எக்கனாமிஸ்ட் சஞ்சிகை: தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட “அதிகப்படியான இறப்புக்கள்” 15 மில்லியனைத் தாண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எக்கனாமிஸ்ட் வாராந்திர சஞ்சிகையின் சமீபத்திய அறிக்கையின்படி, கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் வரலாற்று தரங்களின்படி, மேலும் 15 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இந்த புள்ளிவிபரம், பதிவு செய்யப்பட்டுள்ள கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 4.6 மில்லியனை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

“SARS-CoV-2 பாதிப்பின் போது இறந்துபோன பலருக்கு அந்நோய்க்கான பரிசோதனை ஒருபோதும் செய்யப்படவில்லை என்பதுடன், அவர்களது எண்ணிக்கை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படவில்லை,” என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். “மாறாக, கோவிட்-19 நோயினால் உயிரிழந்த சிலருக்கு வேறு ஏதேனும் நோய்களும் இருந்தன, இவர்களது வாழ்க்கையும் இதே காலகட்டத்திற்குள் முடித்துவிடும். அதாவது, தொற்றுநோய் காலத்தின்போது மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிந்த நிலையில் தடுக்கக்கூடிய நோய்களால் இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் போனதே அதற்கு காரணம். இந்த நோயாளிகளையும் கணக்கில் எடுத்தால், நிகழாத மரணங்களால் அவை ஈடுசெய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் சாதாரண காலங்களில், காய்ச்சல் அல்லது காற்று மாசினால் கூட இறப்புக்கள் ஏற்படக்கூடும்.”

இத்தாலியின் ரோம் நகரில் ஒரு நோயாளி தூக்கு படுக்கையில் எடுத்துச் செல்லப்படுகிறார் (Photo:Alessandra Tarantino/AP)

இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயமாக நடந்துள்ளன என்று பல தேசிய மற்றும் சர்வதேச பொது சுகாதார அமைப்புக்கள் முதலாளித்துவ நாடுகளை பலமுறை எச்சரித்துள்ளன. தொற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்தில் பரிசோதித்து, அவற்றை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதற்கான அனைத்து வழிகளும் அவர்களது திறனுக்குள் கையாளக் கூடியவையாகவே இருந்தன.

அதற்கு மாறாக, நிதிய தன்னலக்குழு, தொழிலாளர்களை பணியிடங்களுக்கு திரும்ப கட்டாயப்படுத்தி பெரும் செல்வ பரிமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தம்மை மேலும் வளப்படுத்திக் கொண்டதால் பல பில்லியன் மக்களின் பாதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் வீணடித்தது. இந்த கொள்கை வைரஸ் புவியின் ஒவ்வொரு மூலையிலும் பரவுவதற்கு மட்டுமல்லாது, தொடர்ந்து மிக கடுமையான வடிவங்களாக உருவெடுக்கும் வகையில் தடையின்றி பரவ வழிவகுத்துள்ளது. சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைதான், “நோயை விட நோயை குணப்படுத்துதல் மோசமாக இருக்க முடியாது” என்ற மோசமான அனுமானத்தின் கீழ் இவ்வளவு ஏராளமான மக்களை கொன்று குவித்தது. உண்மையில், எக்கனாமிஸ்ட் அறிக்கை குறிப்பிடுவது போல், இந்த நோய் சொல்லப்படாத மில்லியன் மக்களை அநாதையாக்கியும், வறுமைக்குள் தள்ளியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கொடூரமான பாதிப்பை விளைவித்துள்ளது.

எக்கனாமிஸ்ட் அறிக்கை கூறுவது போல, இந்த புள்ளிவிபரங்களின் பெரும் பன்முகத்தன்மை, தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களிலிருந்து தரவை ஆராய்ந்து எடுப்பதில் உள்ள சிக்கலான தன்மையிலிருந்து உருவாகிறது. இறப்புக்களை பதிவு செய்வதிலுள்ள தாமதம், குறிப்பாக கோவிட்-19 மற்றும் கோவிட் தொடர்புபட்ட இறப்புக்களை உறுதிப்படுத்துவது மற்றும் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவது போன்றவற்றால், புள்ளிவிபரங்கள் துல்லியமாக இல்லை, என்றாலும் பொருத்தமான அதிகப்படியாக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் கிடைக்கின்றது. ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட உலகின் 156 நாடுகளில், 84 முதல் மொத்த இறப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக மட்டுமே எக்கனாமிஸ்ட் ஆல் தரவைப் பெற முடிந்தது. இவற்றில் சில நாடுகள் இந்த புள்ளிவிபரங்களை தங்கள் தேசிய பதிவேடுகளில் மட்டுமே பதிவு செய்துள்ளன.

அட்டவணை 1 – உலகளாவிய பிராந்தியத்தின் கோவிட்-19 இறப்புக்களுக்கும் அதிகப்படியான இறப்புக்களுக்கும் இடையிலான ஒப்பீடு. எக்கனாமிஸ்ட் அறிக்கையிலிருந்து தரவு பெறப்பட்டது.

மேலேயுள்ள அட்டவணை குறிப்பிடுவது போல, ஆசிய, ஆபிரிக்க பிராந்தியங்களின் அதிகப்படியான இறப்புக்களின் மதிப்பீடு உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்களை விட 700 முதல் 800 சதவீதம் அதிகமாகும். இது, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதிலிருந்து உருவாகிறது, அதேவேளை நோய் பாதிப்புக்குள்ளானவர்களை பராமரிக்க தேவையான வளங்களும் இல்லை. மேலும், கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றிய நம்பகமான அறிக்கைகள் இல்லாமையும், மற்றும் இறந்தவர்களை கண்காணித்தறிவதில் தாமதம் அல்லது விடுபடுதல் இருப்பதும் புள்ளிவிபரங்களில் இந்த கடுமையான ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தன.

இந்தியாவில் நோய்தொற்றின் தாக்கம் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வசந்த காலத்தில் நிகழ்ந்த டெல்டா மாறுபாட்டின் எழுச்சி கடந்த ஐந்து மாதங்களில் உலகளவில் அதிகப்படியான இறப்புக்களை கணிசமாக அதிகரிக்கச் செய்தது. ஏப்ரல் நடுப்பகுதியில் 171,000 கோவிட்-19 இறப்புக்கள் மட்டுமே அங்கு பதிவாகியிருந்தாலும், அந்த நேரத்தில் அதிகப்படியான இறப்புக்கள் 1.6 மில்லியன் அளவிற்கு பத்து மடங்கு அதிகமாக இருந்தன. அப்போதிருந்து, மேலும் 270,000 கோவிட்-19 இறப்புக்கள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், அதிகப்படியான இறப்புக்கள் 2.7 மில்லியன் அதிகரித்து, மொத்த எண்ணிக்கையை 4.3 மில்லியனாக்கியது.

மேலும், இந்தோனேசியா போன்ற நாடுகள் வைரஸூடன் மிகக் கொடிய காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தன, அதாவது கோவிட்-19 இறப்புக்கள் கடுமையாக அதிகரித்ததால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கள் சில நாட்களிலேயே மூழ்கிப்போயின. கூறப்படும் 135,500 கோவிட்-19 இறப்புக்களுடன், மதிப்பிடப்பட்ட 800,000 இறப்புக்களும் சேர்ந்து அதிகப்படியான இறப்புக்கள் 500 சதவீதம் அதிகமாகியுள்ளது.

தென்னாபிரிக்கா தொற்றுநோய்களின் அலைகளால் பலமுறை பாதிப்புக்குள்ளானது. இந்த நாடு கொரோனா வைரஸின் பீட்டா மாறுபாட்டின் தாக்கத்தை எதிர்கொண்ட பின்னர், இப்போது வழமைக்கு மாறாக அதிகமான பிறழ்வுகளையும் மற்றும் அதிக பிறழ்வு விகிதத்தையும் கொண்டது என நிரூபணமாகியுள்ள C.1.2. என பெயரிடப்பட்ட மற்றொரு மாறுபாட்டை எதிர்கொண்டுள்ளது. இந்நாட்டில் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 80,000 க்கு அதிகமாக இருந்தாலும், கால் மில்லியனுக்கு நெருக்கமாக, அதாவது மூன்று மடங்குக்கு அதிகமாக அதிகப்படியான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கோவிட்-19 இறப்புக்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான இறப்புக்கள் கடுமையாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. நைஜீரியாவில் அதிகப்படியான இறப்புக்கள் 6,400 சதவீதம் அதிகமாகும். எத்தியோப்பியாவில் இது 3,500 சதவீதமாகும். எகிப்தில் இது 1,400 சதவீதமாகும் என்பதுடன், காங்கோவில், 1,000 க்கு மேற்பட்ட கோவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இங்கு அதிகப்படியான இறப்புக்கள் 130,000 க்கு அதிகமாக அல்லது 12,000 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காலத்தில் ஆபிரிக்கா காப்பாற்றப்பட்டதாக அறிக்கைகள் கூறினாலும், இந்த முக்கியமான பகுப்பாய்வு வேறுவிதமாகக் கூறுகிறது.

கோவிட்-19 நெருக்கடியின் மதிப்பிடப்பட்ட பொருளாதார செலவு. ஆதாரம் JAMA

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் மிக வலுவான அறிக்கை அமைப்புக்களும், இறப்பு சான்றிதழ்கள் குறித்த விரிவான ஆவணங்களும் இருந்தாலும், தொடர்ச்சியான நோய்தொற்று அலைகளின் போது உருவான சமூக நெருக்கடி மற்றும் பெரும் சுமையால் சுகாதார அமைப்புக்கள் உருவாக்கிய குழப்பம் ஆகியவற்றால், அதிகப்படியான இறப்புக்களின் மதிப்பீடுகள் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்களை விட மிக அதிகமாகும்.

