முன்னோக்கு

“குறைந்தபட்சம் பாதிப் போர் உள்நாட்டில் உள்ளது”: சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்குப் பின்னால் உள்ள உள்நாட்டு பரிசீலனைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தாய்வான் விவகாரத்தில் சீனா உடனான பதட்டங்களில் தீவிரப்பாட்டைத் தூண்டி விட அமெரிக்கா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

யுஎஸ்எஸ் ரோனால்ட் ரீகன், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலில் இருந்து பல விமானங்கள் பறக்கின்றன [Credit: Kaila V. Peters/U.S. Navy]

சீனா தனது பிலதேசத்தின் பகுதியாக கருதும் தாய்வானில் ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக புதன்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது. வோல் ஸ்ட்ரீட்டின் இந்த வெளியீட்டை, சீன அதிகாரிகள் அமெரிக்க அரசின் பாதி-உத்தியோகபூர்வ அறிவிப்பாக பார்த்த நிலையில், அது 1958 தாய்வான் ஜலசந்தி நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மிகவும் அபாயகரமான விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டுக்கு மத்தியில் வந்துள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் AUKUS கூட்டணி அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், அமெரிக்கா தாய்வானுக்கு அருகில் மிகப் பெரிய போர் ஒத்திகைகளை நடத்தி உள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்குவதையும் அந்த கூட்டணி உள்ளடக்கி இருந்தது.

ஒகினாவா மற்றும் தாய்வான் உட்பட சீனப் பெருநிலத்திற்கு அருகில் உள்ள 'சங்கிலி போன்ற அந்த முதல் தீவில்' தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா செயலூக்கத்துடன் விவாதங்களை நடத்துவதாக மார்ச்சில் வெளியீடுகள் வந்ததற்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்திகள் வந்துள்ளன.

புளோரிடாவில் இருந்து அண்மித்து 100 மைல்கள் தொலைவில் உள்ள ஓர் இறையாண்மை நாடான கியூபாவில் 1962 இல் சோவியத் ஒன்றியம் ஏவுகணைகளை நிலைநிறுத்திய போது, சோவியத் ஒன்றியம் ஒன்று ஏவுகணைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் அல்லது போரை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. இன்றோ, சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இருந்து விமானங்களில் வெறும் ஒரு சில நிமிடங்களில் செல்லக்கூடிய தொலைவில் உள்ள சீனா உரிமை கொண்ட பிரதேசத்தில், வாஷிங்டன் தாக்கும் ஆயுதங்களாக இருக்கக் கூடியவற்றையும், மற்றும் துருப்புகளையும் நிலைநிறுத்தி வருகிறது.

சீனாவின் விடையிறுப்போ அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஓர் உணர்வை அளிக்கிறது. சீன அரசியல் ஸ்தாபகத்தின் ஆதிக்கப் பிரிவுகளது குரலாக ஒலிக்கும் குளோபல் டைம்ஸ், வெள்ளிக்கிழமை ஒரு தலையங்கத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஒரு 'படையெடுப்புக்கு' நிகரானதாக குறிப்பிட்டது.

போருக்கான நடைமுறை சூழலை உருவாக்க ஒரு சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், அத்தகைய ஒரு சம்பவத்தைத் தூண்டி விடும் வகையில், பைடென் நிர்வாகம் ஏதோவொரு வித விடையிறுப்பை சீனா வழங்கச் செய்ய முயன்று வருகிறது. அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழு அளவிலான மோதலை அமெரிக்கா விரும்பாமல் இருக்கலாம், ஆனால் ஆத்திரமூட்டல் ஆயுத மோதலாக திரும்பியதும், போர் அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டிருக்கும்.

