ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் அமைச்சரவைக் குழுவைத் தழுவிக்கொள்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திங்கட்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களின் ஊதியக்கோரிக்கைகளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மீண்டும் நிராகரித்த அதேவேளை, “விடயத்தை மேலும் ஆராய்வதற்காக” ஒரு அமைச்சரவை உபகுழுவையும் ஸ்தாபித்தார். நான்கு அமைச்சர்களைக் கொண்ட துணைக்குழு அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

ஜூலை 23ல், கொழும்பு செயலகத்திற்கு வெளியே ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம் [WSWS media]

ஆசிரியர் சங்கங்கள், கடந்த திங்கட்கிழமைக்குள், ஊதிய உயர்விற்கான ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு 'தீர்வு' வழங்குமாறு ஏற்கனவே அரசாங்கத்தை கேட்டுக்கொண்டன. எவ்வாறாயினும், அரசாங்கம் எதிர்கொள்ளும் 'பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொள்வதாக' தொழிற்சங்க அதிகாரிகள் அரசாங்கத்திற்கு உறுதியளித்ததுடன் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து 'கொள்கை முடிவு' எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகோள் விடுத்தனர்.

'கொள்கை முடிவு' என்று அழைக்கப்படுவது தொழிற்சங்கங்களின் அவநம்பிக்கையான சூழ்ச்சியாகும், இது கிட்டத்தட்ட 250,000 அரசாங்க பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் அதிபர்களும் பங்குபற்றிக் கொண்டிருக்கும் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்குப் பயன்படுத்தப்படும்.

ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகளைத் தீர்க்க ஆண்டுதோறும் 70 பில்லியன் ரூபாய் (350 மில்லியன் டொலர்) செலவாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அரசாங்கத்தால் எப்போது சம்பளக் கோரிக்கையை நிவர்த்தி செய்யத் தொடங்க முடியும், எத்தனை ஆண்டுகள் எடுக்கும், மற்றும் பிற விடயங்களை பற்றி ஆராய்வதே இந்த போலி அமைச்சரவை துணைக்குழுவின் வகிபாகம் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அப்பட்டமான தாமதப்படுத்தும் யுக்தியை நிராகரிப்பதற்கு பதிலாக, தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த திட்டத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,'இந்த குழு முந்தைய குழுக்களை ஒத்ததா என்று எங்களுக்குத் தெரியாது [ஆனால்] நாங்கள் எந்த முன் முடிவுகளுக்கும் வரவில்லை,' என்று தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் 'தெருக்களில் கத்தவோ' அல்லது எந்த நடவடிக்கையையும் எடுக்கவோ விரும்பவில்லை என்று தேசிய அதிபர்கள் சங்க தலைவர் பராக்கிரம வீரசிங்க கூறினார். தான் அரசாங்கத்துடன் ஒரு 'உடன்படிக்கைக்கு' வேண்டுகோள் விடுத்த நிலையில், தொழிற்சங்கங்கள் 'பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன' என்று வீரசிங்க கூறினார்.

அதேபோல், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் (இ.ஆ.சே.ச.) தலைவர் மஹிந்த ஜயசிங்க, ஆசிரியர்களின் போராட்டம் குறித்து 'சில அமைச்சர்கள் புரிதலுடன் பேசியுள்ளனர்' என்று கூறிக்கொண்டார். 'இது எங்களுக்கு ஒரு நிவாரணம், அதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, ஆசிரியர் சங்கத் தலைமைத்துவம், மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தமது சமதரப்பினருடனும் முன்நிலை சோசலிசக் கட்சி சார்ந்த ஐக்கிய ஆசிரியர் சேவைகள் சங்கத்துடனும் சேர்ந்து, கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கம் அருகே ஒரு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியது. அமைச்சரவை துணைக்குழு மீதும் அரசாங்கத்தின் மீதும் 'கொஞ்சம் அழுத்தம் கொடுக்க' இந்த சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர்.

விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய உபகுழு ஆகஸ்ட் 12 சந்தித்து, மறுநாள் ஆசிரியர் சங்கத் தலைமையுடன் கலந்துரையாடலைத் தொடங்க இருந்தது.

