முன்னோக்கு

கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும், கோவிட்-19 நோய்தொற்றுகளும், மருத்துவமனை அனுமதிப்புகளும் மரணங்களும் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா மீண்டும் இந்த பெருந்தொற்றின் குவிமையமாக ஆகியுள்ளது, வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக 155,000 க்கு அதிகமான கோவிட்-19 நோயாளிகளும், 967 இறப்புகளும் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை, புதிய SARS-CoV-2 வகைகள் முன்னிறுத்தும் அபாயங்களை அடிக்கோடிடுகின்றன.

கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில், பிப்ரவரி 3, 2021 புதன்கிழமை ஸ்டான்போர்ட் மருத்துவ வைராலஜி ஆய்வகத்தில் கோவிட் -19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின்மேல் சுவாசகுழாயில் இருந்துமாதிரிகளை மருத்துவ ஆய்வக விஞ்ஞானி செலாம் பிஹான் எடுக்கிறார். (AP Photo/Noah Berger)

வயதானவர்களின் நோய் என்று தவறாக குறைத்துக் காட்டப்பட்ட இந்த வைரஸ், அதிகரித்தளவில் இளம் வயதினரையும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளையும் தாக்கி வருகிறது. ஆகஸ்டின் இரண்டாவது வாரத்தில், 121,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வைரஸால் தாக்கப்பட்டிருந்தனர் மற்றும் அமெரிக்காவில் மட்டும் 1,900 க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், பள்ளிகள் முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதற்கு மத்தியில் வரவிருக்கும் வாரங்களில் இந்த புள்ளிவிவரங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர இருக்கின்றன.

இந்த முக்கிய கட்டத்தில், இந்த பெருந்தொற்றை எவ்வாறு கையாள்வது?

இந்த உலகளாவிய போராட்டத்திற்கான கள எல்லைகள் தெளிவாக வரையப்பட்டுள்ளன. இந்த வைரஸைக் கையாள்வதற்கான மூன்று அடிப்படை மூலோபாயங்கள் எழுந்துள்ளன: 1) 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்'; 2) நோயின் தீவிரத்தைக் குறைத்தல்; மற்றும் 3) இல்லாதொழித்தல். மிகவும் பரவும் டெல்டா மாறுபாட்டின் உலகளாவிய பரவலும் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பது நன்கு தெரிந்துமே கூட, உலகெங்கிலும் பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறக்கும் முனைவும், இந்த மூன்று நிலைப்பாடுகளுக்கு இடையிலான பகைமைகளைக் கூர்மைப்படுத்தியுள்ளதுடன், உலகளவில் இந்த பெருந்தொற்றை இல்லாதொழிப்பது மட்டுமே விஞ்ஞான அடித்தளமாக கொண்ட ஒரே பயனுள்ள மூலோபாயம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்

மக்களிடையே இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் மத்தியில் இந்த வைரஸை வேகமாக பரப்புவது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சுற்றி ஒரு மனித கேடயத்தை உருவாக்கும் என்ற மோசடிக் கூற்று — 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' — இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஒரு மூலோபாயம் அல்ல. மாறாக, மனித உயிர்களைக் கொடுத்தாவது, ஆளும் உயரடுக்குகளின் நிதி, வணிக மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஈவிரக்கமற்ற கொள்கையாகும். இது, இத்தகைய நலன்களுடன் மோதும் சமூக அடைப்புகள், பள்ளி மூடல்கள் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற எந்தவொரு கோவிட்-தடுப்பு நடவடிக்கைகயும் எதிர்க்கிறது. தடுப்பூசிக்கு எதிர்ப்பை ஊக்குவிக்கும் அளவுக்கும் கூட, அது விஞ்ஞானம் மீதான அவநம்பிக்கையையும் வெறுப்பையும் ஊக்குவிக்கிறது.

