இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் மஸ்கெலியா நகரத்தின் அருகாமையில் வாழ்கின்ற 9 பேர் வைரஸ் தொற்றினால் இறந்துள்ளனர். ஒரே நாளில் மூன்று பேர் இறந்துள்ளதாக நகரவாசி ஒருவர் தெரிவித்தார். மஸ்கெலியா நகரத்தை சூழ உள்ள தேயிலை தோட்டங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் தங்கது நாளாந்த தேவைகளுக்காக அங்கு வருகின்றார்கள். மஸ்கெலியா நகரத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டங்களான பிரவுன்ஸ்விக், கிளனுகி, காட்மோர் ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
மஸ்கெலியா பிரதேச சபையானது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா) ஆட்சியீன் கீழ் உள்ளது. தேயிலை உற்பத்தி குறைந்து, தோட்டக் கம்பனிகளின் இலாபம் குறைந்துவிடும் என்பதால், அரசாங்கமும் பிரதேச சபையும் இந்தப் பிரதேசத்தை மூடக்கி, தனிமைப்படுத்தி வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றன.
நோர்வூட் பிரதேச சபை பிரதேசமும் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. “2021 ஜூனில் இருந்து, 2 மாதங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 125 சடலங்கள் நோர்வூட் பிரதேச சபையின் தகனச் சாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது” என நோர்வூட் பிரதேச சபை தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“டிக்கோயா வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் 5-6 பேர் கோவிட்-19 தொற்றினால் இறக்கின்றார்கள். வைத்தியசாலை கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதுடன் சடலங்களை எரிப்பதற்கு எரிவாயு பற்றாக் குறையினால் பிரேத அறையும் சடலங்களால் நிரம்பியுள்ளது”, என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 14 அன்று மத்திய மாகாண ஆளுனரின் அறிக்கையின் படி, மாகாணத்தில் 1,063 கோவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் 697, நுவரெலியா மாவட்டத்தில் 190 மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 176 பேர் மரணித்துள்ளனர்.
இந்த மரணங்கள், தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் காட்டும் ஊதாசினத்தின் விளைவாகும். ஆரம்பத்திலிருந்தே அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் தோட்டங்களை முடக்குவதை நிராகரித்து, எத்தகைய சுகாதார பாதுகாப்புமின்றி தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்தித்து வருகின்றன. இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சகல தொழிற்சங்களும் தொழிலாளர்களை வேலை வாங்குவதற்காக அரசாங்கத்திற்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் ஆதரவு கொடுக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, தோட்டத் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகளும் தொற்று நோய் அவர்கள் மத்தியில் பரவலாக பரவுவதற்கு காரணமாகும். அவர்களில் பெரும்பான்மையோர், மலசல கூடம், நீர் போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற சிறிய லயன் அறைகளிலேயே வாழ்கின்றார்கள்.
தோட்டத் தொழிலாளர் மத்தியில் கோவிட் -19 தொற்றை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை உட்பட முறையான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. முகக் கவசம் கூட கம்பனிகளால் வழங்கப்படுவதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தமது சிகிச்சைக்காக 15 கில்லோ மீற்றர் அல்லது அதற்கு அப்பால் உள்ள ஹட்டன், டிக்கோயா, நாவலப்பிட்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வைத்திய சாலைகளுக்கே செல்ல வேண்டும். தங்களின் வறிய மட்டத்திலான நாட் சம்பளத்தினால், அவர்கள் போசாக்கின்மையாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கம்பனிகள் இத்தகைய வசதிகளை செய்து கொடுப்பதற்கு பதிலாக தொழிற்சங்களின் உதவியுடன் வேலைச் சுமையை அதிகரிப்பதையும் தொழிலாளர்கள் தமது வேலை இலக்கை அடையத் தவறினால் சம்பளத்தை வெட்டுவதையுமே நடைமுறைப் படுத்துகின்றன.
சாமிமலை, கிளனுகி தோட்டத்தை சேர்ந்த தொழிலாளியான ரவி கூறியதாவது: “எமது தோட்டத்தில் உள்ள ஒரு தொழிலாளி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, பொகவந்தலாவையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அணுப்பப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் வேறு நோய்க்கு சிகிச்சை பெற டிக்கோயா வைத்திய சாலைக்கு சென்ற போது, தற்செயலாக செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் தோட்டத்தில் வேறு யாருக்காவது தொற்று இருக்கிறதா என்பது எங்களுக்கு தெரியாது. தோட்ட நிர்வாகமோ அரசாங்கமோ தொழிற் சங்கங்களோ ஏனயவர்களுக்கு தொற்று இருப்பதை கண்டறிய எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு எமது உயிர்கள் பற்றி அக்கறையில்லை, எமது உழைப்புதான் அவர்களுக்கு முக்கியம். தொழிலாளர்கள் எத்தகைய பாதுகாப்பும் இன்றி வேலைக்கு செல்லுகின்றார்கள். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாஸ்க் கூட கொடுப்பதில்லை. எத்தகைய நிதி உதவியும் கிடைக்காததால் தொற்று நோய்க்கு உள்ளாகியவரின் மனைவி கூட வேலைக்கு செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை கிடையாது.”
நாடு பூராகவும் கோவிட் -19 நோயாளிகளின் தொகை அதிகரித்து, நாளாந்த சராசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கிள்ளது. ஆகஸ்ட் 20 அன்று நாளாந்த மரணங்கள் 195 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொற்றால் மரணித்தோரின் முழு எண்ணிக்கை 6,985 ஆகும். ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதுடன், நோயாளிகள் வைத்தியசாலை தரையில் நிரம்பிப்போயுள்ளார்கள்.
வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்தபோதும், நாட்டை முடக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்து வள்ளது. நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்படாமல் இருந்தால் 2022 ஜனவரி அளவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டும் என அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். எவ்வாறெனினும் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்புக்கு மத்தியில் இராஜபக்ஷ அரசாங்கம் நேற்று முதல் வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே பொது முடக்கம் செய்துள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களும் தொடர்ந்தும் வேலை செய்ய வேண்டும்.
உலகம் பூராகவும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மனித உயிர்கள் பற்றி அக்கறை செலுத்தவில்லை மாறாக, தொழிற்துறை மற்றும் நிதி நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதற்கும், அதற்கு வசதிகள் வழங்குவதற்குமே அக்கறை காட்டுகின்றன.
