தொழிற் கட்சி மாநாடு: கோர்பினின் உதவியால் பிளேயரின் ஆதரவாளர்கள் முன்னணிக்கு வருகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சூனிய வேட்டை, எல்லா இடங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறை, டோனி பிளேயரைப் புகழ்ந்து பாடல்கள், சட்டம்-ஒழுங்கு பற்றிய வார்த்தையாடல்கள் மற்றும் இராணுவவாதம் என்பவற்றால் இந்த ஆண்டு தொழிற் கட்சி மாநாடு நிறைந்திருந்தது.

வலதுபுறம் நோக்கி செல்வதில் அக்கறை கொண்டுள்ளதும் மற்றும் அனைத்து எதிர்ப்புகளையும் இரக்கமின்றி கையாளும் ஒரு தலைமை, அதன் சொந்த உறுப்பினர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது.

பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் செப்டம்பர் 29, 2021 புதன்கிழமை இங்கிலாந்தின் பிரைட்டனில் நடந்த வருடாந்திர கட்சி மாநாட்டில் தனது முக்கிய உரையாற்றுகிறார்(AP Photo/Alastair Grant)

தொழிற் கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர், தனது முன்னோடியான ஜெர்மி கோர்பின் பற்றிய பேயுருவத்தையும் மற்றும் கட்சியின் இடது திருப்பம் பற்றிய எந்த ஆலோசனையும் கட்சிக்குள்ளிருந்து இறுதியாக வெளியேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க பெரு வணிகர்கள் மற்றும் அதன் ஊடகங்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். அவர் தனது எஜமானர்களை ஏமாற்றவில்லை.

ஸ்டார்மரின் சீர்திருத்தங்களின்படி தலைமைத்துவத்திற்காக நிற்க விரும்பும் எவரும் முதலில் நாடாளுமன்றத்தில் தற்போதைய 10 சதவீதத்தை விட 20 சதவிகித தொழிற் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை வெல்ல வேண்டும். நாடாளுமன்ற தொழிற் கட்சிக்கு இந்த வீட்டோ அவசியமில்லை. ஏனெனில் பெயரளவிற்குகூட 'இடது' அங்கத்தவர்கள் என்று கூறிக்கொள்ளக்கூடியவர்கள் ஒருவரும் அங்கில்லை. 2015 இல் கோர்பின் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றது ஏனெனில் எட். மிலிபாண்ட் இனை தோற்கடிக்க ஒரு போலி இடதை போட்டிக்கு அனுப்பவது புத்திசாலித்தனமானது என பல நாடாளுமன்ற அங்கத்தவர்கள் முடிவெடுத்ததாலாகும். ஆனால் அது ஏற்கனவே ஒரு மூடிய கதவை உறுதியாக பூட்டுவது போன்றதாகும். பிரிட்டனின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூனிசனின் கூட்டுவாக்களிப்பின் மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக 53.7 சதவிகிதம் ஆதரவாக இருந்தது.

அந்த நாளில் நிழல் பாதுகாப்பு அமைச்சர் கோனோர் மெக்கின், கோர்பினின் பெயரளவிலான இடது நோக்கிய உந்துதலை ஆதரிக்க கட்சியில் இணைந்த 300,000 பேரும் மற்றும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் மற்றவர்களால் 'தவறாக வழிநடத்தப்பட்டனர் அல்லது தவறாக இட்டுசெல்லப்பட்டனர்', ஆனால் சிலரால் 'மீளமுடியவில்லை' என்றார்.

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வுநீக்கும் செயல்முறையும் மிகவும் கடினமாக்கப்பட்டது. மேலும் தலைமைத்துவ தேர்தல்களில் வாக்களிப்பது 'பதிவு செய்யப்பட்ட ஆதரவாளர்களுக்கு' மறுக்கப்பட்டது.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்காக போலி யூத-விரோத குற்றச்சாட்டுகளினால் உறுப்பினர்கள் மீதான சூனிய வேட்டையை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் தொழிற் கட்சியின் ஒழுங்காற்று நடைமுறையிலும் மாற்றங்கள் இருந்தன. 'யூத எதிர்ப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கட்சியை பாதுகாப்பதற்காக' சுமார் 2 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தொழிற் கட்சி வட்டாரங்கள் டைம்ஸிடம் கூறின.

