முன்னோக்கு

ஜெபர்சன் சிலையை அகற்றுவது அரசியல் வலதுக்கு ஓர் அன்பளிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அடிமையாக வைக்கப்பட்டிருந்த 'எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டவர்களே என்ற உண்மைகளை நாம் சுய-தெளிவோடு ஏற்றுக் கொள்கிறோம்,” என்ற அழியா வாசகத்தை எழுதியவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நியூ யோர்க் நகர சிட்டி ஹாலில் இருந்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழமையான தாமஸ் ஜெபர்சனின் சிலை அகற்றப்பட உள்ளது.

ஜூலை 14, 2010 புகைப்படத்தில், நியூ யோர்க் நகர மண்டபத்தில் உள்ள கவுன்சில் அறையில் வலதுபுறத்தில் தோமஸ் ஜெபர்சனின் சிலை காணப்படுகிறது. (AP Photo/Richard Drew, File) [AP Photo/Richard Drew]

ஜெபர்சன் சிலையை அகற்றுவது குறித்து 11 உறுப்பினர் கொண்ட பொது வடிவமைப்பு ஆணையத்தின் (Public Design Commission) அவசரகதியிலான ஒரு திட்டமிட்ட விசாரணையில் திங்கட்கிழமை பிற்பகல் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதுவரையில் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்த அந்த குழு, நகரசபை தலைவர் பில் டி பிளாஸோவால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டதாகும்.

இந்த 'விசாரணை' என்றழைக்கப்படுவது வெட்கக்கேடானது. அந்த முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. சிலையை அடைத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை ஓர்வெல்லிய வார்த்தைகளில் கூறுவதானால்,நியூ யோர்க் வரலாற்று சமூகத்திற்கு கடன்பட்டிருந்த 'நீண்ட கால கடனுக்காக' ஜெபர்சனைத் தடுப்புக்காவலில் அடைப்பதற்காக ஏற்கனவே ஒரு மரப்பெட்டி செய்யப்பட்டிருந்தது. அந்த ஆணையம் அதன் திங்கட்கிழமை விசாரணையில் எட்டப்பட்ட இந்த முடிவுக்குமுறையாக பொறுப்பேற்கவில்லை, அந்த சிலையை ஒரேயடியாக பெருமதியற்றதாக செய்யவும் அங்கே அழைப்புகள் உள்ளன. “அதை எங்காவது கிடங்கில் வைக்கலாம், அழித்து விடலாம் அல்லது ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று அந்த விசாரணைக்கு விளக்கமளிக்கையில் ஜனநாயகக் கட்சியின் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் பாரன் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிற்பி டாவிட் டா'ஞ்சே(David D’Angers, 1788-1856) உருவாக்கி, 1834 இல் இருந்து நியூ யோர்க் நகர மண்டபத்தில் இருந்து வரும் அந்த ஜெபர்சன் சிலை, வாஷிங்டன் டி.சி. தலைமைச் செயலக குவிமாடத்தில் உள்ள தோமஸ் ஜெபர்சனின்வெண்கல சிலைக்கு அசல் முன்மாதிரி வடிவமைப்பாகும். இவ்விரு சிலைகளையும் அந்நாட்டு கடற்படையின் முதல் யூத அதிகாரியான உரியா பிலிப்ஸ் லெவி (Uriah Phillips Levy, 1792-1862) அமெரிக்க மக்களுக்கு அர்பணித்தார். இந்த இளம் குடியரசில் ஓர் அரசமதம் ஸ்தாபிக்கப்படுவதைத் தடுப்பதில் ஜெபர்சன் வகித்த பாத்திரத்திற்காக, ஏழாண்டுகளுக்கு முன்னரே ஜெபர்சன் இறந்து விட்டிருந்தபோதிலும் லெவிஸ் அவரின் இந்த அன்பளிப்புகளைக் கொண்டு அவரை அங்கீகரிக்க விரும்பினார்.

ஜெபர்சனின் மாபெரும் சாதனையைக் கலை வடிவில் தொகுத்தளிக்கும் அந்த சிற்பத்தை ஓர் அரசு வலைத்தளம் பின்வருமாறு விவரிக்கிறது:

தாமஸ் ஜெபர்சன் சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவராக அவரது நன்கறியப்பட்ட பாத்திரத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவரின் வலது கையில் ஓர் இறகு எழுதுகோளுடன், துடிப்பாக திடகாத்திரமானபாணியில் நிற்கிறார். அந்த எழுதுகோளின் முனை, சுதந்திரப் பிரகடனத்தை வைத்திருக்கும் ஜெபர்சனின் இடது கையை நோக்கி இருக்கிறது. ஜெபர்சனின் புகழ்பெற்ற வார்த்தைகள், வாசிக்கத் தகுந்த முறையில், அந்த சிலையின் களிமண் மாதிரியில் அச்சு அச்சாக பொதியப்பட்டுள்ளன. இரண்டு பெரிய புத்தகங்கள்—அனேகமாக இவை காங்கிரஸ் சபை நூலகத்திற்கு அவர் வழங்கிய தொகுப்புகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்கலாம் — மற்றும் வெற்றியின் சின்னமாக ஒரு மலர் வளையம் அவர் காலடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த சிலையின் பீடம் வேறு வேறு வண்ணங்களில் பளிங்குக்கல் மற்றும் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கின்றன. முகப்பு வாசகம் பெரிய எழுத்துக்களில் 'JEFFERSON” என்று குறிப்பிடுகிறது.

நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சி சில காலமாகவே ஜெபர்சன் சிலைக்குஎதிராக நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ளது. 2001 இல் நகர சபை உறுப்பினராக பாரன் தான் முதன்முதலில் அந்த முன்மொழிவை முன்வைத்தார். அந்நகரச் சபையில் பாதிக்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய கருப்பின, இலத்தீன் மற்றும் ஆசிய உறுப்பினர்கள், 2019 இல், சுதந்திரப் பிரகடனத்தில் அந்த ஆசிரியர் 'அமெரிக்கா எதன் அடிப்படையில் நிறுவப்பட்டதோ அந்த அருவருப்பான இனவாத அடித்தளத்தை அடையாளப்படுத்துகிறார்,” என்ற பிற்போக்குத்தனமான கூற்றை முன்வைத்தனர். பின்னர், ஜூன் 2020 இல், டி பிளாஸோ இனத்திற்கான நீதி மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தினார், ஜெபர்சன் மற்றும் ஜோர்ஜ் வாஷிங்டன் உள்ளடங்கலாக 'நெருடலான' நினைவுச் சின்னங்களை அகற்றுவதைக் குறித்து பரிசீலிக்கும் பணி அந்த ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சியினர், தேசிய கட்சித் தலைமையிடம் இருந்தும் மற்றும் அதன் முன்னணி பத்திரிகை அங்கமான நியூ யோர்க் டைம்ஸிடம்இருந்தும் வந்த குறிப்பைத் தான் பின்பற்றி கொண்டிருக்கிறார்கள். 2019 இல், டைம்ஸ்அதன் 1619 திட்டத்தை வெளியிட்டது, அமெரிக்கப் புரட்சியானது பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக அடிமைத்தனத்தை பாதுகாக்க நடத்தப்பட்ட ஓர் எதிர்ப்புரட்சிகர சதி என்ற பொய்யை அது ஊக்குவிக்கிறது. மே 25, 2020 இல் மினெயாபொலிஸ் இல் ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸால் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், அரசு வன்முறைக்கு எதிராக வெடித்த நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுத்து, ஜனநாயகக் கட்சி, முன்னணி பெருநிறுவனங்களுடன் இணைந்து, முக்கியமாக 1861 உள்நாட்டு போரைத் தொடங்கிய தென் பகுதி கிளர்ச்சியாளர்களுடன் ஜெபர்சன் மற்றும் வாஷிங்டனை இணையாக நிலைநிறுத்தி, அமெரிக்க புரட்சி மீதான தாக்குதலை அதிகரித்தது.

அமெரிக்க வரலாற்றுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய நபரான ஜெபர்சன் மீதான தாக்குதல் தற்செயலானதல்ல. இது 750,000 அமெரிக்கர்களைக் கொன்றுள்ள ஒரு பெருந்தொற்று மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியாக ஒன்றுதிரண்டு வரும் வேலைநிறுத்த அலை ஆகியவற்றுக்கு மத்தியில் வருகிறது. சமூக கோபம், முதலாளித்துவத்தையோ அது ஆதரிக்கும்மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையையோ தொட்டு விடாமல் இருக்க, அதை 'இனத் துவேஷத்திற்குள்' திருப்பி விடுவதே ஜனநாயகக் கட்சியின் நோக்கமாக உள்ளது.

இது வெறுமனே 195 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன ஜெபர்சன் என்ற தனிநபர் மீதான தாக்குதல் அல்ல என்பதை வலியுறுத்தியாக வேண்டும், டி பிளாஸோ மற்றும் நியூயோர்க் நகர ஜனநாயகக் கட்சியினரின் சூழ்ச்சியால் அவரது அமைதி குழப்பப்படப்போவதில்லை. இது ஜெபர்சன் பிரதிநிதித்துவப்படுத்திய கொள்கைகள் மீதான தாக்குதலாகும், எல்லாவற்றிற்கும் மேலாக அனைவருக்கும் மனித சமத்துவம் என்ற சுதந்திரத்தை அறிவித்த பிரகடனத்தின் மீதான தாக்குதலாகும். இந்த அர்த்தத்தில், ஜெபர்சன் மீதான தாக்குதல், பாசிசத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு முன்னால் ஜனநாயகத்தின் பாதுகாப்பு எதைச் சார்ந்துள்ளதோ அந்த அடித்தளங்களுக்கே குழிப்பறிக்கிறது, அதேவேளையில் 1776 மரபியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஜனநாயகத்தைத் தூக்கியெறிய சூழ்ச்சி செய்தாலும் கூட, அவர்களுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குகிறது.

வரலாற்றாளர் சீன் விலெண்ட்ஸ் (Sean Wilentz) திங்கட்கிழமை விசாரணைக்கு சமர்ப்பித்த ஒரு கருத்துரையில்கூறியது போல, 'நம் வாழ்நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நம் நாட்டில் கொடுங்கோலாட்சி அதிகரித்து வரும் நிலையில், ஜெபர்சனை இப்போது நிராகரிப்பது, குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெள்ளோட்ட அடியாக விழும். இவர்களுக்கு,ஜெபர்சனின் சமத்துவத்திற்கான அழைப்புத்தான் கடைசி நன்நம்பிக்கையாக உள்ளது” என்றார்.

இனரீதியிலான 'பொருள்விளக்கம்' வரலாற்று கல்வியில் குறிப்பாக எந்தவொரு அறிவார்ந்த விளக்கமாகவும் இருக்காது. அது வரலாற்றை தார்மீக நெறிசார்ந்த நாடகமாக குறைத்து விடுவதுடன், அதில் நாடக கதாபாத்திரங்கள் நிகழ்கால தராதரங்களின் அடிப்படையில் நல்லவர் கெட்டவர் என்ற கதாபாத்திரங்களில் வைக்கப்படுகிறார்கள். அமெரிக்கப் புரட்சியைப் போன்ற மிகப் பிரமாண்ட முக்கியத்துவம் கொண்ட ஒரு சம்பவம் பிரமாண்ட காரண காரியங்களைக் கொண்டிருந்ததுடன், அதை விட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இனவாதிகளின் கரங்களில், வரலாற்றின் பரந்த பாய்ச்சல்களைப் பற்றிய எல்லா அம்சங்களும், அதாவது புத்திஜீவிய, அரசியல்ரீதியான, கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் வெட்டப்பட்டு, தனிநபர்களின் தனிப்பட்ட குறைபாடுகளைக் குறித்த ஒரு மதிப்பீட்டைக் கொண்டு பிரதியீடு செய்யப்படுகின்றன. கேள்விக்குட்படும் ஒரு வரலாற்று பாத்திரம், அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அகநிலையான அளவுகோல்களுக்குப் பொருந்தி இல்லாவிட்டால், பின்னர் அவர், ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவராக ஆகிவிடுகிறார்.

'ஜெபர்சன் நம் தேச வரலாற்றின் மிகவும் வெட்கக்கேடான சில பாகங்களை உள்ளடக்கி உள்ளார்,' என்று திங்கட்கிழமை விசாரணையில் குயின்ஸைச் சேர்ந்த நகரசபை பெண் உறுப்பினர் அட்ரியன் ஆடம்ஸ் (Adrienne Adams) தெரிவித்தார். ஜெபர்சன் அவர் அடிமைகளில் ஒருவரான சாலி ஹெமிங்ஸுடன் (Sally Hemings) வாழ்நாள் முழுவதும் உறவில் இருந்தார் என்பதற்காக, பரோன் அவர் பங்குக்கு, மீண்டும் மீண்டும் ஜெபர்சனை 'அடிமையை வைத்திருந்த ஒரு பாலியல் துஷ்பிரயோகி' என்று குறிப்பிடுகிறார். ஜெபர்சனின் சிலை அவர்களுக்கு 'அசௌகரியத்தை' உண்டாக்குவதாக மற்ற நகரசபை உறுப்பினர்களும் கூறினர். பொருத்தமானவார்த்தையைக் கண்டறியமுயன்றடி பிளாஸோ கூறுகையில், ஜெபர்சன் 'மக்களுக்கு ஆழ்ந்த தொந்தரவாக' இருப்பதாக தெரிவித்தார்.

எதிர்பார்த்தவாறே, நியூ யோர்க் டைம்ஸூம்அதில் இணைந்தது. ஒரு செய்திக் கட்டுரையாக காட்டிக் கொண்ட ஒரு தலையங்கத்தில், அது சிலை அகற்றுவதை அங்கீகரித்து எழுதியது, “கூட்டமைப்பின் நினைவுச் சின்னங்கள் கவிழ்க்கப்பட்டு ஒதுக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதன் மீதான விவாதத்துடன்' தொடர்புடைய 'இனச் சமத்துவம் சம்பந்தமான ஒரு பரந்த நாடுதழுவிய துவேஷத்தின் பாகமாக' அதை சித்தரித்தது. 1776 புரட்சிக்கும் 1861 கூட்டமைப்பு எதிர்ப்புரட்சிக்கும் இடையிலான ஓர் அடையாளம் என்று சூசகமாக வக்கிரத்துடன் குறிப்பிட்ட பின்னர், டைம்ஸ்ஜெபர்சனை வெறுமனே நயவஞ்சகராக சித்தரிப்பதற்கு நம்பகத்தன்மையை வழங்கியது, அவர் 'சுதந்திரப் பிரகடனத்தில் சமத்துவம் பற்றி எழுதினாலும், 600 க்கும் அதிகமானவர்களை அவரே அடிமையாக வைத்திருந்தார், அவர்களில் ஒருவரான சாலி ஹெமிங்ஸ் மூலமாக ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]

ஜெபர்சன் 'சமத்துவத்தை பற்றி எழுதியதை' விட அதிகமாகவே செய்திருந்தார். அந்த பிரகடனத்தின் கடைசி வாசகம், 'நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நம் வாழ்க்கை, நம் சொத்துக்கள், மற்றும் நம் புனித மரியாதைக்கு சூளுரைக்கிறோம்,' என்பது வெறும் அலங்கார சொல்லாடல் இல்லை. புரட்சி தோல்வியுற்றால் அது அவர்களின் சொந்த மரண உத்தரவாணைகளில் கையெழுத்திடுவதாக இருக்கும் என்பதை ஜெபர்சனும் மற்றும் அதில் கையெழுத்திட்ட மற்றவர்களும் நன்கு அறிந்திருந்தார்கள். “நாம் அனைவரும் ஒன்றாக தூக்கிலிடப்படுவோம், அல்லது, மிகவும் நிச்சயமாக, நாம் அனைவரும் தனித்தனியாகவாவது தூக்கிலிடப்படுவோம்,” என்று பெஞ்சமின் ஃபிராங்ளின் கூறிய போது இதைத் தான் அர்த்தப்படுத்தினார். செல்வசெழிப்பான டைம்ஸின் பதிப்பாசிரியர்களும் எழுத்தாளர்களும் ஒருபோதும் எதையும் பணயம் வைத்ததில்லை.

எப்படி பார்த்தாலும், ஜெபர்சன் அவரின் 33 வயதில் சுதந்திரப் பிரகடனத்தில் 'சமத்துவம் குறித்து எழுதியதை' தவிர அவர் வாழ்க்கையில் வேறெதையும் செய்யவில்லை என்றாலும், இது மட்டுமே கூட அவரை உலக-வரலாற்று அந்தஸ்துடைய ஒரு நபராக ஸ்தாபித்து விடும். அது இதுவரை எழுதப்படாத மிகவும் சக்தி வாய்ந்த புரட்சிகர அறிக்கைகளில் ஒன்றாகும். அந்த முன்னுரையில் மிகவும் எளிமையாக ஆனால் சமத்துவத்தைப் பற்றிய அந்த துணிச்சலான வலியுறுத்தல் அமெரிக்க கடித வரலாற்றிலேயே மிகவும் புகழ்பெற்ற வாசகமாக நிச்சயமாக பட்டியலிடப்பட வேண்டியதாக உள்ளது. இது வெறுமனே அது எழுதப்பட்ட எழுத்துநடைக்காகமட்டுமல்ல, மாறாக வெளிப்பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்த ஏதோவொன்றை, அதாவது 'எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற சுய-தெளிவான உண்மையை' அது 'நேர்மையாக உலகுக்கு' வெளிப்படுத்தியது.

அந்த அறிக்கையின் புரட்சிகர உள்ளடக்கம், இப்போது போலவே அப்போதும், அதன் புறநிலை உண்மையில் தங்கியுள்ளது. நிச்சயமாக எல்லா மக்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். அறிவொளியில் இருந்து வெளிப்பட்டு, பிரிட்டிஷ் மகுடத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சிகர போர் உள்ளடக்கத்தில் வலியுறுத்தப்பட்ட, அந்த மனித சமத்துவ அறிக்கையின் பிரகடனம் அதற்கடுத்து வந்த அமெரிக்க மற்றும் உலக வரலாற்றைப் பயங்கர சக்தியோடு கிழித்தெறிந்துள்ளது. 1789 மற்றும் 1791 இன் பிரெஞ்சு மற்றும் ஹைட்டிய புரட்சிகள், சோசலிச இயக்கம் மற்றும் உலகெங்கிலும் நடந்த ஒவ்வொரு காலனித்துவ எதிர்ப்புப் போராட்டம் உட்பட அடுத்தடுத்து நடந்த ஒவ்வொரு முற்போக்கான நோக்கத்தின் பதாகையிலும் 'சமத்துவம்' என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிப்புவாதிகள் மற்றும் பிரெடெரிக் டக்ளஸூம்; உள்நாட்டு உரிமை இயக்கம் மற்றும் மார்டின் லூதர் கிங், ஜூனியர்; பெண்கள் வாக்குரிமை இயக்கம்; தொழிலாளர் இயக்கம்; இன்று தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசியல் சுதந்திரத்திற்காக நடத்தும் வாழ்வா-சாவா போராட்டம் ஆகியவையும் அந்த பிரகடனத்தைக் கையிலெடுத்துள்ளன. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முற்கோளில் இருந்து தொடங்காமல் ஒரேயொரு அடி கூட முன்னெடுத்து வைக்க முடியாது.

ஜெபர்சன் அவர் காலத்தின் முரண்பாடுகளுக்கும் உருவகமாக இருந்தார். 1743 இல் காலனித்துவ வேர்ஜீனியாவில் அடிமைகளை வைத்திருந்த ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவர் பிறந்த போது, உலகளாவிய மனித சமத்துவம் என்பது அறியப்படவில்லை. வரலாற்றாசிரியர் ஸ்டீபன் கோல்சின் (Stephen Kolchin) கூறியதைப் போல, 'சமத்துவத்தையும் அதனை நிலைநிறுத்த பலாத்காரத்தை பயன்படுத்துவதையும் மனித இயல்பானதாக எடுத்துக்கொண்ட'ஓர் உலகமாக அது இருந்தது. புரட்சிக்கு முன்பு வரை பண்டைய அடிமை அமைப்புமுறை குறிப்பிடத்தக்க எந்த எதிர்ப்பையும் எழுப்பவில்லை. ஜோர்டன் வூட் விளக்கியவாறு, அட்லாண்டிக் உலகம் எங்கிலும் உள்ள பரம்பரை அடிமைமுறை, வடக்கு காலனிகளில் பத்திரத்தில் எழுதிக் கொடுத்த அடிமைமுறை, மற்றும் ரஷ்யாவில் நிலவும் பண்ணையடிமைமுறை ஆகியவை உட்பட இன்னமும் பல்வேறு வகையான 'சுதந்திரமில்லா உழைப்பை' சார்ந்திருக்கும் ஒரு காலகட்டத்தில் அது குறிப்பாக சுரண்டலின் இழிவார்ந்த வடிவமாக பார்க்கப்பட்டது.

அமெரிக்கப் புரட்சி தான் முதல் முறையாக அடிமைமுறைப் பிரச்சினையை ஒரு வரலாற்றுப் பிரச்சினையாக எழுப்பியது. சமத்துவம் பற்றிய அவர்களின் வலியுறுத்தலுக்கு அடிமைத்தனம் முரண்பட்டு இருப்பதை ஸ்தாபக தந்தைகள் அங்கீகரித்தார்கள். பிரிட்டனுக்கு எதிரான வெற்றியில் பெறப்பட்ட வடமேற்குப் பகுதிகளில் இருந்து அடிமைத்தனத்தை நீக்குவது மற்றும் அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தகத்திற்குத் தடை விதிப்பது உட்பட அதற்கு எதிராக சில நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தார்கள். இந்த இரண்டு நடவடிக்கைகளுமே ஜெபர்சனுடன் தொடர்புடையவை ஆகும்.

புரட்சியின் புத்துணர்ச்சி, அடிமை முறை முடிவுக்கு வந்து விடுமென பலரை நம்ப வைத்தது. 'ஒரு முழுமையான விடுதலை, நிகழ்வுகளின் வரிசையில், எஜமானர்களை வேரூடன் களைவதன் மூலமாக அல்ல மாறாக அவர்களின் ஒப்புதலுடன் இருக்கும்' என்று அவர் நம்புவதாக 1781 இல் ஜெபர்சன் கூறியிருக்கலாம். ஆனால், ஒரு வர்க்கமாக, அவரும் சரி, தெற்கு தோட்டக்காரர்களும் சரி, அடிமைத்தனத்தைச் சார்ந்திருப்பதை விட்டு அவர்களை விடுவித்துக் கொள்ள முடிந்திருக்காது. இது வரலாற்று விதிகளுக்கு உட்பட்டது. சமூக வர்க்கங்கள் அவற்றின் செல்வத்திற்கான அடித்தளத்தை துறப்பதில்லை, வரலாற்று கட்டத்திலிருந்து தாமாகவே முன்வந்து சுய-விருப்பத்துடனும் வெளியேறுவதில்லை. அடிமைகளை அடிப்படையாக கொண்ட பருத்தி உற்பத்தியிலிருந்து வந்த வெகுமதிகளால் செழித்த அடிமைகளின் எஜமானர்கள், வாஷிங்டன் மற்றும் ஜெபர்சன் நாட்களுக்குப் பின்னர் வலுவிழந்து போகுமென நம்பி 'அவசியமான தீமை' என்று அடிமைமுறையைக் கண்டித்ததில் இருந்து, அரை நூற்றாண்டுக்குப் பின்னர் ஜோன் சி. கால்ஹவுன் நாட்களில் 'நேர்மறையான நன்மை' என்று தழுவிக் கொண்டார்கள். அவர் பயந்தவாறே நடப்பதைக் காண ஜெபர்சன் உயிரோடு இல்லை. எஜமானர்கள், ஒரு வர்க்கமாக, இறுதியில் உள்நாட்டு போரில் 'முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள்.”

ஆனால் ஜெபர்சன், ஒரு அடிமை உரிமையாளர் என்ற முறையில், 1860 களின் இரண்டாம் அமெரிக்கப் புரட்சியில் தோற்கடிக்கப்பட்ட எஜமானர்களில் ஒரு முன்னோடியாக இருந்த போதிலும், கால்ஹவுனும் அடிமைமுறைக்கு வக்கிரமாக வக்காலத்து வாங்கிய மற்றவர்களும் அங்கீகரிப்பதைப் போல, அவரின் மிகப்பெரிய பங்களிப்பு, இன்னும் அதிகமாகவே கூட, சுதந்திரத்திற்கான காரணமாக இருந்தது. ஜனநாயகக் கட்சியினர் இப்போது செய்வதைப் போல, அவர்களும் ஜெபர்சனை நயவஞ்சகர் என்று கண்டித்ததுடன், சுதந்திரப் பிரகடனத்தை ஒரு பொய் என்றும் கண்டித்தனர். சுதந்திரத்தின் பக்கம் ஜெபர்சனின் மரபு இருப்பதை லிங்கனும் நன்கு அறிந்திருந்தார், ஏனென்றால் 1863 இல் கெட்டிஸ்பேர்க்கில் ஒன்றியத்திற்காக இறந்தவர்களின் தேசிய கல்லறையை அர்பணித்து லிங்கன் அதை சிறப்பாக கூறியிருந்தார்:

எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் நம் தந்தையர் சுதந்திரத்தை உட்பொதிந்த இந்த கண்டத்தை, ஒரு புதிய தேசத்தை, முன் கொண்டு வந்து, எல்லா மனிதர்களும் சமமாகவே உருவாக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்துக்கு அதை அர்ப்பணித்தனர். அவ்வாறு உட்பொதியப்பட்ட அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அந்த தேசம், அல்லது எந்தவொரு தேசமும், நீண்ட காலம் தாக்குப் பிடிக்குமா என்பதைப் பரிசோதிக்கும், ஒரு மிகப்பெரிய உள்நாட்டு போரில் இப்போது நாம் ஈடுபட்டுள்ளோம்...

எப்படி பார்த்தாலும், அடிமைகளின் ஓர் உரிமையாளர் என்பதற்காக ஜெபர்சன் நினைவுகூரப்படவில்லை. அமெரிக்க வரலாற்றில் பல ஆயிரக் கணக்கான எஜமானர்கள் இருக்கிறார்கள். மாறாக அந்த உண்மை இருந்தாலும் அதற்கு மத்தியிலும் நினைவுகூரப்படுகிறார். வாஷிங்டன், பிராங்க்ளின், ஆடம்ஸ், மாடிசன், பைன் (Paine), ரஷ் (Rush) மற்றும் ஹாமில்டன் என ஒரு சிலரைப் பெயரிட்டு கூறுவதானால் இவர்களை உருவாக்கிய ஒரு தலைமுறையில் அவர் மிகவும் தலைச்சிறந்தவராக இருந்துள்ளார். டாம் பைன்னுடன் சேர்ந்து அவர் அமெரிக்க புரட்சியின் அதி-இடது அணியைப் பிரதிநிதித்துவம் செய்தார். பிரான்சுக்கான முதல் தூதராக இருந்த ஜெபர்சன், அங்கே மக்கள் உரிமை மற்றும் மனித உரிமை பிரகடனம் வரைவதற்குப் பங்களிப்பு செய்தார். அவர் மாடிசனுடன் இணைந்து, அரசில் இருந்துதேவாலயத்தை விலக்கி வைக்கும் 'பிரிவினைச் சுவர்' கோட்பாட்டை உருவாக்கி, அமெரிக்க அரசியலமைப்புக்குள் உரிமைகள் மசோதாவுக்கு அழுத்தமளித்தார். அவருக்கு நிகரான அமெரிக்க அறிவோளியின் ஒரே பிரமுகரான பிராங்க்ளினைப் போலவே, ஜெபர்சனும் விஞ்ஞானத்தின் மனிதராக அத்துடன் கடிதங்களின் மனிதராக விளங்கினார், காங்கிரஸ் மகாசபை நூலகம் மற்றும் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தார்.

அவர் அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளிலும் மிகவும் புத்திஜீவியராக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'அனேகமாக தோமஸ் ஜெபர்சன் தனியாக உணவருந்தும் நேரத்தைத் தவிர, மிகவும்அசாதாரணமான திறமை மற்றும் மனித அறிவின் கலவையாக வெள்ளை மாளிகையில் இதுவரையில் அவ்விதமாக ஒன்று கூடியிருந்ததில்லை,” என்று நோபல் பரிசு பெற்றவர்கள் கூட்டத்தில் 1962 இல் ஜோன் கென்னடி கூறிய போது அவர் மிகைப்படுத்தி விடவில்லை.

அமெரிக்க ஆளும் வர்க்கம் உருவாக்கும் ஒருவர் கூட இன்று ஜெபர்சன் நிழலின் மிகச் சிறிய சாயலைக் கூட ஏற்க முடியாது. தொழிலாள வர்க்கத்தில் இனப் பிரிவினையை ஊக்குவிக்கும் அதேவேளையில் நியூ யோர்க் நகர பில்லியனர்களுக்குச் சேவையாற்றும் அந்நகர ஜனநாயகக் கட்சியினரில் யாரும் கிடையாது. அவர் மூளையில் நிஜமான சிந்தனையோ அல்லது ஓர் அரசியல் கோட்பாடோ இல்லாமல் தொழில்ரீதியாக கூலிக்கு மாரடைக்கும் அரசியல்வாதி பில் டி பிளாஸோவும் கிடையாது. ஆபிரிக்காவின் இரத்தத்தில் ஊறிய எண்ணெய் நிறுவனமான ராயல் டச் ஷெல்லிடம் இருந்து (Royal Dutch Shell) நன்கொடைகளைஏற்க விரும்பும் 1619 திட்டத்தின் படைப்பாளி நிக்கோல் ஹன்னா-ஜோன்ஸ் கிடையாது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் செல்வ வளத்தைப் பணக்காரர்களுக்கு கைமாற்றுவதை மேற்பார்வை செய்தவரும் மற்றும் ஜனாதிபதி கூறிவிட்டால் எங்கேயும் யாரொருவரையும் படுகொலை செய்ய வெள்ளை மாளிகைக்கு 'உரிமை' வழங்கியவருமான பராக் ஒபாமாவும் நிச்சயமாக கிடையாது.

முடிவாக, ஜெபர்சனை எது மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறதோ அதைத்தான் அமெரிக்க ஆளும் வர்க்கம் வெறுக்கிறது: டா'ஞ்சேஇனது சிலையின் பொருளடக்கமான, சுதந்திரப் பிரகடனத்தின் ஆசிரியர் அவர் என்பதால் வெறுக்கிறது. அந்த பிரகடனம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதால் மட்டும் அவர்கள் அவரை வெறுக்கவில்லை, மாறாக புரட்சி செய்வதற்கான மக்களின் உரிமையை அது வலியுறுத்துவதாலும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஜெபர்சன் கூறினார், அரசாங்கங்கள், “ஆளப்படுபவர்களின்ஒப்புதலில் இருந்து அவற்றின் அதிகாரங்களை' பெறுகின்றன … 'துஷ்பிரயோகங்களும் தகாத வழியில் அபகரிப்பதும் நீண்டு கொண்டே இருந்தால், கேள்விக்கிடமற்ற கொடுங்கோலாட்சியின் கீழ் அவர்களைக் கீழ்படுத்தும் ஒரு வடிவத்தில் அக்கறைக் காட்டும் அதே விஷயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்தொடர்ந்தால், அதுபோன்ற அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதும், தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு புதிய பாதுகாவலர்களை நியமிப்பதும், அவர்களின் உரிமையும், கடமையும் ஆகும்.”

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு 'அதிகப்படியான உயிரிழப்புகள்' உடன் இலாபத்திற்கான பலிபீடத்தில் ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளனர்; பழைய இங்கிலாந்து மற்றும் பிரான்சின் ஹனோவர் மற்றும் காப்பெட்டியனியவம்சாவழிகளையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு 99 பில்லியனர்கள் செல்வவளத்தைக் குவித்து வைத்துள்ள நியூ யோர்க் நகரில் (இந்த நியூ யோர்க் தான் தோமஸ் ஜெபர்சனின் நினைவுகளை அகற்ற இருக்கிறது) 1.1 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உண்பதற்குப் போதுமான உணவின்றி உள்ளனர் என்ற நிலைமைகளின் கீழ், 2021 இன் அமெரிக்க ஆளும் வர்க்கக்கத்தால் மனித சமத்துவம் பற்றிய ஜெபர்சனின் வலியுறுத்தலையும் புரட்சிக்கான உரிமையையும்மன்னித்துவிட முடியாது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரை, இது இன்னுமொரு விஷயம். ஜெபர்சன் ஒரு சிலை அல்ல, மாறாக தொழிலாள வர்க்கம் மட்டுமே தாங்கிப் பிடிக்கும் புரட்சிகர சொத்துக்களுக்கு அவர் பங்களிப்பு செய்தவர். தொழிலாளர்களின் இயக்கம் போராட்டத்திற்கு செல்வதும் உண்மையான இடதுசாரி அரசியல் புத்துயிர் பெறுவதும், ஏற்கனவே நடந்து வரும் இந்த நிகழ்முறைகள், தாமஸ் ஜெபர்சனை உலக வரலாற்றில் அவரின் சரியான இடத்தில் மீண்டும் நிலைநிறுத்தும்.

Loading