மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் “புதிய சகாப்தம்” என ஐ.நா. வில் பைடென் அறிவித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொது சபையில் தொடக்க அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உரையாற்றுகையில், “மனித உரிமைகள்” மற்றும் “உலகளாவிய ஒத்துழைப்பு” என்ற பதாகைகளின் கீழ், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு “புதிய சகாப்தத்தை” அறிவித்தார்.

அமெரிக்க நடவடிக்கைகளை அப்பட்டமான சுயநலன் மற்றும் மிருகத்தனமான ஒருதலைப்பட்ச மொழியில் பேசிய தனது முன்னோடி டொனால்ட் ட்ரம்பின் நிராகரிப்பாக பைடென் தனது கருத்துக்களை வடிவமைத்தார். இதற்கு நேர்மாறாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் 'புதிய சகாப்தம்' பற்றிய தனது பார்வையை, பைடென் ஒரு உற்சாகமூட்டும் சொற்றொடர்கள் அல்லாத வகையில் தொகுத்தார்: 'நாங்கள் ஒன்றாக வழிநடத்துவோம்.'

ஜனாதிபதி ஜோ பைடென், நியூயோர்க்கில், செப்டம்பர் 21, 2021, செவ்வாய்க்கிழமை, ஐக்கிய நாடுகள் பொது சபையின் 76 வது அமர்வில் அவரது கருத்துகளை வழங்குகிறார் (AP Photo/Evan Vucci)

'இடைவிடாத போரின் இந்த காலகட்டத்தை நாங்கள் மூடுகையில், இடைவிடாத இராஜதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம்' என்று ஜோ பைடென் கூறினார்.

அமெரிக்கா “ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், அமைதியாக போராடுபவர்கள்” ஆகியோருக்கு ஆதரவளிக்கும். இது “பசி பட்டினியை முடிவுக்குக் கொண்டுவரவும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உணவு அமைப்புகளில் முதலீடு செய்யவும்” முனையும். “எங்கள் பொதுவான மனித நேயத்தை அங்கீகரிக்கவும் மேலும் அதுகுறித்து எங்களுடன் ஒன்றாக செயல்படவும்” உலகிற்கு அமெரிக்கா உதவும் என்பதுடன், “கோவிட்-19 ஐ அனைத்து இடங்களிலும் ஒழித்து, உயிர்களை காப்பாற்ற ஒன்றிணைந்து வேலை செய்யும்” என்றார்.

ஆனால் வழமை போல, அமெரிக்காவின் தலைவர்கள் அமைதி மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றி பேசுகையில், அதிக எண்ணிக்கையிலான மக்களை தகனம் செய்வதற்கான அவர்களின் திட்டங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன.

ஐ.நா.வில் பைடெனின் பங்கேற்பு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் பின்னர் மிகத் தீவிரமான இராணுவ கட்டமைப்பை உருவாக்கிய எட்டு மாதங்களை முடித்து வைத்தது. பதவியேற்று சில மாதங்களில், பைடென் நிர்வாகம் “ஒரே சீனா” கொள்கையின் தீர்க்கமான முடிவிற்கு அறிவித்து, தைவான் உடனான ஒரு இராணுவக் கூட்டணியை அறிவிக்க முன்னேறிக் கொண்டிருக்கிறது, இதை சீனா ஒரு போர் நடவடிக்கையாக பார்க்கிறது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவானில் கூட தாக்குதல் ஏவுகணைகளை நிலைநிறுத்த வேலை செய்யும்போது, பசிபிக் தியேட்டரில் அமெரிக்க இராணுவ செலவை இரட்டிப்பாக்க பைடென் முன்னேறியுள்ளார்.

இன்னும் மிகுந்த ஆத்திரமூட்டும் நகர்வாக, கடந்த வாரம் வாஷிங்டன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் இணைந்து ஒரு புதிய சீன எதிர்ப்பு கூட்டணிக்கு அறிவித்தது, மேலும் சிறு மாற்றங்களுடன், அணுசக்தி ஏவுகணைகளை ஏவுவதற்கான திறனைக் கொண்டிருக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்து, அணுசக்தி பயன்பாடில்லாத நாடு என்ற ஆஸ்திரேலியாவின் நிலையை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்தது.

“மனித உரிமைகள்” என்ற வாய்ச்சவுடாலின் பின்னணியில், பைடெனின் உரை, 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் முன் உரையாற்றியபோது “சிறிய ராக்கெட் மனிதன்” என அழைக்கப்படும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஐ கொல்ல ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களுக்கு பின்னர் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சை விட மிகுந்த போர்க்குணமிக்கதாக இருந்தது.

“நம்மையும், நமது கூட்டணி நாடுகளையும், மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உட்பட, தாக்குதல்களுக்கு எதிரான நமது நலன்களையும் அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும், தேவைப்பட்டால் இராணுவத்தைப் பயன்படுத்தவும் நாம் தயாராக இருக்கிறோம். என்றாலும், தற்போதைய மற்றும் உடனடி அச்சுறுத்தல்களை எதிர்ப்பது உட்பட, நமது முக்கிய அமெரிக்க தேசிய நலனை அது பாதுகாக்கும்.” (sic)

அமெரிக்க “படை”யின் இலக்குகள் வெளிப்படையாக உள்ளன. அதாவது “ஜின்ஜியாங்கில் இனம் சார்ந்த, மற்றும் மதம் சார்ந்த சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டால்” அதைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இது “LGBTQI தனிநபர்களின் உரிமைகளை பாதுகாக்கும், அப்போதுதான் அது செச்சினியாவாக (Chechnya) இருந்தாலும், பயமின்றி அங்கு அவர்களால் வாழவும் வெளிப்படையாக நேசிக்கவும் முடியும்.”

பல தசாப்தங்களாக, அமெரிக்கா சின்ஜியாங், சீனா மற்றும் ரஷ்யா, செச்சன்யாவில் இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்தது.
ரஷ்யா மற்றும் சீனாவை சீர்குலைக்கும் நோக்கில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய படைகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

'சமாதானம்' பற்றி பைடென் தனது வாதங்களை உச்சரிக்கும்போது, அவரது தளபதிகள் அணுவாயுத போரின் மொழியைப் பேசுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை நியூயார்க்கில் சந்தித்தபோது, விமானப்படை சங்கம் தனது வருடாந்திர உச்சிமாநாட்டை வாஷிங்டன் டிசிக்கு வெளியே நடத்தியது.

ஒரு அமெரிக்க பன்னாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நோர்த்ராப் க்ரூம்மன் (Northrop Grumman), ஒவ்வொன்றும் சுமார் 639 மில்லியன் டாலர் மதிப்பில் ஐந்து B-21 ரக குண்டுவீச்சு விமானங்களை இரகசியமாக கட்டமைத்து வருவது பற்றி முதன்முறையாக விமானப்படை செயலாளர் ஃபிராங்க் கெண்டல் (Frank Kendall) வெளிப்படுத்தினார். மிகப்பெரியளவு தாக்குதல் வரம்புள்ள அணுவாயுத சக்தி கொண்ட கடற்படை ஏவுகணைகளும், மற்றும் அமெரிக்காவின் பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள அணுவாயுதப் படைகளின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் சிறிதாக்கப்பட்ட அணுவாயுதங்களும் உட்பட, அணுவாயுதங்களை வழங்க புதிய இரகசிய குண்டுவீச்சு விமானங்கள் எதிரி எல்லைக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'முதல் தாக்குதல்' படையை உருவாக்கும் முயற்சியாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 சைலோ ஏவுகணைகளை சீனா உருவாக்கி வருவதாக கெண்டல் கூறினார்.

சீனா ஒரு “தீவிரமான அச்சுறுத்தலாக” இருக்கும் என்று அறிவித்தாலும், பென்டகன் வசம் உள்ள 5,500 அணுசக்தி ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில், பெய்ஜிங் வெறும் 320 அணுவாயுதங்களை மட்டுமே கொண்டுள்ளது.

கடந்த மாதம், அமெரிக்க மூலோபாய கட்டளையின் தலைவர் அட்மிரல் சார்லஸ் ரிச்சார்ட், சீனாவின் 'மூலோபாய முன்னேற்றம்' பற்றி எச்சரித்தார். அவர் கூறுகையில், 'சீனா ஏன் தொடர்ந்து வருகிறது மற்றும் நவீனமயமாக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. மாறாக முக்கிய விடயம் என்னவென்றால், கட்டாயப்படுத்தும் திறன் கொண்ட இராணுவத்தின் சுவரின் கடைசி செங்கல் வரை பயன்படுத்தக்கூடிய எந்தவொரு நம்பகமான அணுசக்தி பயன்பாட்டு மூலோபாயத்தையும் செயல்படுத்தும் திறனை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள் என்பதே' என்றார்.

அமெரிக்காவை மீறக்கூடிய உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட சீனாவின் இந்த அச்சுறுத்தல், ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் முயற்சிகள் உட்பட, வாஷிங்டனை அதன் அணுவாயுத கட்டமைப்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் தூண்டுகிறது. இதன் தீர்வு, அதிகளவு அணு ஆயுதங்களையும், வேறுபட்ட அணு ஆயுதங்களையும் உருவாக்குவது, மற்றும் ஆயுத அமைப்புகளுக்காக டிரில்லியன் டாலர்களை செலவிடுவதாகும்.

அமெரிக்க பாதுகாப்புச் செலவினங்கள் 2020 ஆம் ஆண்டில் சாதனையளவில் 778 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது, அதாவது, இது உலகின் மொத்த இராணுவச் செலவில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் குறிக்கிறது.

பைடெனின் பாரிய இராணுவ வரவு-செலவுத் திட்ட கோரிக்கை பற்றி Bulletin of Atomic Scientists எச்சரிக்கை விடுத்தது. 'பிடென் அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் போக்கை முடிவற்ற போரிலிருந்து விலக்கி, பாதுகாப்புத் துறைக்கான வரம்பற்ற செலவினங்களை மாற்றியமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த பாதை, காலநிலை மாற்றம் மற்றும் சாத்தியமுள்ள தொற்றிக்கொள்ளும் நோய்கள் போன்ற நமது பாதுகாப்பிற்கான மிக உடனடி அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

“ஆனால், பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் நலன்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதான அமெரிக்காவின் செலவு முன்னுரிமைகளை வைத்து பார்க்கையில், அவற்றை நீங்கள் அந்நாட்டிற்கான முக்கிய அச்சுறுத்தல்களாக அங்கீகரிக்க மாட்டீர்கள்.”

மேலும், “ஒரே வருடத்தில், அணுவாயுத நடவடிக்கைகளின் வரவு-செலவுத் திட்டத்திற்கான செலவு மதிப்பீடு 113 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது” என்றும் அமைப்பு தெரிவித்தது.

“சீர்குலைப்பதன்,” பேரில் அமெரிக்காவின் “கடலில் ஏவப்பட்ட கடற்படை ஏவுகணை” குறித்து இது கண்டித்து, “அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவிய கடற்படை ஏவுகணை, அணுவாயுதங்கள் அல்லது வழமையான வெடிபொருட்களை கொண்டுள்ளதா இல்லையா என்பது பற்றி ஒரு எதிரியால் சொல்ல முடியாது… இந்த திட்டத்தை இரத்து செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 10 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும்” எனக் குறிப்பிட்டது.

“பைடென் நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் ட்ரம்ப் நிர்வாகத்தினதை பெரிதும் ஒத்திருக்கிறது. … இது F-35 கூட்டு தாக்குதல் போர்விமானத் திட்டத்திற்கான 12 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதியை உள்ளடக்கியது. … இது அணு ஆயுத விஷயத்தில் முந்தைய அரசாங்கத்தின் சீர்குலைக்கும் திட்டங்களையும் பரந்த அளவில் அங்கீகரித்தது”.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அனைத்து அடிப்படைகளையும் தொடரும் விதமாக, பைடெனின் வாய்வீச்சு வெளிநாட்டு கொள்கையை மூடிமறைக்கிறது. CNN வர்ணனையாளர் ஃபரீத் ஜகாரியா பைடெனின் உரை பற்றி வெளிப்படையாக ஒரு கருத்தை வெளியிட்டு, “கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக கொள்கைகள், வாய்வீச்சுக்கள் மற்றும் நெருக்கடிகளை கண்காணித்ததன் பின்னர், பல வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து போயினர், ஏன் அதிர்ச்சியடைந்து கூட போயினர், அதை கண்டுபிடிக்க அடுத்தடுத்த பகுதிகளுக்குச் சென்ற, பைடென் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை டொனால்ட் ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய தொடர்ச்சியாகும். இந்த தொடர்ச்சிக்கான மையம் “பெரும் சக்தி மோதல்” மற்றும் அமெரிக்கா-சீனா மோதலுக்கான கோட்பாடாக உள்ளது.

ஆனால் பைடெனின் கூற்றுப்படி அமெரிக்கா தற்போது சமாதானத்தின் பெயரில் போருக்குச் செல்கிறது. உலகை வர்த்தக தொகுதிகளாகவும் இராணுவ கூட்டணிகளாகவும் துண்டாடுவது, உலகளாவிய ஒற்றுமையின் பெயரில் நடத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கும், அமைதிக்கு எதிரான சதித்திட்டங்களுக்கும் “மனித உரிமைகள்” தொடர்புபட்ட முத்திரைகள் வழங்கப்படும்.

மூன்று தசாப்தங்களாக, வாஷிங்டன் உலகெங்கிலும் போர்களை நடத்த இந்த போலி சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தி வந்துள்ளது. முதல் வளைகுடாப் போர், சதாம் உசேன் குழந்தைகளை இன்குபேட்டர்களில் இருந்து பறிப்பதைத் தடுக்க ஒரு வழியாக பொதுமக்களுக்கு விற்கப்பட்டது முதல், “இன அழிப்பை” நிறுத்துவதற்காக “மீண்டும் கற்காலத்திற்கு திரும்பும் வகையில்” யூகோஸ்லாவியா மீது குண்டு வீசப்பட்டது, மேலும் ஆப்கானிஸ்தானில் “பெண்களின் உரிமைகளை” பாதுகாக்க, ஈராக்கில் “பேரழிவுகர ஆயுதங்களின் உற்பத்தியை” தடுத்து நிறுத்த, மற்றும் லிபியா மற்றும் சிரியாவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க என நாடுகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடெனின் “மனித உரிமைகள்” குறித்த பிரார்த்தனை, மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களாக இருந்த அமெரிக்க போர்களிலிருந்து பின்வாங்குவதாகாது, மாறாக மனித குலத்தின் அழிவிற்கு அச்சுறுத்தும் அணுசக்தி கட்டமைப்பின் அளவை இரட்டிப்பாக்குகிறது.

Loading