பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: ஒழிப்புக்கான வாதங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான அவசரத் தேவையை விளங்கப்படுத்த, உலக சோசலிச வலைத் தளமும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) அக்டோபர் 24 இல் இணையவழி கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன. விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோய் நிபுணர்களின் ஒரு குழு, இந்த பெருந்தொற்றுக்கு முடிவாக முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு பரந்த சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய அவசியமான முக்கிய புரிதலை வழங்கும்.

இந்த பெருந்தொற்றின் ஒரு முக்கிய கட்டத்தில் இந்த சர்வதேச இணையவழி கருத்தரங்கு நடத்தப்படுகிறது. ஒருபுறம், இந்த பெருந்தொற்று பேராபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திறம்பட நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கை உழைக்கும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் உயிர்களை மிகப்பெரும் ஆபத்தில் நிறுத்தி உள்ள பள்ளிகளின் பொறுப்பற்ற மறுதிறப்பை எதிர்க்க இங்கிலாந்து பெற்றோர் லீசா டியஸ் அழைப்பு விடுத்த அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தம் உலகெங்கிலும் தொழிலாளர்களிடையே கணிசமான வரவேற்பை பெற்றுள்ளது.

மறுபுறம் உலகளாவிய பெருநிறுவன மற்றும் நிதிய நலன்களின் பெரும் அழுத்தத்தின் கீழ் செயல்படும் அரசாங்கங்கள், இந்த பெருந்தொற்று பரவலைத் நிறுத்துவதற்காக முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த எல்லா நடவடிக்கைகளையும் கைவிட்டு வருகின்றன.

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக திங்களன்று நியூசிலாந்து பிரதம மந்திரி ஜெசின்டா ஆர்டெர்ன் அறிவித்தார். “பூஜ்ஜிய-கோவிட்' மூலோபாயத்தை நடைமுறைப்படுத்திய வெகு சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாக இருந்தது.

கட்டுப்பாடுகள் தோல்வி அடைந்ததற்காக அல்ல, அவை வெற்றி பெற்றதற்காக நீக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்தில், அந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து வெறும் 27 பேர் மட்டுமே கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். ஆனால் மனசாட்சியுள்ள விஞ்ஞானிகள் வகுத்த கொள்கைகள் மூலம் வெற்றிகரமாக உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பெருநிறுவன இலாபங்களை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் வினியோக சங்கிலி நெருக்கடியை முகங்கொடுத்து, வணிக செயல்பாடுகள் மீதான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குவதால் தவிர்க்கவியலாமல் ஏற்படக்கூடிய விளைவுகளான நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், அதைச் செய்யுமாறு மிகப்பெரிய நாடுகடந்த பெருநிறுவனங்களும் வங்கிகளும் கோரி வருகின்றன.

ஆஸ்திரேலியாவிலும் இதே மாதிரியான போக்கு முன்நகர்த்தப்பட்டு வருகிறது, அங்கே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் 'பெரிய தவறுகளை' பெருநிறுவனங்கள் கண்டித்ததைத் தொடர்ந்து, பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆசியா/பசிபிக் நாடுகள் மீது பெரும் அழுத்தம் அளிக்கப்படுகிறது, இது அப்பிராந்தியம் முழுவதும் பெருந்தொற்றின் கூர்மையான அதிகரிப்புக்கு எரியூட்டியுள்ளது. இதேபோல, போக்கை மாற்றிக் கொள்ளும் இந்த கோரிக்கை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை நோக்கியும் திருப்பி விடப்பட்டுள்ளது, 1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அது, கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம், இறப்பு எண்ணிக்கையை 5,000 க்கும் குறைவாக கொண்டுள்ளது.

அமெரிக்காவிலும் மற்றும் பிரதான ஐரோப்பிய நாடுகளிலும், பரவலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் பற்றிய எல்லா பாசாங்குதனங்களும் கூட கைவிடப்பட்டுள்ளன. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, இது குழந்தைகள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கையையும் மற்றும் உயிரிழப்புகளையும் கூர்மையாக அதிகரிக்கவும், “நீண்டகால கோவிட்' சாத்தியக்கூறை முகங்கொடுக்கும் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் அறியப்படாத விளைவுகள் ஏற்படவும் வழி வகுத்து வருகிறது. பெருநிறுவன உயரடுக்குக்கு இலாபங்களைப் பாய்ச்ச பெற்றோர்களை வேலைக்குத் திரும்ப செய்வதற்காக குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பரவும் வகையில் அவர்கள் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்ப செய்யப்பட்டுள்ளனர்.

'வைரஸுடன் வாழ்வது அவசியம்' என்பதும், பொது சுகாதார நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பதும் அமெரிக்க ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை சிறிது குறைவதும் அனேகமாக இந்த பெருந்தொற்றின் மோசமான காலம் முடிந்துவிட்டதைச் சுட்டிக் காட்டுவதாக கூறி, திங்கட்கிழமை நியூ யோர்க் டைம்ஸின் David Leonhardt 'கோவிட்-19 மீண்டுமொருமுறை பின்வாங்குகிறது,” என்று எழுதினார். இந்த பெருந்தொற்று தொடரும் என்றாலும் மக்களிடையே அது அவ்வபோதைய பிராந்தியரீதியான தொற்றுநோயாக இருக்க அனுமதிக்கப்படும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். “கோவிட் விரைவில் எந்த நேரத்திலும் மறைந்து விடப் போவதில்லை. அது பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்றே பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால் தடுப்பூசிகள், ஒரு சளிக்காய்ச்சல் அல்லது பொதுவான ஜலதோஷம் என்பதிலிருந்து சற்று வேறுபட்டது என்றில்லாமல், கோவிட் ஐ ஒரு நிர்வகிக்கக்கூடிய நோயாக மாற்றிவிடும்... இந்த இலையுதிர் காலம் எதைக் கொண்டு வந்தாலும், மோசமான தொற்றுநோய் பெரும்பாலும் நிச்சயமாக நமக்கு பின்னால் உள்ளது' என்றார்.