அடுத்த நாள், இஸ்ரேலுக்கு எதிராக தடைகளைக் கோரும் ஒரு தீர்மானத்தை மாநாடு நிறைவேற்றியது. இது நிழல் வெளியுறவு செயலாளர் லிசா நந்தியால் உடனடியாக மறுக்கப்பட்டது. இந்த நிலைப்பாடு ஒருபோதும் கட்சி கொள்கையாக மாறாது என்று அவர் தெளிவுபடுத்தினார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் AUKUS இராணுவ ஒப்பந்தத்தை 'உலக அமைதியைக் குலைக்கும் அபாயகரமான நடவடிக்கை' என்று விவரிக்கும் 70.35 சதவிகிதம் ஆதரவாகவும், 29.65 சதவிகிதம் எதிராகவும் நிறைவேற்றப்பட்ட அவசர பிரேரணையோ அல்லது எரிசக்தி நிறுவனங்களை பொது உடமையாகுவதை ஆதரிக்கும் வாக்குகள், மற்றும் 15 பவுண்டுகள் ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியம் அல்லது தொழிற் கட்சியின் வர்த்தக சார்பு, ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு முரணான வேறு எதுவும் கூட நிறைவேற்றும் விருப்பமிருக்கவில்லை.

மாநாட்டு விவாதத்தில் பாலஸ்தீனம் குறித்த நேரடி ஒளிபரப்பு வெட்டப்பட்டது. அந்த நாளில், யூத எதிர்ப்புக்கு எதிரான சூனிய வேட்டையை செயல்படுத்த 2019 இல் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வெளியேற்றிய பிரபல சியோனிசவாதியான லூயிஸ் எல்மன், ஞாயிற்றுக்கிழமை இனவாதம் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சுதந்திரமான விசாரணைமுறை உருவாக்கப்பட்டதை தொடர்ந்து தான் மீண்டும் இணைந்துகொண்டதாக அறிவித்தார்.

கோர்பினின் கீழ் தொழிற் கட்சிக்குள் யூத எதிர்ப்பு 'பிரதான நீரோட்டமாக' மாறிவிட்டது என்று பிரபலமாகக் கூறிய எல்மன், ஸ்டார்மரை 'பிரிட்டனின் யூதர்கள் நம்பக்கூடிய ஒருவர்' என்று பாராட்டினார். போலீஸ் கூட்டமைப்பின் தலைவர் ஜோன் ஆப்டர் ஒழுங்கமைத்த ஒரு மாநாட்டில் அப்பெண்மணி கலந்து கொண்டிருந்தார்.

இதற்கு மாறாக, சமீபத்தில் தடைசெய்யப்பட்ட குழுக்களான Socialist Appeal, Labour in Exile Network, Labour Against the Witchhunt and Resist ஆகியவற்றில் குறைந்தது 20 பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர். இந்தத் தடைகள் சிறிய 17,000 உறுப்பினர்களைக் கொண்ட Bakers, Food and Allied Workers Union என்ற தொழிற்சங்கம் தொழிற் கட்சியிலிருந்து விலகுவதற்கு வழிவகுத்தன. சியோனிச யூத தொழிலாளர் இயக்கம் கோர்பினின் தலைமையை கட்சியிலிருந்து அகற்றுவதற்காக இஸ்ரேல் தூதரகத்துடன் இணைந்து இயங்கியதாக சுட்டிக்காட்டிய யூத-விரோத போலி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதன் தலைவர் இயன் ஹாட்சன் தடைசெய்யப்பட்ட குழுக்களுடன் தொடர்பு கொண்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மாநாடு முடிந்த பின்னர், மாநாட்டில் உரையாற்றும்போது ஸ்டார்மரை கேலி செய்தவர்களில் சிலரும் இடைநீக்கத்தை எதிர்கொள்வதாக தொழிற் கட்சி அறிவித்தது. அவரது நகைப்பிற்கிடமான நடவடிக்கை மாநாட்டின் தோல்விக்கு ஒரு பொருத்தமான முடிவைக் கொண்டு வந்தது.

அவர் பேசுகையில், ஆயுதம்தாங்கிய போலீசார் மிரட்டும் பாணியில் மாநாட்டு மன்றத்தின் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்தனர். மாநாட்டு மண்டபத்தின் சில பகுதிகள் மூடப்பட்டன. மேலும் மக்கள் ஆதரவின் இருப்பதான மாயையை வழங்குவதற்காக மேலதிகமான ஒருநாள் பார்வையாளர்கள் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்தனர்.

