முன்னோக்கு

வடக்கு அரைக்கோளப் பகுதியில் இலையுதிர் காலம் தொடங்குகையில், பள்ளி மறுதிறப்புக்கள் உலகளவில் கோவிட்-19 பரவலுக்கு எரியூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு அரைக்கோளப் பகுதியில் இலையுதிர் காலம் தொடங்குகையில், உலகளவில் பள்ளிகள் முழுமையாக மீளத்திறக்கப்பட்டுள்ளதால் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஒரு முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளது.

தற்போது, உலகளவில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் சராசரி தோராயமாக 515,000 ஆக உள்ளது, அதேவேளை உலகளவில் நாளாந்த கோவிட்-19 இறப்புக்களின் சராசரி 8,336 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கைகள் சமீபத்திய வாரங்களில் சற்று குறையத் தொடங்கியுள்ளன, இருப்பினும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் போதுமான பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்படாததால், உண்மையான எண்ணிக்கைகள் மிக அதிகமாகவே இருக்கும். அதிகப்படியான இறப்புக்கள் குறித்த Economist சஞ்சிகையின் கணக்கெடுப்பு, உலகளவிலான உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை தற்போது 4.7 மில்லியனாக நிலைத்திருந்தாலும், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட மூன்று மடங்கு அதிகமாக 15.6 மில்லியன் அளவிற்கு இருக்கும் என குறிப்பிடுகிறது.

செப்டம்பர் 13, 2021 அன்று நியூயோர்க் நகரில் உள்ள PS811 பள்ளிக்கு குழந்தைகள் வருகின்றனர் (AP Photo/Richard Drew)

கோவிட்-19 ஐ தடுக்க உலகளவில் 31.4 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதிலும் பெரும்பகுதி தடுப்பூசிகள் பணக்கார நாடுகளில் தான் போடப்பட்டுள்ளன என்ற நிலையில், உலகளவில் பில்லியன் கணக்கான மக்கள் நோய்தொற்றிக் கொள்ளும் அபாயத்தில் உள்ளனர். மேலும், வைரஸ் கட்டுப்பாடற்றுப் பரவும் நிலை, மிகவும் தொற்றக்கூடிய மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு மாறுபாடுகளின் பரிணாமத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. திங்கட்கிழமை, இங்கிலாந்தில் தடுப்பூசிகளை தீவிரமாக எதிர்க்கும் தன்மையுடைய E484K பிறழ்வுடன் அதிக தொற்றும் தன்மை கொண்ட டெல்டா மாறுபாட்டின் காரணமான 19 நோய்தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. உலகளவில், அமெரிக்காவில் 25, டென்மார்க்கில் 22, துருக்கியில் 21, இத்தாலியில் 6 மற்றும் ஜேர்மனியில் 3 என E484K பிறழ்வுடன் கூடிய டெல்டா மாறுபாட்டினால் உருவான 99 நோய்தொற்றுக்கள் நாடு வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் நேரடி கற்றல் கொள்கையை பின்பற்றி வருவதால், தொற்றுநோயின் தொடக்கத்தில் தொலைதூரக் கற்றலுக்கு மாறிய சுமார் 1.5 பில்லியன் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தற்போது முழுமையாக நேரடி கற்றலுக்கு திரும்பியுள்ளனர். இந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதால், அவர்கள் உலகளவில் புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பரவும் வீதத்தை அதிகரிக்கச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் சமூங்களுக்கும் வைரஸை பரப்புவதற்கான முதன்மை காரணியாக மாறியுள்ளனர், இந்நிலையில் பள்ளிகளை முழுமையாக மீளத்திறப்பது வரும் மாதங்களில் தொற்றுநோயின் பெரும் எழுச்சியை விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளிகளை மீளத்திறப்பதன் அடிப்படை நோக்கம், பெருநிறுவன இலாபங்களை பெருக்கவும், பங்குச்சந்தையின் நிரந்தர ஏற்றத்தை தக்கவைக்கவும் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு பெற்றோர்களை வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்துவது உள்ளது. இது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்து பெரும்பாலும் பெரிய தொழிற்சாலைகளை நோய்தொற்று வெடிப்பு மையமாக மாற்றுவதால், கோவிட்-19 பரவலை மேலும் அதிகரிக்கிறது.

நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் அதிகரிக்கும் மட்டங்களைப் பொருட்படுத்தாமல், மக்கள்தொகை ஊடாக வைரஸை வெடித்துப் பரவ அனுமதிப்பதன் அடிப்படையில் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை,” தான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் தொற்றுநோய் மூலோபாயமாக உள்ளது. இந்த கொள்கை பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கையில் தீவிரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இது அறியப்படாத நீண்டகால விளைவுகளுடன் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு நோய்தொற்று பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

பல்வேறு அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் முகக்கவசம் அணிவது போன்ற மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளே பள்ளிகளை பாதுகாப்பாக வைக்க முடியும் என்று கூறினாலும், நெரிசலான மற்றும் மோசமான காற்றோட்ட வசதியுள்ள பள்ளிகளின் உண்மையான நிலைமைகள் இதை ஒரு மோசடி என்பதை அம்பலப்படுத்துகின்றன.

ஒரு மில்லியன் மக்களில் உருவாகும் நாளாந்த புதிய உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்கள் (Source: Our World in Data)

உலகளவில் கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியமுள்ள ஒரே உத்தியை, புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்கும் வரையிலும் மற்றும் பரந்த புவியியல் பகுதிகளில் வைரஸ் முழுமையாக அகற்றப்படும் வரையிலும், பாரியளவில் தடுப்பூசி நடவடிக்கைளையும் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகளவில் செயல்படுத்தினால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இந்த உத்திக்கு எதிராக, உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினர் வெளிப்படையாகவோ அல்லது “தணிப்பு நடவடிக்கைகளின்” பேரில் மறைமுகமாகவோ “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையையே” பின்பற்றுகின்றனர்.

உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதத்தைக் கொண்டுள்ள, ஆனால் உலகளவிலான கோவிட்-19 இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இலத்தீன் அமெரிக்காவில், கண்டம் முழுவதுமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் தேசியளவில் பள்ளிகள் முழுமையாக மீளத்திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு குழந்தைகள் மத்தியில் நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. வேறு எந்த நாட்டையும் விட பிரேசிலில் கோவிட்-19 பாதிப்பால் உச்சபட்ச எண்ணிக்கையில் குழந்தைகள் இறக்கின்றனர், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளையோரில் 1,581 பேர் வைரஸூக்கு பலியாகியுள்ளனர், மேலும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 10 வயதிற்குட்பட்ட மேலும் 1,187 குழந்தைகள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் பள்ளிகள் மீளத்திறக்கப்படுவது வரும் வாரங்களில் தொற்றுநோயின் பேரழிவுகர எழுச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் ஐரோப்பாவில் கோவிட்-19 ஆல் மற்றொரு 236,000 பேர் இறக்கலாம் என ஆகஸ்ட் இறுதியில் உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் எச்சரித்துள்ளது. பிரான்சில், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் 20,200 நோய்தொற்றுக்கள் பதிவானது, இது முன்னைய வருடத்தின் எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு அதிகமாகும். இங்கிலாந்தில், அனைத்து தணிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்ட நிலையில், பள்ளிகள் ஊடாக கோவிட்-19 வெடித்து பரவி வருகிறது, ஸ்காட்லாந்திலும் பெரும் நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்படுவதுடன், வரும் வாரங்களில் இங்கிலாந்து கடும் பாதிப்புக்குள்ளாகும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியிலும் நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இங்கும் பள்ளிகள் மீளத்திறக்கப்பட்டுள்ளதால், நாடெங்கிலும் நோய்தொற்று வெடிப்புக்கள் உருவாகின்றன.

ஆபிரிக்காவில், உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் குறைந்து வருகின்றன, என்றாலும் கண்டம் முழுவதிலும் குறைவாகவே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆபிரிக்காவில் அதிகப்படியான இறப்புக்கள் உத்தியோகபூர்வ எண்ணிக்கைப் போல பல மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது சுமார் 1.86 மில்லியன், அல்லது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட ஒன்பது மடங்கு அதிகமாக அதிகப்படியான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 50 மில்லியன் ஆபிரிக்கர்களுக்கு அல்லது மொத்த மக்கள்தொகையில் 3.6 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு 500 மில்லியன் தடுப்பூசி அளவு (dose) பற்றாக்குறையை இந்த கண்டம் எதிர்கொள்கிறது. ஆபிரிக்கா முழுவதும் பள்ளிகளும் பணியிடங்களும் முழுமையாக மீளத்திறக்கப்படுவதால், வரும் வாரங்களில் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் கோவிட்-19 அமைதியாக பரவும்.

ஆசியாவில், உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் குறைந்து வருகின்றன, அதேவேளை நாளாந்த அதிகப்படியான இறப்புக்கள் 20,300 ஆக உள்ளது, இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையைப் போல கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம் என்பதுடன் துல்லியமாக கூறுவதானால் எந்த கண்டத்தையும் விட மிகுந்த உச்சபட்சமானது. குறிப்பிடத்தக்க வகையில், மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் பெரும் நோய்தொற்று வெடிப்புக்கள் நிகழ்ந்து வருகின்றன, இவையனைத்தும் கோவிட்-19 ஐ ஏற்கனவே முற்றிலும் அழித்துவிட்டன, என்றாலும் பயண கட்டுப்பாடுகளும், பொது சுகாதார நடவடிக்கைகளும் கைவிடப்பட்ட நிலையில் தொற்றுநோய் பரவலுக்கான மையங்களாக அவை மாறிப்போயின. ஒழிப்பு மூலோபாயத்தை (elimination strategy) பராமரித்து வரும் சீனாவுக்கு, சர்வதேச போக்குவரத்துக்கு கடுமையாக கட்டுப்பாடு விதிக்கவும், நாட்டிற்குள் நுழைந்துவிட்ட டெல்டா மாறுபாட்டின் தொடர்ச்சியான வெடிப்புக்களைக் கட்டுப்படுத்த பரந்த வளங்களை திரட்டவும் வேண்டியிருந்தது.

கோவிட்-19 ஐ தடுக்க முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள்தொகையின் பங்கு (source: Our World in Data)

கோவிட்-19 ஐ முன்னதாக ஒழித்த மற்றொரு நாடான ஆஸ்திரேலியாவிலும், பள்ளிகள் முழுமையாக மீளத்திறக்கப்பட்டதால் நோய்தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. நியூசிலாந்தில், “நிலை 4” பூட்டுதலில் இருக்கும் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்துக்கு வெளியே டெல்டா மாறுபாடு பள்ளிகள் ஊடாக பரவுவதாக அஞ்சப்படுகிறது. ஒடாகோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் மைக்கேல் பேக்கர் உட்பட புகழ்பெற்ற பொது சுகாதார நிபுணர்கள், “கோவிட்-19 நோய்தொற்று பரவ சாத்தியமுள்ள பள்ளிகளில் அதற்கு எதிராக சிறியளவில் அல்லது முற்றிலும் பாதுகாப்பில்லாத நிலையில் கூட குழந்தைகள் நேரடி வகுப்புகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்று செப்டம்பர் 19 வலைப்பதிவு இடுகையில் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் தொற்றுநோயின் மையமாக தற்போது வட அமெரிக்கா உள்ளது, மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ போன்ற நாடுகள் பள்ளிகளின் மறுதிறப்பால் பெரும் நோய்தொற்று எழுச்சியை எதிர்கொள்கின்றன. கனடாவின் ஆர்பர்ட்டாவில், கடந்த குளிர்காலத்தில் மாகாணத்தில் புதிய நோய்தொற்றுக்களின் நாளாந்த சராசரி 1,646 என பதிவான நிலையில், அங்கு நோய்தொற்று எழுச்சி உச்சத்தை எட்டியது.

அமெரிக்காவில், நாளாந்தம் சராசரியாக 134,972 நோய்தொற்றுக்களும், 1,582 இறப்புக்களும் பதிவாகின்றன. கடந்த வாரத்தில், அதிர்ச்சியூட்டும் வகையில் உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்கள் 844,718 என பதிவானதுடன், கோவிட்-19 ஆல் 10,568 பேர் இறந்தனர். உத்தியோகபூர்வ ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 691,880 ஆக உள்ளது, என்றாலும் உண்மையான எண்ணிக்கை 800,000 மற்றும் 890,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது உள்நாட்டுப் போர், மற்றும் 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய்களின் போது கொல்லப்பட்ட மொத்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.

நாடு முழுவதும் பேரழிவுகர நிலைமை ஏற்பட்டுள்ளது. தோராயமாக மொத்த மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பகுதி மருத்துவமனைகள் அவற்றின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் முழுமையாக நிரம்பிவிட்டதாக அல்லது நிரம்பவுள்ளதாக தெரிவிக்கின்றன. பள்ளிகளின் மறு திறப்பால், ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 9 வரையிலான ஐந்து வார காலத்தில் சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், நாளொன்றுக்கு 354 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவிற்கு, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் மற்றும் இறப்புகளும் உச்சபட்சமாக உள்ளன.

பைடென் நிர்வாகம் ஜூலை 4 அன்று தொற்றுநோயிலிருந்து “விடுபட்டதாக” முன்கூட்டியே அறிவித்ததன் பின்னர், தற்போதைய நோய்தொற்று எழுச்சியின் அளவும் பள்ளிகள் முழுமையாக மீளத்திறக்கப்பட்டதால் உருவாகும் ஆபத்துகளும் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. தணிப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து பேச்சுக்களும் பெருநிறுவன ஊடகங்களில் காணாமல் போய்விட்டன.

நியூ யோர்க் டைம்ஸில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு முக்கிய புகைப்படக் கட்டுரை அதற்கு ஒரு உதாரணம். “தொற்றுநோயால் பீடித்த அமெரிக்கா பள்ளிகளை மீண்டும் திறக்க எப்படி முடிவு செய்தது என்பது பற்றி பார்வை,” என்ற தலைப்பிலான இந்த கட்டுரை, அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை பாராட்டியதுடன், பள்ளிகளில் தணிப்பு (mitigations) நடவடிக்கைகள் என அழைக்கப்படும் மோசடியை அம்பலப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு புகைப்படமும் மாணவர்கள், ஊழியர்கள் அல்லது இருவரும் முகக்கவசம் அணியாமல் இருப்பதைக் காட்டுகிறது.

ஊடகவியலாளர் டேனா கோல்ட்ஸ்டீன், பள்ளிகளின் மறுதிறப்புக்கள் “பரபரப்பான விடயமாக, கவலையளிப்பதாக மற்றும் சிலநேரங்களில் வேடிக்கையானதாக உள்ளது” என்று குறிப்பிடுகிறார். வைரஸ் பரவும் இடங்களில் பரவுவதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து தொற்றுநோயின்போது பள்ளிகளை பொதுவாக பாதுகாப்பாக இயக்க முடியும்” என்று பொய்யாக கூறுகிறார்.

உண்மையில், மேற்கு வேர்ஜீனியா, டென்னிசி, கென்டக்கி, அலபாமா, ஜியோர்ஜியா, மின்னசோட்டா, கலிபோர்னியா, ஒஹியோ, பென்சில்வேனியா, டெக்சாஸ், புளோரிடா மற்றும் பிற மாநிலங்கள் எங்கிலும் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நூறாயிரக்கணக்கான நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக கடந்த வாரத்தில் தான் பதிவாகின. ஒரு முறைசாரா கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை கடைசி வாரத்தில் இருந்து சுமார் 250 பள்ளி ஊழியர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முழுவதும் வாரத்திற்கு 35 அல்லது நாளொன்றுக்கு 5 வீதம் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

தொற்றுநோயின் உலகளாவிய நிலையும் மற்றும் வைரஸ் பரவலுக்கான மையங்களாக பள்ளிகள் வகிக்கும் பங்கும், கோவிட்-19 ஐ நீக்கவும் மற்றும் முற்றிலும் ஒழிக்கவும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இது, அத்தியாவசியமற்ற அனைத்து பணியிடங்களையும் மூடுதல், உலகளவில் முகக்கவசம் பயன்படுத்துதல், உலகளவில் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடுதல், பாரியளவில் பரிசோதனை செய்தல், தொடர்பு தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், மற்றும் நோய் பரவல் சங்கிலியை துண்டிக்க தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் எடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுடன் இணைந்து இது செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், சிறு வணிக உரிமையாளர்களுக்கும் பூட்டுதல்களின்போது தேவையான வளங்கள் வழங்கப்பட வேண்டும், இது இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டலின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும். ஒவ்வொரு நாட்டிலும், பள்ளிகள் மீளத்திறக்கப்படுவதை மிகுந்த ஆர்வத்துடன் ஆதரிப்பவர்களாக ஆசிரியர் சங்கங்கள் இருப்பது உட்பட, அனைத்து தொழிற்சங்கங்களும் ஆளும் உயரடுக்குகளுக்கு அவை வளைந்து கொடுக்கும் கருவிகளாக செயல்படுவதை நிரூபித்துள்ளன. தொற்றுநோயை அகற்றவும் மற்றும் முற்றிலும் அழித்தொழிக்கவும் தேவையான மூலோபாயத்திற்காக போராட, ஒவ்வொரு தொழில்துறை சார்ந்த மற்றும் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். மே 1, 2001 அன்று ஸ்தாபிக்கப்பட்டதான, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-FRC), உலகளாவிய ரீதியில் இந்தக் குழுக்களை ஒன்றிணைக்கவும் ஒருங்கிணைக்கவும் முக்கிய அச்சாணியாக செயல்படும்.

Loading