இலங்கை பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்கள் கடினமான கல்வி நிலமைகளை விவரிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளில் போதிய கட்டிடங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லை. இது பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இலவசக் கல்விக்கான செலவு வெட்டுக்கு மேலாக, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியில் அடுத்தடுத்து பதவிக்குவரும் அரசாங்கங்கள், தோட்ட கம்பனிகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளான தொழிற்சங்கங்களின் புறக்கணிப்பினதும் விளைவாகும். இந்த சூழ்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதிலும் ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதிலும் மிகவும் கடினமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2019 ஆகஸ்டில் டிக்கோயா போர்டைஸ் தோட்டத்தில் தாம் வசித்த லயன் அறைகள் தீயில் எரிந்து போன பின்னர் தற்காலிக கொட்டில்களில் சிறுவர்கள் படிக்கின்றனர். [WSWS media]

பெரும்பாலான தோட்டப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளன. மிகவும் வரையறுக்கப்பட்ட பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு வரை இருந்தாலும், விஞ்ஞானம், கணிதம், வணிகம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் அல்லது கற்பதற்கான பிற தொடர்புடைய வசதிகள் இல்லை. அந்தப் பாடங்களை படிக்க வேண்டும் என்றால், மாணவர்கள் தோட்டங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள நுவரெலியா, அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பதுளை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும். வறுமை மட்டத்தில் தினக்கூலி பெறும் தோட்டத் தொழிலாளர்களால் அத்தகைய செலவைத் தாங்க முடியாது.

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை குழுவினால் ஜூலை 30 அன்று நடத்தப்பட்ட இணையவழி கூட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் போது பெருநதோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் தாம் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகள் மற்றும் தொழில்சார் பிரச்சனைகள் பற்றி உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்.

டயகம, அக்கரப்பத்தனையில் உள்ள ஆசிரியர் கூறியதாவது: 'நாங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதால் இந்த போராட்டத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிக்கைகளை தொகுத்து அணுப்புவதற்காக கற்பிப்பதை விட அதிக நேரத்தை நாங்கள் செலவிட வேண்டியுள்ளது. நான் ஐந்தாம் வகுப்பு புலமைபரிசில் மாணவர்களுக்கு கற்பிக்கின்றேன். அரசாங்கம் இணையவழியுடாக கற்பிக்குமாறு வலியுறுத்துகின்றது. தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. அவர்களிடம் இணைய வசதிகள் உள்ள தொலைபேசிகள் இல்லை. அப்படியிருந்தாலும் பெரும்பாலான பிரதேசங்களில் சமிக்ஞை இல்லை. இந்தப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் எந்த தொலைபேசி நிறுவனமும் அத்தகைய வசதிகளை வழங்கி இருக்கவும் இல்லை.

இணையவழி வகுப்பில் பங்குபற்றுவதற்காக இணைய சமிக்ஞை கிடைக்கும் இடமான மரக்கிளைகளில் ஏறி அமர்ந்து கற்கும் மாணவர்கள் [source: Facebook]

எனது மாதச் சம்பளம் 35,000 ரூபாய். ஆண்டு சம்பள உயர்வு 250 அல்லது 300 ரூபாய். அதுவும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. நாங்கள் பலமுறை வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றாலும் பணம் கிடைப்பது அரிது. எங்கள் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் பலர் தொலை தூரத்திலிருந்து வருகிறார்கள். ஹட்டனில் இருந்து ஒரு ஆசிரியர் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து பாடசாலைக்கு வரவேண்டும். அவர்கள் தங்கள் ஊதியத்தில் கணிசமான தொகையை போக்குவரத்துக்கே செலவிட வேண்டும்.

'தோட்ட பாடசாலை மாணவர்கள் மிகவும் ஏழைகள். இதனால், ஆசிரியர்கள் வினாத்தாள்களைத் தயாரிப்பது உட்பட விடயங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எல்லா ஆசிரியர் தொழிற்சங்கங்களும், ஆசிரியர்களின் இந்த பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாக போராடவில்லை. தீர்க்கப்படாத பிரச்சினைகள் சம்பந்தமாக ஆசிரியர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் கோபத்தின் காரணமாவே ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி பெறும் வரை அவர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று நான் நம்பவில்லை.

'தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களின் உரிமைக்காக போராடவில்லை. ஆசிரியர் சங்கத் தலைவர்கள் சுயநலத்தின் அடிப்படையிலேயே தொழிற்படுகின்றனர். அவர்கள் நீண்ட காலமாக நகர்ப்புறப் பாடசாலைகளில் வசதிகளுடன் இருக்கிறார்கள். ஆனால் 12 வருடங்களுக்கும் மேலாக தோட்டப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் கிடைக்காது. இடமாற்ற சபையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் ஆசிரியர்களைப் பிளவுபடுத்துறார்கள்.

'தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கான உங்களது முன்மொழிவுடன் நான் உடன்படுகிறேன். நான் அதுபற்றி மேலும் கலந்துரையாடுவதற்கு விரும்புகிறேன்,' என அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1 அன்று நுவரெலியாவில் நடக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக பொகவந்தலாவையில் உள்ள ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

'ஆசிரியர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளது. அந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றாகப் போராட வேண்டும் என்பதால் நான் அந்த போராட்டத்தில் பங்கேற்கிறேன். எனது பதவிக்காலம் 19 ஆண்டுகள். ஆனால் எனது அடிப்படை சம்பளம் 38,000 ரூபாய். தற்போது நான் மொத்த சம்பளமாக ரூபா 52,000 பெற வேண்டும், ஆனால் எனக்கு ரூபா 48,000 மட்டுமே கிடைக்கிறது. அரசாங்கம் எனக்கு சம்பள நிலுவைத் தொகையாக 150,000 ரூபாய் செலுத்த வேண்டும். நான் அதற்காக பல முறை ஹட்டன் கல்வி அலுவலகத்திற்குச் சென்றேன், ஆனால் இன்னும் அதைப் பெறமுடியவில்லை.

“என் வகுப்பில் 22 மாணவர்கள் ஐந்தாம் வகுப்புக்கு படிக்கிறார்கள். 10 மாணவர்களுக்கு மட்டுமே இணையவழி வசதிகள் உள்ளன. நான் சொந்தமாக பணத்தை செலவழித்து ஏனய மாணவர்களுக்கு குறிப்புகளை அனுப்புகிறேன். எப்படி நாம் இந்த சொற்ப சம்பளத்தில் செய்ய முடியும்? எங்கள் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்காது. ஆசிரியர்கள் தனியாக போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.”

Loading