இத்தகைய அசாதாரண பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது என்ன? அங்கே நிச்சயமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் நிர்பந்தங்கள் உள்ளன, மற்றும் கடந்த தசாப்தத்தில் அமெரிக்க போர் திட்டமிடலில் சீன ஒரு மைய இலக்காக இருந்துள்ளது. ஆனால் இராணுவப் பரிசீலனைகள் ஒன்று மட்டுமே நிலைமைக்குக் கட்டளையிடுவதில்லை. அமெரிக்க உள்நாட்டு அரசியல் நெருக்கடியும் பிரதான காரணியாக உள்ளது.

இருபது மாதங்கள் உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்றுக்குள் இருந்துள்ள அமெரிக்கா ஒரு சமூக வெடி உலையாக நிற்கிறது. 725,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள், அல்லது 500 அமெரிக்கர்களில் ஒருவர் இந்த பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். பரந்த தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் மற்றும் சலுகைகளைக் கோரத் தொடங்கி உள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் நாடு தழுவிய வேலைநிறுத்த இயக்கமாக திரண்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதற்கான பெருநிறுவன தொழிற்சங்கங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், சமீபத்திய வாரங்களில் கெல்லாக்கின் உணவுத் தயாரிப்பு தொழிலாளர்கள், நியூ யோர்க்கில் செவிலியர்கள், கென்டக்கியின் மதுபான ஆலை தொழிலாளர்கள் மற்றும் சியாட்டிலில் தச்சர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. வாகன மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வருகிறது, தொழிற்சங்கங்கள் திரும்பவும் கொண்டு வந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அமெரிக்க ஆளும் வர்க்கம், பாரிய மரணங்களுக்கான கொள்கையை நடைமுறைப்படுத்திய அதேவேளையில், அது ட்ரில்லியன் கணக்கான டாலர்களை தனக்குதானே வழங்கிக் கொண்டது, அது பாரியளவிலான ஒரு பங்குச் சந்தைக் குமிழியை ஊதிப் பெரிதாக்கிய நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை இடைவிடாது அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே அதை தாக்குப் பிடிக்க முடியும்.

வரலாறு முழுவதிலும், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில், அரசாங்கங்கள் அரசியல் எதிர்ப்பின் அதிகரிப்பை முகங்கொடுக்கையில் 'தேச ஒற்றுமையை' அமுல்படுத்துவதற்கு போரை ஒரு வழிமுறையாக பார்த்துள்ளன. 1967 இல், வரலாற்றாளர் அர்னோ ஜே. மேயர், 'முதல் உலகப் போரின் உள்நாட்டு காரணங்கள்' என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஜூலை-ஆகஸ்ட் 1914 க்கு உடனடியான முந்தைய வாரங்கள் உட்பட, அந்த தசாப்தத்தின் போது, ஐரோப்பிய நாடுகள் வழக்கமான அரசியல் மற்றும் சமூக எழுச்சிகளை விட அதிகமாக அனுபவித்தன. ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றம் மற்றும் அரசியலமைப்புவாதத்தின் முன்னுதாரணமான கொண்ட பிரிட்டனும் கூட, உள்நாட்டு போரின் வாசலை சென்று கொண்டிருந்தது.

இந்த சமூக பதட்டங்களின் அதிகரிப்பு, 'நடப்பிலிருந்த ஓர் ஆபத்தான உள்நாட்டு நிலையைப் பேணுவதற்கான அரசாங்கங்களது முயற்சியின் பாகமாக, அவற்றை [இராணுவ] தயார் நிலை மற்றும் இராஜாங்க உறுதிப்பாட்டை முன் நகர்த்துவதை நோக்கி கொண்டு சென்றது,” என்று மேயர் குறிப்பிட்டார்.

ஆகவே, இன்று, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க பிரிவுகள் சீனாவுடனான ஒரு மோதலை 'தேசிய ஒற்றுமையை' செயல்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக பார்க்கின்றன, அதாவது நடைமுறையில், இது உள்நாட்டு எதிர்ப்பை நசுக்குவதும் மற்றும் குற்றகரமாக்குவதும் ஆகும்.

இந்த கண்ணோட்டம், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜனன் கணேஷின் 'சீனா தான் ஒன்றாக பிடித்துத் தொங்குவதற்கான அமெரிக்காவின் சிறந்த நம்பிக்கை' என்ற பெப்ரவரி 2020 கட்டுரையில் விவரிக்கப்படுகிறது. “ஒன்று திரள்வதற்கு ஒரு வெளிப்புற எதிரி இல்லாவிட்டால், தேசம் தனக்குள்ளேயே திரும்புகிறது,” என்று நிறைவு செய்த கணேஷ், “ஒரு வெளிப்புற எதிரி மட்டுமே' “முரண்பாடான காலகட்டத்திற்கு' முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஜூன் 2019 இல், முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் தற்போதைய போக்குவரத்துத்துறை செயலாளருமான Pete Buttigieg, ஒரு பொதுவான வெளிப்புற எதிரி 'தேச ஒற்றுமை' மற்றும் உள்நாட்டில் 'போருக்கு' அடித்தளமாக சேவையாற்றும். “இந்த புதிய சீன சவால் இந்த அரசியல் பிளவைக் கடந்து ஒன்று சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று குறிப்பிட்ட அவர், “குறைந்தபட்சம் பாதிப் போர் உள்நாட்டில் உள்ளது,” என்றார்.

அமெரிக்காவில் திட்டமிட்ட தணிக்கையும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்ததும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுடன் சேர்ந்திருந்தன. 1918இல், சோசலிசவாதியான Eugene Debs க்கு முதலாம் உலகப் போருக்கான அவர் எதிர்ப்புக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 1941இல், ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கட்சியின் 18 உறுப்பினர்களுக்கு ஸ்மித் சட்டத்தின் கீழ் 12 முதல் 16 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மிக சமீபத்தில், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கட்டமைப்பின் கீழ், தேசிய பாதுகாப்புச் சட்டம், குவாண்டநாமோ வளைகுடா, உள்நாட்டு உளவு பார்த்தல் மற்றும் ஒரு பொலிஸ் அரசின் எந்திரம் நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட பிற நடவடிக்கைகள் என ஜனநாயக உரிமைகள் மீது நீண்டகால தாக்குதல்களைத் தொடுக்க பயன்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, ஆளும் உயரடுக்கு 'செப்டம்பர் 11 துயர சம்பவங்களை, எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தொடங்குவதற்கு அவற்றைப் பயன்படுத்துவது போலவே, உள்நாட்டில் அவற்றின் அரசியல் திட்டநிரலைக் கைவரப் பெற பயன்படுத்திக் கொண்டது.'

கடந்த இருபது ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது? சமூக சமத்துவமின்மை புதிய உயரங்களுக்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், ட்ரம்பின் சதிகள் வடிவத்தில், ஒரு பாசிச சர்வாதிகாரத்திற்கான சாத்தியக்கூறை எழுப்பியுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் கீழும், தன்னலக் குழுவின் குற்றகரத்தன்மை இந்த பெருந்தொற்று மரணங்களின் அளவை மலைப்பூட்டும் மட்டத்திற்கு உயர்த்தி உள்ளது.

தொழிலாள வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் இலக்குகளை அடைய நூறாயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்யும் திறன் கொண்டது என்பதை இந்த பெருந்தொற்று தெளிவுபடுத்தி உள்ளது. ஒரு போரில் மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்புகளும் ஆளும் வர்க்கத்திற்குப் பல சாதகமற்ற விருப்பத் தெரிவுகளில் 'ஆகக் குறைந்த மோசமானது' என்றால், அந்த மரணங்களும் பொறுத்துக்கொள்ளும் கொள்ளப்படும்.

உலகெங்கிலும், தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்து வரும் அல்லது தேக்கமடைந்துள்ள ஊதியங்கள், திகிலூட்டும் மற்றும் மோசமடைந்து வரும் வேலையிட நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதித் திட்டங்கள், மற்றும் இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading