கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பிரெஞ்சு சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்ரோன் அரசாங்கத்தின் 'சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டுக்கு' எதிராக அதிவலதுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட எதிர்ப்புக்களின் பின்னணியில், Sud (Solidaires Unitaires Démocratiques - ஒற்றுமை பொது ஜனநாயகம்) தொழிற்சங்கத்தின் சுகாதாரப் பிரிவானது சட்டத்திற்கு எதிராக சுகாதார ஊழியர்களின் காலவரையறையற்ற வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரிசில் சுமார் 17,000 பேர்கள் உட்பட அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் சுமார் 2,40,000 பேர்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை மீண்டும் நடத்தப்பட்டன. வியாழனன்று, அரசியலமைப்பு சபையில் (Constitutional Council) அரசாங்கத்தின் சட்டம் சட்டபூர்வமானது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, இதில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற ஒப்புதலும் அடங்கும்.

Sud மற்றும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (Conféderation générale de travail — CGT) தொழிற்சங்கங்களின் சுகாதாரப் பிரிவுகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 'கட்டாய தடுப்பூசியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்' என்றும் தடுப்பூசி போடப்படவேண்டுமா வேண்டாமா என்பதை ஒவ்வொரு தனிநபருக்கும் 'தேர்வு செய்வதற்கான சுதந்திரம்' வேண்டும் என்றும் கோருகின்றன. ஒரு அறிக்கையில், தடுப்பூசியை மறுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை Sud தொழிற்சங்கம் கண்டனம் செய்தது: அதாவது 'இந்த விதிவிலக்குகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தைத் திறக்கின்றன. மருத்துவ இரகசியம் மற்றும் தொழில்சார்ந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் அதிகார வரம்பிற்குள் வர வேண்டிய ஒரு காரணத்திற்காக, முதலாளி பொருளாதாரத் தடைகளை (வேலை ஒப்பந்தம் மற்றும் ஊதியத்தை நிறுத்தி வைக்க) விதிக்க அவைகள் அனுமதிக்கின்றன.'

சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டு நீக்கப்பட்டு கட்டாய தடுப்பூசிக்கு முடிவுகட்டுவதுடன், குறைந்தபட்சம் 1700 யூரோக்கள் ஊதியம், மூடிய வைத்தியசாலை படுக்கைகளை மீண்டும் பயன்படுத்துவது அல்லது அனைத்து சுகாதார ஊழியர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு தொழில்சார்ந்த நோயாக நிபந்தனையின்றி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பிற கோரிக்கைகளும் Sud தொழிற்சங்கத்தின் அறிக்கையில் அடங்குகின்றன.

சனிக்கிழமை, ஜூலை 17, 2021 அன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த பேரணியின் போது தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். (AP Photo/Jean-Francois Badias)

மார்சையில், Sud மற்றும் CGT தொழிற்சங்கங்களும் மார்சை பொது உதவி மருத்துவமனையில் ஆகஸ்ட் 4 முதல் வரம்பற்ற வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன மற்றும் எடூவார்ட் துலூஸ் மருத்துவமனை இன்று அதை தொடங்குகிறது. லியோன் நகரில், Sud மருத்துவத்துறை தொழிற்சங்கம் ஜூலை 29 இல் தொடங்கிய ஒரு வேலைநிறுத்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. கோர்சிகா பஸ்டியாவிலுள்ள Haute-Corse நகராட்சியின் மருத்துவமனை மையத்தின் CGT தொழிற்சங்கமானது ஜூலை 30 வெள்ளியன்று ஒரு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் அதே நாளில் ஒரு பேரணியும் நடைபெற்றது.

மக்ரோன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் பின்பற்றி வரும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' என்ற குற்றவியல் கொள்கைக்கு எதிராக செவிலியர் ஊழியர்கள் மத்தியில் நியாயமான கோபம் உள்ளது. இந்த பெருந்தொற்று நோய் சுகாதார அமைப்புமுறையை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் சிக்கனக் கொள்கைகள் சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்களின் உயிர்களை தியாகம் செய்து வருகிறது. மக்ரோனின் 'சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டு' என்பது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் ஆளும் வர்க்கம் தொடர்ந்து வரும் கொள்கையின் ஒரு பகுதியாகும், இது விஞ்ஞான பரிந்துரைகளை மீறி வைரஸ் பரவ அனுமதிக்கிறது.

எவ்வாறெனினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கொள்கை பிற்போக்குத்தனமானது, எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் தடையற்ற பரவலுக்கு வாதிடும் தீவிர வலதுகளால் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான-விரோத, தடுப்பூசி எதிர்ப்பு முன்னோக்குக்கு பின்னால் சுகாதார ஊழியர்களின் கோபத்தை திசை திருப்புகிறது.

கோவிட்-19 உட்பட பல நோய்களுக்கு எதிராக கட்டாய தடுப்பூசி போடுவது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அல்ல. இது தொழிலாள வர்க்கத்தின் ஆயுட்காலத்தை மேம்படுத்திய 20ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களால் பெறப்பட்ட சமூக தேட்டங்களின் ஒரு பகுதியாகும். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி என்பது பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் தற்காப்புக்கான அடிப்படைத் தேவையாகும்.

பெருந்தொற்று நோய் மற்றும் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேச போராட்டமாகும், இது நிதிய பிரபுத்துவத்தின் அடிமையாயிருக்கும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டுதல் மூலம் விஞ்ஞானரீதியாக நடத்தப்பட வேண்டும். நவ பாசிசவாதிகளான ஃப்ளோரியான் பிலிப்போ, நிக்கோலா டுபான்ட்-ஏய்ன்னன் மற்றும் மரியோன் மரேசால் லு பென் ஆகியோர்கள் தடுப்பூசிக்கு எதிராகவும், அனைத்து சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்காகவும் அழைப்பு விடுத்து வெளியிட்ட வேலைநிறுத்த அறிவிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வானது பிரான்சுக்கு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதில்லை; ஐரோப்பா முழுவதிலும் அதிவலது சக்திகள் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன.

இத்தாலியிலுள்ள மிலான், டுரின், ரோம், நேபிள்ஸ் மற்றும் பிற நகரங்களில், ஆகஸ்ட் 6 முதல் சில நடவடிக்கைகளுக்கு பசுமை அனுமதி நுழைவுச் சீட்டு (Green Pass) அவசியம் என்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அதிவலது இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d’Italia) கட்சியின் அழைப்பின் பேரில் இந்த வார இறுதியில் பல ஆயிரம் பேர்கள் தெருக்களில் இறங்கினர்.

ஜேர்மனியின் பேர்லினில், ஆர்ப்பாட்டங்கள் மீதான தடையை மீறி நூற்றுக்கணக்கான விரோதங்கொண்ட மக்கள் ஞாயிறன்று நகரத்தின் தெருக்களில் சட்டவிரோதமாக கூடி, போலீசாருடன் மோதல்களில் ஈடுபட்டனர். அவர்கள் அரசியல்ரீதியாக அதிவலது மற்றும் பாசிச சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டனர், அவர்கள் தங்கள் அணுகுமுறைகளை மூன்றாம் ரைஹ் (நாஜி ஜேர்மனி) போர் கொடிகள் மற்றும் யூத-எதிர்ப்பு சின்னங்கள் மூலம் வெளிப்படையாக காட்சிப்படுத்தினர்.

ஐரோப்பா முழுவதும் நவ பாசிசவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளுடன் தங்கள் அணிதிரள்வை மறைக்க அதிவலது அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டங்களின் தோற்றத்தை Sud தொழிற்சங்கம் பொய்யாக்குகிறது. 'நாம் எதிர்த்துப் போராடும் தீவிர வலது மற்றும் சதித்திட்ட இயக்கங்களால் தொடங்கப்பட்ட பேரணிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, கட்டியெழுப்பப்படும் சமூக அணிதிரட்டல்கள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்' என்று அது அழைப்பு விடுப்பதாக அது கூறுகிறது.

