சீனா தொற்றுநோய்களைத் தடுக்கிறது, ஆனால் தொற்றுநோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்திய மாதங்களில், டெல்டா மாறுபாட்டின் உலகளாவிய பரவல் காரணமாக, சீனாவின் பல்வேறு தென் மாகாணங்களில் தொற்றுநோயின் பல வெடிப்புகள் தோன்றியுள்ளன.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையின்படி, அக்டோபர் 3 அன்று வெளிநாடுகளிலிருந்து பரவிய 26 நோய்தொற்றுகளும் மற்றும் ஹார்பினில் உள்ள உள்ளூர் நோய்தொற்று ஒன்றும் உட்பட 27 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் அங்கு இருந்தன. அதே நேரத்தில், அறிகுறியற்ற புதிய நோய்தொற்றுக்களும் அங்கு இருந்தன, அவற்றில் 13 நோய்தொற்றுக்கள் வெளிநாடுகளிலிருந்து பரவியவை, மேலும் எஞ்சிய இரண்டு நோய்தொற்றுக்கள் ஜின்ஜியாங்கின் இலியில் உள்ள உள்ளூர் குடியிருப்புக்களில் பரவியவையாகும்.

ஆகஸ்ட் 4, 2021, காலை நேர பரபரப்புடன் தோன்றும் பெய்ஜிங்கின் ஒரு சுரங்கப் பாதை நிலையம் (AP Photo/Mark Schiefelbein)

தொடர்ச்சியான நோய்தொற்று வெடிப்புக்களின் அளவு சிறியதாக இருந்தாலும், டெல்டா பிறழ்வின் ஆபத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன. தற்போது கூட சீனாவின் ஹைலோங்ஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களில் மூன்று அதிக ஆபத்துள்ள பகுதிகளும் மற்றும் 28 நடுத்தர ஆபத்துள்ள பகுதிகளும் உள்ளன.

ஜூலை இறுதியில், நான்ஜிங்கை மையமாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் வெடித்தது. டெல்டா மாறுபாடு, மாஸ்கோவில் இருந்து வந்த CA910 என்ற Air China விமானத்தின் மூலம் சீனாவிற்குள் நுழைந்ததுடன், விமான பணிக் குழு உறுப்பினர்களை விரைவாக பாதித்தது. இந்த தொற்றுநோய் ஜூலை 2020 இல் கண்டுபிடிக்கப்பட்டது. நோய்தொற்று வெடிப்பின் உச்சத்தில், 10 க்கும் அதிகமான மாகாணங்களில் நோய்தொற்றுக்கள் இருந்தன என்பதுடன், நோய்தொற்று இறுதியாக அழிக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு நாளும் 140 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், செப்டம்பர் 10 அன்று, புஜியன் மாகாணத்தின் புடியன் நகரில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் ஏற்கனவே 10 நாட்களுக்கும் முன்னதாக பரவியிருந்த ஒரு நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொற்று சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மாணவனின் பெற்றோரிடமிருந்து பரவியிருக்கும் என நம்பப்பட்டது.

செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள், 52 மாணவர்களும் குழந்தைகளும் உட்பட நோய்தொற்று வெடித்து பரவி எட்டு பள்ளிகளை பாதித்திருந்தது, மூன்று வயது குழந்தை கூட நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், தொழிற்சாலைகளிலும் நோய்தொற்றுக்கள் பரவின.

அதே நேரத்தில், செப்டம்பர் 12 அன்று புஜியன் மாகாண தலைநகரம் ஜியாமென் வரை டெல்டா மாறுபாடு பரவியது. தகவல்களின்படி, பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளிலும் பணிமனைகளிலும் கூட நோய்தொற்றுக்கள் ஏற்பட்டன. நோய்தொற்று வெடிப்பின் உச்சகட்டத்தில், ஆறு நாட்களுக்குள் 200 க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் பரவியிருந்தன. புஜியன் நிகழ்வால் 400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதுடன், இன்னும் அது முழுமையாக குறையவில்லை.

பின்னர், ஹைலோங்ஜியாங்கில் கவலையளிக்கும் வகையில் பாரியளவிலான நோய்தொற்று வெடிப்பு ஏற்பட்டது. ஹார்பின் நகரின் அதிகார வரம்பிற்குட்பட்ட பயான் மாகாணம் நோய்தொற்றுக்கான மையமாக இருந்தது. ஒரு பொழுதுபோக்கு இடத்தில் தான் நோய்தொற்று முதலில் கண்டறியபட்டது, என்றாலும் அது முதலில் தோன்றிய இடம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. செப்டம்பர் 25 வாக்கில், ஹைலோங்ஜியாங் மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் நோய்தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தன, இது பல இடங்களில் பரவியது. தகவல்களின்படி, ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் அதிகரித்தளவிலான போக்குவரத்து வைரஸ் பரவலை மிகப் பொதுவானதாக்கியதுடன், விரைந்து பரவுவதற்கு வழிவகுத்தது. அக்டோபர் 1 ஆம் தேதி நண்பகலில், ஹார்பினில் இருந்து குவாங்டாங் செல்லும் விமானத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர் கண்டறியப்பட்டார். அதன் விளைவாக, விமானத்தில் இருந்த 184 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தேசிய தின விடுமுறையின் மூன்றாவது நாளான அக்டோபர் 3 அன்று, ஜின்ஜியாங்கின் இலியில் நோயறிகுறி அற்ற இரண்டு நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. அதனால், இலியில் உள்ள உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக இலியை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்வுகள் டெல்டா மாறுபாட்டின் ஆபத்தான நோய் பரப்பும் திறனையும் வேகத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உலகளாவிய நோய்தொற்று பாதிப்பின் காரணமாக, சீனா கடுமையான நோய்தொற்று அபாயத்தில் உள்ளது. உத்தியோகபூர்வ ஹெல்த் டைம்ஸ் செய்தியிதழின் முழுமையற்ற புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு நோய்தொற்றுக்கள் 2021 இல் மட்டும் சீனாவில் 10 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்களை உருவாக்கின.

பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாத தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரவும் சில பெரியளவிலான பாரிய நோய்தொற்று பரிமாற்றங்களின் பெரும்பான்மை உட்பட, தொற்றுநோயால் முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களாக தொழிலாள வர்க்கத்தினர் உள்ளனர்.

சீன பொறியியல் கல்விச்சாலையின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கான கல்லூரிப் பிரிவின் கல்வியாளர் ஜாங் போலி, இந்த இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். நோய்தொற்று வெடிப்புக்கள் “கடுமையாக தடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டாலும், பல வெடிப்புக்களும் உள்ளூர் வெடிப்புக்களும் நிகழ்வதற்கான அபாயத்தை முற்றிலும் தடுக்க முடியாது. எனவே, நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்கிறார்.

சீனாவில் நிகழும் நோய்தொற்று வெடிப்புக்கள் கவலையளிப்பதாக இருந்தாலும், அரசாங்கம் அதன் கடுமையான நோய் தடுப்பு கொள்கைகளை கைவிடவில்லை. அரசாங்கத்தின் பதிலிறுப்பு, வைரஸை ஒழிப்பதற்கான விஞ்ஞான கொள்கைகளின் திறனை நிரூபிக்கின்றன, என்றாலும் நோய் தடுப்பு கொள்கைகள் தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே நோய்தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பவை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரியளவிலான பரிசோதனைகள், தீவிர தொடர்பு தடமறிதல், சரியான நேரத்தில் பூட்டுதல்களை செயல்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ச்சியாக மக்களை அணிதிரட்டுதல் ஆகியவையாகும். இந்த வாரம், சுகாதார அதிகாரிகள் கிட்டத்தட்ட 75 சதவீத மக்களுக்கு இரட்டை தடுப்பூசி போட்டிருப்பதாக அறிவித்துள்ளனர். சீனாவின் பொது சுகாதார அமைப்பு, இந்த முறைகளைப் பயன்படுத்துவதிலும், ஆபத்தான நோய்தொற்று நிகழ்வுகளை தீவிரமாக கட்டுப்படுத்தி அமைதிப்படுத்துவதிலும் அதிக திறமை வாய்ந்தது.

செப்டம்பர் 27 அன்று ஜியாமென் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு செய்தியாளர் கூட்டத்தின் போது வெளியான அறிக்கையின்படி, புஜியன் மாகாணத்தில் நோய்தொற்று பரவல் இன்னும் தொடர்கிறது என்றாலும், ஜியாமென் அடிப்படையில் சமூக பரவலின் பாதையை கிட்டத்தட்ட தடுத்துள்ளது.

கடந்த வாரத்தின் மத்திய இலையுதிர் கால விழா விடுமுறைக்கு முன்னதாக, ஜியாமென் தீவின் பூட்டுதல் கொள்கையும் பயணத் தடையும் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுத்ததுடன், உள்ளூரில் நோய்தொற்று வெடிப்பதை தீவிரமாக கட்டுப்படுத்தியது. ஹைலோங்ஜியாங் மாகாணமும் தேசிய தின விடுமுறைக்கு முன்னர் பயனுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் பூட்டுதல் நடவடிக்கைகளை செயல்படுத்தியது.

இந்த பதிலிறுப்பு, பூட்டுதல் நடவடிக்கைகளையும் ஏனைய விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளையும் நிராகரிக்கும், மற்றும் பெருநிறுவன இலாபத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஆரோக்கியத்தையும் உயிரையும் தியாகம் செய்ய துணியும் ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் உலகின் ஏனைய பெரும்பாலான பகுதிகளின் அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளது.

இருப்பினும், சீனாவின் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் அதன் சொந்த தேசியவாத கண்ணோட்டம் மற்றும் கணக்கீடுகளை வைத்து, உலகளாவிய தொற்றுநோயின் காரணமாக எழும் பரந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலாயக்கற்றுள்ளது. எனவே, ஒரு தீவிர தொற்றுநோயின் கடுமையான அபாயங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தை கைவிட்டுவிட்டு, அதன் உள்நாட்டு அணிதிரட்டலை மட்டுமே தொடர்ந்து அதனால் வலுப்படுத்த முடிகிறது.

Loading