வெள்ளை மாளிகை சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் "நலன்களை" பாதுகாப்பதாக உறுதியளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தைவான் மீது இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் பின்னணியில், பைடென் நிர்வாகம் திங்களன்று சீனாவுக்கு எதிரான ட்ரம்பின் வர்த்தகப் போர் கொள்கைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

HMAS Parramatta (இடது) USS America, USS Bunker Hill மற்றும் USS Barry ஆகியவற்றுடன் தென் சீனக் கடலில் பயணம் செய்கின்றன (Image Credit: U.S. Navy/MC3 Nicholas Huynh)

ஆக்கிரோஷம் மிக்க மற்றும் போரை உந்தும் ஒரு உரையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய், பைடென் நிர்வாகம் அமெரிக்காவிற்கு எதிரான 'பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும்' என்று உறுதியளித்து, சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் வர்த்தக கட்டணத்தை பைடென் நிர்வாகம் தொடரும் என்று கூறினார்.

அனைத்து முக்கிய புள்ளிகளிலும், டாயின் பேச்சு முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் 2018 சீன உரையின் உள்ளடக்கத்தை தொடர்ந்ததுடன் விரிவாக்கியது. இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய 'பனிப்போர்' தொடங்குவதாக பாராட்டப்பட்டதுடன், மேலும் இந்த உலகத்தில் இரண்டு பெரிய பொருளாதாரங்களின் 'துண்டித்தலை' ஆதரித்தது.

'நீண்ட காலமாக, உலகளாவிய வர்த்தக விதிமுறைகளை சீனா கடைபிடிக்காதது அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களின் செழிப்பை சேதப்படுத்தி விட்டது' என்று டாய் திங்கள் அன்று கூறினார். உலகப் பொருளாதாரத்தின் 'கட்டளையிடும் உயரங்களை' சீனா கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய பென்ஸின் உரையை, டாய் எதிரொலித்தார். '2014 ஆம் ஆண்டில், சீனா 2030க்குள் உலகின் முன்னணி குறைக்கடத்தி (semiconductor) தொழிற்துறையை நிறுவுவதற்கான ஒரு தொழில்துறை திட்டத்தை வெளியிட்டது' என்று டாய் கூறினார்.

'இந்த முயற்சிக்கு சீனா ஏற்கனவே குறைந்தது 150 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளதுடன், இதை மேலும் அதிகரிக்கவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எஃகு மற்றும் சூரிய சக்தியைப் போலவே அதன் நோக்கங்களும் தெளிவாக உள்ளன.

இந்த புதிய அபாயத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 'எங்கள் பொருளாதார நலன்களை நாம் பாதுகாக்க வேண்டும்' என்று டாய் உறுதியளித்தார்.

சீனாவிலிருந்து 'துண்டிக்கப்படுவதை' அப்பெண்மணி ஆதரிக்கிறாரா என்று கேட்டபோது, 'விநியோகச் சங்கிலியில் நாங்கள் வலுவான மற்றும் பலமான நிலைப்பாடுகளை கொண்டுள்ளோம்' என்ற அளவிற்கு மட்டுமே சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் அனுமதிக்கப்படும் என்று டாய் பதிலளித்தார். அவர் மேலும் 'இந்த நிர்வாகம் பலமான நிலையில் இருந்து ஈடுபடும்' என்று கூறினார்.

கொடூரமான மற்றும் ஆக்கிரோஷமான அறிக்கைகள், இராணுவ பதட்டங்களின் பின்னணியில் வெளியிடப்பட்டன. சீன அதிகாரிகள் போருக்கு வழிவகுக்கும் என்று கூறும் ஒரு சீனக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சமீபத்திய நாட்களில் தைவானின் மீது வான் ரோந்து நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல், கிட்டத்தட்ட 150 சீன விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்துள்ளன. இது நினைவிலுள்ள மிகப்பெரிய அளவாகும்.

'தைவான் சுதந்திரத்திற்காக முனைவது ஒரு முட்டுச்சந்தாகும். சீனா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் மற்றும் தைவானின் சுதந்திர சதித்திட்டங்களை உறுதியாக அடித்து தகர்க்கும்' என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான சீனாவின் உறுதிப்பாடும் மற்றும் விருப்பமும் அசைக்கமுடியாதது' எனவும் தெரிவித்தது.

