இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் கோவிட் -19 வேகமாக பரவுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில் கோவிட் -19 பெரும் தொற்றுநோயின் முந்தைய அலையில் குறைவாகப் பாதிக்கப்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளை டெல்டா மாறுபாட்டின் பரவலானது அதிக அளவில் நோய்க்குள்ளாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் கடுமையான நோயுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 14, 2021 அன்று இந்தியாவின் ஜம்முவின் புறநகரில் உள்ள சேரியில் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள். (AP புகைப்படம்/சன்னி ஆனந்த்)

பெங்களூருவில், இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 543 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 20 குழந்தைகளுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரத்தில், 33 குழந்தைகள் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநில சுகாதார அதிகாரிகள் 0-19 வயதுக்குட்பட்ட 37,332 குழந்தைகள் இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மிகவும் கடுமையான மாறுபாட்டிலிருந்து குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். டாக்டர் அஞ்சன் பட்டாச்சார்யா கூறினார்: 'இரட்டை விகாரி மாறுபாடு நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இது நமது சொந்த உடல் அமைப்பாக மாறுவேடமிட்டு பின்னர் நமது நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கிறது. இதனால்தான் அதிகமான குழந்தைகள் கோவிட் -19 நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.” தெரிவிக்கப்பட்ட தொற்றுக்களின் பெரிய உயர்வை அவர் சுட்டிக்காட்டினார்: “கோவிட் -19 கடந்த ஆண்டு 1 சதவீத குழந்தைகளை பாதித்திருந்தால், அது இப்போது 1.2 சதவீதமாக உள்ளது. ஆனால் இது இந்தியாவில் எண்களின் அடிப்படையில் மிகப்பெரிய அதிகரிப்பாகும்”.

அதிகமான குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் நோய் அடிக்கடி மிகவும் கடுமையானதாக உள்ளது. கொல்கத்தாவில் உள்ள டாக்டர் ஜெய்தேப் ரே, டெல்டா மாறுபாடு தோன்றுவதற்கு முன்பு, பெரும்பாலான கோவிட் -19 தொற்றுகள் அறிகுறியற்றவை என்று விளக்கினார்: “ஆனால் இப்போது, எம்ஐஎஸ்-சி (குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி) உடன் மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளை நாங்கள் பார்க்கிறோம். இந்த தடவை அது ஒரு செயலில் உள்ள தொற்றுக்கு இணையாகக் காட்டுகிறது.

இத்தகைய நோய்கள் இப்போது இந்தியா முழுவதும் குழந்தைகளில் கடுமையான நோய் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கிறது. கோவிட் -19 இன் இரண்டாவது அலைக்கு மத்தியில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 குழந்தைகள் அரிய அழற்சி நோயால் இறந்துள்ளனர். இதேபோல், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் 155 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகள் மூச்சுத் திணறல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்துடன் மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள கங்காரம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை குழந்தை மருத்துவர் டாக்டர் திரேன் குப்தா, 4 முதல் 15 வயதுக்குட்பட்ட 75 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு MIS-C. க்காக சிகிச்சை அளித்துள்ளார். டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற 500 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 90 சதவீத குழந்தைகள் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். 10 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களில் புனேவில் 30 மற்றும் சோலாப்பூரில் 20 பேர் இருந்தனர்.

கோவிட் -19 பெரும் தொற்றுநோய் இந்தியாவின் குழந்தைகள் மீது சுமத்தியுள்ள மற்ற சுமைகளுக்கு மேலாக இந்த கடுமையான நோயின் ஆபத்து வருகிறது. பலர் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். COVID-19 வந்து முதல் 14 மாதங்களில் இந்தியாவில் 119,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்கள் முதன்மை அல்லது இரண்டாம் நிலை பள்ளிகளை இழந்ததாக ‘தி லான்செட்டில்’ ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. தற்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது, 43,139 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும், 3,600 க்கும் மேற்பட்ட குழந்தைகள், கோவிட் -19 நோயால் பெற்றோரை இழந்துள்ளனர்.

இந்தியாவில் நீட்டித்திருக்கும் வறுமை இந்த சகிக்க முடியாத நிலைமைகளை மேலும் மோசமாக்குகிறது. பெரும் தொற்றுநோய்க்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) அறிக்கை, 38.4 சதவிகித இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றலினால் பாதிக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளது. இது பெரும் தொற்றுநோயின் போது குழந்தை தொழிலாளர்கள் நிலைமையுடன் சேர்ந்து மேலும் மோசமடைந்தது. இது தொற்றுநோய் காலத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் 11 மில்லியன் குழந்தைகளை பாதித்தது. 6 முதல் 10 வயதுக்குட்பட்ட பள்ளியில் இருந்து விலகிய குழந்தைகளின் விகிதம் 2017 இல் 1.5 சதவிகிதம் அதிகரித்து 2020 இல் 5.3 சதவிகிதமாக மேலும் அதிகரித்தது.

இந்த அறிக்கைகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் குழந்தைகளை சரீர ரீதியாக பள்ளியில் கல்வி கற்க கட்டாயப்படுத்தும் முயற்சிகளை அரசியல் ரீதியான குற்றமாக அம்பலப்படுத்துகின்றன, எனவே அவர்களின் பெற்றோர்களை, வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டும் வேலைகளில் வைத்திருக்க முடியும். இந்தோனேஷியாவிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். ஆயினும் முதலாளித்துவ அரசாங்கங்கள் குழந்தைகள் மீதான போரை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பதிலளிக்கின்றன.

இந்தியாவில் கோவிட் -19 பாதிப்புகள் குறித்து பெருமளவில் குறைத்துக் காட்டப்பட்டாலும் தீவிர நோய்களின் அதிகரிப்பு விகிதம் இந்தியாவின் 1.37 பில்லியன் மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவின் மோசமான சுகாதார உள்கட்டமைப்பை முற்றிலும் சிதைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இந்தியாவில் மொத்த கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை 32.6 மில்லியன் மற்றும் இறப்பு எண்ணிக்கை 437,400 ஆகும். இருப்பினும், அமெரிக்காவை மையமாக கொண்ட பூகோள மேம்பாட்டு மையத்தின் ஜூலை 2021 ஆய்வு, இந்தியாவில் உண்மையான COVID-19 இறப்பு எண்ணிக்கை 2.9 முதல் 5.8 மில்லியன் வரை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த இறப்புகளில், பாதி மார்ச் 2021 முதல் டெல்டா மாறுபாடு தோன்றிய காலப்பகுதியில் வந்துள்ளது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (AIIMS) இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பேர் கோவிட் -19 க்கு ஆளாகியுள்ளனர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சோதனைகளில் நேர்மறையாக காட்டப்படுவார்கள். ஆயினும்கூட, அவர்கள் இன்னும் தீவிரமான டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அவர் கூறினார்: 'பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, எனவே ஒரு புதிய அலை வந்தால் அது அதிகமாக பலவீனமானவர்களை பாதிக்கும் என்பது கூடியவர்களை பாதிக்கும். குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. '

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளபடி, இந்த அறிக்கைகள் தொற்றுநோயைத் தடுக்கவும், கோவிட் -19 பரவுவதை முடிவுக்குக் கொண்டுவரவும், கொரோனா வைரஸின் பூகோள ரீதியான ஒழிப்புக்காகப் போராடவும் கடுமையான சமூக விலகல் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளை விதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இந்தியாவில், தற்போது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி திட்டம் இல்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி இலவசம் என்றாலும், மற்றவர்கள் தடுப்பூசி போடுவதற்கு பணம் செலவழிக்க வேண்டும். இது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.

உண்மையில், இந்தியாவின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். மேலும் 34 சதவிகிதத்தினருக்கு மட்டுமே ஒரு தடவை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் மற்றும் பள்ளி வயது இளைஞர்கள் நோய் தொற்றுக்கு ஆளாவது மிகவும் சாத்தியமானது.

மேலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் -19 இன் இரண்டாவது அலை உயர்ந்தபோது, மும்பை உட்பட பல இடங்களில் கிட்டத்தட்ட 2,500 பேருக்கு சாதாரண உப்பு நீர் செலுத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவர்கள் உட்பட அதிகாரிகள் மொத்தம் 28,000 டாலர்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது. கடந்த இரண்டு மாதங்களில் இதே போன்ற போலி தடுப்பூசி மோசடிகள் இந்தியாவில் வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.

குறிப்பாக தடுப்பூசி பிரச்சாரம் துரிதப்படுத்தப்படாவிட்டால், ஒரு புதிய பேரழிவு பற்றி இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் எரிசக்தி பல்கலைக்கழகம் மற்றும் நிர்மா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியா ஒரு நாளைக்கு 600,000 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளைக் காண முடியும் என்று கண்டறிந்துள்ளது. மற்ற ஆய்வுகள் மூன்றாவது அலையினால் அக்டோபர் மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 100,000 முதல் 150,000 வரை பதிவுசெய்யப்பட்ட நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது மேலும் நவம்பர் மாதத்தில் தொற்றுக்கள் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.

முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உட்பட பல மாநில அரசாங்கங்கள் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து பள்ளிகள் மற்றும் சினிமா உட்பட அனைத்து வணிக வளாகங்களையும் திறக்க முடிவு செய்துள்ளன. ஆளும் உயரடுக்கின் நிதி, வணிக மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாக்க மனித உயிர்களை தியாகம் செய்யும் இரக்கமற்ற கொள்கையை அவர்கள் பின்பற்றுகின்றனர். இது பெரும் தொற்றுநோய் மேலும் பரவுவதற்கும் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் வழிவகுக்கும்.

இத்தகைய பேரழிவைத் தடுக்கவும், வைரஸை ஒழிக்கப் போராடவும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அணிதிரட்டல் செய்வது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. WSWS எழுதியது போல், 'ஒழிப்பு மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. இலாப நோக்கத்தால் இயக்கப்படாத மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் வெறித்தனமான நோக்கத்திற்கு தூண்டப்படாத ஒரு வெகுஜன இயக்கம் மட்டுமே கொள்கையில் மாற்றத்தை கட்டாயப்படுத்த தேவையான சமூக சக்தியை உருவாக்க முடியும்.

Loading