ஸ்டார்மர் எல்மனிடம், 'வீட்டிற்கு வரவேற்கிறோம்' என்று கூறி, தனது 'சாதாரண' தொழிலாள வர்க்க தொடக்கங்கள் எப்படி தனது வலதுசாரி அரசியலை வடிவமைக்க உதவியது என்பதை விளக்கும் முன், பிரிட்டனின் ஆளும் வர்க்கத்திற்கான சாத்தியமான ஆளும் கட்சியாக தொழிற் கட்சி 'வழமையான நடவடிக்கைகளுக்கு திரும்பியது' என்று தெளிவான உறுதிமொழிகளுடன் விளக்கினார்.

கோர்பினைக் குறிவைத்து அவர் கூறினார், 'நாங்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் அல்லது பொறுப்பற்றவர்கள் அல்லது நாங்கள் அவர்களை இழிவாகப் பார்த்தோம், என்று நினைத்த வாக்காளர்களுக்கு நான் இந்த எளிய ஆனால் சக்திவாய்ந்த வார்த்தைகளை சொல்கிறேன். எனது தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு வருவதற்கான தீவிரமான திட்டம் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையுடன் நாங்கள் ஒருபோதும் தேர்தலுக்கு செல்லமாட்டோம்”.

தொழிற் கட்சி இந்த வாரம், “எங்கள் சொந்த வீட்டை ஒழுங்குபடுத்தியது” என்று அவர் கூறினார், இந்த நாட்டின் ஒரு பெரிய அமைப்பான முடிக்குரிய வழக்குத்தொடுனர் சேவையின் தலைமை வழக்கறிஞராக வருவதையிட்டு பெரும் மரியாதை அடைகின்றேன். மூன்று மிக முக்கியமான வார்த்தைகள்”.

ஸ்டார்மர் 'இந்த ஆண்டு 2 மில்லியன் சமூக விரோத சம்பவங்கள்' அல்லது கத்தி குற்றம், தீர்க்கப்படாத குற்றங்கள் மற்றும் டோரியின் கீழ் 8,000 போலீஸ் அதிகாரிகளின் இழப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுக்கப்போவதில்லை.

தேசிய சுகாதார சேவைக்கான அவரது தெளிவற்ற திட்டங்கள் “நல்ல வணிகமும் மற்றும் நல்ல அரசும் கூட்டாளிகள் என்றும் பிரித்தானியாவில் உற்பத்திசெய்து, வாங்கி, விற்றல்” என்ற தொழிற் கட்சியின் வேலைத்திட்டத்திற்கு இணங்க மருந்துகள், பொருட்கள், பாதுகாப்பு, இரசாயன பொறியியல், நுகர்வோர் பொருட்கள் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் தொழிற்துறைகளுடன் இணைந்து இயங்குவதாகும்.

அனைத்து பொதுச் செலவுகளும் 'பணத்தின் மதிப்புக்கான அலுவலகத்தால் ஆராயப்படும் ... எங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளோ அல்லது நாம் செலுத்த முடியாத உறுதிப்பாடுகளோ இருக்காது.' நல்ல நடவடிக்கைகளுக்கான தொழிற் கட்சியின் சொந்த 'வாழ்க்கை தரத்தை சமநிலைப்படுத்தும்' நிகழ்ச்சி நிரல் டோனி பிளேயரின் பதிவின் மாதிரியாக இருக்கும். 'நீங்கள் வாழ்க்கை தரத்தை சமநிலைப்படுத்த வேண்டுமா? அது சமநிலைப்படுத்துகிறது.'

'இந்த கட்சியில் நாங்கள் தேசபக்தர்கள்' என்று ஸ்டார்மர் கூறினார். 'எங்கள் இராணுவம்' பற்றி, 'தொழிற் கட்சி நேட்டோவின் கட்சி' மற்றும் 'எங்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றும் பெரிய பிரித்தானியர்கள் சரியாகச் செய்வார்' அவர் அறிவித்தார்.

மாநாட்டிற்கான பிளேயர்வாதிகளின் பிரதிபலிப்பு பரவசமானது.

முன்னாள் சியோனிச நாடாளுமன்ற உறுப்பினர் ரூத் ஸ்மீத் எதிர்பார்க்கப்படும் காலாண்டுகளில், 'எங்கள் கட்சி யூத வெறுப்புக்கான இடமாக மாறும் என்று நினைத்த மோசமான இனவாதிகள் மற்றும் கொடுமைப்படுத்துபவர்களுக்கு இன்று நாம் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.' என்றார்.