தைவான் இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன விமானங்களைத் துரத்தி, விமானங்களை அதன் ஏவுகணை அமைப்புகளால் கண்காணித்தது.

பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, தைவான் மீதான சீன இராணுவப் பயிற்சிகள், தற்போது தைவானின் வடக்கே ஒகினாவாவில் பயிற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க கடற்படை மீதான தாக்குதலை ஒத்திகை பார்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பைனான்சியல் டைம்ஸ் தொடர்ந்து எழுதியது:

ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் கூற்றுப்படி, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஓகினாவாவின் தென்மேற்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று விமானம் தாங்கிகள் மற்றும் 14 போர்க்கப்பல்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பயிற்சியை நடத்தின.

கூட்டுப் பயிற்சியில் பங்கேற்ற சில போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களை சீன விமானங்கள் உருவகப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் வீடு திரும்பும் வழியில் அல்லது புதிய பயணங்களுக்கு செல்லும் வழியில் இருந்ததாகவும் நிலைமையை நன்கு அறிந்த இரண்டு பேர் கூறினர்.

'நாங்கள் மோதலின் விளிம்பிற்கு மிக அருகில் வருகிறோம்' என தைவானின் மூத்த அதிகாரி ஒருவர் பைனான்சியல் டைம்ஸ் இடம் கூறினார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி, 'போதுமான தற்காப்பு திறனைப் பராமரிக்க தைவானுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம்'. 'பெய்ஜிங்கின் இராணுவ, இராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தம் மற்றும் தைவானுக்கு எதிரான வற்புறுத்தலை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்' என்று கூறினார்.

தைவானுக்கு அருகே அமெரிக்க இராணுவப் பயிற்சிகள் சீனாவை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் சமீபத்தியவை மட்டுமே.

ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஆயுதப் போட்டியின் ஒரு பகுதியாக கடந்த வாரம், அமெரிக்கா ஒரு புதிய Raytheon ஒலியைவிட வேகமான அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது.

'ஒரு தேசமாக, நாங்கள் ஒரு கணிசமான ஆரம்பகால முக்கிய தலைமை நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அதை மீண்டும் ஒரு தேசிய முயற்சியாக மாற்றி, தொழில்துறை தளம் மற்றும் சேவைகள் முழுவதும் முன்னோக்கிச் சென்று பிடிக்க வேண்டும்' என விமானப்படையின் தற்காலிக தலைமை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அதிகாரி ஜெனரல் ஜான் எம். ஒல்சன் Defense One இடம் கூறினார்.

ஒல்சன் மேலும் 'சீனர்கள் மற்றும் ரஷ்யர்கள் இருவரும் கணிசமான தொகையை முதலீடு செய்து இந்த துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்' எனக் கூறினார்.

திங்களன்று, லாக்ஹீட் மார்ட்டின் அமெரிக்க இராணுவத்திற்கு ஆயுதங்களை உருவாக்க வடக்கு அலபாமாவில் ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஆயுத தொழிற்சாலையைத் திறந்தார். அது, ஆயுத உற்பத்தி நிறுவனம் இந்த ஆண்டு தொடங்கிய மூன்றாவது பெரிய தொழிற்சாலையாகும்.

கடந்த மாதம், அமெரிக்கா தனது நட்பு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சீனாவை குறிவைத்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா தயாரிப்பதை உள்ளடக்கிய ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு புதிய இராணுவ கூட்டணியை அறிவித்தது. வெள்ளை மாளிகை ஆசியா/பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் திரைக்குப் பின்னால், தைவான் மற்றும் ஜப்பானின் அரசாங்கங்களுடன் குறுகிய மற்றும் இடைத்தூர ஏவுகணைத்தடை INF ஒப்பந்தத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட தாக்குதல் ஏவுகணைகளை அவர்களின் கரையோரங்களில் நிறுத்துவது பற்றி விவாதித்துள்ளது.

அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், ஆசியா/பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமல்ல, வட அமெரிக்காவிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அபாயகரமான விளைவுகளுடன் அமெரிக்கா தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Loading