முன்னோக்கு

விஞ்ஞான உண்மையும், பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற உலகளாவிய பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்களின் கூற்றுக்களுக்கு நேர்மாறாக, இந்த உலக சுகாதார நெருக்கடி அதிகரித்து வருவதை அச்சமூட்டும் புள்ளிவிவரங்கள் பலமாகச் சுட்டிக்காட்டுகின்றன. சவாலான குளிர்கால சூழல் மற்றொரு பேரழிவுகரமான அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று பல விஞ்ஞானிகளும் தொற்றுநோய் நிபுணர்களும் அஞ்சுகின்றனர்.

கடந்த வாரம், கிட்டத்தட்ட 2.8 மில்லியன் பேர் அதிகாரப்பூர்வமாக கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளானார்கள், உலகம் முழுவதும் 45,256 பேர் அந்த வைரஸால் உயிரிழந்திருந்தனர். இம்மாத இறுதிக்குள், உலகளாவிய அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்து விடும், அதேவேளையில் அதிகப்படியான இறப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் உண்மையான இறப்பு எண்ணிக்கையை 15 மில்லியனுக்கும் அதிகமாக குறிப்பிடுகின்றன.

Marilyn Mar, right, and Nai-Hua Jeng process upper respiratory samples from patients suspected of having COVID-19 at the Stanford Clinical Virology Laboratory on Wednesday, Feb. 3, 2021, in Palo Alto, Calif. (AP Photo/Noah Berger)

இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் எந்தவொரு மூலோபாயத்தையும் அரசாங்கங்கள் கைவிட்டிருப்பதால் இந்த ஆபத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேர்மாறாக, உயிர்ப் பாதுகாப்பை விட பெருநிறுவன-நிதிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மரண அலைக்கு அவை அதிர்ச்சியூட்டும் அளவிலான அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன. ஊடகங்களோ, கோவிட்-19 மங்கி போகும் வரையில் அமைதியாக காத்திருப்பதைத் தவிர வேறு மாற்றீடு எதுவும் இல்லை என்ற அக்கறையற்ற கூற்றுக்களுக்கும் குழப்பமான நம்பிக்கைக்கும் இடையே ஊசலாடுகின்றன.

இதற்கிடையே, அமெரிக்கா முழுவதிலும் பள்ளிகளைப் பொறுப்பற்ற முறையில் மீண்டும் திறப்பது குழந்தைகளின் நோய்தொற்றுகளையும், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புக்களையும் அதிகரித்துள்ளன, கிட்டத்தட்ட 2 மில்லியன் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 6,523 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஜூலை 29 முதல் சரியாக 200 பேர் அந்த வைரஸால் உயிரிழந்து இருப்பதாக அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதே போன்ற பயங்கரமான புள்ளிவிவரங்கள் பிரிட்டன், கனடா, பிரேசில் மற்றும் உலகம் முழுவதும் உள்ளன.

பூஸ்டர் தடுப்பு மருந்துகளின் பூர்வாங்க ஆய்வுகள் நம்பிக்கைத் தருவதாக உள்ளன, குறிப்பாக mRNA தடுப்பூசிகள் மூன்றாவது தடுப்பூசிக்குப் பின்னர் உடலில் அதிக அளவில் எதிர்ப்புச் சக்தியை வழங்குகின்றன. ஆனால், ஏகபோக மருந்து உற்பத்தி நிறுவனங்களின் இலாப நிர்பந்தங்களாலும் மற்றும் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசி திட்டம் இல்லாததன் காரணமாகவும், உலக மக்கள்தொகையில் 36 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மொத்த ஆபிரிக்கர்களில் வெறும் 5 சதவீதத்தினரும் அதில் உள்ளடங்குவர். அதேநேரத்தில், தடுப்பூசிகளோடு சேர்ந்து வைரஸ் பரிணாம செயல்முறையும் நடந்தேறி வருகிறது, இது கோவிட்-19 ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐ விட இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய மற்றும் தடுப்பூசியையே எதிர்க்கும் ஆற்றல் கொண்ட வகைகளை உருவாக்க அச்சுறுத்துகிறது.

