பாரிஸ், சீன எதிர்ப்பு AUKUS கூட்டணி தொடர்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கான தூதர்களை திரும்ப அழைத்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக் கிழமை மாலை வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், AUKUS கூட்டணியின் (ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா) புதன்கிழமை அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பிரான்சின் தூதர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்தார். வாஷிங்டன் மற்றும் இலண்டனில் இருந்து தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவதற்காக, ஆஸ்திரேலியா பிரான்சுடனான 56 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது.

ஜோன்-ஈவ் லு திரியோன், ஐரோப்பா மற்றும் வெளியுறவு விவகார பிரெஞ்சு அமைச்சர். [Source: Wikimedia Commons]

லு திரியோனின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான எங்கள் தூதர்களுடனான ஆலோசனைக்காக பாரிசுக்கு உடனடியாக திருப்பி அழைக்க முடிவு செய்தேன். இந்த விதிவிலக்கான முடிவு, செப்டம்பர் 15 அன்று ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவால் செய்யப்பட்ட விதிவிலக்கான தீவிர அறிவிப்புகளால் நியாயப்படுத்தப்படுகிறது.”

இந்த முடிவு வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாதது. ஒரு தூதரை திரும்ப அழைப்பது பாரம்பரியமாக போர் வெடிப்பதற்கு முன்பு எடுக்கப்படும் கடைசி இராஜதந்திர நடவடிக்கையாகும். 1775-1783 கிரேட் பிரிட்டனுக்கு எதிரான சுதந்திரப் போருக்குப் பின்னர் இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு போரிலும் அமெரிக்காவின் நட்பு நாடான பிரான்ஸ், அமெரிக்காவுக்கான தூதரை ஒருபோதும் திரும்ப அழைக்கவில்லை.

AUKUS கூட்டணி சீனாவை குறிவைத்தாலும், அது ஏகாதிபத்திய சக்திகளிடையே வெடிக்கும் மோதல்களை வெளிப்படுத்தியுள்ளது. வாஷிங்டன், இலண்டன் மற்றும் கான்பெர்ரா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அதிகாரங்களுக்கு மத்தியில் அவர்களின் நெருங்கிய கூட்டாளிகளிடமிருந்து முழு இரகசியமாக AUKUS ஐ தயார் செய்தன. இது ஆசியாவில் தீர்க்கமுடியாத இராணுவ, பொருளாதார போட்டிகளால் சூழப்பட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையேயான ஆழமான அவநம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது.

வியாழனன்று, ஆஸ்திரேலிய, அமெரிக்க முடிவுகள் பிரான்சிற்கு அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை வலியுறுத்துவதற்காக லு திரியோன் பிரான்ஸ் இன்போ வுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி அளித்தார். அவர், “நான் கோபமாக இருக்கிறேன்; கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் இதைச் செய்வதில்லை. வெளிப்படையாகப் பேசினால், இது முதுகில் ஒரு குத்து” என்றார்.

'நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் நம்பிக்கை உறவுகளை ஏற்படுத்தினோம்; இந்த நம்பிக்கை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது,” என்று லு திரியோன் தனது “பெரும் கசப்பை” வலியுறுத்தி, நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரும் என்றார். “சேர்போர்க்கில் உள்ள பிரெஞ்சு நிறுவனமான நவால் குரூப் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து முதல் நீர்மூழ்கிக் கப்பல்களை 2023 ஆம் ஆண்டுக்குள் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது, 'சேர்போர்க்கில் பணிபுரியும் ஆஸ்திரேலிய பொறியாளர்கள் குழுக்கள் மற்றும் அடிலெய்டில் [ஆஸ்திரேலியா] கடற்படை குழுவின் பணியாளர்களுடன் பணிபுரிகின்றனர். பின்னர், திடீரென்று, வெடித்துச் சிதறிவிட்டது!” என்றார்.

லு திரியோன் 'அமெரிக்காவின் நடத்தையை' கண்டனம் செய்தார், ஜனாதிபதி ஜோ பைடென் தனது முன்னோடி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளின் நெருக்கடியை தீர்க்கவில்லை ஆனால் மோசமாக்கினார் என்று குற்றம் சாட்டினார்.

