முன்னோக்கு

இராஜபக்ஷவின் அவசரகால நிலைக்கு எதிராக இலங்கை தொழிலாளர்களை பாதுகாத்திடுங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 30 அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட கொடூரமான அவசரகால நிலையை, இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள முதலாளித்துவ வர்க்கம், ஒரு சர்வாதிகாரத்தை நிறுவி, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை நசுக்க முயற்சிக்கிறது.

சிறைக் கைதிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, கொழும்பின் வடக்கே மஹரவில் ரோந்து செல்லும் அதிரடிப்படை கமாண்டோக்கள் (Photo: Shehan Gunasekara)

இலங்கை ரூபாயின் வீழ்ச்சி, உணவுப் பற்றாக்குறை மற்றும் பிரதான உணவுப் பொருட்களின் பாரிய விலை அதிகரிப்புக்கு மத்தியிலேயே இராஜபக்ஷ அவசரகால நிலையை விதித்தார். ஒரு கிலோ அரிசி மற்றும் சீனி முறையே 250 மற்றும் 220 ரூபாயாக இரட்டிப்பாகியது. அரசுக்கு சொந்தமான கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனங்களில் சீனி வாங்க கடை உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவசரகால நிலையானது 'பொது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதை' உறுதி செய்யும் என்று இராஜபக்ஷ கூறிக்கொள்கிறார். இருப்பினும், இது உண்மையில் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீதான அசாதாரண ஒடுக்குமுறைக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

அது “பொதுப் பாதுகாப்பு நலன் மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், மற்றும் கலகம், வன்முறை அல்லது சிவில் பதட்டங்களை ஒடுக்குதல், சமூகத்தின் வாழ்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகித்தல் மற்றும் சேவைகளை பராமரித்தலுக்கும் அவசியமானதாக தனக்குத் தோன்றும் விடயங்கள் தொடர்பாக” எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இராஜபக்ஷவுக்கு பாரதூரமான சர்வாதிகார அதிகாரங்களை வழங்குகிறது. இராஜபக்ஷவால் சட்டங்களை திருத்த அல்லது இடைநிறுத்த, வேலைநிறுத்தங்கள் அல்லது பிற போராட்டங்களை தடை செய்ய, அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க மற்றும் ஊடகங்களை தணிக்கை செய்யவும் முடியும்.

இதற்கு முன்பே கூட, இராஜபக்ஷ மே 27 அன்று அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பொது சேவை சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை அமுல்படுத்தியதோடு கடந்த வாரம் அதை புதுப்பித்தார். இது கிட்டத்தட்ட முழு அரசாங்கத் துறையிலும் உள்ள தொழிலாளர்களை அல்லது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை தடை செய்கிறது. அவர் பல முன்னாள் மற்றும் சேவையில் உள்ள இராணுவ அதிகாரிகளை உயர் சிவில் பதவிகளுக்கு நியமித்துள்ளார். தீவு கோவிட்-19 தொற்றின் டெல்டா மாறுபட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்கின்ற நிலையில், பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான வேலைத் தளங்கள், குறிப்பாக ஆடைத் தொழில் போன்ற ஏற்றுமதியை நோக்கிய தொழில்கள் 'அத்தியாவசியமானவையாக' கருதப்படுகின்றன. இதன் விளைவாக, இலங்கையில் குறைத்து கணக்கிடப்படுகின்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒட்டுமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 488,000 ஆகும். மொத்த மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

எவ்வாறாயினும், தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த பிற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கும் மேலாக, சுமார் 250,000 அரச பாடசாலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். முன்னதாக, சுகாதாரம், தபால், புகையிரதம், துறைமுகங்கள், மின்சாரம், சுற்றுலா மற்றும் ஆடைத் தொழிற்றுறைகளிலும் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோயினால் பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பெட்ரோலியத் தொழிலாளர்கள் மத்தியில் மேலதிக நேரம் மற்றும் ஊதியக் குறைப்பு காரணமாக அமைதியின்மை அதிகரித்து வருகிறது.

இராணுவம் மற்றும் வலதுசாரி, பாசிச சக்திகளின் மீது தங்கியிருந்துகொண்டு ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய தனது உந்துதலை தீவிரப்படுத்துவதன் மூலம் இராஜபக்ஷ இப்போது பதிலளித்துள்ளார். குறிப்பாக, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதோடு, இலங்கை ஆளும் உயரடுக்கு, தனது ஆட்சியை பாதுகாக்க திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட இனவாத பிளவுகளை அது தகர்க்கின்றது என்பதையிட்டு கவலைகொண்டுள்ளது.

அதிகரித்து வரும் அரச வன்முறை மற்றும் அடக்குமுறையின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதும் அது எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதும் தீர்க்கமான பணியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கையில் உள்ள தொழிலாளர்களின் சிறந்த கூட்டாளிகள் ஏனைய நாடுகளிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களே என்பதை தெளிவுபடுத்துவதை அர்த்தப்படுத்துவதாகும். உண்மையில், இலங்கையில் வளரும் வர்க்கப் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்கள், சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகளுக்கு எதிராகவும், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சக்தியே இராஜபக்ஷ அரசாங்கத்தின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் இலங்கை சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க அணிதிரட்டப்பட வேண்டிய சக்தியாகும்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், கோவிட்-19 தொற்றுநோயை முற்றிலும் ஒழிக்க விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளும் வர்க்கம் மறுத்து வருவது, மற்றும் ஆளும் உயரடுக்குகள் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவது போன்ற. ஒரே விதமான அத்தியாவசிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சி மற்றும் இராணுவம் மற்றும் பொலிசினதும் பிரிவுகளால் ஊக்கப்படுத்தப்பட்டு, வெளிப்படையாக ஒரு பாசிச இயக்கத்தை ஊக்குவித்து வருகிறார். இது, அவரது பாசிச ஆதரவாளர்களின் கும்பல் காங்கிரஸ் கட்டிடத்தை தாக்கி, ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கான காங்கிரஸின் உறுதிப்படுத்தலைத் தடுக்க முயன்ற, ஜனவரி 6 சம்பவங்களுக்கு வழிவகுத்தது. ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தாலும், ட்ரம்பைச் சுற்றியுள்ள பாசிச சக்திகள் தங்கள் சதித்திட்டங்களைத் தொடர்வதுடன், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. போல்சனாரோ, நீதித்துறை மற்றும் அரசியல் ஸ்தாபனத்தில் தனது எதிர்ப்பு கன்னைகளை வீழ்த்துவதற்காக அதி வலது சதிக்கு அழைப்பு விடுக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக, பேரினவாதத்தையும் தீவிர வலதுசாரி சக்திகளையும் தூண்டிவிடுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி காலங்கடந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள், இயல்பாகவே ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிக்க இலாயக்கற்றவை என்பதை இலங்கையின் வரலாறு மீண்டும் மீண்டும் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர தலையீட்டின் மூலம், பரந்த ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, சர்வதேச அளவில் சோசலிசத்திற்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் ஊடாகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதை 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சியில் வி. லெனினுடன் இணைத் தலைவராக செயற்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி, தனது நிரந்தரப் புரட்சி கோட்பாட்டில் விவரித்துள்ளார்.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை முதலாளித்துவம் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஒவ்வொரு பெரிய வரலாற்று வெடிப்பையும் தடுக்க அல்லது நசுக்க எடுத்த முயற்சிகளில் அவசரகால நிலையை விதித்தது. 1953 ஹர்த்தால் (ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் வணிக முடக்கம்), 1971 கிராமப்புற இளைஞர் கிளர்ச்சி மற்றும் 1983-2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஏறத்தாழ 30 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாத யுத்தம் ஆகியவை இதில் அடங்கும்.

பூகோள முதலாளித்துவத்தின் மிகவும் தீவிரமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியுடன், பண்புரீதியில் மாற்றமடைந்து வரும் நிலைமைகளின் கீழேயே தற்போதைய அவசர கால நிலை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், தொற்று நோய் சம்பந்தமான விடயத்தில், மனித உரியிர்களை விட பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுக்களின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளும் உயரடுக்கின் குற்றவியல் மற்றும் கொலைகார கொள்கைகளாலேயே முதலாளித்துவ ஆட்சி மதிப்பிடப்படுகிறது. உலகளவில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 227 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 4.6 மில்லியனுக்கும் அதிகமாகும். பிரிட்டனின் எகோனொமிஸ்ட் சஞ்சிகை மேற்கோள் காட்டிய புள்ளிவிவர மதிப்பீடுகளின்படி, கோவிட்-19 நோயால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களும் அடங்கிய ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும், இந்த கொடூரமான கொள்கை மற்றும் சர்வாதிகாரத்தை நாடும் நடவடிக்கைக்கு உடந்தையாக உள்ளன.

எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இராஜபக்ஷவின் அவசரகால நிலை குறித்து எப்போதாவது மட்டுமே விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளை, தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமைதியாக உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) இராஜபக்ஷவை விமர்சிக்கக் கூட அக்கறை காட்டவில்லை, அவரது சர்வாதிகார நகர்வுகளை மறைமுகமாக ஆதரித்தது. இந்த கட்சிகள் அனைத்தும், கடந்த அரசாங்கங்களின் பங்காளிகளாக அல்லது ஆதரவாளர்களாக இருந்து, அவசரகால ஆட்சியையும் மற்றும் ஏனைய அடக்குமுறை சட்டங்களையும் அமுல்படுத்தியதோடு உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததிலும் பேர் போனவை ஆகும்.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான நேரடி அரசியல் போராட்டத்தில் நுழையும் போது அதை ஒரு சர்வதேச அரசியல் முன்னணியை அரசியல்ரீதியாக ஆயுதமாக்குவதும் ஒருங்கிணைப்பதும் பெரும் பணியாகும். குறிப்பாக, இராஜபக்ஷ அரசாங்கத்தால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே இதன் அர்த்தமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுடன் இலங்கையில் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை இது குறிக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்புவிடுத்தவாறு, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான தீர்க்கமான படியாகும்.

Loading