இந்த உள்ளடக்கத்தில், விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் இந்த பெருந்தொற்றை நோக்கிய ஒரு சரியான கொள்கையை ஏற்றுப் போராடுவது அவசியமாகும். விஞ்ஞானிகளுக்கும் விபரமறிந்த பொதுமக்களுக்கும் இடையிலான செயலூக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பது இன்று மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கிய பணி என்பதோடு, அது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் தேவையற்ற துயரங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. இது தான், உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) 'இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது: முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை' என்ற தலைப்பில் வரும் அக்டோபர் 24 இல் நடத்தும் இணையவழி கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் போக்கில், முக்கிய கொள்கை பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த இணையவழி கலந்துரையாடலுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள மகத்தான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் அதை இழிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, கோவிட்-19 ஐ அகற்றுவதையும் முற்றிலுமாக ஒழிப்பதையும் எதிர்க்கும் சில விஞ்ஞானிகள், இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் நிகழ்வு மீதான பிரதான ஒருங்குவிப்பை 'பொறுப்பற்றது' என்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் 'முற்றிலும் ஒழிப்பது' (eradication) என்ற வார்த்தை மீது மனச்சோர்வூட்டுகிறார்கள், விஞ்ஞானரீதியில் முற்றிலும் நிச்சயமாக இது சாத்தியமற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தீய நம்பிக்கையுடன் வாதிடுவதோடு, வரவிருக்கும் அந்த இணையவழி கலந்துரையாடலை எதிர்ப்பவர்கள் 'அகற்றுதல்' (elimination) மற்றும் 'முற்றிலும் ஒழித்தல்' (eradication) ஆகியவற்றுக்கு இடையிலான விஞ்ஞானபூர்வ வேறுபாடுகள் மீது குழப்பத்தை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். “அகற்றுதல்' என்பது ஒரு குறிப்பிட்ட புவிசார் பகுதியில் ஒரு வைரஸ் நோய்க்கிருமி மனித உடலில் இருந்து மனித உடலுக்குப் பரவுவதைத் தடுப்பது, அதுவே 'முற்றிலும் ஒழிப்பது' என்றால் விலங்குகளில் இருப்பவை உட்பட இயற்கையிலிருந்து அந்த வைரஸை உலகளவில் முற்றிலுமாக ஒழிப்பதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் அரசாங்கங்களின் பொறுப்பற்ற மற்றும் கொலைபாதகக் கொள்கைகளுக்கு எதிரான அதன் போராட்டத்தில் —அகற்றுதல் மற்றும் முற்றிலும் ஒழித்தல்— அவ்விரு வார்த்தைகளையும் பயன்படுத்துகிறது. நாம் இந்த வார்த்தைகளை, விஞ்ஞானரீதியில் அடித்தளமிட்ட கோவிட்-19 எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒன்றோடொன்று இணைந்த கூறுகளாக பார்க்கிறோம். இப்புவியின் இன்னும் பரந்த பிரதேசங்களில் புதிய கோவிட்-19 நோயாளிகள் உருவாவதை அகற்றுவது இந்த பெருந்தொற்றை உலகளவில் முடிவுக்குக் கொண்டு வரும்—அதாவது, அது நோய்தொற்றுக்களையும் உயிரிழப்புகளையும் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வரும். மொத்தத்தில் நடைமுறையில், கோவிட்-19 மனித உயிருக்கு நேரடியான மற்றும் உடனடியான அச்சுறுத்தலாக இல்லாமல் போய்விடும். இந்த மலைப்பூட்டும் சாதனை இறுதியில், பின்னர் ஒரு தருணத்தில், வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு, அதாவது இப்புவியில் அதன் இருப்பை ஒழிப்பதற்கு, இட்டுச் செல்லும்.

மிங்கு (mink), மான், பூனைகள், நாய்கள் மற்றும் பிற விலங்குகளிலும் கோவிட்-19 தேங்கி இருப்பதை வைத்துப் பார்த்தால், முற்றிலுமாக ஒழிப்பது என்பது நடைமுறையில், குறைந்தபட்சம் குறுகிய காலத்தில், அடையக்கூடிய இலக்கா என்று விஞ்ஞானிகளிடையே ஒரு விவாதம் உள்ளது. சாதாரண நிலைமைகளின் கீழ் வேண்டுமானால், இந்த விவாதம், பொதுக் கொள்கை மீது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறைந்தளவில் ஏற்படுத்தக்கூடிய ஒரு தத்துவார்த்த குணாம்சத்தைக் கொண்டதாக இருக்கலாம்.