அவர் கூறினார், 'இந்த ஒருதலைப்பட்சமான, மிருகத்தனமான, கணிக்க முடியாத முடிவு, திரு. ட்ரம்ப் செய்து கொண்டிருந்ததைப் போலவே இருக்கிறது. ஆஸ்திரேலியர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் முறிந்துவிட்டது என்பதை ஜனாதிபதி பைடெனின் அறிக்கையிலிருந்து நாங்கள் திடீரென்று கற்றுக்கொண்டோம். ... அமெரிக்கா ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை அளிக்கும், அதன் உள்ளடக்கம் நமக்குத் தெரியாது ... ஒரு இணக்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை உருவாக்க விரும்பும் கூட்டாளிகளையோ அல்லது மற்ற சக்திகளையோ ஒருவர் இவ்வாறு நடத்துவதில்லை.”

பிரான்சால் விற்கப்படும் டீசல் -மின்சாரப் படகுகளுக்கு மாறாக -வாஷிங்டன் மற்றும் இலண்டனில் இருந்து நீண்ட தூர அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்காக, ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தை மீறியது ஒரு தொழில்நுட்ப நடவடிக்கை என்ற வாதங்கள் நம்பத்தகுந்ததல்ல. பிரான்சால் விற்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்மையில் ஒரு அணு வடிவமைப்பாகும், பாராகுடா, ஆஸ்திரேலியாவின் அணுசக்தி பரவல் தடைசெய்யும் கடமைகளை மதிப்பதற்காக அதன் அணு உலையை டீசல்-மின்சார இயந்திரத்தால் மாற்றியது. ஆனாலும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் வடிவமைப்பை மாற்ற தங்கள் பிரெஞ்சு சகாக்களை தொடர்பு கொள்ளவில்லை, அதற்கு பதிலாக ஒப்பந்தத்தை ஒரே இரவில் இரத்து செய்து, அதை அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களால் மாற்றினார்கள்.

பதட்டத்தை தணிக்க, ஒரு அநாமதேய அமெரிக்க அதிகாரி AFP இடம் கூறினார்: 'மூத்த நிர்வாக அதிகாரிகள் அறிவிப்புக்கு முன்பே, தங்கள் பிரெஞ்சு சகாக்களுடன் தொடர்பு கொண்டு AUKUS பற்றி அறிவித்தனர்.'

இருப்பினும், வாஷிங்டனில் உள்ள பிரெஞ்சு தூதரகம் உடனடியாக முறையான மறுப்புடன் பதிலளித்தது. தூதரக செய்தித் தொடர்பாளர் பாஸ்கல் கொன்பாவ்று கூறினார், 'ஜோ பைடெனின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் முதல் அறிக்கைகள் வெளியிடுவதற்கு முன்புவரை இந்த திட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.'

நேட்டோ 'நேச நாடுகளுக்கு' இடையே கசப்பான மோதல்கள் வெடிப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று எச்சரிக்கையாகும். சோவியத் அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்தது, உலக முதலாளித்துவத்தின் ஆழமாக வேரூன்றிய, இறுதியில் அபாயகரமான முரண்பாடுகளை தீர்க்கவில்லை. ஒரு பொது எதிரியை நேட்டோ இழந்தது, அது 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு முறை உலகப் போராக வெடித்த ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான மோதல்களை அதிகப்படுத்தியது. இப்போது, ஆசியாவின் பொருளாதார உயர்வு மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல் ஆகியவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இலாபங்கள் மற்றும் மூலோபாய செல்வாக்கிற்காக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கடுமையான கசப்பான போட்டியைத் தூண்டுகின்றன.

பாரிசில், லு மொண்ட் பத்திரிகை AUKUS ஐ 'இந்தோ-பசிபிக் பகுதியில் சமீபத்திய ஆண்டுகளில் பிரெஞ்சு இராஜதந்திரத்தால் நெய்யப்பட்ட வலைக்கு ஒரு கடினமான அடி' என்று அழைத்தது. துல்லியமாக, சீன-அமெரிக்கப் போட்டிகளின் பொறியை தவிர்க்க, பாரிஸ் கான்பெராவை நோக்கி இராணுவ-தொழில்துறை திருப்பத்தை இப்பகுதியில் அதன் புதிய மூலோபாயத்தின் முக்கிய அச்சாக மாற்றியது.”

