இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விஜே டயஸின் 80 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பொதுச் செயலாளர் விஜே டயஸின் 80 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட 27, வெள்ளிக்கிழமை மாலை இணையத்தின் ஊடாக ஒரு சந்திப்பை நடத்தியது. உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ள டயஸ், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) ஸ்தாபக உறுப்பினராக இருந்ததுடன், மேலும் அவரது வாழ்க்கையின் ஆறு தசாப்தங்களை தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்தவராவார்.

இந்த நிகழ்ச்சிக்கு, சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் தீபால் ஜெயசேகர தலைமை வகித்தார். கட்சி உறுப்பினர்களும் நான்காம் அகிலத்தின் அனைதுலகக் குழுவின் (ICFI) தலைவர்களும் கலந்து கொண்டனர். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், டயஸின் பிறந்த நாள் தனிப்பட்ட மைல்கல்லைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை விட முக்கியமானது என கூட்டத்தில் கூறினார். 'அதே நேரத்தில் இது இலங்கை தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்' என்றார்.

விஜே டயஸ் கொழும்பில் நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் உரையாற்றுகின்றார்

1985 இல் தொழிலாளர் புரட்சிகர கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய வழங்கிய தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் தொலைநோக்குள்ள தலைமைத்துவம் டயஸின் அசைக்க முடியாத ஆதரவால் பெரிதும் வலுப்பெற்றது என்று நோர்த் சுட்டிக்காட்டினார். தனது கருத்துக்களை முடிக்கையில், நோர்த் நான்காம் அகிலத்தின் வரலாற்றிலும் உலகெங்கிலும் உள்ள தனது தோழர்களின் இதயத்திலும் ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றுள்ளார் என்று கூறினார்.

நான்காம் அகிலத்தின் அனைதுலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவாட்ஸ், கீர்த்தியின் அகால மரணத்திற்குப் பின்னர் 1987 ஆம் ஆண்டில் டயஸ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை பொறுப்பேற்றமை அவரது சிறந்த அரசியல் திறமைளை நிரூபித்தது மட்டுமல்லாமல், முந்தைய ஆண்டுகளில் உருவான காரியாளர்களையும் உறுதிப்படுத்தியது. டயஸின் தலைமையின் கீழ், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைதுலகக் குழுவின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த அங்கமாக மாறியது என சுவாட்ஸ் கூறினார். “தோழர் விஜே, அனைத்துலக் குழுவின் இந்த முன்னோக்கை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நீங்கள் தீர்க்கமாக பங்களித்திருக்கிறீர்கள். உங்களின் பாரிய வரலாற்று அனுபவங்களுடன் எமது பணியை முன்கொண்டு செல்வதற்கு தொடர்ந்து பங்களிப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்”.

கனடாவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கீத் ஜோன்ஸ், டயஸின் வாழ்க்கை, 'இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நமது உலகக் கட்சிக்கும் முக்கியமான போராட்டங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.

1964 ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இணைந்த போது, லங்கா சம சமாஜ கட்சியின் வரலாற்று துரோகத்திற்கு எதிரான போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தலைமையில் கீர்த்தி பாலசூரியவுடன் விஜே டயஸ் வகித்த முக்கிய பங்கு பற்றி ஜோன்ஸ் நினைவூட்டினார்.

'சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர நோக்குநிலையானது, பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்க முயன்ற அனைத்து வகையான குட்டி-முதலாளித்துவ வலதுசாரி சக்திகளுக்கும், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு எதிராகவும் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்திசெய்யப்பட்டது' என்று ஜோன்ஸ் கூறினார்.

நான்காம் அகிலத்தின் அனைதுலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவின் தேசிய செயலர் அலெக்ஸ் லான்ரியே, இலங்கையில் கட்சியின் ஸ்தாபகத்தில் டயஸ் ஆற்றிய தைரியமான பங்கு, பிரெஞ்சு தோழர்களுக்கு அவர்களின் கட்சியின் ஸ்தாபகத்திலும் தம்மை தொழிலாள வர்க்கத்தினுள் ஸ்திரப்படுத்திக்கொள்வதற்குமான போராட்டத்தில் ஒரு முன்மாதிரி அனுபவமாக இருந்தது என்றார். மேலும் கூறுகையில், “சிங்கள முதலாளித்துவ தேசியவாதிகளுடன் பப்லோவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஐக்கிய இடது முன்னணி’ கொள்ளையை நீங்கள் இடைவிடாமல் எதிர்த்தீர்கள். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டம், இலங்கை உட்பட தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு ஒரு சிறந்த மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பை வழங்கியது” என்றார்.

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலர் வி. ஞானா, டயஸின் சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதத்திற்கான சமரசமற்ற எதிர்ப்பு பற்றியும், அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பாவிற்கு நாடுகடந்த தமிழ் இளைஞர்களிடையே எழுந்த அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்துவதில் அவர் வகித்த முக்கிய பங்கு பற்றியும் குறிப்பிட்டார். இந்த போராட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகளை நோக்கி தமிழ் இளைஞர்களை வெற்றிகொள்வதில் தீர்க்கமான பாத்திரம் வகித்தது என்றார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியர் பீட்டர் சைமண்ட்ஸ், ஒரு ஒளிப்பதிவு செய்தியை அனுப்பினார். அதில் டயஸ் மேற்கொண்ட அரசியல் போராட்டம் இன்று சோசலிச சமத்துவக் கட்சியை தனிச்சிறப்புவாய்ந்த வலுவான நிலையில் வைத்துள்ளது. லங்கா சம சமாஜ கட்சியின் துரோகத்திலிருந்து வெளிவந்த அனைத்து கட்சிகளிலும், சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூற முடியும் என்றார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆஸ்திரேலியாவில் நீண்டகால சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான நிக் பீம்ஸின் ஒளிப்பதிவு வாழ்த்துக்களில், டயஸ் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக ஒரு தளர்வுறாத போராளி என்றும், ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி என்றால் என்ன என்பதற்கு ஒரு பிரகாசமான உதாரணம் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் ஒளிப்பதிவு செய்தியில் லிண்டா டெனன்பவும், டயஸ் தனது முழு வயதுவந்த வாழ்க்கையையும் இலங்கையிலும், இந்திய துணைக்கண்டத்திலும் உலகெங்கிலும் உலக சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அர்ப்பணித்ததாகக் கூறினார்.

கூட்டத்திற்கு ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் செரில் கிறிஸ்ப் இன் வாழ்த்துக்கள் வாசிக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழ், சிங்கள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான, ஒரு புரட்சிகர நிலைப்பாட்டிற்கான டயஸின் கொள்கை ரீதியான போராட்டம், அரசாங்கத்தினதும் வலதுசாரிகளினதும் தாக்குதல்களை மீறி, இப்போது இலங்கையின் சக்திவாய்ந்த சிறந்த பிரிவினரான தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை வென்று வருகிறது என கிறிஸ்ப் கூறினார்.

இந்த செய்திகளைத் தொடர்ந்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும் இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியருமான கே. ரத்நாயக்க மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விலானி பீரிஸ் மற்றும் பானி விஜேசிறிவர்தன ஆகியோரால் வாழ்த்துரை கூறப்பட்டது. ஏனைய இலங்கை பேச்சாளர்களில் வசந்த ரூபசிங்க, பரமு சம்பந்தன் மற்றும் பிரகீத் அரவிந்தாவும், இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் சார்பாக அருண்குமாரும் அடங்குவர்.

இறுதியாக, கடந்த 34 ஆண்டுகளில் பொதுச் செயலாளராக அவரது அரசியல் பணிகளை நிறைவேற்ற அவருக்கு அளித்த ஆதரவுக்கு அனைத்து சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து டயஸ் உரையாற்றினார்.

Loading