Sud மற்றும் CGT தொழிற்சங்கங்களானது தொழிலாளர்கள் தனித்தனி பேரணிகளில் அணிசேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தாலும், அதிவலதுகளுக்கு இணையாக, மக்ரோனின் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஒட்டுமொத்தமாக அதிவலதுகளால் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், Sud தொழிற்சங்கத்திற்கு நெருக்கமாக இருக்கும் Permanent Revolution என்ற வலைத்தளம், தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிவலதுகளால் அழைப்புவிடுக்கப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டது: அதாவது 'அதிவலதுகள் தலையிட்டு அணிதிரள அழைப்பு விடுக்க முடிந்தாலும், கோரிக்கைகளின் பொதுவான பகுதி குழப்பத்தால் குறிக்கப்படுகிறது, இது ஒரு ஆரம்ப அரசியலாக்கத்தை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தின் கூற்றுக்கள் மதிப்பிழந்துள்ளதன் மூலம் குறிக்கப்படும் ஒரு அரசியலாக்கம், இது சந்தேகங்களுக்கான இடத்தை திறந்துவிட்டது, அவற்றில் சில சட்டபூர்வமானவை, தடுப்பூசி குறித்ததாகும்' என்று அது ஒப்புக்கொண்டது.

பெருந்தொற்று நோயை நிறுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் மறுத்துவிட்ட ஆளும் உயரடுக்கிற்கு எதிராக வெடிக்கும் கோபம் அதிகரித்து வருகிறது. ஒரு விஞ்ஞானரீதியான சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த தொழிலாள வர்க்கம் சுயாதீனமான தலையீடு செய்யும் சாத்தியக்கூறுடன், ஒரு சர்வதேச சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடி அபிவிருத்தியடைந்துள்ளது. மார்ச் 2020ல், இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் தன்னியல்பான வெளிநடப்புகள்தான் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதற்கு கடுமையான பொதுமுடக்கத்தை விதித்தன.

Sud மற்றும் CGT தொழிற்சங்கங்களும் தீவிர வலதுகளுக்கு பின்னால் கோபமான மற்றும் அவநம்பிக்கையான சுகாதாரப் பணியாளர்களை அணிப்படுத்த முயன்று வருகின்றன, இது வைரஸுக்கு எதிரான ஒரு விஞ்ஞானரீதியான கொள்கைக்கான போராட்டத்தைத் தடுக்க முயற்சிக்கிறது.

நிதிய பிரபுத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட நவ பாசிசவாதிகளின் தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரம், உத்தியோகபூர்வ அரசியலை மேலும் வலதிற்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய பில்லியன் கணக்கான யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருநிறுவன பிணையெடுப்புகளில் இருந்து திசை திருப்பப்படாது. உண்மையில், தொழிற்சங்க எந்திரங்களுக்கு பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிலாளர் உறவுகளின் 'சமூக பங்காளிகள்' வழியாக செல்லும் பிணையெடுப்பு நிதிகள் மூலம் நன்கு அவைகளுக்கு ஈடுசெய்யப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது பெருந்தொற்று நோய் மற்றும் முதலாளித்துவ உயரடுக்குகள் சர்வாதிகாரத்திற்கான பந்தயத்தை நிறுத்த சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுகிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடத்திலும் சாமானிய குழுக்களை உருவாக்குவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் மற்றும் ஒரு விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கைக்காகவும் மக்ரோன் மற்றும் அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆபத்து இரண்டிற்கும் எதிராகவும் அவர்களை அணிதிரட்டும். தேசிய தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளிடமிருந்து சுயாதீனமான சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டமைப்பது அத்தகைய கொள்கைக்கு அவசியமான அடிப்படையாகும்.

அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதையும், நிதியப் பிரபுத்துவத்தின் செல்வத்தை பறிமுதல் செய்வதானது மக்கள் இருப்பிடங்களில் தங்குவதற்கும், மிகப்பரந்த அளவில் தடுப்பூசி போடப்படுவதற்கும் அனுமதிக்கும் அத்தகைய ஒரு கொள்கையின் அவசியத்தையிட்டு தொழிலாள வர்க்கத்திற்கான கல்வியூட்டல் கொள்கையை இது குறித்துக்காட்டுகிறது.

Loading