நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக சோசலிச தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஐம்பது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தேசிய செயலாளரான உல்ரிச் ரிப்பேர்ட் அதன் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (Bunds Sozialistischer Arbeiter) 1971 இல் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். இது செப்டம்பர் 19 அன்று அவர் ஆற்றிய உரையின் சற்று ஒழுங்கமைக்கப்பட்ட பதிப்பாகும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்ற மற்றும் பேர்லின் பிரதிநிதிகள் மன்றத் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதித் தேர்தல் கூட்டத்தில் இவ்வுரை வழங்கப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1971 ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் 19 திகதிகளில் சோசலிச தொழிலாளர் கழகம் (BSA) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜேர்மன் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. இது மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

நாஜி சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்து 26 ஆண்டுகளுக்கு பின்னர், இளம் தொழிலாளர்களும் மாணவர்களும் ஜேர்மனியில் மூலவேர்களை கொண்டிருந்த சக்திவாய்ந்த மார்க்சிச மரபுகளுடன் மீண்டும் இணைந்தனர். இங்குதான் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) முதல் வெகுஜன மார்க்சிச கட்சியாகவும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாகவும் கட்டப்பட்டது. ஆனால் சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதம் இந்த பாரம்பரியத்தை காட்டிக் கொடுத்தது.

1938இல், லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்திற்கு எதிரான உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கைப் பாதுகாக்க நான்காம் அகிலத்தை நிறுவினார். நான்காம் அகிலமும் ஜேர்மனியில் வலுவான பிரிவைக் கொண்டிருந்தது. நாஜி சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பின்னரும், ஒஸ்கார் ஹிப்ப தலைமையிலான பேர்லின் குழுவில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.

சோசலிச தொழிலாளர் கழகத்தின் இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் கழகத்தின் ஸ்தாபக மாநாடு-1972

ஆனால் பின்னர் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டடேலை பின்பற்றுபவர்கள் ஜேர்மன் பிரிவை அழித்தனர். அவர்கள் 1951 இல் ஜேர்மனியின் குறுகிய காலம் நிலைத்திருந்த ஜேர்மன் சுயாதீன தொழிலாளர் கட்சிக்குள் (Unabhängigen Arbeiterpartei Deutschlands) தம்மை கலைத்தனர். இக்கட்சி யூகோஸ்லாவிய தலைவர் ஜோசிப் டீட்டோவை ஆதரித்து, பின்னர் தன்னை சமூக ஜனநாயக கட்சிக்குள்ளும் தொழிற்சங்கங்களின் பிரிவுகளிடையேயும் தம்மை கலைத்துக்கொண்டது. கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஆட்சியில் ஒஸ்கார் ஹிப்ப எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் நான்காம் அகிலம் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டு, 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்தன. 1960 களில், ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் பணியில் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் அதிக கவனம் செலுத்தியது. அதன் தலைவர் ஜெர்ரி ஹீலி சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டார்.

அந்த நேரத்தில் ஹனோவர் நகரில் கூடியிருந்த இரண்டு டஜன் நிறுவன உறுப்பினர்களில் நானும் ஒருவராக இருந்தேன். அவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் இல்லை. மூன்று பாரிய விடயங்களே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினை நோக்கி எங்களை ஈர்த்தது.

முதலாவது தேசிய சோசலிசம் (Nazism) பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு

ஒரு சக்திவாய்ந்த கலாச்சாரம் மற்றும் ஒரு வலுவான சோசலிச தொழிலாள வர்க்க பாரம்பரியம் கொண்ட ஒரு நவீன நாட்டில், காட்டுமிராண்டித்தனத்திற்குள் இவ்வாறு வீழ்ந்தது எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி அந்த நேரத்தில் ஒரு முழு தலைமுறையினருக்கும் அக்கறை மிக்கதாக இருந்தது.

போருக்குப் பின்னர், நாஜிக்களின் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டன. ஆனால் 1960களில் இது சாத்தியமில்லாதுபோனது. பிராங்பேர்ட் அவுஷ்விட்ஸ் விசாரணையில் முதன்முறையாக ஒரு ஜேர்மன் நீதிமன்றம் அழிப்பு முகாம்களின் பாரிய கொலைகாரர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. மற்றும் “Night Will Fall” போன்ற ஆவணப் படங்கள் நாஜி பயங்கரவாதத்தின் கொடூரமான அளவை மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

அந்த நேரத்தில் பலர் பாசிசத்திற்கான காரணத்தை மக்களின் உளவியல் மற்றும் ஜேர்மனியர்களை தவறாக நடாத்திக்கொண்டு போகலாம் என்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விளக்கினர். ஆனால் இந்த பதிலில் நாங்கள் திருப்தி அடையவில்லை. ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் பாட்டாளி வர்க்க தலைமையின் தோல்விதான் இதற்கான அடிப்படை காரணம் என்பதை நமக்குக் எடுத்துக்காட்டியது.