இந்த கலந்துரையாடல்கள் தங்களின் பல தசாப்த கால சம்பளக் கோரிக்கையை தீர்த்து வைக்கும் என்ற மாயையை ஆசிரியர்கள் கொண்டிருக்கக் கூடாது. இந்த செயல்முறை ஒரு இழிந்த ஏமாற்று நடவடிக்கை ஆகும். இது ஆசிரியர்களின் போராட்டத்தை தடம் புரட்டி அதற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படும்.

தற்போதைய இராஜபக்ஷ ஆட்சி உட்பட அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிற்சங்கங்களின் உதவி ஒத்துழைப்புடன், கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகளை நிராகரித்து வந்துள்ளன. இதன் விளைவாக, இலங்கை ஆசிரியர்கள் இப்போது நாட்டில் குறைந்த ஊதியம் பெறும் அரச ஊழியர்களில் ஒரு பகுதியினராக உள்ளனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை அடுத்த பாதீட்டில் நிவர்த்தி செய்ய 'வாய்ப்பு' இருப்பதாகக் கூறினார். அதே நேரம், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள், இணையவழி கல்விக்கு குழிபறிப்பதாகவும் பரீட்சைகளையும் அவற்றின் பெறுபேறுகளையும் தாமதப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உண்மையில், தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தின் இணையவழி கல்வித் திட்டம் ஒரு கேலிக்குரியதாகும். இணைய வசதி ஒருபுறமிருக்க, அவர்களுக்கு கணினிகள் வழங்கப்படாததால் இந்த கற்பித்தல் பெரும்பாலான மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், பல ஆசிரியர்கள், தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்களால் நடத்தக்கூடிய பகுதிகளில் இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

ஜூலை 12 அன்று திகதி தொடங்கிய ஆசிரியர்களின் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தம், இப்போது இரண்டரை மாதத்தை எட்டியது. கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்பவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆகஸ்ட் 4 அன்று நடத்திய வாகன அணிவகுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்குகொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர் (Source: Facebook)

ஆகஸ்ட் 4 அன்று, நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கண்டியில் இருந்து கொழும்புக்கு 100 கிலோமீட்டர் நடைப்பயணத்தைத் தொடங்கினர். ஆசிரியர்கள் 70 கிலோமீட்டர் தூரம் நடந்து பஸ்யால பிரதேசத்தை அடைந்த போது, ஆகஸ்ட் 7 அன்று, ஆர்ப்பாட்டக் காரர்கள் கோவிட்-19 வைரஸை பரப்புகின்றனர் என்று அரசாங்கமும் ஊடகங்களும் முன்னெடுத்த கொடூரமான பிரச்சாரத்திற்கு பிரதிபலிப்பாக, தொழிற்சங்கங்கள் பேரணியை நிறுத்திக்கொண்டன. எவ்வாறாயினும், இப்போது பேரழிவுகரமான அளவிற்கு வளர்ந்துள்ள தொற்றுநோய்க்கு பொறுப்பாளிகள் ஆசிரியர்கள் அல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசாங்கமும் ஆளும் வர்க்கமுமுமே பொறுப்பாகும்.

திங்களன்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இரண்டு தனித்தனி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ஒன்று யாழ்ப்பாணத்திலும் மற்றொன்று பருத்தித்துறையிலும் நடந்தது. தனிமைப்படுத்தல் சட்டங்களைக் காரணம் காட்டி போராட்டக்காரர்களைத் தடுக்க பொலிசார் முயன்ற போதிலும், ஆசிரியர்கள் அவற்றை மீறினர். யாழ்ப்பாணத்தில், வீரசிங்கம் மண்டபத்தில் போராட்டக்காரர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

தங்ளின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஆசிரியர்களின் உறுதிப்பாட்டுக்கு அரசாங்கம் கொடூரமான பொலிஸ் அடக்குமுறை மூலம் பதிலளித்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற வாகனப் பேரணி போராட்டத்தைத் தொடர்ந்து, 40 ஆசிரியர்கள் மற்றும் நான்கு சாரதிகளைக் கைது செய்த பொலிசார், மறுநாள் அவர்களுக்கு பிணை வழங்கப்படும் வரை அவர்களை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

புதன்கிழமை, 26 ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட குழுவுக்கு, ஜூலை மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் ஆகஸ்ட் 4 அன்று கொழும்பு நோக்கி பேரணியை நடத்தியமைக்காக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டது. அவர்கள் மீது கொரோனா வைரஸ் விதிகளை மீறி மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, மீண்டும் நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தில் பிசன்னமாகுமாறு உத்தரவிடப்பட்டது.

ஆகஸ்ட் 9 அன்று, ஒரு ஆசிரியை உட்பட மூன்று ஆசிரியர்கள் மாத்தறை பொலிசால் கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதவான் முன் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் ஆகஸ்ட் 16 அன்று நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். யாழ்ப்பாண ஆசிரியர்களை மற்றொரு போராட்டத்திற்கு அழைத்துச் சென்ற வாகன சாரதியும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களை எதிர்க்கும் எவருக்கும் எதிராக பொலிசார் அடக்குமுறையை முடுக்கிவிட்டுள்ளனர். ஆகஸ்ட் 3 அன்று, இரண்டு முன்நிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றித்தின் அழைப்பாளர் மற்றும் மூன்று முன்னணி ஆர்வலர்களை பொலிஸ் கைது செய்தது. கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தச் சட்டம், பொதுக் கல்வியை தனியார்மயமாக்குவதையும் நாட்டை மேலும் இராணுவமயமாக்குவதையும் விரிவாக்கும்.

போராட்டத்தை தீவிரப்படுத்த அச்சுறுத்தும் வகையில், ஆசிரியர் சங்கங்கள், புதன்கிழமை, தங்கள் உறுப்பினர்களை காட்டிக்கொடுத்த பல தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தை நடத்தின.

ஏனைய சுகாதார துறை தொழிற்சங்க அதிகாரிகளுடன் சேர்ந்து, ஜூலை மாதத்தில் சுகாதார ஊழியர்களின் போராட்டங்களுக்கு முடிவுகட்டுவதில் முக்கிய பங்கு வகித்த அரசாங்க தாதிமார் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரியாவும் இதில் அடங்குவார். இலங்கை வர்த்தக ஊழியர் மற்றும் பொது தொழிலாளர் சங்க செயலாளர் சில்வெஸ்டர் ஜெயக்கொடி மற்றும் அனைத்து-கூட்டுத்தாபன ஊழியர் சங்க தலைவர் வசந்த சமரசிங்க ஆகியோரும் பங்கேற்றனர். ஜெயக்கொடியும் சமரசிங்கவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் போதாகுறையான கொவிட்-19 பொதுமுடக்கத்துக்குப் பின்னர், இராஜபக்ஷ பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை ஆதரித்ததுடன், தொற்றுநோய்க்கு பிரதிபலிப்பாக ஊதியத்தையும் வேலைகளையும் குறைக்க நிறுவனங்களுக்கு உதவினார்கள்.

அரசாங்கம் மற்றும் முதலாளிகளினதும் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் இந்த கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாறாக, இந்த தொழிற்சங்க அதிகாரிகள் தொடர் சத்தியாகிரக போராட்டம் மற்றும் எதிர் பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்குவதை எதிர்த்த முந்தைய அரசாங்கங்களின் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இதில் அடங்குவர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் ஜயசிங்க, இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய போது, “நாங்கள் இப்போது இதை ஒரு பரந்த மக்கள் போராட்டமாக மாற்றத் தயாராக உள்ளோம். அது நடப்பதற்கு முன் எங்கள் பிரச்சனைகளை தீர்க்குமாறும், இதை முடிவுக்கு கொண்டுவருமாறும் நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

ஜயசிங்க கூறும் 'பரந்த வெகுஜனப் போராட்டம்', ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதற்கும், அரசாங்கத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் சவால் செய்வதற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை வலிமையை ஒருங்கிணைப்பதை எந்தவகையிலும் உள்ளடக்கி இருக்கவில்லை.