'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' சுவீடனில் ஒரு பொறுப்பற்ற பரிசோதனையாக தொடங்கியது, அது மார்ச் 2020 இல் சமூக அடைப்புகளைச் செயல்படுத்த மறுத்த நிலையில், அதன் அண்டைநாடான பின்லாந்தை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக இறப்பு விகிதத்தை எட்டியது. சுவீடனின் தலைமை தொற்றுநோய் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் மார்ச் 13, 2020 இல் அவரின் பின்லாந்து சம்பலத்திற்கு எழுதினார், 'சமூக நோயெதிர்ப்பு சக்தியை விரைவாக அடைவதற்குப் பள்ளிகளைத் திறப்பது சரியாக இருக்கும்,' என்றார்.

இந்த மூலோபாயம் 'தாராளவாத' நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் ஃப்ரீட்மனால் சித்தாந்தரீதியான நியாயப்படுத்தலாக வழங்கப்பட்டது, அவர் சுவீடனின் அணுகுமுறையைப் பாராட்டி, மார்ச் 23, 2020 இல் எழுதுகையில், 'இந்த சிகிச்சை முறை [சமூக அடைப்பு] —சிறிது காலத்திற்காக இருந்தாலும்— நோயை விட மோசமா?' என்றார்.

'குணப்படுத்துதல் நோயை விட மோசமாக இருந்து விடக்கூடாது' என்ற இந்த வரிகள், உடனடியாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன், பிரேசிலில் ஜயர் போல்சோனாரோ, இந்தியாவில் நரேந்திர மோடி மற்றும் பிற பாசிச வகைப்பட்ட பிரமுகர்களால் கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை மிகவும் ஆக்ரோஷமாக நாடுகள், உலகெங்கிலும் மதிப்பிடப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களில் பெரும் பெரும்பான்மையைக் கணக்கில் கொண்டுள்ளன.

சமூக நோயெதிர்ப்புக் கொள்கை, மக்களிடையே குழப்பத்தையும் சதிக் கோட்பாடுகளையும் பரப்புவதற்குத் தவறான பிரச்சாரங்களைப் பயன்படுத்துகிறது, இது மிகவும் பிற்போக்கான மற்றும் பாசிசவாத கருத்தாக்கங்களை வளர்க்கிறது. இதற்கு எந்த விஞ்ஞானபூர்வ நம்பகத்தன்மையும் இல்லை என்பதோடு, “உயிர்வாழ தகுதியுடையவர்கள் பிழைப்பார்கள்” என்ற 19 ஆம் நூற்றாண்டின் சமூக டார்வினிய கருத்துருவின் பயன்பாட்டை அடித்தளமாக கொண்டுள்ளது. அதன் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மை போரிஸ் ஜோன்சனின் வார்த்தைகளில் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் கடந்த நவம்பரில், 'சவங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தாலும், இனிமேல் அசிங்கமாக எந்த சமூக அடைப்பும் இல்லை!' என்று உளறிக் கொட்டினார்.

தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள்

இந்த பெருந்தொற்றை நோக்கிய இரண்டாவது மூலோபாய அணுகுமுறை 'தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கை' என்று அழைக்கப்படுகிறது, இது வைரஸின் யதார்த்தங்களுக்கும் ஆளும் உயரடுக்குகளின் நிதி நலன்களுக்கும் இடையே ஒத்திசைவாக்க முயலும் நடவடிக்கைகளின் ஓர் ஒழுங்குமுறையற்ற தொகுப்பாகும். இது, தொற்றுநோயியலில் இந்த பக்கமும் சாராமல் அந்த பக்கமும் சாராமல் நடுநிலை நிலைப்பாட்டு நிகராக உள்ளது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, பரிசோதனைகள், நோயாளிகளின் தடம் அறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், காற்றோட்டம், தடுப்பூசிகள் மற்றும் இன்னும் பலவை உட்பட, கோவிட்-19 பரவல் தடுப்பில் பரந்தளவிலான தணிப்பு நடவடிக்கைகள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைப்பதில் பங்கு வகிக்கின்றன. ஆனால் அவை வைரஸைத் திறம்படக் கட்டுபடுத்தாது, மேலும் வைரஸ் பரவல் சங்கிலியைத் துண்டிக்க ஒரு மூலோபாயம் இல்லாத நிலையில், உண்மையில் அவை ஆக்கபூர்வமற்றதாக மாறலாம்.

