அமெரிக்காவில் கடந்த ஐந்து வாரங்களில் 200,000 க்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் நூறாயிரக்கணக்கான குழந்தைகள் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இதற்கு அதிக நோய்தொற்றும் தன்மை கொண்ட டெல்டா மாறுபாடு பரவுவதும் மற்றும் நாடு முழுவதும் நேரடி கற்றலுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் தான் காரணம்.

குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலை (American Academy of Pediatrics - AAP) கூறுவதுபடி, செப்டம்பர் 23, 2021 இல் முடிந்த வார நிலவரப்படி, நோய்தொற்று தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் 5.7 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியான கடந்த ஐந்து வாரங்களில் குழந்தை நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது.

மே 18, 2021 அன்று நியூயோர்க்கின் ரேயில் உள்ள மில்டன் தொடக்கப் பள்ளியில் உள்ள மழலையர் பள்ளி மாணவர்கள். (AP Photo/Mary Altaffer)

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கடந்த வாரத்தில் மட்டும் 206,864 நோய்தொற்றுக்கள் பரவியமை, கடந்த ஐந்து வாரங்களில் உருவான மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை 1,131,958 ஆக அதிகரிக்கச் செய்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து உருவான ஒட்டுமொத்த கோவிட்-19 குழந்தை நோய்தொற்றுக்களில் அண்ணளவாக 20 சதவீதம் கடந்த ஐந்தே வாரங்களில் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் உருவான ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் குழந்தை நோய்தொற்றுக்கள் வீதம் 16 சதவீதமாக இருந்தாலும், அது இந்த வார நிலவரப்படி ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் 26.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் கோவிட்-19 ஆல் 19 குழந்தைகள் இறந்தமை ஒட்டுமொத்த குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 498 ஆக அதிகரிக்கச் செய்தது. மேலும், மொத்த குழந்தைகள் இறப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதம், அல்லது 96 குழந்தைகளின் இறப்பு, கடந்த ஐந்து வாரங்களில் நிகழ்ந்துள்ளது என AAP தெரிவிக்கிறது.

மொத்தத்தில், குழந்தை நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும், மருத்துவமனை அனுமதிப்புக்களும் மெதுவாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது. தொற்றுநோயின் சமீபத்திய மையமாகவுள்ள தெற்கில், பள்ளிகள் குறைந்தது இரண்டு மாதங்களாக திறந்து வைக்கப்பட்டுள்ளன, மேலும் அங்கு குழந்தைகளிடையே நோய்தொற்று பரவும் வீதம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், பள்ளிகளை தொடர்ந்து திறந்து வைத்திருக்க குழந்தைகளிடையே பரவும் நோய்தொற்றுக்களின் முழு வீச்சை மூடிமறைக்கும் முயற்சியில் மாநிலங்கள் குழந்தை நோய்தொற்றுக்களை குறைத்துக் காட்டுவதன் விளைவாக இந்த வெளிப்படையான வீழ்ச்சி இருக்கலாம்.

டெக்சாஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களில் மூன்று சதவீதத்திற்கு மட்டுமே வயதுப் பங்கீட்டை வழங்கியுள்ளது, அதிலும் இது ஆகஸ்ட் 26 வரை மட்டுமே உள்ளது. நியூயோர்க் மாநிலம் வயது பங்கீட்டை வழங்கவில்லை. அலபாமா, ரோட் தீவு, மிசூரி, மேற்கு வேர்ஜீனியா மற்றும் ஹவாய் பகுதிகள் குழந்தை நோய்தொற்றுக்களின் வரையறையை திருத்தியுள்ளன, அதாவது வயதுக் குறைப்பை குறைக்கின்றன. மாசசூசெட்ஸ் நிகழக்கூடிய குழந்தை நோய்தொற்றுக்களின் வரையறையை மாற்றியுள்ளது, இது மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைக்க வழி செய்கிறது. புளோரிடா மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது பற்றி அறிக்கை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் நெப்ராஸ்காவில் கோவிட்-19 தரவு பலகை இனி இருக்காது.

உண்மை என்னவென்றால், தொற்றுநோயால் ஏற்படும் பேரழிவை, அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் நிகழும் அழிவின் உண்மையான அளவை மூடிமறைப்பதற்கான மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் திட்டமிட்ட முயற்சியின் விளைவாக குழந்தை நோய்தொற்றுக்கள் பற்றிய தரவிற்கான ஒரே ஆதாரமாக AAP மட்டுமே உள்ளது.

குழந்தை நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் சற்று குறைந்து வரும் அதேவேளை, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து மேல்நோக்கி உயர்கிறது, அல்லது உச்சபட்ச விகிதத்தில் நிலைத்துநிற்கிறது, இது நோய்தொற்றுக்களின் மிகத் துல்லியமான கணக்கீட்டை வழங்குகிறது.