இருப்பினும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு சுயாதீனமான கொள்கையை பின்பற்றுவதற்கான பிரெஞ்சு முயற்சிகள் வாஷிங்டனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை. பாரிஸ், பேர்லின் மற்றும் மாஸ்கோ ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்கத் திட்டங்களை எதிர்த்தபோது, அமெரிக்க-பிரெஞ்சு உறவுகளில் ஏற்பட்ட முறிவை லு மொண்ட் ஒப்பிட்டது: 'புஷ் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ஈராக் போர் (2003), இது போன்ற அளவிலான கடந்த நெருக்கடி? ஆப்கானிஸ்தானிலிருந்து குழப்பமான, ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா வெளியேறிய பின்னர், ஐரோப்பியர்கள் தங்கள் மூலோபாய இறையாண்மையை கட்டியெழுப்ப இது மற்றொரு எச்சரிக்கையாகும், குறிப்பாக இந்தோ-பசிபிக் ...'

AUKUS கூட்டணியை புகழ்ந்து 'ஆஸ்திரேலியர்களுடன் ஒரு ஸ்மார்ட் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்' என்ற தலைப்பில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கொள்கைகளை முழுமையாக ஆதரிக்க ஐரோப்பாவின் தோல்விக்கு AUKUS அமெரிக்க பதிலடி என்று வலியுறுத்தியது. அதில், 'பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அமெரிக்காவிலிருந்து 'மூலோபாய தன்னாட்சி' என்பதை வலியுறுத்தினார், குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் தொடர்பாக … ஐரோப்பா, சீனாவுடனான உறவை எந்த விளைவுகளும் இல்லாமல் பொருளாதார மற்றும் மூலோபாய பிரச்சினைகளில் பிளவுபட்டு வெல்லும் விளையாட்டை அமெரிக்காவுடன் விளையாட முடியாது'.

பைடென் வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு கண்டனமாக AUKUS அறிவிப்பை விரும்பினார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவி ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரதிநிதி ஜோசப் போரெல் ஆகியோர், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய-பசிபிக் கொள்கை அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தைய நாள் அவர் அதைச் செய்தார். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவியை வகிக்கும். AUKUS கூட்டணி, ஐரோப்பிய ஒன்றியத்தை 'புவிசார் மூலோபாயத்தில் பெரிதாக விளையாடவில்லை' என்பதைக் காட்டுவதையும் மற்றும் ஐரோப்பாவின் 'இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை கேலி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என்று Politico எழுதியது.

இந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலில், முற்போக்கான பிரிவு என்று எதுவும் இல்லை. ஒரு சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு இயக்கத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே அடிப்படையான கேள்வி. ஈராக்கில் 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக நடந்த நவ-காலனித்துவ போர்களின் இரத்தக்களரி தோல்வி, இதைத் தொடர்ந்து கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்டதால் ஏற்பட்ட மில்லியன் கணக்கான இறப்புகள் மற்றும் பொருளாதார இடப்பெயர்வுகளுக்குப் பின்னர், நேட்டோ சக்திகள் பேரழிவுகரமான மோதல்களை எதிர்கொள்கின்றன, அதற்காக அவர்களிடம் அமைதியான தீர்வுகள் கிடையாது.

கடந்த வாரம், வாஷிங்டனில் ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ட்ரம்ப் சீனா மீது அணு குண்டுகளை வீசுவதைத் தடுக்க கடுமையாக உழைத்தது வெளிப்பட்டது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அதன் அமெரிக்க சகோதரத்தை விட அடிப்படையில் கனிவானதோ அல்லது மென்மையானதோ அல்ல. சுதந்திரமான இந்தோ-பசிபிக் கொள்கையை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள், இராணுவச் செலவில் பாரிய அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பொருள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான புதிய தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான சமூக தொலைதூரக் கொள்கைகளுக்கு தொடர்ந்து நிதியளிக்க மறுப்பது, ஆகியவற்றுடன் ஏற்கனவே 1.2 மில்லியன் மக்களின் மரணம் ஐரோப்பாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையில், புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தைப் பற்றி பேசுகையில், ஊர்சுலா வொன் டெர் லெயென் 'போர் விமானங்கள் முதல் ட்ரோன்கள் மற்றும் சைபர் வரை' புதிய இராணுவத் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் தனது கருத்துக்களை இவ்வாறு முடித்தார், “இதனால்தான், பிரெஞ்சு தலைமைப் பதவியின் கீழ் [EU], ஜனாதிபதி மக்ரோனும் நானும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த உச்சிமாநாட்டை கூட்டவுள்ளோம். ஐரோப்பா அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நேரம் இது.

இந்த அறிவிப்புகள், சீனாவிற்கு எதிராக அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு ஆபத்து, நேட்டோவிற்குள் வெடிக்கும் பதட்டங்கள் மற்றும் போர் அபாயத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம் பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

Loading