தடுப்பூசி இடுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவை தணிப்பு மூலோபாயத்தை ஆதரிப்பவர்களால் பரிந்துரைக்கப்படும் இரண்டு முக்கிய கூறுபாடுகளாக உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் ஒன்றுகலந்த கலவை, இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று அமெரிக்காவில் உள்ள பைடென் நிர்வாகம், கனடாவில் ட்ரூடோ மற்றும் உலகெங்கிலும் ஏனைய தலைவர்களாலும் அசாதாரணமாக கூறப்படுகிறது. இந்த கூற்றுக்கள், அடிப்படையில் டெல்டா மாறுபாட்டின் உண்மைத் தன்மையை மொத்தமாக சிதைத்து விடுகின்றன.

முதலாவதாக, இந்த டெல்டா மாறுபாடு நோய்தொற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தடுக்கிறது என்பது மட்டுமல்ல அது மிகவும் பரக்கூடிய, தடுப்பூசி-எதிர்ப்பையே மீறும் தன்மையை கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையின் 64 சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், டெல்டா மாறுபாட்டின் R எண் மிகவும் அதிகமாக 3.7 ஆக நீடிக்கலாம் என்றும், அதேவேளையில் பொது சுகாதார நடவடிக்கைகள் மட்டுமே சுமார் 1.4 இல் இருக்கும் என்றும் சமீபத்திய ஓர் ஆய்வு மதிப்பிட்டது.

இரண்டாவதாக, பொது மக்கள் பயன்படுத்தும் முகக்கவச வகைகள் டெல்டா மாறுபாட்டுக்கு முற்றிலும் போதுமானதாக இல்லை, இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்பதோடு வைரஸின் ஆரம்ப வகையை விட சுமார் 1,000 மடங்கு அதிகமாக வைரஸ் பாதிப்பை உருவாக்குகிறது. இந்த வைரஸின் தீவிர பாதிப்பைக் கொண்டு பார்த்தால், பரவலாக பயன்படுத்தப்படும் துணி மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முகக்கவசங்கள் பெரிதும் பாதுகாப்பானதில்லை என்கின்ற நிலையில், டெல்டா வைரஸை ஒரு நொடி எதிர்கொள்வதே ஆரம்ப வைரஸை 15 நிமிடங்கள் எதிர்கொள்வதற்குச் சமம் என்று சில விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். நிலைமையை இன்னும் மோசமாக்க, தவறான கல்வியூட்டல் மற்றும் பொய் தகவல்களின் விளைவாக, வைரஸ் பரவலின் நிகழ்முறையை தெளிவாக புரிந்து கொள்ளாத மக்கள், முகக்கவசங்களைப் பெரும்பாலும் சரியான முறையில் அணிவதில்லை.

இந்த வசந்த காலத்திலும் கோடையிலும், பைடென் நிர்வாகமும் மற்ற உலக அரசாங்கங்களும் இந்த பெருந்தொற்று முடிந்துவிட்டதாக பிரகடனம் செய்ததுடன், தடுப்பூசியை ஒரு மாயஜால தோட்டா என்று சித்தரித்து, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசங்கள் அணிய தேவையில்லை என்றும், எல்லா எச்சரிக்கைகளையும் காற்றில் பறக்க விடலாம் என்று கூறின. தடுப்பூசி போடாத குழந்தைகள் முகக்கவசங்கள் அணிவதன் மூலம் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறி, அவை பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறக்க அனுமதித்தன. ஆனால் சில வாரங்களுக்குள், அமெரிக்கா முழுவதிலும் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் ஏற்பட்ட பாரிய நோய்தொற்றுகளின் யதார்த்தம் அந்த பொய்களை வெடித்து சிதறடித்தன, இதில் ஒவ்வொரு வாரமும் அறிகுறியுடன் கூடிய 35,000 'தடைமீறிய நோய்தொற்றுகளும்' (breakthrough infections - தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு உண்டான நோய்தொற்றுக்கள்) உள்ளடங்கும்.