சமூக ஜனநாயகக் கட்சியும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் மில்லியன் கணக்கான வாக்காளர்களையும் நூறாயிரக்கணக்கான செயலில் உள்ள உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. நவம்பர் 1932 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடந்த குடியரசு தேர்தலில் அவர்கள் நாஜிகளை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தனர். அவர்களின் உறுப்பினர்கள் நாஜிக்களைத் தடுக்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் கட்சித் தலைவர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க மறுத்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சி, அரசு, காவல்துறை மற்றும் குடியரசு தலைவர் வொன் ஹிண்டன்பேர்க் ஆகியவற்றை நம்பியிருந்தது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் ஹிண்டன்பேர்க் ஹிட்லரை அதிபராக நியமித்தார்! ஸ்ராலினின் செல்வாக்கின் கீழ் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, தனது கோழைத்தனத்தை தீவிர வார்த்தையாடல்களுக்கு பின்னால் மறைத்தது. இது சமூக ஜனநாயகவாதிகளை சமூக பாசிஸ்டுகள் என்று தூற்றி மற்றும் ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் இடைவிடாது கோரியது போல் நாஜிக்களுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணிக்கு போராட மறுத்தது.

இதனால், ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி இல்லாமல் நிறுவ முடிந்தது.

ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் அடிப்படையில், பாசிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை நாங்கள் புரிந்து கொண்டோம். ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் ஹிட்லருக்கு பதவி உயர்வு அளித்து, அவருக்கு நிதியளித்து, அவரை குடியரசு சான்சிலராக நியமித்து மற்றும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்துடன் அவரை சர்வாதிகாரியாக்கியது. ஹிட்லரும் அவருடைய மண்ணிற-சட்டை கும்பல்களும் தொழிலாளர்களின் இயக்கத்தை நசுக்குவதற்கும் 'கிழக்கில் உயிர்வாழ்வதற்கான பிரதேசம்' என்ற அதன் ஏகாதிபத்திய கனவை நிறைவேற்றுவதற்கும் தேவைப்பட்டது.

முதலாளித்துவம் இருக்கும் வரை பாசிச ஆபத்து இல்லாதொழிக்கப்படமுடியாது என்று நாங்கள் முடிவிற்கு நாம் வந்தோம். ஏர்னெஸ்ட் மண்டேல் அந்த நேரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தார். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் ஜேர்மன் பதிப்பின் முன்னுரையில் அவர் 'இதுவரை இல்லாத ஒரு [பாசிச] ஆபத்தால் ஒருவரும் ஈர்க்கப்படக்கூடாது, மேலும் நவ-பாசிசம் பற்றி உரத்த குரல் எழுப்பத்தேவையில்லை' என்று எழுதினார்.

மறுபுறத்தில் நாங்கள், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய மார்க்சிச தலைமையை கட்டியெழுப்புவது மட்டுமே போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு ஒரு மறுபிறப்பைத் தடுக்க முடியும் என்று உறுதியாக நம்பினோம். இம்மதிப்பீடானது தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்ட்டின் (AfD) எழுச்சி, அமெரிக்காவில் ட்ரம்பின் சதி முயற்சி மற்றும் பிற முதலாளித்துவ நாடுகளில் இதே போன்ற நிகழ்வுகளால் சமீபத்திய ஆண்டுகளில் வியத்தகு முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஸ்ராலினிசத்தை உலக ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சி கையாள் என ட்ரொட்ஸ்கி மதிப்பீடு செய்ததில் அனைத்துலகக் குழு உறுதியாக இருந்தமை எம்மை அதை நோக்கி ஈர்த்தது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத் திட்டம், “தொழிலாளர் அரசில் மேலும் மேலும் உலக முதலாளித்துவத்தின் கையாளாக மாறிவரும் அதிகாரத்துவம், அங்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய சொத்து வடிவங்களை தூக்கிவீசிநாட்டை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் தள்ளும் அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நொருக்கி சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்” என்று முன்கூட்டியே அறிவித்தது.

