மத்திய புலனாய்வுத்துறையின் ஆவண வெளியீடு சவூதி அரேபியா மற்றும் 9/11 சம்பவ பயங்கரவாதிகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

9/11 பயங்கரவாத தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, ஜனாதிபதி ஜோ பைடென் நிர்வாக உத்தரவின் கீழ், சனிக்கிழமை, மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) வெளியிட்ட அதன் பிரத்யேக உள்அலுவலக அறிக்கை ஒன்று, சவூதி அரேபிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் விமானக் கடத்தல்காரர்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.

ஏப்ரல் 4, 2016 தேதியிட்ட அந்த 16 பக்க அறிக்கை திருத்தப்பட்டிருந்தாலும், செப்டம்பர் 11, 2001 இல் பயணியர் விமானங்களைக் கடத்தியவர்களில் குறைந்தது இரண்டு பேருக்காவது ஒரு சவூதி தூதரக அதிகாரியும் மற்றும் சவூதி உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரும் வழங்கிய உதவிகள் மீது FBI நடத்திய ஒரு விசாரணை பற்றிய முக்கிய விபரங்கள் அதில் உள்ளன.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் (புகைப்படம்: fr.kremlin.ru)

'ENCORE விசாரணையின் புதிய விபரங்கள், மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு: நேர்காணல் [திருத்தப்பட்டது] (நவம்பர் 2015)' என்ற தலைப்பில், அந்த FBI அறிக்கையானது உளவாளி என சந்தேகத்திற்குரிய ஒமர் அல்-பயூமியின் (Omar al-Bayoumi) நடவடிக்கை சம்பந்தமாக நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் மற்றும் அவருடனான தொடர்புகளை மீளாய்வு செய்து, நவாஃப் அல்-ஹஸ்மி மற்றும் காலித் அல்-மிஹ்தார் ஆகிய இரண்டு விமானக் கடத்தல்காரர்களுக்கு உதவ 'பயண உதவி, தங்குமிடம் மற்றும் நிதியுதவிகளை' வழங்குவதில் அவர் ஆழமாக சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கிறது.

2004 இல் அந்த ஆணையத்தின் உத்தியோகபூர்வ 9/11 அறிக்கையில் முன்னர் அல்-பயூமிக்கும் மற்றும் பின்னர் விமானக் கடத்தல்காரர்களாக ஆகவிருந்த இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு 'சந்திப்பு நிகழ வாய்ப்பிருப்பதாக' சித்தரிக்கப்பட்ட விஷயம் உண்மையில் ஓர் உணவகத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நன்கு ஏற்பாடு செய்யப்பட்ட முன்னேற்பாடாக இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. சவூதி பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஓர் ஒப்பந்தக்காரர் நிதியுதவி வழங்கிய வேலையுடன்-கூடிய-கல்வி திட்டத்தின் பாகமாக சான் டியோகோ மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக கூறப்படும் அல்-பயூமி, 'இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்ட இரகசிய நபராக இருக்க வாய்ப்பில்லை' என்று அந்த 9/11 ஆணைய அறிக்கை வகைப்படுத்தி இருந்தது.

மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) குறியீட்டுப் பெயரான ஆபரேஷன் என்கோர் (Operation Encore) இன் அந்த ஆவணமும், சவூதி தூதரக அதிகாரியும் இஸ்லாமிய விவகார அதிகாரியுமான ஃபஹத் அல்-துமைரி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வந்த போது அல்-ஹஸ்மி மற்றும் அல்-மிஹ்தார்க்கு உதவ ஒரு கூட்டாளியை 'ஏற்பாடு செய்ததாகவும்' மற்றும் 'அவ்விருவரும் மிகவும் முக்கியமானவர்கள்' என்று அந்த கூட்டாளியிடம் கூறியதாகவும் குறிப்பிடுகிறது.

வாஷிங்டன் டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் வரை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77 ஐ கடத்தியவர்கள் மற்றும் பென்டகன் மீது போயிங் 757 ஐ மோதியவர்கள் என ஐந்து பயங்கரவாதிகளில் இருவர் தான் இந்த அல்-ஹஸ்மியும் அல்-மிஹ்தாரும், அந்த சம்பவங்களில் விமானத்திலிருந்த 64 பேரும் கட்டிடத்தில் இன்னும் 125 பேரும் கொல்லப்பட்டனர்.

'செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில ஆவணங்களை வெளியிடுதல்' தொடர்பாக ஜனாதிபதி பைடென் கையெழுத்திட்ட செப்டம்பர் 3 நிர்வாக உத்தரவுக்கு விடையிறுக்கும் வகையில், எதிர்பார்க்கப்படும் பல ஆவணங்களில் FBI வெளியிட்டிருக்கும் இந்த ஆவணம் முதலாவதாகும். பைடென் உத்தரவு குறிப்பிட்டது, '9/11 பயங்கரவாத தாக்குதல்கள் மீதான அமெரிக்க அரசின் விசாரணையில் சேகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தகவல்கள், பலமான காரணங்கள் இருந்தால் ஒழிய, இல்லையென்றால் இப்போது பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்.'

இது சவூதி அரேபியா அரசாங்கத்துடன் தொடர்புடைய தனிநபர்களுக்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த தாக்குதல்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன என்பதை அமெரிக்கா முதல்முறையாக உத்தியோகப்பூர்வமாக ஒப்புக் கொள்வதாக உள்ளது, அந்த தாக்குதல்கள் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான சர்வதேச போர்க் குற்றங்களுக்கு அடிப்படையாக மாறியது, அவை தான் இருட்டறைகளுக்கு அனுப்புவதற்கும், குவாண்டனாமோ வளைகுடாவில் சித்திரவதை மற்றும் காலவரையற்ற தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள பல அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் அடிப்படையாக மாறியது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலை அடிப்படையாகக் கொண்ட ஒரு FBI ஆவணம், 2001 இல் இருந்து பரவலாக அறியப்பட்டிருந்த விஷயத்தை இப்போது உறுதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

9/11 சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மத்திய புலனாய்வுத்துறையின் அந்த ஆவணத்திற்கு வெளிப்படையான அறிக்கைகளுடன் விடையிறுத்தனர். உலக வர்த்தக மையத்தில் தன் தந்தையைப் பறிகொடுத்த பிரெட் ஈகிள்சன் கூறுகையில், 'சவூதியர்கள் 9/11 சம்பவங்களைப் பற்றிய உண்மைகளை மறைக்க அமெரிக்க அரசாங்கத்தைச் சார்ந்திருக்க முடியாத தருணத்தை இன்று குறிக்கிறது,” என்றார். ஒருங்கிணைந்த 9/11 குடும்பங்களின் குழுவைச் சேர்ந்த டெர்ரா ஸ்ட்ராடா கூறுகையில், “இப்போது சவூதியர்களின் இரகசியங்கள் அம்பலப்பட்டுள்ளன, அமெரிக்க மண்ணில் ஆயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்ததில் அது வகித்த உத்தியோகபூர்வ பாத்திரத்தை அந்த முடியாட்சி தனக்குள்ளேயே வைத்திருந்ததெல்லாம் கடந்த காலம் ஆகிவிட்டது,” என்றார்.

சவூதி அரேபியா மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குடும்பங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் Jim Kreindler கூறுகையில் அந்த அறிக்கை அவர்களின் வழக்கை மதிப்புடையதாக ஆக்குவதாக தெரிவித்தார். “இந்த ஆவணம், இன்று வரையில் சேகரிக்கப்பட்ட பொது ஆதாரங்களுடன் சேர்ந்து, சவூதி அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருப்பது தெரிந்திருந்தும் அமெரிக்காவுக்குள் அல் கொய்தா எவ்வாறு செயலூக்கத்துடன் செயல்பட்டது என்பதற்கு ஒரு வரைபடத்தை வழங்குகிறது,” என்றார்.

சவூதி தூதரகத்தில் இருந்து வந்த ஓர் அறிக்கை கூறியது: 'சவூதி அரசாங்கத்திற்கோ அல்லது அதன் அதிகாரிகளுக்கோ அந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்னரே தெரிந்திருந்தது அல்லது அதன் திட்டமிடுவதில் அல்லது செயல்படுத்துவதில் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் எந்த ஆதாரமும் இதுவரை வெளி வரவில்லை. செப்டம்பர் 11 தாக்குதல்களில் சவுதி அரேபியா உடந்தையாக இருந்தது என்ற எந்த குற்றச்சாட்டும் திட்டவட்டமாக தவறானது.'

ஜோர்ஜ் டபுள்யூ புஷ், பாரக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் நிர்வாகங்கள் அனைத்தும், அமெரிக்காவின் 'தேசிய பாதுகாப்புக்குக் குறிப்பிடத்தக்களவில் தீங்கு' விளைவிக்கும் என்ற அடிப்படையில், அல்-கொய்தாவுடனான சவூதி அரேபிய தொடர்பு சம்பந்தமான எந்த FBI ஆவணத்தையும் பொதுப்பார்வைக்கு வெளியிடுவதை தடுத்திருந்தன. ஆனால், 2007 இல் இருந்து ஆபரேஷன் என்கோர் இருந்து வருகிறது என்பது ஜனவரி 2020 இல் ProPublica பிரசுரித்த பெரிதும் அநாமதேய ஆதார நபர்களின் அடிப்படையிலான ஒரு புலனாய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டது. என்கோர் விசாரணை 'சவூதி தொடர்பு சம்பந்தமாக அந்த ஆணையத்திற்குள் ஒரு கசப்பான பிளவை அம்பலப்படுத்தியது' என்று அந்நேரத்தில் Propublica குறிப்பிட்டது.

அந்த உள்அலுவலக இராஜாங்க ஆவணத்தின் வெளியீடுகள் சவூதி அரேபியாவின் பங்கு மற்றும் 9/11 சம்பவங்களில் அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் பங்கு குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்புகின்றன. சனிக்கிழமை உலக சோசலிச வலைத் தளம் விளக்கியவாறு, 9/11 சம்பவ இரண்டு விமானக் கடத்தல்காரர்களுக்கு கலிபோர்னியாவில் சவூதிஸ் அல்-துமைரி (Saudis al-Thumairy) மற்றும் அல்-பயூமி மட்டுமே உதவிகளைச் செய்திருக்கவில்லை, மாறாக அல்-ஹஸ்மி மற்றும் அல்-மிஹ்தார் இருவரும் 'சான் டியாகோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள முக்கிய FBI தகவலாளரின் வீட்டில்' வசித்தனர்.

'சவூதி தொடர்பு மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது, ஏனென்றால் அது அரபு உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய கூட்டாளியைச் சம்பந்தப்படுத்துகிறது என்பதற்காக மட்டுமல்ல, மாறாக சவூதி மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுகள், CIA, FBI அல்லது பிற முகமைகளில் யாரொருவரும் விமானக் கடத்தல்காரர்களின் திட்டங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது, அதுவும் அவர்கள் சிஐஏ இன் கண்காணிப்பின் கீழ் இருந்ததுடன், அமெரிக்காவில் சுதந்திரமாக நுழைந்து திரிந்து கொண்டிருந்த அவர்கள் FBI இன் கண்காணிப்பு பட்டியல்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்கின்ற நிலையில், அவை சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றன.”

Loading