நிழல் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவித்தார், “நேட்டோ மற்றும் அணுசக்தி தடுப்பை நிறுவியது தொழிற் கட்சி தான். தொழிற் கட்சி மற்றும் ஸ்டார்மருடன், உலகில் பிரிட்டனுக்கு ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை உருவாக்க நாடு ஒரு தலைமை பெறும். நேட்டோவில் எங்கள் மிக முக்கியமான கூட்டாளியாக அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தின் சமமான பேச்சு உரிமையை வலியுறுத்தி பிரிட்டனின் தலைமைத்துவத்தை நேட்டோவினுள் உயர்த்துவோம்”.

i நாளிதழில் எழுதிய இயன் டன்ட் பின்வருமாறு கூக்குரலிட்டார். “இது கோர்பினிசத்தின் மீதான முற்றுமுழுத் தாக்குதல்: குற்றங்களை எதிர்த்துப் போராடுவது, தேசபக்தியைக் கொண்டாடுவது, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் புதிய தொழிற் கட்சியின் சாதனையை ஏற்றுக்கொள்வது. தொழிற் கட்சியிடமிருந்து வாக்காளர்களை அந்நியப்படுத்திய அனைத்து விஷயங்களுக்கும் மாறி மாறி கவனம் செலுத்தப்பட்டது. கோர்பினிசத்தின் இறுதிச் சடங்கில் நாங்கள் கலந்துகொண்டது போல் இருந்தது”.

எவ்வாறாயினும், தொழிற் கட்சி செயல்படும் அரசியல் வட்டத்திற்கு வெளியே உள்ள எவருக்கும், அதன் சக சிந்தனையாளர்கள் மற்றும் ஒரு வலதுசாரி ஊடகத்தின் கருத்துக்களால் மட்டுமே தெரிவிக்கப்படுவது போலல்லாது இங்கு 'கோர்பினிசம்' மட்டுமல்ல, புதைக்கப்படுவது தொழிற் கட்சியே என்பது எப்போதும் தெளிவாகி வருகிறது.

வருங்கால கட்சித் தலைவராக சில வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீடிங், போராட்டத்தை 'இடது' க்கு எடுத்துச் செல்வதாக பெருமை பேசினார். ஆனால் பிளேயரிசவாதிகளின் 'வெற்றி', கோர்பினிசவாதிகள் எதையும் எதிர்த்துப் போராட வேண்டுமென்பதை மறுத்ததால் மட்டுமே சாத்தியமானது. நேட்டோ அங்கத்துவம், பிரித்தானியாவின் பண்பு மற்றும் சிரியாவுக்கு எதிரான போர் உட்பட ஒவ்வொரு கொள்கை பிரச்சினையிலும் சரணடைந்த கோர்பினும் மற்றும் அவரது கூட்டாளிகளும் பிளேயர்வாதிகளை விரட்டும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து மற்றும் அதற்கு பதிலாக தங்கள் சொந்த ஆதரவாளர்களை வெளியேற்ற அனுமதித்தனர்.

கோர்பின் வழங்கிய மூடுதிரை அகன்றநிலையில், தொழிற் கட்சியுடனும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் தொழிலாள வர்க்கத்திற்கு நேரடி மோதலுக்கான மேடை அமைக்கப்படுகிறது. இதிலிருந்து தொழிற் கட்சி ஒருபோதும் மீளாது.

ஸ்டார்மரால் தொழிற் கட்சியில் சாட்டையடி கொடுக்கப்பட்ட கோர்பின், மாற்றப்பட்ட உலகம் (The World Transformed) போன்ற மாநாட்டின் கூட்டங்களில் கலந்துகொள்வதில் இன்னும் தீவிரமாக இருந்தார். அங்கு அவருடைய சில தீவிர ஆதரவாளர்களுடனும் மற்றும் போலி-இடது போக்குகளில் மிகவும் விமர்சனமற்ற ஆதரவாளர்களுடனும் இணைந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை. செப்டம்பர் 28 i செய்தித்தாளில் கருத்துக் கட்டுரையில், அவர் கட்சி மாநாட்டை 'எங்கள் இயக்கம் ஒன்றிணைவதற்கான நேரம்' என்று விவரித்தார். ஸ்டார்மர் மற்றும் பலர் பற்றிய அவரது ஒரே மறைமுகமான குறிப்பில், 'இந்த வாரம் இதுவரை, தொழிற் கட்சி தலைவர்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் சவால் செய்யாமல், ஆதரவளிப்பதை காட்டியுள்ளனர்' என்றார்.

