இலங்கை ஜனாதிபதியின் ஒடுக்குமுறையான அவசர கால நிலையை எதிர்த்திடுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் ஆகஸ்ட் 30 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

கோட்டாபய இராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

கடந்த திங்கட் கிழமை, ஆளும் கட்சியின் பெரும்பான்மையினரின் ஆதரவுடனும், எதிர்க்கட்சிகளின் அடிமைத்தனமான விமர்சனத்துடனும் இந்த ஒடுக்குமுறை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்குமே' அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. அரிசி மற்றும் சீனியின் விலை இரட்டிப்பாகியமை போன்ற சமீபத்திய வாரங்களில் தலை தூக்கியுள்ள உணவுப் பற்றாக்குறையை அரசாங்கம் ஒரு சாக்குப் போக்காகப் பயன்படுத்திக்கொண்டது.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியை, அத்தியாவசிய சேவை ஆணையராக ஜனாதிபதி இராஜபக்ஷ நியமித்தார். பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் சீனியை 'பறிமுதல் செய்து' அவற்றை விநியோகிப்பது பற்றி ஒரு வெகுஜன பிரச்சாரத்தைத் அரசாங்கம் ஊடகங்களின் ஆதரவுடன் முன்னெடுத்தது.

அவசரகால நிலையை அறிவிப்பதன் மூலம், ஜனாதிபதி பாரதூரமான அதிகாரங்களை பெற்றுள்ளார். 'பொதுப் பாதுகாப்பு நலன் மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், மற்றும் கலகம், வன்முறை அல்லது சிவில் பதட்டங்களை ஒடுக்குதல், சமூகத்தின் வாழ்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகித்தல் மற்றும் சேவைகளை பராமரித்தலுக்கும் அவசியமானதாக தனக்குத் தோன்றும் விடயங்கள் தொடர்பாக” சட்டங்களைக் கொண்டுவர அவரால் முடியும்.

இந்த அதிகாரங்களின் கீழ் இராஜபக்ஷ இன்னும் புதிய விதிமுறைகளை அறிவிக்கவில்லை எனினும், அவை வரிசையில் உள்ளன. அவரால் எந்த சட்டத்தையும் திருத்தவும், எந்தச் சட்டத்தினது, செயல்பாட்டை இடைநிறுத்தவும் மற்றும் எந்தவொரு சட்டத்தையும் மாற்றத்துடன் அல்லது மாற்றம் இன்றி பயன்படுத்த முடியும். இந்த விதிகளின் மூலம், அவரால் அரசியல் கட்சிகள் உட்பட எந்தவொரு அமைப்பையும், எந்தவொரு போராட்டத்தையும் தடை செய்ய முடியும், எதேச்சதிகாரமாக மக்களை கைது செய்யவும் மற்றும் ஊடக தணிக்கையை விதிக்கவும் முடியும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமை தங்கள் மீது சுமத்தப்படுவதால் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்ற தொழிலாள வர்க்கமும் கிராமப்புற ஏழைகளுமே இந்த அவசரச் சட்டங்களின் உண்மையான இலக்கு என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது.

இராஜபக்ஷ, முதலில் மே 27 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தை இந்த வாரம் புதுப்பித்தார். இது கிட்டத்தட்ட பிரதான அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு மில்லியன் தொழிலாளர்கள் மீது தாக்கம் செலுத்துகிறது.

இந்தச் சட்டத்தின்படி, வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதை மீறினால், ஒரு நீதவான் முன் நடத்தப்படும் ஒரு சுருக்கமான விசாரணையை அடுத்து, கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்பு பெற முடியாமல் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள், மேலும் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். சட்டத்தை மீறுவதற்கு ஊழியர்களைத் தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் எவரும் இதேபோன்ற தண்டனையை எதிர்கொள்வர்.

உலகளாவிய தொற்றுநோய் அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது. உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் 3,000 முதல் 5,000 வரை அதிகரித்துள்ளன. தற்போதைய மொத்த தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இப்போது 4 இலட்சத்து 75 ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன் மரணங்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மையான நிலைமையை குறைத்து காட்டுகின்றன.

தொற்றுநோயை அரசாங்கம் குற்றவியல்தனமாக தவறாக கையாள்வது குறித்து பொதுமக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை இராஜபக்ஷ ஆட்சி பலமுறை புறக்கணித்து வந்துள்ளதுடன் நாட்டின் மோசமடைந்து வரும் மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, பொது சுகாதார கட்டமைப்பை மாற்றியமைக்கத் தவறியுள்ளது.

செவ்வாய்க் கிழமை பாராளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ, இலங்கை ஒரு ஆழமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நெருக்கடியினுள் அகப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டார். உள்நாட்டில், இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட அரச வருவாய் 1,500 பில்லியன் முதல் 1,600 பில்லியன் ரூபாய் வரை சரிந்துள்ளது (7.5 மற்றும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்).

ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வரும் வருமானமும் வீழ்ச்சியடைந்து வருவதால், நாடு பாரிய அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கிறது. மத்திய வங்கி தரவுகளை மேற்கோள் காட்டி, பசில் இராஜபக்ஷ விளக்கியதாவது: 'நாட்டின் நிகர அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்தை நெருங்கி உள்ளது. அதாவது இருப்புக்கள் அனைத்தும் கடனாகப் வாங்கப்பட்டவை.' அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் மோசமான உள்ளர்த்தங்களைக் கொண்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை நெருக்கடியின் பொருளாதாரச் சுமையை தாங்குமாறு கட்டாயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் புதிய திட்டங்களுக்கான செலவு உட்பட செலவினங்களைக் குறைக்க, நிதி அமைச்சு அனைத்து அமைச்சுக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வேலைக்கு புதிய ஆட்களை நியமிப்பதையும் அவர் தடை செய்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வெட்டுவது மற்றும் உணவு விநியோகத்தை பங்கீடு செய்வது பற்றியும் இப்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. பல இறக்குமதிகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளன.

உழைக்கும் மக்கள் ஏற்கனவே ஒரு ஆழமான சமூக நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அரை மில்லியன் மக்கள் வறுமையில் விழுந்துள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட தரவு, நாளொன்றுக்கு 3.20 டொலருக்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்களை அடிப்படையாகக் கொண்ட வறுமை விகிதம், 2019 இல் 9.2 சதவீதத்தில் இருந்து 2020 இல் 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அது கூறுகிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று வேறு அறிக்கைகள் கூறுகின்றன.

முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையை எதிர்கொள்ளும் போது, முந்தைய அரசாங்கங்கள் அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தி வந்துள்ளன. 1953 இல், ஹர்த்தால், வெகுஜன போராட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தத்தின் மத்தியில், அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தது. அரச படைகள் ஒன்பது தொழிலாளர்களைக் கொன்றன.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 1971 மற்றும் 2011க்கு இடையில், தொடர்ச்சியாக அவசரகால ஆட்சியைப் பராமரித்தன.

 1971 இல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி அரசாங்கம், கிராமப்புற இளைஞர்களின் எழுச்சியை வன்முறையாக ஒடுக்குவதற்கு அவசரகால அதிகாரங்களைச் சுரண்டிக்கொண்டு, குறைந்தது 15,000 பேரைக் கொன்று குவித்தது.

 1973-1974 பூகோள எண்ணெய் நெருக்கடியின் போது, கூட்டணி அரசாங்கம் இந்த சட்டங்களைப் பயன்படுத்தி கடுமையான உணவுப்பொருள் பங்கீட்டுமுறையை விதித்ததுடன், விவசாயிகளின் விளைபொருட்களைக் கைப்பற்றி, பரவலான பட்டினிக்கு வழி வகுத்தது. தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் கிராமப்புற அமைதியின்மை கூட்டணி ஆட்சியை சிதைத்தது.

 1977 இல் பதவிக்கு வந்த, ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம், ஒரு எதேச்சதிகார ஜனாதிபதி அரசியலமைப்பை ஸ்தாபித்து, தொடர்ச்சியான சமூக நெருக்கடிக்கு மத்தியில் தலைதூக்கிய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கிளர்ச்சிக்கு எதிராக அவசர கால நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது.

 பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி தமிழர்-விரோத இனவாதப் போரை முன்னெடுப்பதற்கும் அதே அவசர கால அதிகாரங்களே பயன்படுத்தப்பட்டன. பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் 'காணாமல் போனார்கள்'. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 1988-1990 காலப்பகுதியில், பரவலான அமைதியின்மைக்கு மத்தியில், அவசரகால ஆட்சி என்ற போர்வையின் கீழ் இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகளால் தெற்கில் சுமார் 60,000 கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 2009 இல் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவசரகால ஆட்சி இறுதியாக நீக்கப்பட்டது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், இலட்சக் கணக்கானோர் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவத்தால் நடத்தப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒரு தொகை தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய மையங்களில் வைத்து “புனர்வாழ்வு பயிற்சி” அளிக்கப்பட்டது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் அலை வெடித்துள்ள நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் அவசரகால ஆட்சிக்கு மாறியுள்ளது. ஏறக்குறைய 250,000 ஆசிரியர்கள் இரண்டு மாத காலமாக தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்ற அதே நேரம், சமீபத்திய மாதங்களில் ரயில், தபால், பெருந்தோட்ட மற்றும் சுகாதார தொழிலாளர்கள் மத்தியில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கிராமப்புற அமைதியின்மை அபிவிருத்தியடைந்து வருகின்றது.

ஜூலை 30 அன்று நுவரெலியாவில் ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். [Credit: WSWS Media]

குறிப்பிடத்தக்க வகையில், தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாத விஷத்தை அரசாங்கமும் ஊடகங்களும் தொடர்ந்து ஊக்குவித்த போதிலும், இந்த போராட்டங்களில் அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்று வருகின்றனர்.

சமீபத்திய வாரங்களாக, இராஜபக்ஷ அரசாங்கம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலான செயற்பாட்டாளர்கள் மீது பொலிஸ் வேட்டையாடலை முன்னெடுத்து வருகின்றது. சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலரது பெயர்கள் சேகரிக்கப்படுவதோடு, நீதிமன்ற வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் அடக்குமுறை நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதற்கான எச்சரிக்கை ஆகும்.

அரசாங்கம், பொலிஸ் ஆட்சி வழிமுறைகளின் பக்கம் மாறுவதானது சர்வதேச நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பிற்கு பதிலடி கொடுக்க, எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு மாறி வருகின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத சதி முயற்சியில் இறங்கி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 6 அன்று பாசிச தட்டுக்களைத் திரட்டியதோடு மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கான சதித்திட்டத்தைத் தொடர்கின்றார். ஐரோப்பிய ஆட்சிகள் அதிக அடக்குமுறை சட்டங்களை இயற்றியுள்ளதுடன் பாசிச சக்திகள் நடைமுறையில் ஊக்குவிக்கப்படுகின்றன. பிரேசிலில், ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ, பாசிச சக்திகளுக்கு ஆதரவளிப்பதுடன், சர்வாதிகார சதித்திட்டத்தை தயார் செய்கிறார். இந்தியாவில், வலதுசாரி பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியும், இதுபோன்ற எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கையில், எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவசர காலச்சட்டம் குறித்து எப்போதாவதே விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

 அவசரகால ஆட்சியைத் திணிப்பதற்குப் பதிலாக, 'தொற்றுநோயைச் சமாளிக்க சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஐ.ம.ச. அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தது.

 ஜே.வி.பி. தலைவர் அனுரா திஸாநாயக்க, இது 'அதிக அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு செயலற்ற தலைவரின் வெறித்தனமான முயற்சி' என்று அறிவித்தார். உண்மையில், இராஜபக்ஷ ஒரு தனிநபராக மட்டுமல்ல, ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஆதரவுடன் செயல்படுகிறார்.

 ஐ.தே.க. தலைவரும் ஒரே பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, சட்டத்தின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளக் கூட கவலைப்படவில்லை. இது இராஜபக்ஷவின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கட்சியின் மௌனமான ஆதரவைக் குறிக்கிறது.

 பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அரசாங்கம் ஏனைய துறைகளுக்கு அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தாது என்ற உத்தரவாதத்தை பெற கோழைத்தனமாக முயற்சித்தார்.

இந்த கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் போலித்தனமானவை ஆகும். கடந்த காலங்களில், ஐ.தே.க., ஐ.ம.ச. தலைவர்களும் மற்றும் ஜேவிபி தலைவர்களும், அவசரகால அதிகாரங்களை ஈவிரக்கமின்றி பயன்படுத்திய அரசாங்கங்களில் பங்காளிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அதன் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கும் விரோதமாக பெருகிவரும் எதிர்ப்பை பாதுகாப்பான அரசியல் நீரோட்டத்துக்குள் கட்டுப்படுத்தி திசை திருப்ப முயல்கின்றனர்.

போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி, இந்த சட்டங்களுக்கு எதிராக 'உழைக்கும் மக்களை அணிதிரட்ட எதிர்பார்ப்பதாக' அறிவிக்கிறது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில், ஒரு பரந்த முன்னணியை ஸ்தாபிப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதே அதன் முக்கிய செயல்பாடாக உள்ளது. அதன் ஒரே நோக்கம், உழைக்கும் மக்களின் எதிர்ப்பை முடக்குவதாகும்.

அதே நேரம், தொழிற்சங்கங்கள், அடக்குமுறை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லத் தவறியது போலவே, அவசரகால சட்டங்கள் சம்பந்தமாகவும் ஒரு குற்றவியல் மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன.

எதிர்க்கட்சிகள், போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயாதீனமாக, அதன் ஐக்கியப்பட்ட தொழில்துறை வலிமையை அரசியல் ரீதியாக அணிதிரட்டத் தயார்படுத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கம் இராஜபக்சவின் வர்க்கப் போர் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

 அவசரகால நிலை மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோர வேண்டும்.

 ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த குழுக்கள் பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலையில் வேலை செய்வதை எதிர்ப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

 இந்த நடவடிக்கை குழுக்கள் கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களதும் ஆதரவை அணிதிரட்ட வேண்டும்.

 பொது சுகாதார சேவையை தூக்கி நிறுத்தவும், ஊரடங்கு காரணமாக வேலை மற்றும் வருமானத்தை இழந்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட வேண்டும்.

இராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டுள்ளதுடன், முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி வீசுவதற்கான சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதன் மூலம் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். பெருந்தோட்டங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். மற்றும் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிராகரிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளை செயல்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தொற்றுநோய் உட்பட உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகள் எதுவும் தனி ஒரு நாட்டில் தீர்க்கப்பட முடியாதவை ஆகும். சோசலிசத்திற்கான போராட்டம் ஒரு சர்வதேச கடமை ஆகும். சர்வதேச ஐக்கியத்தை உருவாக்க, உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து வகையான தேசியவாதம், இனவாதம் மற்றும் பேரினவாதத்தை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை அமைக்க முன்முயற்சி எடுத்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு அதில் இணைந்துகொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த அரசியல் முன்னோக்கிற்காகப் போராடுகிறது. வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு இன்றியமையாத தலைமைத்துவமாக எமது கட்சியை கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading