்களுக்கு பின்னர், இந்த மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பது தெளிவாகிறது. இரண்டு உலகப் போர்களில் கூறமுடியாத குற்றங்கள் இருந்தபோதிலும், ஜேர்மன் ஆளும் உயரடுக்கு அதன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கு 21 ஆம் நூற்றாண்டில் எந்த வரம்பையும் வைக்கவில்லை. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இலாப பலிபீடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்த பின்னர், அது இப்போது தனது இராணுவ ஏகாதிபத்திய “கூட்டாளிகளுடன்” சேர்ந்து பெரும் இராணுவ மோதல்களுக்கு தயாராகி வருகிறது.

பேரழிவு தரும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுபுவதற்கான மிகப்பெரிய அவசரத்தை முன்வைக்கின்றது. இது போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழித்து உலகளாவிய சோசலிச சமூகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஜேர்மன் போர் கப்பலை அனுப்பியதை சோசலிச சமத்துவக் கட்சி (SGP) வன்மையாக கண்டிக்கிறது. சோசலிச வேலைத்திட்டத்துடன் இராணுவவாதம், பாசிசம் மற்றும் போருக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவலான எதிர்ப்பை ஆயுதபாணியாக்குவதற்கான கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் இப்போது எங்கள் போராட்டத்தை இரட்டிப்பாக்குவோம். இடது கட்சியும் பசுமைகட்சியும் அரசாங்க கட்சிகளாக ஜேர்மன் போர் முன்னெடுப்பை ஆதரிக்கத் தயாராக இருக்கும்போது, நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் 'அனைத்து வெளிநாட்டு தலையீடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்! நேட்டோ மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் கலைப்பு! மறு ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்குப் பதிலாக கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்க வேண்டும்” என கோருகின்றோம்.

Loading