சீனாவுக்கு எதிராக இயக்க அமெரிக்க இராணுவ தளங்கள் ஆஸ்திரேலியாவில் விரிவாக்கப்பட உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதுடன் கூடிய ஆஸ்திரேலியா-ஐக்கிய இராச்சியம்-அமெரிக்க (AUKUS) இராணுவ கூட்டணி பற்றிய இந்தவார அறிவிப்பானது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளில் ஆஸ்திரேலியாவை நெருக்கமாக ஒருங்கிணைப்பதை முன்னணியில் இருத்துகின்றது.

ரோயல் நியூசிலாந்து விமானப்படை NH90 ஹெலிகாப்டர் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை MRH90 மத்திய குயின்ஸ்லாந்தில் ஷோல்வாட்டர் பே இராணுவ பயிற்சி பகுதியில் சாம் ஹில் விமான நிலையத்தில் தரையிறங்கியது [Source: Australian Department of Defence] [Photo: Australian Department of Defence]

அவர்களின் மக்களின் முதுகிற்குப் பின்னாலும், பாராளுமன்றங்கள் அல்லது காங்கிரஸில் எந்த அறிவிப்பும் இல்லாமல் மூன்று அரசாங்கங்களும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட சீனாவிற்கு எதிரான போர் திட்டங்களில் ஆஸ்திரேலியாவை முன் வரிசையில் நிறுத்தியுள்ளன.

ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா இருப்பதால், அவ்வாறு செய்வதை தவிர்ப்பதற்கான முந்தைய முயற்சிகளை கைவிட்டு, சீனாவை இராணுவ தயாரிப்பின் இலக்காக ஆஸ்திரேலியா அரசாங்கம் முதன்முறையாக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது.

AUKUS பற்றிய அறிவிப்புக்கு மறுநாள் வாஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க துருப்புக்கள், குண்டுவீச்சு விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தங்கவைக்கவும் மற்றும் அணுசக்திகொண்ட நாடுகளுக்கு இடையே ஒரு இராணுவ மோதலுக்கான ஒரு தளவாட தளமாக செயல்படலாம் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

31 வது ஆண்டு ஆஸ்திரேலியா-அமெரிக்க அமைச்சரவை ஆலோசனைகள் (AUSMIN) கூட்டு அறிக்கையில், 'அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு உடைக்க முடியாத கூட்டணி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அதன் முக்கிய பாகமாக 'நவீனப்படுத்தப்பட்ட படை நிலைநிறுத்தல் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு' பற்றிய ஒப்பந்தம் இருந்தது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா நிர்வாகத்திற்கும் கில்லார்ட் தொழிற் கட்சியின் அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட படை நிலைநிறுத்தல் முயற்சிகளை ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது. இதில் வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் சுழற்சிமுறையில் அமெரிக்க கடற்படையினர் தங்கும் தளமாக இடம்பெறுகின்றது.

இதில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி பீட்டர் டட்டன் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் ஆகிய நான்கு அமைச்சர்கள் பின்வருவனவற்றை ஒப்புக்கொண்டனர்:

  • ஆஸ்திரேலியாவில் அனைத்து வகையான அமெரிக்க விமானங்களின் சுழற்சிமுறையிலான பயன்படுத்தல் மற்றும் பொருத்தமான விமான பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் மேம்பட்ட வான்ரீதியான ஒத்துழைப்பு.
  • ஆஸ்திரேலியாவில் அமெரிக்க கடலுக்கு மேலான மற்றும் கடலுக்குக்கு கீழான கப்பல்களின் தளவாட மற்றும் பராமரிப்பு திறன்களை அதிகரிப்பதன் மூலம் மேம்பட்ட கடல் மூலமான ஒத்துழைப்பு.
  • மிகவும் சிக்கலான மற்றும் மிகவும் ஒருங்கிணைந்த பயிற்சிகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள கூட்டுக்கள் மற்றும் கூட்டாளர்களுடன் அதிக ஒருங்கிணைந்த ஈடுபாட்டுடன் மேம்பட்ட தரைரீதியான ஒத்துழைப்பு.
  • பிராந்தியத்தில் உயர்மட்ட போர் மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த தளவாட, நிலைநிறுத்தல் மற்றும் பராமரிப்பு வசதிகளை நிறுவுதல்.