ஒவ்வொருவரும் 'இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள' வேண்டும் என்பதே தணிப்பு மூலோபாயத்தை அறிவுறுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன ஊடங்களின் மந்திரமாக உள்ளது. தணிப்பு மூலோபாயத்தை ஆதரிப்பவர்கள் அடிப்படையில் எதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், கோவிட்-19 தீர்க்கவியலாத தொற்றுநோய், எப்போதும் தொடர்ந்து கொஞ்சமாவது நோய்தொற்றுக்கள் இருந்து கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலத்தில் மருத்துவமனைகளே முறியும் புள்ளிக்குக் கூட அந்த வைரஸ்கள் அதிகரிக்கக்கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும், பெருநிறுவன நலன்களுடன் மோதாத அடிப்படை கட்டமைப்பை இந்த தணிப்பு மூலோபாயம் ஏற்றுக் கொள்கிறது.

முதலாளித்துவ அரசியலில் சீர்திருத்தவாதம் என்பது என்னவோ, அதுதான் நோய்தொற்றுயியலில் தணிப்பு மூலோபாயம் என்பதும். படிப்படியான மற்றும் சிறிய சிறிய சீர்திருத்தங்கள், காலப் போக்கில், இலாபகர அமைப்புமுறையின் தீமைகளைக் குறைத்து அனைத்தையும் சீர்படுத்திவிடும் என்று சீர்திருத்தவாதி நம்பிக்கையை விதைப்பது போல, கோவிட்-19 பொதுவான சளிக்காய்ச்சலை விட சற்று கடுமையான ஏதோவொரு நோயாக மாறிவிடும் என்ற பிரமையை இந்த தணிப்புவாதிகள் (mitigationists) வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது இந்த பெருந்தொற்று பற்றிய விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் அன்னியப்பட்ட ஒரு எட்டமுடியா கனவாகும்.

யதார்த்தத்தில், வைரஸ் பரவும் வரையில், அது புதிய வகைகளாக மாறிக்கொண்டே இருக்கும், அவை மிகவும் தொற்றுநோயானவை, அதிக கொடியவை மற்றும் தடுப்பூசிகளை எதிர்க்கும், அனைத்து மனிதகுலத்தையும் அச்சுறுத்தும். இது உலகளவில் வெற்றிகரமாக ஒழிக்கப்படாவிட்டால், நீறுபூத்த நெருப்பாக தங்கியிருக்கும் கோவிட்-19 தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து, புதிய வைரஸ்கள் வெடிக்கும் நிலைமைகளை உருவாக்கும்.

தணிப்பு மூலோபாயத்தை ஆதரிப்பவர்கள் கோவிட்-19 உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள், ஆனால் கொரோனா வைரஸோ அவர்களுடன் பேரம்பேச தயாராக இல்லை. இது தர்க்கரீதியான வாதங்களால் வழிநடத்தப்படவில்லை, மாறாக ஈவிரக்கமற்ற வைரஸ் பரவல் விதிகள் மூலமாக உந்தப்படுகின்றன.

இல்லாதொழித்தல்

ஆகவே, இந்த பெருந்தொற்று நெடுகிலும் முன்னணி தொற்றுநோய் நிபுணர்கள், நுண்கிருமியியல் நிபுணர்கள் மற்றும் மற்ற விஞ்ஞானிகள் முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில், இதை ஒழிப்பது மட்டுமே ஒரே நம்பகமான மூலோபாயமாகும். இந்த வைரஸை ஒரேயடியாக மொத்தமாக ஒழிக்க, கோவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதில் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கிடங்கில் உள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளவில் பயன்படுத்துவது இந்த ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ளடங்கி உள்ளது.