இந்தக் கேள்வி 1953 இல் நான்காம் அகிலத்தில் உடைவின் மையத்தில் இருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் தேசியமயமாக்கல் தொடர்பான மேலோட்டமான மதிப்பீட்டில் இருந்து, பப்லோ, மண்டேல் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஸ்ராலினிசம் மீண்டும் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் மற்றும் சோசலிசத்திற்கான மாற்றம் கிழக்கு ஐரோப்பாவில் தோன்றியதைப் போன்ற 'பல நூற்றாண்டுகளூடாக ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளில்' நிகழும் என்று முடிவு செய்தனர். நடைமுறையில், இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் கலைப்பதாகும்.

அனைத்துலகக் குழு இந்த நிலைப்பாட்டை உறுதியாக நிராகரித்தது. அது ஸ்ராலினிசத்தை சோசலிச புரட்சிக்கு 'முக்கிய தடை' எனக் கூறியது. ஸ்ராலினிசம் 1917 அக்டோபர் புரட்சியின் மீதான கௌரவத்தை தொழிலாளர்களை ஈர்க்கவும் பின்னர் அவர்களை முதலாளித்துவம் பற்றிய மாயைகளுக்குள்ளும், அக்கறையின்மைக்குள்ளும் தள்ளவும் பயன்படுத்தியது. இந்த துரோகங்களுக்கான விலை, பாசிச சக்திகளை வலுப்படுத்தும் மற்றும் புதிய போர்களின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தால் செலுத்தப்படும்.

1953 ஜூன் 17 இல், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜேர்மனி) தொழிலாளர்களின் எழுச்சியை ஒடுக்குதல், 1956 இல் ஹங்கேரியப் புரட்சி மற்றும் 1968 இல் பிராக் வசந்தம் ஆகியவற்றை இரத்தக்களரியாக ஒடுக்கியமை ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத் தன்மையை உறுதிப்படுத்தின.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமான பிரச்சினை தொழிலாள வர்க்கத்த்தின் புரட்சிகர பாத்திரத்தையும் மற்றும் சர்வதேசியவாதத்தையும் அனைத்துலகக் குழு உறுதியாக பற்றியிருந்தமை.

1960கள் மற்றும் 70கள் ஆழமான முரண்பாடுகளால் நிரம்பியிருந்தது. பிரான்சில் 1968 பொது வேலைநிறுத்தம் போன்ற போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டங்கள் மற்றும் காலனித்துவ எழுச்சிகளின் சர்வதேச அலை புரட்சிகர பரிமாணங்களை எடுத்தது. ஆனால் மக்கள் சீர்திருத்தவாத, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கங்களால் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்பட்டனர்.

ஜேர்மனியில், கோடெஸ்பேர்க் வேலைத்திட்டத்தை (Godesberg Programme) முன்வைத்து 1959 இல் மார்க்சிசத்துடன் வெளிப்படையாக முறித்துக் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சி, 1972 இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் கூட்டாட்சி தேர்தலில் 46 சதவிகித வாக்குகளுடன் அதன் செல்வாக்கின் உச்சத்தை அடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் தீவிரமயமாக்கப்பட்ட மாணவர் இளைஞர்களிடையேயும், நாஜி ஆட்சி மற்றும் இரண்டாம் உலகப் போரிலிருந்து மிகவும் நம்பிக்கையற்ற முடிவுகளை எடுத்து மற்றும் அவற்றிற்கு தொழிலாள வர்க்கமே பொறுப்பேற்க வேண்டும் என்ற அரசியல் கருத்துக்கள் நிலவின.

பிராங்பேர்ட் பள்ளியின் இரண்டு முன்னணி நபர்களான மக்ஸ் ஹோர்க்ஹைமர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோர் தொழிலாளர்களை தொழிற்சாலைகளின் பொருத்தும் மேடைகளில் முற்றிலும் மொட்டையாகிவிட்ட 'தவளைகள்' என்று குறிப்பிடுகின்றனர். 'தொழிலாளர்களின் சக்தியற்ற தன்மை வெறும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சி அல்ல, மாறாக தொழில்துறை சமுதாயத்தின் தர்க்கரீதியான விளைவு' என்று அவர்கள் தமது அறிவொளியின் இயங்கியல் இல் எழுதினார்கள்.