ஒரு ஊடக மாநாட்டில், டட்டன் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதை முன்னறிவித்தார். 'சுழற்சியின் மூலம் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம், வான் திறன் மேம்படுத்தப்படும், எங்கள் கடல் திறன் [கூட] என்று எனக்கு ஒரு விருப்பம் இருக்கிறது,' என்று அவர் கூறினார். 'இது பண்டகசாலை வசதி மற்றும் பல்வேறு மேலாணைகளையும் உள்ளடக்கியிருந்தால், இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சிறந்த நலன்களுக்கு உரியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

பிளிங்கன், சீனாவுக்கு எதிரான பைடென் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளையும் அச்சுறுத்தல்களையும் அதிகரித்தார். பெய்ஜிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 'பொருளாதார வலுக்கட்டாயப்படுத்துவதற்காக' குற்றம் சாட்டி மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா 'ஆஸ்திரேலியாவை தனியாக விட்டுவிடாது' என்று அறிவித்தார்.

பெய்ன் அதைப் பின்தொடர்ந்தார். “இன்று, நாங்கள் மூலோபாய போட்டி பற்றியும் விவாதித்தோம். சீனாவின் போட்டியை நாங்கள் பல நிலைகளில் விவாதித்தோம், அதற்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும் மற்றும் எதிர்க்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.”

ஆஸ்திரேலியாவில் இருந்து பேசுகையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் பின்வருமாறு அறிவித்தார்: 'எங்கள் பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நாங்கள் அனுபவித்த ஒப்பீட்டளவில் சாதகமான நல்ல சூழல், எங்களுக்கு கடந்தகாலத்திற்கு உரியதாகிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கான புதிய சவால்களுடன் நாங்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம்.

AUKUS ஒப்பந்தம் பற்றிய நியூ யோர்க் டைம்ஸ் இல் ஒரு கருத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மோரிசன் பிரதமரானபோது, முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான அமெரிக்காவுடன் இணைந்திருக்கும் போதும், அதன் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேண முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

'ஆஸ்திரேலியா இவற்றிற்கு இடையில் தேர்வு செய்ய வேண்டியதில்லை' என்று மோரிசன் தனது முதல் வெளியுறவுக் கொள்கை உரையில் கூறினார். ஆனால் நியூ யோர்க் டைம்ஸ்: 'வியாழக்கிழமை, ஆஸ்திரேலியா திறம்பட தேர்ந்தெடுத்தது ... கனரக ஆயுதங்கள் மற்றும் அதிஇரகசிய தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான அதன் நடவடிக்கையால், ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் பலதலைமுறைக்கு தனது தலைவிதியை உறுதிப்படுத்தியுள்ளது … எனக் கூறியது

'இந்த ஒப்பந்தம் ஆழ்ந்த இராணுவ உறவுகளுக்கும், பெய்ஜிங்குடனான எந்தவொரு இராணுவ மோதலிலும் ஆஸ்திரேலியா சேரும் என்ற அதிக எதிர்பார்ப்புகளுக்கும் வழி திறக்கும்.'

அந்த கட்டுரையில், அமெரிக்காவும் ஒரு தேர்வு செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது: 'பெய்ஜிங்கை எதிர்கொள்ள ஒரு உறுதியான கூட்டணியின் மிகவும் அவசரமான தேவையானது, அது முக்கியமான அணு தொழில்நுட்பத்தைப் பகிர்வது பற்றிய நீண்டகால பின்னடிப்புகளை ஒதுக்கி வைத்துள்ளது. 1958 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு பின்னர், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை பெறக்கூடிய இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா மாறும். இது மறைமுகமான நடவடிக்கைகளை நீண்ட தூரத்திற்கு செல்ல அனுமதிக்கிறது”.

முக்கியமாக, AUSMIN அறிக்கை குறிப்பாக தைவானை பற்றிக் குறிப்பிட்டது. இதனை அமெரிக்காவும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான மோதலுக்கு சாத்தியமான தூண்டுதலாகப் பயன்படுத்துகின்றன. இந்த ஆவணம், 'ஒரு சீனா' கொள்கையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இதன் மூலம் 1979 ஆம் ஆண்டில் தைவான் உட்பட முழு சீனா மீதான ஒட்டுமொத்தமான சட்டபூர்வமான அரசாங்கமாக அமெரிக்கா பெய்ஜிங்கை அங்கீகரித்தது.

'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தைவானின் முக்கிய பங்கை செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'தைவானுடனான உறவை வலுப்படுத்தும் தங்கள் நோக்கத்தை இரு தரப்பினரும் தெரிவித்தனர். இது ஒரு முன்னணி ஜனநாயகமும் மற்றும் இரு நாடுகளுக்கும் ஒரு முக்கியமான பங்காளியும் ஆகும்.'

சீனாவுக்கு எதிரான இந்த ஆக்கிரோஷமான அணிதிரளல் அடுத்த வாரம் வாஷிங்டனில் ஒரு உண்மையான சீன எதிர்ப்பு இராணுவ கூட்டணியான, நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது 'குவாட்' எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றின் தலைவர்களின் முதல் நேரடி சந்திப்பு மூலம் தீவிரப்படுத்தப்பட்டும்.

இருதரப்பு ஆதரவில் நம்பிக்கையுடன், மோரிசன் அரசாங்கம் தொழிற் கட்சியுடன் நெருக்கமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் மூன்று முக்கிய நிழல் அமைச்சர்களுக்கு AUKUS அறிவிப்பு குறித்து முன்கூட்டியே விளக்கப்பட்டது.

அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கான தொழிற் கட்சியின் தெளிவான தசாப்த கால உறுதிப்பாட்டிற்கு இணங்க, அல்பானீஸ் உடனடியாக கூட்டணி மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான தொழிற் கட்சியின் உடன்பாட்டை அறிவித்தார்.

ஒப்பந்தத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மூன்று உறுதிமொழிகளான பொதுதேவைக்கான அணுசக்தி திறன் பயன்பாடு இல்லை, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறுவதில்லை மற்றும் அணு ஆயுதங்களை வாங்குவது இல்லை என்பவற்றை அல்பானீஸ் கோரினார். இவை அடிப்படையில் அர்த்தமற்றவை, ஏனென்றால் அணுசக்தியால் இயங்கும் ஆயுதங்களை பெறுவது என்பது அணு ஆயுதப் போரை நடாத்துவதை உள்ளடக்கியுள்ளது.

பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் ஆதரவளிக்கப்பட்ட AUKUS மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்களை சீனா கண்டனம் செய்வதை மோரிசன், டட்டன் மற்றும் பிற ஆஸ்திரேலிய அமைச்சர்கள் அப்பட்டமாக நிராகரித்தனர்.

Australian இதழின் வெளிநாட்டுபிரிவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன்: 'இந்த ஒப்பந்தம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவதை மட்டுமல்லாமல், பிராந்திய பாதுகாப்பிலும் எங்கள் பாதுகாப்பிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் இன்னும் நெருக்கமான ஈடுபாட்டை உறுதிப்படுத்துகிறது. … ஆப்கானிஸ்தான் தோல்வியை அடுத்து, இது ஒரு நல்ல நிகழ்வு” என்று எழுதினார்.

ஆயினும்கூட, சீனாவுக்கு எதிரான நகர்வுகளின் அப்பட்டமான தன்மை குறித்து அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்திற்குள் கவலைகள் ஒலித்தன. முன்னாள் தொழிற் கட்சியின் பிரதமர் கெவின் ரூட் அமெரிக்க கூட்டணியைப் பாதுகாத்தார். ஆனால் ஆஸ்திரேலியா ஒரு 'புத்திசாலித்தனமான' கூட்டாளியாக இருக்க வேண்டுமே தவிர எமது நெற்றிகளில் ஒரு பெரும் சுடும் இலக்கை அடையாளமிடுவதாக இருக்க கூடாது என்று” அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியரும் முன்னாள் பாதுகாப்புதுறை அதிகாரியுமான ஹக் வைட் பின்வருமாறு எச்சரித்தார்: “அமெரிக்க-சீன மோதல் அதிகரிக்கும் போது, ஆஸ்திரேலியா இன்னும் பலவற்றைச் செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தனது அணுசக்தி தொழில்நுட்பத்தை அணுக ஆஸ்திரேலியாவை அனுமதித்தால், அது சீனாவுடன் ஒரு சாத்தியமான போரில் ஆஸ்திரேலியா தனது படைகளை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.”

இந்த கருத்துக்கள், இலாபகரமான சீன சந்தைகளின் இழப்பு, பேரழிவு தரும் போரின் சாத்தியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, பரவலான போர் எதிர்ப்பு உணர்வின் தூண்டுவது பற்றி ஆளும் வட்டாரங்களில் காணப்படும் பதட்டத்தை பிரதிபலிக்கின்றன.

Loading