ஒவ்வொரு நாட்டின் பிரதான ஊடகங்களும் இப்போது கோவிட்-19 ஐ உலகளவில் ஒழிப்பது ஒரு 'கற்பனை' என்ற பொய்யை முன்வைக்கின்றன. ஆனால் எபோலா, சிற்றம்மை, போலியோ மற்றும் பிற நோய்களுக்கு செய்யப்பட்ட உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒழிப்பு முயற்சிகளுக்கான வரலாற்று முன்மாதிரிகள் உள்ளன, இவை அனைத்துக்கும் பாரியளவிலான வளங்களை ஒதுக்க வேண்டியிருந்தது.

கடந்த வாரம் சர்வதேச இதழான BMJ குளோபல் ஹெல்த்தில் வெளியான ஒரு பகுப்பாய்வில், வெலிங்டன், ஒடாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மைக்கேல் பேக்கரும் நிக் வில்சனும் உலகளவில் கோவிட்‐19 ஒழிப்பது போலியோவை விட கோட்பாட்டளவில் மிகவும் சாத்தியமானது, ஆனால் பெரியம்மையை விட சாத்தியக்கூறு குறைந்தது என்று வரையறுத்தனர். தடுப்பூசித் திட்டங்கள், பரந்த பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஆர்வம் ஆகியவற்றின் கலவை உலகெங்கிலும் இதை ஒழிப்பதைச் சாத்தியமாக்கும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அனைவருக்குமான பரிசோதனை, நோயின் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைச் சுமத்துதல் மற்றும் எல்லா பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல் ஆகியவை இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் இறுதியில் முற்றிலும் ஒழிப்பதிலும் முக்கிய கூறுபாடுகளாகும். தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் விரைவாக விரிவுபடுத்தப்பட்டு, உலகெங்கிலும் தடுப்பூசி போடப்படாத சுமார் 5.8 பில்லியன் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

வழக்கமான, பரவலான சோதனை மற்றும் அனைவருக்கும் தடம் அறியும் நடவடிக்கை—ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படாத இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டதில்லை. வைரஸைக் கண்டறிந்து, மனிதர்களை அது அணுகுவதைத் துண்டிக்க இந்த அணுகுமுறைகளில் மிகவும் சுறுசுறுப்பான பிரச்சாரமும் உள்ளடங்கும். கொரோனா வைரஸ் அது உயிர் வாழவும் மற்றும் பல உருவெடுக்கவும் மனித உடலையே இருப்பிடமாக சார்ந்திருக்கிறது என்பதே அதன் பாதிப்பற்கான சாத்தியக்கூறாக உள்ளது. அந்த இடத்தைப் பறித்துவிட்டால், அந்த வைரஸ் படிப்படியாக ஒழிந்து விடுகிறது.

குறிப்பாக அனைவருக்கும் உயர்தர முகக்கவசங்கள் மற்றும் அறைகளின் காற்றோட்ட வசதியைப் புதுப்பித்தல் ஆகிய மற்ற எல்லா தணிப்பு நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஆனால் இவை எல்லாம் வைரஸை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த உலகளாவிய மூலோபாயத்தின் பாகமாக பயன்படுத்த வேண்டிய உத்திகளாகும். இது இடைவிடாத பொதுக்கல்வியூட்டல் பிரச்சாரத்தையும் சமூக அடைப்புகளால் பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்களுக்கும் முழு வருவாய் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் மிகப்பெருமளவில் நிதி ஆதார வளங்களை ஒதுக்குவதையும் உள்ளடக்கி உள்ளது.