கோர்பினின் மிக முக்கிய கூட்டாளியான முன்னாள் நிழல் அதிபர் ஜோன் மெக்டொன்னல், கார்டியன் பத்திரிகையில் மாநாட்டின் தொடக்கத்தை ஸ்டார்மருக்கான பின்வரும் ஆலோசனையுடன் எழுதினார்.

படகில் துள்ளக் கூடாது என்ற தனது மற்றும் கோர்பினின் உறுதியைக் கொண்டாடும் போது, அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார், “ஜெரமி கோர்பினும் நானும் தொழிற் கட்சியின் முன்னணி பதவிகளில் இருந்து விலகியபோது, சில தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மை கீழறுப்பதற்கு முயன்றது போல் கீர் ஸ்டார்மர் நடத்தப்படக்கூடாது என்று ஒப்புக்கொண்டோம். அவர் ஒரு ஐக்கியப்பட்ட கட்சியின் தலைவராக 'ஒரு தீவிர மாற்றத்திற்கான விவாதத்தை உருவாக்க வேண்டுமென்றால்' 'உள்கட்சி சர்ச்சைகளை தூண்டும் தவறு செய்யக்கூடாது' என ஸ்டார்மருக்கு அறிவுறுத்தினார்.

ஸ்டார்மர் அவரே இதன் பாகமாக இருக்கும், கோர்பின் மற்றும் அவரது கூட்டினரின் தொழிற் கட்சிக்கும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குமான அடிமைத்தனமான விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குவதை செய்யமாட்டார். ஐந்து ஆண்டுகளாக கட்சித் தலைவராக கோர்பினின் இருந்ததன் முக்கிய பாடம் இதுவாகும். இது கட்சியின் முற்போக்கான மாற்றத்திற்கு அவர் வழிவகுக்க முடியும் என்ற போலி-இடது குழுக்களின் கூற்றுகளை மறுத்ததை தீர்க்கரமான முறையில் நிரூபித்தது.

அந்த பொய் தகர்க்கப்பட்டமை சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் சோசலிச கட்சியின் வார்த்தை ஜாலங்களை மாற்ற கட்டாயப்படுத்தியுள்ளது.

சோசலிஸ்ட் கட்சி, கோர்பினுக்கு முந்தைய அதன் நிலைப்பாட்டிற்கு திரும்பி, தொழிற்சங்கங்கள் 'ஒரு புதிய தொழிலாளர் கட்சிக்காக போராட' அழைப்பு விடுத்த அதே நேரத்தில், 'கோர்பினிசம்' 'முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களுக்கு' ஒரு 'அச்சுறுத்தல்' என்று சித்தரிக்கிறது. 'அந்த திசையில் நடவடிக்கை எடுக்க இயங்கும் RMT இரயில் தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கவாதிகள் மற்றும் சோசலிஸ்ட் கூட்டணியில் உள்ள மற்றவர்களின் தலைமையுடன் தொடர்ந்து வேலை செய்கிறது'. இது சோசலிச கட்சியின் கூறப்பட்ட இலக்கில் உள்ள சிறிய படிகளைக்கூட அடையமுடியாத ஒன்றாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சியின் சோசலிச தொழிலாளி பத்திரிகை பின்வருமாறு கருத்துரைத்தது. 'தொழிற் கட்சி இடதுசாரிகளின் கேள்வி, அது அவர்கள் தங்க விரும்பும் கட்சியா என்பதுதான்.' கடந்த நவம்பரில், அதன் தேசிய செயலர் சார்லி கிம்பர், 'தேர்தல்களை விட தெருக்களையும் பணியிடங்களையும் முக்கியமானதாக கருதும் போராட்டத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு கட்சி தேவை'. ஆனால் பல்வேறு போராட்ட இயக்கங்களில் பங்கேற்பதை மட்டுமே இவ்வாறான ஒன்றை கட்டிமைப்பதற்கான அடிப்படையாக உள்ளது, 'போராட்டத்தின் அரசியல் மற்றும் புரட்சிகர சோசலிசம் முழு அமைப்பையும் மாற்றும்' என எழுதினார்.

இருப்பினும், அவர்களின் வார்த்தையாடல்களின் மாற்றம் ஒரு பரந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. போலி இடதுகளால் கோர்பின் அரவணைக்கப்படுவது தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற் கட்சி மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் பிடியை வலுப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியாகும். தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு உண்மையான சோசலிச தலைமையை கட்டியெழுப்புவதற்கு ஒரு 'பரந்த இடது' மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இடைவிடாமல் ஊக்குவிக்கப்பட்ட ஒரே மாதிரியான நபர்களில் அவரும் ஒருவராவார்.

கிம்பர் இப்போது இதை நிரூபிக்கப்பட்ட பேரழிவின் பட்டியலாக முன்வைக்கிறார்.

'அண்மைக்காலம்வரை கட்சியின் தலைவரான கோர்பின் வெளியேற்றப்பட்டபோது, அது நிச்சயமாக அசாதாரணமானது,' என்று அவர் எழுதுகிறார். 'தொழிற் கட்சி இடதுசாரிகளில் பெரும்பாலானோர் இப்போது கட்சியில் தங்கியிருந்து கோர்பினை மீளமைப்பிற்கு அழுத்தம் கொடுப்பார்கள்,' ஆனால் 'சில நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளை அடிப்படையாகக் கொண்ட சிலரால் தொழிற் கட்சியிலிருந்து பிரிந்து செல்வது பற்றி பேசப்படுகிறது.' கிம்பரின் கூற்றுப்படி, 'அந்த பேச்சு யதார்த்தமாக மாற்றப்பட வேண்டும்', அதே வேளையில் “ஒரே விலங்கிற்கு வெவ்வேறு ஆடைகளை அணிவிப்பது போன்று, ஒரு தொழிற் கட்சி 2.0 அமைப்பது தீர்வாக இருக்காது”.

2014 இல் ஸ்பெயினில் உருவாக்கப்பட்ட பொடெமோஸ், 'பெரும் வெற்றி பெற்றது' ஆனால் 'இப்போது வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியுடன் PSOE ஒரு அரசாங்கத்தில் அமர்ந்திருக்கிறது. இது' 'மக்களின் உயிரைவிட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு பேரழிவு தரும் கொரோனா வைரஸ் மூலோபாயத்தை' நிர்வகிக்கிறது. கிரேக்கத்தில், சிரிசாவின் அலெக்சிஸ் சிப்ராஸ், தனது டோரி முன்னோடிகளால் சுமத்தப்பட்டதை விட மோசமான ஒருதொடர் சிக்கன திட்டங்களைச் செயல்படுத்தினார்.

'அமெரிக்காவில், பேர்ணி சாண்டர்ஸில் அதிக நம்பிக்கை முதலீடு செய்யப்பட்டது. ஆனால், ஜனநாயகக் கட்சிக்குள் பணியாற்றி, அவர் புதிய தாராளவாத ஜோ பைடெனின் முன்னணி ஆதரவாளராகிவிட்டார்.

சோசலிச தொழிலாளர் கட்சி இந்த அரசியல் திவாலான ஒவ்வொருவரின் அரசியல் நம்பகத்தன்மையை உயர்த்திப்பிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் கோர்பின், சிப்ராஸ், சாண்டர்ஸ் போன்றோர்களிலிருந்து காலங்கடந்து தம்மை அன்னியப்படுத்திக்கொள்கிறார்கள். ஏனென்றால் பல தொழிலாளர்களும், இளைஞர்களும் அவர்கள் பயனற்றவர்கள் என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

இன்று தொழிற் கட்சியிடமிருந்து சாத்தியமான 'இடது' பிளவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்கள், கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கும் ஸ்டார்மர் தொழிற் கட்சிக்கும் இடையிலான ஒரு உண்மையான கூட்டணியிலிருந்து எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முகங்கொடுக்கும் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குகிறது. இக்கூட்டணி திட்டமிட்ட வெகுஜன தொற்று, நோய் மற்றும் இறப்பு என்ற தொற்றுநோய் கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன், சீனா மற்றும் ரஷ்யாவுடன் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தை கோர்பின் மற்றும் முதலாளித்துவத்தின் மற்ற 'இடது' பாதுகாவலர்களுக்கு அடிபணியச் செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை திட்டவட்டமாக எதிர்க்கிறது. தொழிற் கட்சி, சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினுள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்தின் கடைசி வரிசையில் செயல்படும் போலி-இடது குழுக்கள் பற்றி வரலாற்றுரீதியான புரிதலை அடிப்படையாகக் கொண்ட விமர்சனத்தை நாங்கள் முன்னெடுத்தோம். உலக சோசலிச வலைத் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று பதிவு, தொழிலாளர்களுக்கு தேவையான உண்மையான புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேச தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதற்கு கவனமாக படிக்கப்பட்டு, உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

Loading