கோவிட்-19 ஆல் இறப்பவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 16 வயதினர் மற்றும் இளையோர் மத்தியில் நிலவும் இறப்பு வீதம் டெல்டா மாறுபாடு பரவிய காலத்தில் விரைந்து உச்சமடைந்தது. தொற்றுநோயியல் நிபுணரும், கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க வாதிடுபவருமான டாக்டர் எரிக் ஃபிகில்-டிங் (Dr.Eric Feigl-Ding), “இதை [புளோரிடாவில் நிலவும் குழந்தைகள் இறப்பு வீதத்தை] நீங்கள் முழு தொற்றுநோய் காலத்துடன் ஒப்பிடுகையில், உண்மையான இறப்புக்களின் அடிப்படையில் பார்த்தால் இது ஆறு முதல் எட்டு மடங்கு அதிகமாகும்” என்று கூறினார்.

கடந்த ஐந்து வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் இறந்துள்ளனர். இதன் பொருள், தற்போதைய போக்கின்படி, ஒரு வருட காலத்தில் அண்ணளவாக 1,000 குழந்தைகள் இறப்பார்கள். சமுதாயத்தை திறக்க தடுப்பூசிகள் முக்கியம் என்று கூறப்பட்டாலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இன்னும் அங்கீகரிக்கப்படாததால், பெரும்பாலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

ஃபீகல்-டிங் கவனித்தபடி, தற்போதைய சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு நோய்தொற்றும் வாய்ப்பை ஏற்படுத்துவது “ஆபத்தானது மற்றும் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது.” 2019 இல் கிட்டத்தட்ட 3,400 குழந்தைகள் துப்பாக்கியால் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் பாதிக்கு அதிகமான, அல்லது 1,780 குழந்தைகள் புற்றுநோயால் இறந்தனர். கோவிட்-19 இறப்பு விகிதம் இந்த சோகமான புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடத்தக்கது.

பெற்றோர்களை தொடர்ந்து வேலையில் தக்கவைத்து ஆளும் வர்க்கத்திற்காக இலாபங்களை பெருக்குவதை முன்னிட்டு பள்ளிகள் தொடர்ந்து திறந்திருப்பதை உறுதிசெய்ய குழந்தைகளிடையே பாரியளவில் வைரஸ் பரவுவது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த கொள்கைக்கு பெருநிறுவன ஊடகங்களுடன் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஆதரவளிக்கிறது.

பைடென் நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகக் கட்சியினர், தொழிற்சங்கங்களின் உதவியுடன் தேசியளவில் பள்ளிகளை மீளத்திறக்க தற்போது தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ஆசிரியர் சங்கங்கள், நேரடி கற்றலுக்கு ஏற்பாடு செய்து, கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் முழுமையாக பள்ளிகளை மீளத்திறக்க தீவிர பிரச்சாரம் செய்கின்றன.

பைடென் தலைமையிலான எட்டு மாத கால ஆட்சியில், 280,000 க்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். ஜூலை 2021 நிலவரப்படி, வைரஸில் இருந்து “விடுதலை” அடைந்துவிட்டதாக பைடென் அறிவித்தபோது, கோவிட்-19 ஆல் தங்கள் பராமரிப்பாளர்களை இழந்து 114,000 குழந்தைகள் அமெரிக்காவில் அனாதையாகியிருந்தனர் பெரும்பாலான குழந்தைகள் நோயறிகுறிகள் வெளிப்படாத நோய்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களால் நோயை உடனடியாக பரப்ப முடிவதும் தான் குழந்தை நோய்தொற்றுக்கள் பற்றி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் உடனடி பாதிப்பு ஏற்படுவதோடு, தொற்றுநோயின் நீண்டகால விளைவுகள் கடுமையாக இருக்கலாம். SARS-CoV-2 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைகளில் ஏழு பேருக்கு ஒருவர் வீதம், அவர்களுக்கு நோய் கண்டறியப்பட்ட பின்னர் 15 வாரங்கள் வரை நோயறிகுறிகள் காணப்படுகின்றன. அதாவது தலைவலி மற்றும் அசாதாரண சோர்வு போன்ற நோயறிகுறிகள் உள்ளன.

பள்ளிகளை மீளத்திறக்கும் கொலைகார கொள்கைக்கு அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. கடந்த வாரம், பிரிட்டிஷ் பெற்றோரான லீசா டியஸ், அக்டோபர் 1 ஆம் தேதி இங்கிலாந்தில் தேசியளவிலான பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஒரு காணொளி அறிக்கையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பள்ளிகள் மீளத்திறக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களில் அண்ணளவாக 60,000 பிரிட்டிஷ் குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று பரவியுள்ளது.

டியஸ் இன் அழைப்புக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

குழந்தைகளை பாதுகாக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் முன்வர வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கொலைகார கொள்கைகளை எதிர்க்கவும், கோவிட்-19 ஐ முற்றிலும் அழித்தொழிக்க போராடவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை அணிதிரட்ட வேண்டும்.

Loading