இதுவொரு அபாயகரமான பிரமை. 12 வயதுக்குக் குறைந்த மொத்த குழந்தைகள் உட்பட உலகின் மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையினருக்கு இன்னும் தடுப்பூசிப் போடப்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக இந்த வைரஸ் தொடர்ந்து பரவுவது தடுப்பூசியையே மீறி அதிகமாக தொற்றக்கூடிய சாத்தியம் உள்ள வைரஸ் திரிபுகள் உட்பட புதிய வைரஸ் திரிபுகள் பரிணமிப்பதை உத்தரவாதப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, கோவிட்-19 என்பது ஒரு 'சாதாரண ஜலதோஷம்' என்பதை விட ஒரு விசித்திரமான உயிராபத்தான வைரஸ் ஆகும். அவ்வபோது பகுதிசார் தொற்றுநோயாக அதை அனுமதித்தால், இன்னும் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லலாம்.

இந்த பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கான எல்லா கட்டுப்பாடுகளையும் அகற்றும் நகர்வுகள், ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கக் கொள்கையைத் தீர்மானித்துள்ள சமூக மற்றும் பொருளாதார நலன்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு அதன் பொருளாதார சிறப்புரிமைகளால் உந்தப்பட்டுள்ளது, இது உயிர்களைக் காப்பாற்றுவது 'பொருளாதாரத்துடன்' சமன்படுத்தப்பட வேண்டும் என்றும், “குணப்படுத்தல் நோயை விட மோசமாக ஆகிவிடக்கூடாது,” என்றும் இத்தகைய அபிப்பிராயங்களில் வெளியிடப்பட்டது.

இந்த வைரஸை அணுகுவதற்கான மூன்று அடிப்படை மூலோபாயங்களை உலக சோசலிச வலைத் தளம்அடையாளம் கண்டுள்ளது: 1) போதுமானளவுக்கு மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு விட்டால் இந்த பெருந்தொற்று நின்றுவிடும் என்ற வாதத்தின் அடிப்படையில் வைரஸ் பரவலை இன்றியமையா விதத்தில் ஊக்குவிக்கும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்'; 2) பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கைகள், இது தடுப்பூசியுடன் சேர்ந்து கூட்டான அரைகுறை நடவடிக்கைகள் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்று வாதிடுகிறது; 3) கோவிட்-19 ஐ எதிர்க்க நடவடிக்கைக்கான கையிருப்பில் உள்ள ஒவ்வொரு கருவிகளையும் உலகெங்கிலும் பயன்படுத்தி, உலகளவில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை.

இந்த பெருந்தொற்றின் தற்போதைய நிலையும், மற்றும் திட்டமிட்டு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைக் கைவிடுவதும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே சாத்தியமான முறை, முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறது. தடுப்பூசி, ஒரு பயனுள்ள கருவிதான் என்றாலும், அத்தியாவசியமல்லாத உற்பத்தி மற்றும் பள்ளிகளை மூடுவது, அத்துடன் பாரியளவில் பரிசோதனை, நோய்தொற்றின் தடம் அறிதல் மற்றும் நோய்தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தல் ஆகியவை உட்பட கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்ந்தால் மட்டுந்தான் பரவலைத் தடுக்க முடியும்.

கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லையென்றால், இந்த வைரஸ் தொடர்ந்து பரவி, பரிணமித்து, மனித உயிர்களை மலைப்பூட்டும் எண்ணிக்கையில் பறித்துவிடும்.

அரசியல் நடவடிக்கையின் அடிப்படையே அறிவும் புரிதலும் தான். அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் இடைவிடாத பிரச்சாரத்திற்கு முன்னால், பொது மக்களை விஞ்ஞான உண்மையைக் கொண்டு ஆயுதபாணியாக்குவது இன்றியமையா அவசரமாக உள்ளது.

விஞ்ஞானத்தின் உதவியின்றி தொழிலாள வர்க்கத்தால் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது, மேலும் இந்த பெருந்தொற்றை நிறுத்த விஞ்ஞானரீதியில் அவசியமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது தொழிலாள வர்க்கத்தில் ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைச் சார்ந்துள்ளது. பொது சுகாதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட விஞ்ஞானிகள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஏற்படுத்தி வரும் மிகப்பெரும் அழுத்தத்தை எதிர்த்து, மனித உயிர்களைப் பாதுகாக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே மில்லியன் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன, ஒரு கொள்கை மாற்றம் இல்லையென்றால் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள். இந்த பெருந்தொற்றை தடுக்க முடியும், தடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகள், உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த வைரஸை ஒரேயடியாக மொத்தமாக ஒழித்துக் கட்டி விடலாம்.

இந்த அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கம் இந்த வைரஸை முற்றிலும் ஒழிக்கும் விஞ்ஞானபூர்வ விஷயத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும். இந்த இணையவழி கருத்தரங்கிற்குப் பதிவு செய்யுமாறும், அது குறித்து சக தொழிலாளர்களுடன் உரையாடுமாறும், சாத்தியமானளவுக்கு சமூக ஊடகத்தில் பரவலாக இந்நிகழ்வைப் பரப்புமாறும் நாம் நமது வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.