கிளர்ச்சியுற்ற மாணவர்கள், 'புரட்சி' என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் என்பதை புரிந்து கொள்ளவில்லை, ஆனால் பாலியல் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் பிற மரபுகளிலிருந்து விடுதலை என விளங்கிக்கொண்டனர். உறுதியான ஸ்ராலினிசவாதியான மாவோ சேதுங்கின் 'கலாச்சாரப் புரட்சி' அல்லது வியட் கொங் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற தேசிய இயக்கங்களைப் பற்றி பலர் ஆர்வமாக இருந்தனர். மற்றவர்கள் 'அரச நிறுவனங்கள் ஊடாக நீண்ட பாதையை' எடுத்து இறுதியில் அமைச்சர்களாக ஆனார்கள்.

தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையை உருவாக்குவதே முக்கிய கேள்வி என்பதை வலியுறுத்தி அதையெல்லாவற்றையும் நாங்கள் நிராகரித்தோம். ஏனைய அனைத்து அரசியல் போக்குகளும் தேசிய சூழலுக்கு ஏற்ப அடிபணிந்துகொண்டிருந்தாலும், சர்வதேச கட்சியை கட்டுவதற்கான முன்னுரிமை மற்றும் தேசிய பிரிவை கட்டுவதற்கு இதுதான் முன்நிபந்தனை என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

1977 இல் பிரிட்டிஷ் இளம் சோஷலிஸ்டுகளின் வருடாந்த மாநாட்டில் உல்ரிச் ரிப்பேர்ட் பேசுகிறார்

1971 இல் சோசலிச தொழிலாளர் கழகத்தின்ஸ்தாபக மாநாட்டில் ஜெர்ரி ஹீலி இந்த கேள்விகளை பற்றி மிகவும் சக்திவாய்ந்த முறையில் பேசினார். ஒரு மாதத்திற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் போர் முடிவடைந்ததிலிருந்து உலக பண அமைப்பின் அடிப்படையாக இருந்த பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தை ஆச்சரியப்படும் வகையில் இரத்துசெய்தார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் பாசிசத்திற்கு வழிவகுத்த முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை ஹீலி நிரூபித்தார். அனைத்து முயற்சிகளும் நான்காம் அகிலத்தை கட்டியமைப்பதன் மூலம் புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

1970 களின் நடுப்பகுதியில், சமூக-ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அமைப்புகளின் உதவியுடன் போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களின் அலைகளை முதலாளித்துவ வர்க்கத்தால் தடுக்க முடிந்தது. அது இன்றுவரை தொடரும் ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கியது.

இந்த எதிர் தாக்குதல் சமூக மற்றும் பொருளாதார வடிவங்களை மட்டுமல்ல, கருத்தியல் வடிவங்களையும் எடுத்தது. அகநிலை மெய்யியல் மற்றும் பகுத்தறிவு மறுப்பின் தீவிர வடிவங்கள் பல்கலைக்கழகங்களில் வரலாற்று சடவாதத்தை மட்டுமல்ல, அறிவொளியின் கருத்துக்களையும் நிராகரித்து மேலாதிக்கத்தைப் பெற்றன.

இது அனைத்துலகக் குழுவில் அரசியல் அழுத்தத்தை தீவிரப்படுத்தியது. அதன் பிரெஞ்சு பிரிவான OCI, ஏற்கனவே 1971இல் அனைத்துலகக் குழுவிலிருந்து உடைத்துக்கொண்டது. அது பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சியை நோக்கி திரும்பி, அதில் அதன் காரியாளர்கள் வெற்றிகரமான தொழில்முறைவாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவரான லியோனல் ஜோஸ்பன் பின்னர் பிரெஞ்சு பிரதமரானார்.

1960களில் OCI ஜேர்மனியில் கட்டிய Internationale Arbeiterkorrespondenz குழு உடைந்துபோனது. பெரும்பான்மையானவர்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் சென்று அதன் கம்யூனிச எதிர்ப்புக்கு ஏற்ப தழுவிக்கொண்டனர். சிறுபான்மையினர் சோசலிச தொழிலாளர் கழகத்தை (Bunds Sozialistischer Arbeiter)நிறுவினர்.

பின்னர் 1970 களின் போக்கில், இப்போது தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் பிரிவு, பல தசாப்தங்களுக்கு முன்னர் எதிர்த்துப் போராடிய பப்லோவாதத்திற்கு அடிபணிந்தது. இது அதன் தேசிய, சந்தர்ப்பவாத நலன்களை சர்வதேசியவாதத்திற்கு மேலானதாக வைத்து, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவத்துடன் கொள்கையற்ற தொடர்புகளை ஏற்படுத்தியது.

