குழந்தைகளுக்கான கோவிட் அச்சுறுத்தலுக்கு எதிரான இரண்டாவது பள்ளி வேலைநிறுத்தத்தில் பரந்த உலகளாவிய பங்கேற்பு

அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை, இரண்டாவது உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்தில் உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 1ம் தேதிய முதல் வெற்றிகரமான வேலைநிறுத்தத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தத்திற்கும், SafeEdforAll (அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி)என்ற பெற்றோர் குழுவின் உறுப்பின இங்கிலாந்து லீசா டியஸ் தான் அழைப்பு விடுத்திருந்தார்.

உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. நிகழ்வின் முக்கிய ஹேஸ்டாக்கான #SchoolStrike2021 என்பது, முதல் பள்ளி வேலைநிறுத்தத்திற்கு லீசா அழைப்பு விடுத்ததிலிருந்து கடந்த மூன்று வாரங்களில் அண்ணளவாக 40,000 க்கும் அதிகமான முறைகள் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது, அக்டோபர் 1 ஆம் தேதி சுமார் 11,000 முறையும், அக்டோபர் 15 ஆம் தேதி கிட்டத்தட்ட 7,500 முறையும் பயன்படுத்தப்பட்டது, இது இங்கிலாந்தில் இரண்டு நாட்களிலும் பிரபலமாக இருந்தது.

அக்டோபர் 15 வேலைநிறுத்தத்திற்கு, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, துருக்கி, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உட்பட, பல நாடுகளின் ஆதரவு கிடைத்தது. உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தது, மேலும் உலகளாவிய இணையவழி மறியல்போராட்டத்திற்கு (Global Online Picket Line) மீண்டும் வழி அமைத்துக் கொடுத்து, பல சமூக ஊடக வீடியோக்களையும் ட்வீட்டுகளையும் வெளியிட்டது.

WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், இரண்டாவது உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கும் பின்வரும் காணொளியை பதிவிட்டுள்ளார்:

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க, #October15th, #SittingDucks, and #SchoolStrike2021 போன்ற ஹேஸ்டாக்குகளுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சீருடைகளை தொங்கவிட்டு அதன் வீடியோ காட்சியை அல்லது புகைப்படத்தை இணைய தளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

வியாழக்கிழமை மாலை வேலைநிறுத்தத்தை முன்னிட்டு லீசா வெளியிட்ட வீடியோவில், “நாளைய பள்ளி வேலைநிறுத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? புரிந்துகொள்வது சுலபம். இங்கிலாந்தில், வேல்ஸில் உள்ள மற்றொரு குழந்தை கோவிட் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. எனவே, நமது பள்ளிகளை பாதுகாப்பாக வைத்திருங்கள், மாறாக அவற்றை பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால், அது நடக்கும் வரை அவற்றை மூடுங்கள் என்று சொல்வதற்குஇந்த ஒரு காரணம் போதுமே” என்று கேட்டிருந்தார்.

லீசா டியஸ் தனது குழந்தைகளின் பள்ளி சீருடைகளை காட்டும் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்

இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலர் தோமஸ் ஸ்கிரிப்ஸ் தனது வீடியோ அறிக்கையில், பள்ளி வேலைநிறுத்தங்கள் “இலாபங்களுக்கு மேலாக, உடல்நலத்தையும் உயிர்களையும் பாதுகாப்பதற்கான ஒரு விஞ்ஞான கொள்கையை செயல்படுத்தக்கூடிய ஒரு பாரிய இயக்கத்தை அணிதிரட்டுவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றன. அந்த சாத்தியம் தொழிற்சங்கங்களாலும், மற்றும் இங்கிலாந்தில் தொழிற் கட்சியாலும் நசுக்கப்பட்டது. என்றாலும், அதற்கு சரியான அரசியல் முன்னோக்கு வழங்கப்படுமானால், அதனை கட்டவிழ்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 15 பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்து தோமஸ் ஸ்கிரிப்ஸ் பேசுகிறார் [உலக சோசலிச வலைத் தள ஊடகம்]

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையின் அனைத்து எதிர்ப்பாளர்களையும், உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) இணைந்துஅக்டோபர் 24அன்று நடத்தும் “பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள்”என்ற உலகளாவிய இணையதள நிகழ்வில் பங்கேற்க ஸ்கிரிப்ஸ் அழைப்பு விடுக்கிறார்.

SafeEdForAll குழுவின் பல ஆதரவாளர்கள் நாள் முழுவதும் செய்திகளை வெளியிட்டனர்.

லூசி கரார்ட், ஒரு பெற்றோரும் மனநலப் பணியாளருமான இவர் தனது வீடியோ பதிவில், “நமது குழந்தைகளை இந்த நிலையில் வைக்க முடியாது. … கோவிட் நோய்தொற்றுக்கள் அதிகரிக்காதது போலவே பள்ளிகள் சாதாரணமாக செயல்படுகின்றன. ஆம், நோய்தொற்றுக்கள் அதிகரிக்கின்றன. … இரவு பகலாக நாங்கள் கவலைப்படும் அளவிற்கு இந்த சூழ்நிலை பெற்றோர்களை சித்திரவதை செய்கிறது, இது தொடர முடியாது. நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம், அவர்கள் கோவிட் தொற்றிக்கொள்ள காத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

பெற்றோரும், தேசிய சுகாதார சேவையின் மனநல பணியாளரும் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (SafeEdforAll) பெற்றோர் குழுவின் உறுப்பினருமான லூசி கரார்ட்

பெற்றோர் லெயா,“பள்ளிக்குச் சென்றால் தொற்றுநோய் ஏற்படும் என்றால், நாம் எதை தேர்வு செய்ய வேண்டும்?” என்ற கருத்துடன் இரண்டு பள்ளி சீருடைகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

செலி என்பவர், “எனது குழந்தைகள் இந்த அரசாங்கத்தின் ஆபத்தான #சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் சோதனையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள். இலேசான நோய்தொற்றுக்கள் கூட நீண்ட கால மூளை மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ள நிலையில், விஞ்ஞானபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நோய் தணிப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி நாம் இப்போது #பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் (#MakeSchoolsSafe)” என்று ட்வீட் செய்துள்ளார்.

டால் போல் என்பவர், “குறைந்தது 53,000 குழந்தைகள் லோங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 11,000 குழந்தைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள, மேலும் 8,000 குழந்தைகள் அநாதையாகிவிட்ட நிலையில் கூட, தேவையற்ற நோய்தொற்றுக்களை தடுக்க உதவக்கூடிய அடிப்படை நடவடிக்கைகளை கூட பள்ளிகள் இன்னும் செயல்படுத்தவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் இதுவரை கோவிட் நோய்தொற்றுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகையில், “#Uk95 Dead #Child” என்பதை சேர்த்து பதிவிட்டார்.

தாய் லீசா, “எனவே [இலண்டன் இம்பீரியல் கல்லூரியின்] சமீபத்திய எதிர்வினை ஆய்வு, குழந்தைகள் இல்லாத வீடுகளை விட குழந்தைகள் உள்ள வீடுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக தற்போது கோவிட் பாதிப்பு உள்ளதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

லூயிஸ் என்ற ஒரு பெற்றோர் தனது குழந்தைகளின் பாடப் பயிற்சி புத்தகங்களையும் பென்சில்களையும் வீட்டில் உள்ள மேசை மீது வைத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு, “அரசாங்கம் மிகவும் தாமதமாக பூட்டுதல்களை விதித்ததால் எங்கள் குழந்தைகளின் ஆரம்பப் பள்ளியில் ஆல்பா மாறுபாடு வெடித்து பரவியது, மேலும் தற்போது டெல்டா மாறுபாட்டின் பாதிப்பு உள்ளபோதும் அதை தணிக்க அரசாங்கம் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. #ToriesUnfitToGovern, #ChildrenDeserveProtectionForInfection, #AirFiltersAllSchoolsNOW” என்று ட்வீட் செய்துள்ளார்.

பெற்றோர் லூயிஸின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்

அவர்களின் அரசியல் வேறுபாடுகள்எதுவாக இருந்தாலும், சர்வதேச அளவில் அரசாங்கங்கள் கொடிய தொற்றுநோய் கொள்கைகளை பின்பற்றி வருகின்றன என்ற உண்மை, துருக்கிய மாணவனின்“GtVar”என்ற ட்வீட்டில் தெளிவாக இருந்தது: அவனுக்கு நீண்டகால நோய் பாதிப்பு எதுவும் கிடையாது, மேலும் அவனுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை பேர் இதனால் இறக்க வேண்டும்?”

டேவிட் ஓ’சல்லிவன், பணியிடத்தில் கோவிட்டுக்கு எதிரான பாதுகாப்புக்காக போராடியதால் பாதிக்கப்பட்ட இலண்டன் பேருந்து தொழிலாளியான இவர், பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது “டோரிக்களின் குற்றவியல் கொள்கை மட்டுமல்ல… மாறாக முதலில் ஜெர்மி கோர்பினின் கீழ், அதனைத் தொடர்ந்து கெய்ர் ஸ்டார்மரின் கீழ் தொழிற் கட்சி பின்பற்றும் குற்றவியல் கொள்கையாகும். தொழிற் கட்சியின் கொள்கை, ‘ஆக்கபூர்வமான விமர்சனம்’ மட்டுமே. இது உண்மையில், “பூட்டுதல்களை எதிர்க்கும் மற்றும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு திரும்பக் கோரும் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கைக்கு முழு ஆதரவாக இருந்தது” ‘கட்டுப்பாடுகள் சாக்குப்போக்குகள்’ எதுவும் கிடையாது என்று கூறினார்.

மேலும் அவர், “கசப்பான தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகையில், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பின்றி இவை எதையும் செய்ய முடியாது” என்றும் கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மூத்த அனுபவசாலியான ட்ரொட்ஸ்கிஸ்ட் ஹெலன் ஹல்யார்ட் தனது வீடியோவில், “குழந்தைகளின் மனநலம் குறித்து கவலைப்படுவதாக எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகள் கூறினாலும், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதன் உண்மையான நோக்கம், கோடீஸ்வரர்களின் ஒரு மெல்லிய அடுக்கிற்கு இலாபமீட்டித் தர அவர்களின் பெற்றோர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதே. உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரால் நடத்தப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான சோதனை, இன்றைய பள்ளி வேலைநிறுத்தங்கள் போல தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் எதிர்க்கப்பட வேண்டும்” என்று கருத்து பதிவிட்டார்.

நியூசிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான டாம் பீட்டர்ஸ், ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கத்தின் நோய் ஒழிப்பு மூலோபாயத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேசினார். மேலும் அவர், “விஞ்ஞானிகளும் பொது சுகாதார நிபுணர்களும் இது குறித்து அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது பற்றியும், மேலும் மருத்துவமனைகள் விரைவில் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் திண்டாடப் போகின்றன என்ற எச்சரிக்கைகள் உள்ளது பற்றியும்” தெரிவித்தார்.

பீட்டர்ஸ் மேலும், “இந்த தொற்றுநோயை ஒரு பொது சுகாதார நெருக்கடியாக கையாள, தொழிலாள வர்க்கம் எந்த முதலாளித்துவ கட்சியையோ அல்லது அரசாங்கத்தையோ, அல்லது அவற்றை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களையோ நம்பியிருக்க முடியாது என்பதை இந்த முன்னேற்றங்கள் நிரூபிக்கின்றன. இதன் காரணமாக எத்தனை பேர் இறக்க நேரிட்டாலும், பணியிடங்களும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற பெரு வணிகங்களின் கோரிக்கைகளையே அவர்கள் அனைவரும் ஆதரிக்கிறனர்” என்றும் கூறினார்.

ஜேர்மன் பேருந்து ஓட்டுநர் ஆண்டி நிக்லாஸ் உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்து பதிவிட்ட வீடியோவில், “பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பேரழிவுகரமானது. ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு மிக அதிகம். … இதுவே உலகளவில் தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய நேரம்” என்று கூறியுள்ளார்.

மூத்த அனுபவசாலியான ட்ரொட்ஸ்கிஸ்ட் விக்கி ஷார்ட் அவரது வீடியோவில், “எனது 12 வயது பேரனுக்கு கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டு, தொண்டைப்புண் மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. நவம்பர் 19 ஆம் தேதி அவனுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவை பள்ளி அனுப்பியுள்ளது, அதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. இது கொடூரமானது. அதை நாம் பொறுத்துக் கொள்ள கூடாது” என்று விவரித்துள்ளார்.

பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான தோமஸ் காஸ்டனேரா, “இனிமேல் குழந்தைகள் இறக்கவோ அல்லது லோங் கோவிட் ஆல் பாதிக்கப்படவோ கூடாது. இப்போதே தொற்றுநோயை நிறுத்துங்கள்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

அலெக்சாண்ட்ரா கிரீன், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு வளாகத்தின் துப்புரவு பணியாளரும், கிராஸ்-கனடா சாமானிய கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான இவர், “நாடு முழுவதும் பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைகளுக்கு நன்றி சொல்லும் #SittingDucks களாக கனடாவில் உள்ள குழந்தைகள் இருப்பதால் நான் இணையவழி முற்றுகையில் இணைகிறேன். எங்களுக்கு #கோவிட்முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் (#EradicateCOVID), மாறாக தணிக்கப்படுவது வேண்டாம், மேலும் பாரிய நோய் மற்றும் இறப்புடன் எங்களை சமரசம் செய்யாதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு வளாகத்தின் துப்புரவு பணியாளரும், கிராஸ்-கனடா சாமானிய கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான அலெக்சாண்ட்ரா கிரீன்

பெற்றோரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும் மற்றும் WSWS இன் எழுத்தாளருமான மார்கோட் மில்லர், “ஒரு சிலரின் பெரும் இலாபத்திற்காக எங்கள் குழந்தைகளையும் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இல்லை” என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

வரலாறு, கலை மற்றும் தொல்லியல் ஆசிரியரான எஸ். இவான்ஸ்747, “குழந்தைகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும், மற்றும் நமது சக ஆசிரியர்களை பாதுகாப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு இலங்கை ஆசிரியரும், மூன்று குழந்தைகளின் தாயும் மற்றும் இலங்கை ஆசிரியர்கள்-பெற்றோர்கள்-மாணவர்கள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான நிலுகா, “அக்டோபர் 21 அன்று பள்ளிகளை மீளத்திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகளை வைரஸ் தொற்றிக்கொள்ள வகை செய்யும் குற்றவியல் முடிவாகவே இது இருக்கும்” என்று தனது வீடியோவில் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் உள்ள ஒரு மழலையர் பள்ளி ஆசிரியரான மார்ட்டின், “அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ பரிந்துரைகளையும் காலிலிட்டு நசுக்கும்போது, கல்வியாளர்களான நாங்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கூட்டணி சேர்ந்து, அவர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, லீசா டியஸ், டேவிட் நோர்த் மற்றும் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் மற்றும் டாக்டர் மால்கோர்சாட்டா காஸ்பெரோவிச் போன்றோர் பங்கேற்கவுள்ள கொள்கை விஞ்ஞானிகளையும் அக்டோபர் 24 சர்வதேச இணைய வழி கூட்டத்தில் சந்திக்க மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன். தொழிலாளர்களாகிய எங்களுக்கு விஞ்ஞானம் தேவை, அதேவேளை தொற்றுநோயைத் தடுக்க விஞ்ஞானத்திற்கு தொழிலாள வர்க்கம் தேவை” என்று கூறியுள்ளார்.

பள்ளி வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவரும், உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) அழைப்பு விடுத்துள்ள “பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள்”என்ற தலைப்பிலான அக்டோபர் 24 உலகளாவிய இணையதள நிகழ்வில் கலந்து கொள்ள திட்டமிட வேண்டும். இன்றே பதிவு செய்யவும், உங்களின் சக பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இந்த நிகழ்வில் பங்கேற்க அழைக்கவும், மேலும் சமூக ஊடகங்களில் இதுபற்றி பரவலாக பகிரவும் கேட்டுக் கொள்கிறோம்.

Loading