முன்னோக்கு

தொழிற்சாலைகளிலும் பணியிடங்களிலும் நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவுவதானது அமெரிக்காவில் கோவிட்-19 இன் தீவிர எழுச்சிக்கு எரியூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க செய்தி ஊடகங்களில் அரிதாகவே அறிவிக்கப்பட்டாலும், உற்பத்தி ஆலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களில் கோவிட்-19 பரவுவதானது அமெரிக்காவில் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தீவிர எழுச்சிக்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது.

மிச்சிகனின் வாரனில் உள்ள எஃப்.சி.ஏ. வாரன் டிரக் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் (AP Photo/Carlos Osorio)

டெல்டா மாறுபாட்டால் எரியூட்டப்பட்டதால், அமெரிக்காவில் நோய்தொற்று மீண்டும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 41 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், உத்தியோகபூர்வமாக 670,000 க்கும் அதிகமான இறப்புக்கள் பதிவாகியுள்ளன. செப்டம்பர் 12 அன்று, சராசரி நாளாந்த இறப்பு எண்ணிக்கை 1,648 உட்பட, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் ஏழு நாள் சராசரி வீதம் 99,879 ஆக உச்சம் கண்டது, அதாவது கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

பணியிடங்களில் நோய்தொற்றுக்கள் வெடித்து பரவுவது குறித்து தேசிய பதிவுமுறை எதுவும் இல்லை என்பதுடன், பல மாநிலங்கள் நோய் வெடித்து பரவும் இடங்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்கவில்லை என்றாலும், மழலையர் முதல் 12ம் வகுப்பு வரையான பள்ளிகள் (K-12) நீண்ட கால பராமரிப்பு மையங்கள் உட்பட, உற்பத்தி மற்றும் கட்டுமான தளங்கள் ஆகியவை வைரஸ் வெடித்துப் பரவுவதற்கான முதல் மூன்று அமைப்புகளாக தொடர்ந்து ஒன்றுக்கொன்று முன்னிலை வகிப்பதை தற்போது கிடைக்கும் அறிக்கைகள் காட்டுகின்றன.

திங்களன்று, மிச்சிகன் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, மாநிலத்தில் உற்பத்தி மற்றும் கட்டுமான தளங்களில் 43 நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது. இது, நீண்ட கால பராமரிப்பு வசதிகளை பொறுத்தவரை மட்டும் 70 நோய்தொற்றுக்களுடன் இரண்டாம் நிலையிலும், பள்ளிகளில் 42 நோய்தொற்றுக்களுடன் சற்று முன்னிலையிலும் உள்ளது. மேலும் இருபது நோய்தொற்று வெடிப்புக்கள் வாகன தொழில்துறை மையமான பெருநகர டெட்ராய்ட் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளன.

பெற்றோர்களை அதிலும் குறிப்பாக வாகன ஆலைகளில் பணிபுரிபவர்களை வேலைக்கு திரும்ப வைப்பதற்காக மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், 77 புதிய நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவும் அளவிற்கு மிச்சிகன் பள்ளிகள் கடந்த வாரம் முக்கிய மையங்களாக இருந்தன, இந்நிலையில் வாகன ஆலைகளின் நிர்வாகிகள் கோவிட்-19 மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த கவலைகள் காரணமாக பணிக்கு வராதவர்கள் வீதம் உச்சபட்சமாக இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

இல்லினாய்ஸில், ஜூலை 1 முதல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி தளங்களிலும் 206 நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன, இது மொத்தத்தில் 14.2 சதவீதத்தை குறிப்பதுடன் மற்ற எந்த இடத்தையும் விட அதிகமானதாகும். சிகாகோ மற்றும் அதன் தொழில்துறை புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய குக் மாகாணத்தில், கடந்த 2 1/2 மாதங்களில் 56 நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன, இது மொத்தத்தில் 32.6 சதவீதமாகும்.

கலிபோர்னியாவில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், 217 இல் இருந்து இருமடங்கிற்கு மேலாக அதிகரித்து 459 பணியிட நோய்தொற்று வெடிப்புக்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 69 வரையிலான அதிகபட்ச நோய்தொற்று வெடிப்புக்கள் வேளாண் துறையில் ஏற்பட்டிருந்தன, ஏனென்றால் பயிர்களை அறுவடை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளிலும் தங்குமிடங்களிலும் நிரம்பியிருப்பதே அதற்கு காரணம்.

இந்த புள்ளிவிபரங்கள் உலக சோசலிச வலைத் தளம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து பெற்ற அறிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. ஆர்கன்சாஸின், ஸ்டுட்கார்ட்டில், லிட்டில் ராக் பகுதியிலிருந்து 55 மைல்கள் தொலைவிலுள்ள Lennox Industries என்ற ஏர் கண்டிஷனர் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள், அவர்களில் குறைந்தது ஐந்து சக பணியாளர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களது இடங்களை நிரப்ப நிறுவனம் நோய்தொற்று பாதிப்புள்ள சிறைகளிலிருந்து கைதிகளை அழைத்து வருவதாகவும் கூறினர். “என் சகோதரர் இதுபற்றி வாயைத் திறக்க பயப்படுகிறார், அவர் இறக்கும் நிலையில் இருக்கிறார்,” என்று லெனாக்ஸ் தொழிலாளி ஒருவரின் சகோதரி WSWS இடம் கூறினார். மேலும், “வேலையில் இருந்து நீக்கப்படுவோமோ என்ற கவலையில் மக்கள் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். லெனாக்ஸ் நிறுவனம் ஆலையை திறந்து வைத்திருக்க நீதிபதிகளுக்கு பணம் கொடுக்கிறது. இதை மக்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறினார்.

கென்டக்கி, மிச்சிகன், டென்னிசி மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள டேனா வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலைகளில் நோய்தொற்றுக்கள் வெடித்தது பற்றி WSWS திங்களன்று அறிக்கை வெளியிட்டது. கென்டக்கியின், ட்ரை ரிட்ஜில், கோவிட்-19 காரணமாக ஆலையில் உள்ள சுமார் 800 தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தற்போது வெளியேறிவிட்டதாக பல தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் டேனா தொழிலாளி ஸ்டீவன் பிளெட்சர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் காரணமாக நேரம் தவறியதால் டேனா ட்ரை ரிட்ஜில் இருந்து தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறுகிறார்.

செப்டம்பர் 9 தேதியிடப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய அறிக்கையின்படி, மிச்சிகனின் வாரனில் உள்ள டேனா ஆலையில் தற்போது 9 செயலில் உள்ள நோய்தொற்றுக்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில் ஆலையில் 53 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் இருந்ததாக நிறுவனம் கூறுகிறது, என்றாலும் இந்த ஆண்டில் ஏற்கனவே 114 நோய்தொற்றுக்கள் பரவியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 ஆல் குறைந்தது ஒரு தொழிலாளி இறந்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கிடைத்த நோய்தொற்று தரவு, டேனா ஆலை அமைந்துள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கணிசமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

இந்த தகவல்களை தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்துவதற்கு மாறாக, தொழிலாளர்களிடமிருந்து இந்த உயிர் காக்கும் அறிவை மூடிமறைக்க வேண்டுமென்றே சதி செய்யப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, 40 இருக்கைகளில் 31 ஐ ஜனநாயகக் கட்சியினர் தக்கவைத்துக் கொண்டதான கலிபோர்னியா மாநில செனட்டில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் நோய்தொற்று வெடிப்புக்கள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தும் மசோதா ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. வர்த்தக சபையிலிருந்து பரப்புரை செய்த பின்னர், மாநில செனட்டர்கள் கலிபோர்னியா பொது சுகாதாரத் துறை தகவல்களை தொழில்துறைக்கு மட்டும் கட்டுப்படுத்தி, நோய்தொற்றுக்கள் வெடிப்பது பற்றிய விபரங்களுடன் தனிப்பட்ட பணியிடங்களின் பெயர்களை வெளியிட அனுமதிக்கும் ஒரு உட்பிரிவை நீக்கினர்.

100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்பூசி ஆணைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவர்களது தொழிலாளர்களுக்கு தவறாமல் பரிசோதனை செய்யவோ நிறுவனங்களுக்கு அவசரகால விதிமுறையை வகுக்குமாறு மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தை (Occupational Safety and Health Administration-OSHA) பைடென் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் பல தசாப்தங்களாக அழிக்கப்பட்டு வரும் இந்த அமைப்பு, அத்தகைய நடவடிக்கை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தாலும், அதைச் செயல்படுத்த சில வழிமுறைகளையே கொண்டுள்ளது.

OSHA தொழிலாளர்களை பாதுகாக்க ட்ரம்பின் கீழ் செய்ததை விட அதிகமாக பைடெனின் கீழ் எதையும் செய்யவில்லை. மாறாக, பாதுகாப்பு நெறிமுறைகளின் பற்றாக்குறை, நோய்தொற்றுக்கள் வெடிப்பது பற்றிய தகவல்களை மறைக்கும் முதலாளிகள், நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி வேலைக்கு வரவில்லையானால் அவரை பணிநீக்கம் செய்வதற்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை பற்றிய தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான புகார்களை அது புறக்கணித்துவிட்டது.

டிசம்பர் நடுப்பகுதியில், OSHA 13,000 கோவிட் புகார்களை பெற்றுள்ளது, மேலும் பல்லாயிரக்கணக்கான புகார்கள் மாநில நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிடவில்லை. இந்த அமைப்பு, பெரும்பாலும் அரிதாகவே நேரடி ஆய்வுகள் செய்யும் அவசர விசாரணைகள் மூலம் நாளது தேதி வரை 80 சதவீத வழக்குகளை முடித்துள்ளது. OSHA வலைத்தளம் அக்டோபர் 2020 இல் கடைசியாக தரவுகளை புதுப்பித்தது உட்பட, தற்போது நாடு முழுவதுமான கோவிட்-19 பணியிட இறப்புக்கள் தொடர்பாக 576 விசாரணைகளை மட்டுமே பட்டியிலிடுவதுடன், கோவிட் இறப்புகள் தொடர்புபட்ட 103 மேற்கோள்களை மட்டுமே வழங்கியுள்ளது.

தொற்றுநோய்க்கு மத்தியில் ஆலைகளை தொடர்ந்து இயக்குவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்தன, மேலும் தொடர்ந்து வகிக்கின்றன. கடந்த ஆண்டு வசந்த காலத்தில், உற்பத்தியை நிறுத்த தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்ததன் பின்னர் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க மூன்று பெரிய நிறுவனங்களுடன் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் (UAW) இணைந்து கொண்டது.

தற்போது, UAW உம் ஏனைய தொழிற்சங்கங்களும் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் பரவி வரும் நிலையில் கூட, தொழிலாளர்களை வேலையில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. கோவிட் கவலைகள் காரணமாக 2022 வரை தங்கள் டெட்ராய்ட் தலைமையகத்திற்குத் திரும்பத் திட்டமிடாத UAW அதிகாரிகள், வேலைநிறுத்த நடவடிக்கைக்காக நிறுவன சார்பு ஒப்பந்தத்திற்கு பெருமளவில் வாக்களிக்க மறுத்த டேனா தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தனர். மாறாக, UAW உம் ஐக்கிய எஃகு தொழிலாளர்கள் சங்கமும், வேலைநிறுத்தம் ஏற்பட்டால் நிறுவனத்திற்கு உதவுவதற்காக வாகன உதிரி பாகங்களை சேமித்து வைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், தொழிலாளர்கள் மத்தியில் நோய்தொற்று பரவும் சாத்தியம் அதிகரிக்கும் என்றாலும், வாரத்தில் ஏழு நாட்களிலும் 12 மணிநேர வேலை செய்ய டேனா தொழிலாளர்களை அவை கட்டாயப்படுத்துகின்றன.

கடைசி பெரிய பொதுப் பள்ளி மாவட்டமான நியூயோர்க் நகரில் திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளிலும் பணியிடங்களிலும் நோய்தொற்றுக்கள் பரவி வருகின்றன. நாடு முழுவதும் நேரடி வகுப்புக்கள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பின்னணியில் குழந்தை பருவ நோய்தொற்றுக்களின் பேரழிவுகர அதிகரிப்புக்கு வாய்ப்பு உள்ளது. குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலையின் கருத்துப்படி, ஆகஸ்ட் 5 முதல் அண்ணளவாக ஒரு மில்லியன் குழந்தைகள் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பெருநிறுவனம் மற்றும் நிதிய பிரபுத்துவத்தின் சார்பாக செயல்படும் பைடென் நிர்வாகம், எவ்வளவு மனித உயிர்கள் விலை கொடுக்கப்பட்டாலும் அதுபற்றி அக்கறையின்றி தொழிலாளர்களை வேலையிலும் குழந்தைகளை பள்ளிகளிலும் தக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. வோல் ஸ்ட்ரீட்டின் பாரிய அரசாங்க பிணையெடுப்புகளால் எரியூட்டப்பட்டு, கடன்களின் நிலையற்ற மட்டங்கள் உருவாக்கப்படும் நிலைமைகளின் கீழ், தொழிற்சாலைகள் மூடப்படுவது பங்குச்சந்தைகளின் மற்றொரு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால், பெருநிறுவன இலாபத்திற்காக மனித உயிர்கள் தியாகம் செய்யப்படுவதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, அதாவது அலபாமாவில் டேனா தொழிலாளர்களின் கிளர்ச்சி மற்றும் செவிலியர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்வது முதல், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் பேர்லின் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் வரை குறிப்பிடலாம். உலக சோசலிச வலைத் தளத்தின் உதவியுடன், டேனா மற்றும் ஏனைய வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என உலகம் முழுவதுமான தொழிலாளர்கள், இறப்பைச் செயல்படுத்துபவர்களான தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான மற்றும் அவற்றிற்கு எதிராக சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு பணியிடத்திலும், கோவிட்-19 பரவுவது தொடர்புபட்ட தகவல்கள் முறையாக மூடிமறைக்கப்படுவதை எதிர்க்கவும், பணியிடங்களில் முழுமையான தொடர்புத் தடமறிதல் தகவல்களை வழங்கக் கோரவும், மற்றும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்தி அவர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கக் கோரவும் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். இது, வைரஸை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளையும் மற்றும் பள்ளிகளையும் மூடுவதற்கான கோரிக்கையுடன் இணைந்தும், தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளுடன் இணைந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் வலையமைப்பின் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இந்த விரிவாக்கம், இலாபமுறைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைப்பதற்கும் தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் அரசியல் எதிர்தாக்குதலுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading