இந்திய திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றிய ஒரு மதிப்பீடு (1946-2020)

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை அடுத்து 14 டிசம்பர் 2020 அன்று இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வெளியானது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்திய இசை ஆர்வலர்கள் கோவிட்-19 வைரஸால் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபலமாக எஸ்.பீ.பி அல்லது பாலு என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற பாடகர் செப்டம்பர் 25 அன்று அவரது 74 வயதில் மறைந்தார். அதுவரை, அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக நோயுடன் போராடினார்.

பின்னணிப் பாடல்கள், இந்திய மற்றும் பாகிஸ்தான் சினிமாவில், குறிப்பாக பொலிவுட் மற்றும் துணை கண்டத்தில் உள்ள பிற பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் இன்றியமையாத அம்சமாகும். உலகின் வளமான திரைப்படத் தொழில்களில் ஒன்றான இந்திய சினிமாவில், பின்னணிப் பாடகர்களுக்கு நடிகர்களுக்கு இணையான அந்தஸ்து உள்ளது.

மேடையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (Photograph: Wikimedia)

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மரணத்திற்கு வழக்கமான ட்வீட்டர் செய்தி மூலம் பிரதிபலிளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'ஸ்ரீ எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் துரதிருஷ்டவசமான மறைவால், நமது கலாச்சார உலகம் மிகவும் ஏழ்மையாகி உள்ளது,' என தெரிவித்தார்.

மோடியின் சலிப்பூட்டும் மற்றும் அக்கறையற்ற கருத்துக்கள் பாசாங்குத்தனமானவை ஆகும். பல இலட்சக்கணக்கான பிற அநாவசியமான மரணங்களுடன், பாலசுப்ரமணியத்தினதும் மரணத்திற்கான அரசியல் பொறுப்பு, தீவிரமாக தொற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்தவொரு அக்கறையான நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் எடுக்கத் தவறியதிலேயே உள்ளது.

மோடியின் கலாச்சாரம் பற்றிய கருத்து, அதற்கு சமமாக வஞ்சகத்தனமானதாகும். அவரது அதிதீவிர வலதுசாரி இந்து அடிப்படைவாத ஆட்சியானது, அதன் வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் ஆத்திரமூட்டல்களை சவால் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, பரந்த வெகுஜனங்களின் கலாச்சார அறிவெல்லைகளை மற்றும் விமர்சனப்பூர்வமான சிந்தனையை உயர்த்த முயற்சிக்கும் அனைத்து நேர்மையான படைப்பாற்றல் மிக்க கலைஞர்களுக்கும் வெளிப்படையாக விரோதமானதாகும்.

பாலசுப்ரமணியம், 1946 ஆம் ஆண்டில் ஆந்திராவின் நெல்லூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி எஸ்.பி. சைலஜா மற்றும் அவரது மகன் எஸ்.பி. சரண் இருவரும் தென்னிந்தியாவில் பிரபல பாடகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் ஆவர்.

சிறு வயதிலிருந்தே எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையில் ஆர்வம் கொண்டிருந்தாலும், ஒரு 'ஹரிகதா' பாடகரான .அவரது தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி அவருக்கு முதல் தூண்டுகோளாக இருந்துள்ளார். ஹரிகதா என்பது, இந்திய பாரம்பரிய இசையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஆலாபனை மற்றும் நுட்பங்களை கொண்டு, இந்து கடவுள்களைப் பற்றிய கவிதைகள் அல்லது பாடல்களை பாடும் ஆற்றுகை வடிவமாகும். தென்னிந்தியாவில் கர்நாடகம் மற்றும் வடக்கில் இந்துஸ்தானி ஆகிய இரண்டு அடிப்படை இசை மரபுகளும் சுர கட்டமைப்புகள், நாதம் மற்றும் புதுமையாக்கல் வடிவமைப்புகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் வயதில் சில விருதுகளுடன் (Photograph: Wikimedia)

ஒரு பொறியியலாளராகப் படித்த பாலசுப்ரமணியம் முறையான இசைக் கல்வியைப் பெறவில்லை. பெருமளவில் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் தனது தந்தை நிகழ்த்தி வந்த சமயம்சார் இசையின் வரம்புகளை மீறி, தனக்கென்று தனித்துவமான பாடும் பாணியைக் கொண்டு செப்பனிட்டுக்கொண்டார். அவருக்கு இந்திய சாஸ்திரீய இசையை விரிவாக கற்ப்பதற்கு நேரமும் வாய்ப்பும் கிட்டியிருந்தால், அவர் தனது நுட்பத்தை மேலும் செம்மைப்படுத்தப்பட்ட நிலைக்கு வளர்த்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

1964 இல், பாலசுப்ரமணியம் தெலுங்கு கலாச்சார அமைப்பால் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு பாடல் போட்டியில் வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யதா ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு எட்டு நாட்களின் பின்னர், மற்றொரு திரைப்படத்திற்காக தெலுங்கு அல்லாத வேறு மொழி பாடல்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டார்.

பாலசுப்ரமணியம் இயற்கையாகவே இனிமையான, ஆற்றல்மிக்க மற்றும் இளமையான குரலைக் கொண்டிருந்த அதே வேளை, அது ஒரு முதிர்ச்சியான மற்றும் உணர்ச்சி ஆழத்தைக் கொண்டிருந்தது. அவரால் உள உணர்வை சிதைக்காமல், மென்மையான ஒலியில் இருந்து உரத்த ஒலிக்கும் கீழ் ஸ்தாயியில் இருந்து உச்ச ஸ்தாயிக்கும் இடையறாமல் மாறவும் மற்றும் பாடலின் இனிமை மற்றும் காதல் ரசத்தை தீவிரப்படுத்தும் அலைவுகளை (கமகம்) ஏற்படுத்தவும் முடிந்தது.

இந்த திறன்களும், எந்தவொரு பாடலின் அத்தியாவசிய இசை கூறுகளையும் விரைவாக உள்வாங்கிக்கொள்ளும் அவரது திறனும், பல இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களால் பயன்படுத்தப்பட்டதோடு அவரது துறை விரைவாக முன்னேறியது. புகழ்பெற்ற இசைக்கலைஞர் எம்.எஸ். விஸ்வநாதன் குறிப்பிட்டது போல்: 'பாலு ஒரு தடவை மெட்டைக் கேட்டவுடன் பாடுவதற்கு தயாராகி விடுவார். அவருடைய கேட்டவுடன் புரிந்துகொள்ளும் திறன் அந்தளவுக்கு இருந்தது.

எஸ். ஜானகி, இளையராஜா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (Photograph: Wikimedia)

இந்திய சினிமா அசாதாரண எண்ணிக்கையிலான திரைப்படங்களை வெளியிடுகிறது. அடிக்கடி ஆண்டுக்கு 1,800 திரைப்படங்ளுக்கு மேல் வெளிவருவதும் உண்டு. அனைத்து உணர்ச்சிகரமான மற்றும் சமூக பரிமாணங்களில் மனித வாழ்க்கையின் அம்சங்களை கூருணர்வுடன் வெளிக்கொணர பலர் முயற்சி செய்கின்ற போதிலும், அவை ஒவ்வொரு ஆண்டும் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாகும் நூற்றுக்கணக்கான மேம்போக்கான காதல் கதைகள் மற்றும் அதிரடி சாகச கதைகளால் (பெரும்பாலும் தனிநபர் சாகசங்களால்) அடிநிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இந்த திரைப்படங்கள் நூற்றுக்கணக்கான திறமைசாலிகளுக்கு தொடர்ந்து வேலையை வழங்குகின்ற போதிலும், இந்த திரைப்படங்களின் கிளிப்பேச்சுப் பண்பும், அவற்றின் வணிக வெற்றியும், அவற்றின் கதாபாத்திரங்களின் நோக்கத்தை கலை ரீதியாகவே பொறிக்குள் தள்ளி சீரழித்துவிடக் கூடும். இத்தகைய வரம்புகள் இருந்தபோதிலும், பாலசுப்ரமணியத்தின் அசாதாரணமான இசைத் திறமை சந்தேகத்திற்கு இடமற்றதாக உள்ளதோடு, துணைக்கண்டம் முழுவதிலும் உலக அளவிலும் கோடிக்கணக்கான மக்களால் செவ்வனே கொண்டாடப்படுகிறது.

அவரது ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தொழில்துறை வாழ்க்கையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் உருது உட்பட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாலசுப்ரமணியம் பதிவு செய்துள்ளதுடன், அவற்றில் பல அவருடைய சொந்த இசையமைப்புகளில் அமைந்தவை. கடந்த ஆண்டு வரை, அவர் இளம் இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களாலும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது சுமார் 10,000 தமிழ் பாடல்களில் மூவாயிரம் பாடல்கள் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டவை. இளையராஜா-பாலசுப்ரமணியம்-ஜானகி மூவரின் ஒருங்கிணைந்த இசை கூட்டணி, (பின்னர் கே.எஸ். சித்ராவும் இணைந்தார்) தென்னிந்திய திரைப்பட இசைக்கு மகத்தான பங்களிப்பாக இருந்தது.

ஆறு தேசிய விருதுகள் மற்றும் பல பரிசுகளைப் பெற்ற பாலசுப்ரமணியம், 1980 இல் வெளியான சங்கராபரணம் என்ற தெலுங்குப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைத்த பாடல்களுக்காக தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்த திரைக்கதை பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் ஈடுபடும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. இதில் பாலசுப்ரமணியத்தின் பங்களிப்புகள், ஏனைய திரைப்பட இயக்குனர்களை, தங்களது படைப்புகளில் இந்திய மரபுவழி இசையின் கூறுகளை பயன்படுத்த ஊக்குவித்தன -உதாரணமாக, நடனத்தை அடிப்படையாகக் கொண்டு 1983 இல் உருவாக்கப்பட்ட சலங்கை ஒலி திரைப்படத்தில் இளையராஜாவின் இசையமைப்புகளை கூறலாம்.

பாலசுப்ரமணியம் கமல்ஹாசன் உட்பட பல பிரபலமான நடிகர்களுக்கு பல மொழி டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளதோடு, பல படங்களில் பாடி நடித்தும் உள்ளார்.

2016 இல் கே.எஸ். சித்ரா, பாலசுப்ரமணியத்துடன் பாடுகிறார் (Photograph: Wikimedia)

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே பாரிய உச்சரிப்பு வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து பாலசுப்ரமணியம் பாடல்களின் இசைத் தன்மையையும் உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தையும் திறமையாக தக்கவைத்தார். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், முரளி, மோகன், கமல்ஹாசன், அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோருக்காகவும், சல்மான் கான், ஷாருக் கான் போன்ற பிரபலமான வட இந்திய நடிகர்களுக்காகவும் அவர் பாடிய பாடல்கள் அவர்களின் புகழுக்கு பெரிதும் உதவியது. இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான லதா மங்கேஷ்கருடன் பாடிய டூயட் பாடல்கள் உட்பட அனைத்து பெண் பாடகர்களுடனும் அவரது குரல் துல்லியமாக இசைந்துபோனது.

அவர் வாணி ஜெயராமுடன் வசந்தத்தில் ஒரு வானவில் (1981) படத்திற்காக பாடிய 'ஆராரோ ஆரோ அரிவரோ' என்ற தமிழ் பாடல் அவரது பல சர்வதேச கூட்டுழைப்புகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தப் பாடலை இலங்கை இசையமைப்பாளர் பிரேமசிறி கேமதாஸ மேற்கத்திய இசை பாணியையும் தொணியையும் கொண்டு இசையமைத்திருந்தார்.

1992 இல், பாலசுப்ரமணியம் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மூன்று பாடல்களைப் பாடினார். 'ரோஜா ஜானேமன்' பாடல் பாடகரின் மிகவும் கவர்ச்சிகரமான முயற்சிகளில் ஒன்றாகும். பாலசுப்ரமணியம் மேடையில் முதலில் ஹிந்தியிலும் பின்னர் தமிழிலும் இந்த பாடலை பாடும் போது, பார்வையாளர்கள் தன்னிச்சையாக கைதட்டி ஆரவாரம் செய்வர்.

அவருக்கு மிகப் பரந்த மற்றும் ஈர்ப்புமிக்க கலைச்சாதனை இருந்தபோதிலும், சமூகத்தைப் பற்றிய பாலசுப்ரமணியத்தின் புரிதல் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததுடன் அவர் ஏற்கனவே இருக்கும் அரசியல் மற்றும் சமூக ஒழுங்கை சவால் செய்யவே இல்லை. அவர் அடிக்கடி சமூகப் பிரச்சினைகளை தனிநபர் தவறுகளின் விளைவுகளாகக் கருதியதுடன், அதனால் இந்தியாவின் ஆளும் உயரடுக்கை அதன் பொறுப்புகளில் இருந்து விடுவித்தார்.

பாலசுப்ரமணியத்தின் பரந்தளவிலான படைப்புகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மொழி, மத மற்றும் இன தடைகளைக் கடந்து அனைத்து இசைக்கலைஞர்களுடனான அவரது பாடல் பதிவுகளும் நேரடியான ஒருங்கிணைந்த செயற்பாடுகளும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆளும் வர்க்கங்கள் தூண்டிவிடும் வகுப்புவாத வெறி மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு முற்றிலும் நேரெதிராக இருந்தது. அனைத்து இசை படைப்பாற்றலின் உலகளாவிய பண்புக்கு பாலசுப்ரமணியத்தின் சந்தேகத்திற்கிடமற்ற அர்ப்பணிப்பானது அவரது படைப்புகளில் பிரதிபலிப்பதுடன் மில்லியன் கணக்கான மக்கள் அதை தழுவி மகிழ்கின்றனர்.

பாலசுப்ரமணியத்தின் மரணத்தை அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் குவிந்ததோடு ஏராளமான நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பிற கலைஞர்களும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இந்திய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அதே நேரம், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும் கூட, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல சமூக ஊடக பதிவுகள் கூட, இந்த அசாதாரண கலைஞருக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தன. அவர் வாழ்ந்திருந்தால், இந்த பிரபலமான மற்றும் வளமான பாடகர் தனது கலை வடிவத்துக்கு தொடர்ந்து மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மேலும் பல பாடல்களை அதிகம் கேட்க விரும்புவோருக்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பாடல்களின் பின்வரும் வீடியோ தேர்வை கட்டுரையின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர்:

மன்றம் வந்த தென்றலுக்கு

நிலவே வா

விழிகள் மீனோ

கடவுள் அமைத்து வைத்த மேடை

இளைய நிலா பொழிகிறது

மண்ணில் இந்த காதல் அன்றி

மலரே மௌனமா

என் காதலே

தேரே மேரே பீச்சு மேங்

சாதியா யே துனே க்யா கிய