ஜூலை இறுதிக்குள், அமெரிக்காவில் அதிகப்படியான இறப்புக்கள் அவர்களது வரலாற்று தரங்களுக்குக் கீழே குறைந்தன, மற்றும் கோவிட்-19 நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் தொற்றுநோய் நாடு முழுவதிலும் முதன்முதலில் அதிகரித்த மாதமான மார்ச் 2020 க்குப் பின்னர் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாட்சி அரசாங்கமும் பள்ளிகளை மீளத் திறப்பதற்கான இருகட்சி கொள்கையை அமல்படுத்திய நிலையில், மிக சமீபத்தில் கோவிட்-19 இறப்புக்களின் ஏழு நாள் சராசரி, நாளொன்றுக்கு 1,500 க்கு அதிகமாகிக் கொண்டிருப்பது உட்பட, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. அதிகப்படியான இறப்புக்களும் தீவிரமாக அதிகரித்து, ஒரு நாளைக்கு 3,000 ஐ எட்டியுள்ளது. அதாவது அதிகப்படியான இறப்புக்கள் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்களை விட தற்போது இரு மடங்கு அதிகமாகும். மொத்தத்தில், அதன் கண்காணிப்பாளர்களின் கருத்துப்படி, கோவிட்-19 இறப்புக்களின் கூட்டு எண்ணிக்கை, தற்போது 650,000 ஐ நெருங்கியுள்ளது, மேலும் அதிகப்படியான இறப்புக்கள் இதிலிருந்து 30 சதவீதம் அதிகரித்து 820,000 ஆக உள்ளது.

ஜூலையில் இந்த நாடு டெல்டா மாறுபாட்டின் கொடிய தன்மை குறித்த தொற்றுநோயியல் நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்திருக்க முடியும் என்பதும், கோவிட்-19 தொடர்புபட்ட வேறு பல நோய்களைத் தடுக்க ஒரு விரிவான ஒழித்தல் உத்தியை விதித்திருக்க முடியும் என கற்பனை செய்வது திகைப்பூட்டுவதாக உள்ளது, ஏனென்றால் அதற்கு மாறாக, ஒரு மாதத்திற்கு குறுகிய காலத்தில், அநேகமாக இது வைரஸால் மிக மோசமான கடும் சோதனையை எதிர்கொள்கிறது.

உலகளவில் மதிப்பிடப்பட்ட நாளாந்த அதிகப்படியான இறப்புக்களும் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்களும். ஆதாரம்: எக்கனாமிஸ்ட் நாளிதழ்

எக்கனாமிஸ்ட் பகுப்பாய்வின் சுருக்க அறிக்கை, “மக்கள் தொகையின் ஒரு பகுதி அளவிற்கு அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதை வைத்து கணக்கிட்டால், உலகில் நோய்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பல இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன. ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை அதன் குடிமக்களை சகித்துக்கொள்ள கூடிய அளவிற்கு நன்றாக அது பாதுகாத்துள்ளதாக தெரிவித்தாலும், மொத்த இறப்புக்கள் குறித்த புள்ளிவிபரங்கள் உண்மையில் கோவிட்-19 ஆல் அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. அதேபோல, இந்தியாவின் இறப்பு எண்ணிக்கையும் உண்மையில் நூறாயிரங்களில் இல்லாமல் மில்லியன்களில் இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். அட்டவணையின் மறுமுனையில், ஒரு சில நாடுகளில் உண்மையில் முன்னைய ஆண்டுகளை விட தொற்றுநோய் காலத்தில் குறைவான மக்களே இறந்துள்ளனர்.”

தொற்றுநோய் புதிய மட்டங்களு எட்டினாலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர ஒற்றை விரலை உயர்த்தக்கூட நோக்கம் கொள்ளவில்லை. உலகை அவர்கள் தற்போது வைத்துள்ள நிலை, சொல்ல முடியாத அளவிற்கு மில்லியன் கணக்கில் இறப்புக்களுக்கு வழிவகுக்கும் கொரோனா வைரஸின் புதிய மற்றும் மிகக் கொடிய மாறுபாடுகளின் எழுச்சியை எதிர்கொள்ளச் செய்யும். இந்த பேரழிவை தவிர்ப்பதற்கு, கோவிட்-19 நோய்தொற்றை முற்றாகவும் முழுமையாகவும் ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையில் ஆயுதபாணியாகிய, தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் தலையீடு அவசியமாகும்.

Loading