சந்தேகத்திற்கிடமின்றி, மொத்தமாக ஒழிக்கும் மூலோபாயம் கடினமானது தான். ஆனால் ஒவ்வொரு சரியான கொள்கையும் ஒரு சமூக செலவைச் சுமத்துகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவும் அப்போதைய விகிதத்தைப் பொறுத்து, ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டும் சமூக அடைப்பு நடவடிக்கைகளை நீடிக்க வேண்டியிருக்கும், புதிய நோயாளிகள் இல்லாதவுடன் நாடுகளுக்கு இடையிலான பயணம் படிப்படியாக மீண்டும் தொடங்கும்.

வைரஸை முழுமையாக ஒழிக்கும் இந்த மூலோபாயத்தைக் கல்வியாளர்கள், பெற்றோர்கள், வாகனத் தொழிலாளர்கள், சரக்கு கையாளும் துறை தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் கையில் எடுக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவாக, சோசலிச சமத்துவக் கட்சி, குறிப்பாக இந்தக் கொள்கை பின்பற்றப்படும் ஒவ்வொரு நாட்டிலும் பள்ளிகளை உடனடியாக மூடவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க வாதிடுபவர்கள், அடிப்படையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் கட்டிடங்களுக்குள் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

சீனா, நியூசிலாந்து மற்றும் சில நாடுகள் உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே முழுமையாக ஒழிக்கும் மூலோபாயத்தைப் பின்பற்றி வருகின்றன, இவை அனைத்தும் கவனமாக ஆராயப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், அத்துடன் ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் பிற நாடுகளில் வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒடுக்கிய பிற நாடுகளிலும் ஏற்பட்டுள்ள சமீபத்திய பெரிய வெடிப்புகள், முழுமையாக ஒழிக்கும் மூலோபாயம் உலகளவில் இருக்க வேண்டும் என்பதையும், எந்தவொரு நாடும் தனியாக இந்த பெருந்தொற்றைத் தோற்கடித்து விட முடியாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

முழுமையாக ஒழிக்கும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த ஐக்கியப்பட்ட பாரிய ஒரு சர்வதேச இயக்கத்தின் அபிவிருத்தி தேவைப்படுகிறது. இலாப நோக்கத்தால் உந்தப்படாத மற்றும் தனிப்பட்ட செல்வத்தை வெறித்தனமாக பின்தொடர்வதில் பிணைக்கப்படாத ஒரு பாரிய இயக்கத்தால் மட்டுமே, கொள்கையில் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்க தேவைப்படும் சமூக சக்தியை உருவாக்க முடியும்.

முழுமையாக ஒழிக்கும் இந்த மூலோபாயத்தை வழிநடத்தும் அடிப்படைக் கொள்கைகள், விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன என்பதோடு, உலகெங்கிலும் கோவிட்-19 ஐ இல்லாதொழிக்க செலவிடப்படும் தொகைக்கு எந்த வரம்பும் இருக்ககூடாது என்று வலியுறுத்துகின்றன. உலகெங்கிலுமான மக்களின் சமூக நலன்கள் விஞ்ஞான உண்மையுடன் சக்தி வாய்ந்த முறையில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த மூலோபாயம் வெற்றி பெற, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இதன் ஆதரவாளர்களுக்கு இந்த பெருந்தொற்றைக் குறித்த ஓர் ஆழ்ந்த விஞ்ஞானபூர்வ புரிதல் ஊட்டப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் விஞ்ஞானிகளின் ஆதரவை மதிப்பிட்டு அதை சார்ந்துள்ளது, பாரிய பெருந்திரளான மக்கள் எந்தளவுக்கு இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்களோ அந்தளவுக்கே கோவிட்-19 ஐ ஒழிக்கத் தேவையான விஞ்ஞானபூர்வ திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 22 இல், WSWS ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது, இதில் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து முழுமையாக ஒழிப்பதற்கு அறிவுறுத்தி உள்ள முன்னணி விஞ்ஞானிகள் கலந்து கொள்கிறார்கள். நமது வாசகர்கள் அனைவரும் இன்றே இதற்காக பதிவு செய்து, இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ள தங்களின் சக தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வரவேற்குமாறு நான் வலியுறுத்துகிறோம்.

Loading