இது, சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஆரம்ப ஆண்டுகளை மிகவும் கடினமாக்கியது. தொழிலாளர் புரட்சிக் கட்சி எங்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தபோதும் நாங்கள் சோசலிச தொழிலாளர் கழகத்தை நிறுவிய இலக்குகளை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. 1985-86 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையில் பிளவு ஏற்பட்டது, சோசலிச தொழிலாளர் கழகம் டேவிட் நோர்த் தலைமையிலான அமெரிக்க வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனத்தை ஆதரித்து அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியப்பட்டு நின்றது.

அப்போதிருந்து, அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகள் ஒரு அசாதாரண மட்டத்தில் நிரூபிக்கப்பட்டதுடன், மேலும் அது மிகப்பெரிய அரசியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர தன்மை பற்றிய கேள்வி 30 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியாக முடிவு செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் சீனாவின் முதலாளித்துவ மாற்றத்துடன், ட்ரொட்ஸ்கியால் கணிக்கப்பட்டபடி அதிகாரத்துவம் தொழிலாளர் அரசை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் தள்ளியது.

சமூக-ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இனி சமூக சீர்திருத்தத்னை பெயரளவில் கூட ஆதரிக்கவில்லை. அவர்கள் சமூக வெட்டுக்களை ஒழுங்கமைப்பதுடன் மற்றும் அவற்றிக்கு எதிரான எவ்விதமான எதிர்ப்பையும் அடக்குகிறார்கள்.

பப்லோவாதமும் அதன் பலவேறு வகைப்பட்டவையும் தங்களை முதலாளித்துவ ஆளும் அமைப்பினுள் முழுமையாக ஒருங்கிணைத்துள்ளன. அவர்கள் இத்தாலி, கிரீஸ், பிரேசில் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவியில் இருந்தனர் அல்லது இருக்கின்றனர். ஜேர்மனியில், அவர்கள் இடது கட்சியின் முன்னணி உறுப்பினர்களாக அல்லது அதன் கூட்டாட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் மத்தியில் உள்ளனர்.

நமது சர்வதேசக் கட்சியான அனைத்துலகக் குழுவைத் தவிர, மார்க்சிச கோட்பாடுகளையும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் போக்கு இன்று உலகில் இல்லை. இந்த வேலைத்திட்டம்தான் இப்போது ஒரு ஈர்ப்புசக்தியாக உருவாகி, வெகுஜன சோசலிசக் கட்சிகளை கட்டுவதற்கான அடிப்படையாக மாறி வருகிறது. உலக சோசலிச வலைத் தளத்தை உருவாக்கியதன் மூலம், உலகளவில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட சோசலிசத்தின் உண்மையான குரலாக ஒரு நாளாந்த வெளியீட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

ஐம்பது வருடங்கள் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் நீண்ட காலம்தான், ஆனால் வரலாற்றின் அளவில் அவ்வாறாக இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுத்த எந்த ஒரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பது முன்னெப்போதையும் விட தெளிவாக உள்ளது.

அதன் மனிதாபிமானமற்ற கொரோனா வைரஸ் கொள்கைகள், இலாபத்தையும் பொருளாதார நலன்களையும் உடல்நலம் மற்றும் உயிர்களின் பாதுகாப்பிற்கு மேலானாதாக வைக்கின்றன. ஆளும் முதலாளித்துவ வர்க்கம் அது உண்மையில் பிணங்களின் மேல் நடப்பதை நிரூபிக்கிறது. ஜனநாயக கட்டமைப்புகள் எல்லா இடங்களிலும் வீழ்ச்சியடைந்து வருவதுடன் மற்றும் பாசிச சக்திகள் ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் முப்பது ஆண்டுகால அழிவுகரமான போர்களுக்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான போரைத் தயார் செய்கின்றன. இது அணுவாயுத போர்களால் மனிதகுலத்தை அழித்துவிடும். ஜேர்மனியும் மீண்டும் இராணுவ மறுஆயுதமயமாக்கலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான திருப்பம் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியுற்றுள்ளதே. வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருவதுடன் உலகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும், அரசியல் தலைமை பற்றிய கேள்வி மிக அவசரமாக எழுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் சோசலிச சமத்துவக் கட்சியையும் கட்டியமைப்பது மிக முக்கியமான பணியாகும். முதலாளித்துவத்தை தொழிலாள வர்க்கம் தூக்கியெறிவதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது.

Loading