ஆனால், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் WSWS க்குக் கூறுகையில், அதிகாரப்பூர்வ கொள்கையைக் கோட்பாடின்றி பாதுகாப்பவர்கள், அகற்றுவதற்கும் ஒழிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டில் குழப்பத்தை உண்டாக்கி அதைச் சாதகமாக்கி, விஞ்ஞானிகளது மற்றும் கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கையாளர்களது போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்ய முனைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம் அதேயளவுக்கு அதை அகற்றுவதற்கான போராட்டமும், நேரம் மற்றும் ஆதாரவளங்களை வீணடிப்பதாக இருக்கும் என்று அவர்கள் விடாப்பிடியாக வாதிடுகிறார்கள். உதாரணமாக, என்ன விலை கொடுத்தாவது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வக்காலத்து வாங்கும் டாக்டர் ஹெலன் ஜென்கின்ஸ், உலக சோசலிச வலைத் தளத்தின் வரவிருக்கும் அக்டோபர் 24 இணையவழி கலந்துரையாடலை மதிப்பிழக்கச் செய்யும் நோக்கில், சமீபத்தில் ட்வீட் செய்திகளை வெளியிட்டுள்ளார். 'இது மிகவும் பொறுப்பற்றது. இந்தக் கட்டத்தில் கோவிட் ஐ முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியம் என்று மக்களை நம்ப வைப்பது தவறான தகவல்களைப் பரப்புகிறது,” என்று இந்த நிகழ்வைத் தாக்கி அக்டோபர் 17 இல் அப்பெண்மணி ட்வீட் செய்தார்.

இந்த தாக்குதல் தீய நம்பிக்கையில் இருந்து வருகிறது. முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சிகள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறைந்தபட்சமாக கூட அந்த வைரஸை அகற்றுவதை நோக்கமாக கொண்ட கொள்கைகளின் செயல்பாடுகளுக்குக் குழிபறிக்காது என்பது ஊகிக்கத்தக்க வகையில் ஜென்கின்ஸ்க்கு தெரியும். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது நம்ப முடியாதளவுக்கு அரிதாக உள்ளது என்பதை வைத்துப் பார்த்தால், உலகளவில் அவசியமான பொது சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், மனிதர்களிடையே கோவிட்-19 ஐ உலகளவில் அகற்றுவது —திறம்பட அந்த பெருந்தொற்றைத் தடுப்பது— முற்றிலும் அடையக்கூடிய இலக்காக உள்ளது.

கோவிட்-19 ஐ உலகளவில் அகற்றுவதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள், இந்த பெருந்தொற்று காலம் நெடுகிலும் WSWS அறிவுறுத்தி உள்ள அதே நடவடிக்கைகள்தான்: அதாவது, தடுப்பூசி மீதான அறிவுசார் சொத்துரிமைகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் உலக மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஏற்படுத்துவது; பாரியளவில் பரிசோதனை, நோயின் தடம் அறிதல், நோய்வாய்ப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், சங்கிலித்தொடர் போல பரவுவதை அடையாளம் கண்டு தடுத்தல், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல்; பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களைத் தற்காலிகமாக மூடுவதும் அதில் பாதிக்கப்படும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் சிறுவணிகர்களுக்கும் நிதி மற்றும் சமூக உதவிகள் வழங்குவதும்; கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை நிர்வாகம்; அனைவரும் முகக்கவசம் அணியச் செய்வது, காற்றோட்ட வசதியை மேம்படுத்துவது மற்றும் அத்தியாவசிய வேலையிடங்களில் நோய்தொற்றைக் குறைக்க அவசியமான மற்ற பிற நடவடிக்கைகள்.

இந்த எளிய மற்றும் மிகவும் பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகள் சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பல நாடுகளும், அத்துடன் அட்லாண்டிக் கனடா மற்றும் பிற பிராந்தியங்களிலும், மார்ச்-ஏப்ரல் 2020 இல் இருந்து மற்றும் அதன் பின்னரும், தடுப்பூசிகள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு முன்னரே நடைமுறைப்படுத்தியதால் அங்கே கோவிட்-19 அகற்றப்படுவதற்கு வழிவகுத்துள்ளன. உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டிலும் அகற்றும் மூலோபாயம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் உலகெங்கிலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கோவிட்-19 பரவுவதை முடிவுக்குக் கொண்டு வந்து விடும்.

தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் கடினமாக்கிய அதிகமாக பரவும் டெல்டா மாறுபாட்டின் பரவலுடன் சேர்ந்து, வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலகளாவிய நிதிய தன்னலக் குழுவிடமிருந்து வந்த மிகப் பெரும் அழுத்தத்தின் கீழ், கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் அகற்றும் மூலோபாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன, மிகவும் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக இருப்பது சீனா மட்டுந்தான். கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு வெகுஜன சமூகமான சீனா, ஒரு வருடத்திற்கும் மேலாக அகற்றும் மூலோபாயத்தை மேற்கொண்டுள்ளது, அதனால் மொத்த வெடிப்புகள் வேகமாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன, நிச்சயமாக இது ஒவ்வொரு நாட்டிலும் அகற்றும் மூலோபாயம் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கிறது.

இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த போராட்டத்தின் உறுதியான கூட்டாளிகளான, அகற்றுவதை ஆதரிப்பவர்களுக்கும் முற்றிலும் ஒழிப்பதை ஆதரிப்பவர்களுக்கும் இடையிலான விவாதம் தொடர வேண்டும், பொது சுகாதார நடவடிக்கைகள் விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கு விடையிறுப்பதால், நடைமுறையில் மட்டுமே அது தீர்க்கப்படும். ஆனால் கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பது மற்றும் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசர தேவை உள்ளது என்பதில் ஆழ்ந்த நிலைப்பாடு கொண்ட விஞ்ஞானிகள் மத்தியில் எந்த சர்ச்சையும் இல்லை.

உலகளவிய மனிதர்களிடையே இதை அகற்றுவது என்பது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதில் ஒரு பிரம்மாண்டமான முன்னோக்கிய அடியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, அது கோவிட்-19 ஐ, தற்போது இருக்கும் இன்னும் பல நோய்களை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்க்கிருமிகளையும் முற்றிலுமாக அகற்றுவதற்கு அடித்தளங்களை அமைக்கும். இத்தகைய முயற்சிகளை எதிர்க்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் வலதுசாரி சூழலை உருவாக்கும் என்பதோடு, உலகளாவிய சமூகத்தைப் புதிய பெருந்தொற்றுகளுக்கு இன்னும் தயாரிப்பின்றி விட்டுவிடும், காலநிலை மாற்றம் தடுக்கப்பட்டு மாற்றப்படாவிட்டால் இத்தகைய புதிய பெருந்தொற்றுக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் ஏற்படுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பகுப்பாய்வின் இறுதியில், தொற்றுநோயியல், நுண்கிருமியியல் துறைகளிலும் மற்றும் பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் விபரமறிந்த மக்களின் விழிப்புணர்வால் ஆதரிக்கப்பட்டு, கோவிட்-19 ஐ ஒழிக்க முடியுமா முடியாதா என்பதைத் தீர்மானிக்கும். ஆனால் கொரோனா வைரஸை அகற்றுவதற்கான முயற்சி, முற்றிலும் ஒழிக்கும் நீண்டகால இலக்குக்கு இணக்கமற்றது என்பதல்ல, அதைக் கைவிட வேண்டிய அவசியமும் இல்லை.

முற்றிலும் ஒழிக்கும் கருத்தாக்கம் முக்கியமானது, முடிந்த வரை பல தொற்று நோய்களுக்கான இலக்காக இருக்க வேண்டும். 'நோய் ஒழிப்பு' என்ற தலைப்பில் ஒரு செல்வாக்கான 2013 கட்டுரையில் டொனால்ட் ஆர். ஹாப்கின்ஸ் வலியுறுத்துகையில், ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தை ஏற்பதால் ஏற்படும் நன்மை தரும் விளைவுகளை வலியுறுத்தினார். விஞ்ஞானிகள் மற்றும் விபரமறிந்த மக்களால் கோவிட்-19 ஐ முடிவுக்குக் கொண்டு வரும் ஓர் உலகளாவிய அகற்றும் மூலோபாயம் முன்னெடுக்கப்படுகையில், அதே விளைவுகள் உலகெங்கிலும் உணரப்படும்:

முற்றிலுமாக ஒழிப்பதை அடையத் தவறுவதன் உள்ளார்ந்த அபாயங்கள், ஒரு வெற்றிகரமான ஒழிப்பு பிரச்சாரத்திலிருந்து காலவரையின்றி கிடைக்கும் நன்மைகளைக் கிடைக்க விடாமல் செய்து விடுகின்றன. முற்றிலுமாக ஒழிக்கும் பிரச்சாரங்களின் தனித்துவமான சக்தி, அவற்றின் உயர்ந்த தெளிவான நோக்கத்திலிருந்தும், சுகாதாரப் பணியாளர்களிடையே அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை ஊக்குவிக்கும் அவற்றின் ஈடிணையற்ற ஆற்றலில் இருந்தும், மற்றும் நன்கொடையாளர்கள் அவற்றால் ஈர்க்கப்படுவதில் இருந்தும் பெறப்படுகிறது, இவை அனைத்தும் முற்றிலும் வெற்றிகரமாக ஒழிப்பதற்கான தடைகளைக் கடக்க அவசியமாகும். நோய் சம்பவமும் தலையீடு நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்பதற்கான ஆதாரமும் அந்த நிகழ்வுப்போக்கு முற்றிலும் ஒழிப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய செய்திகளும் இத்தகைய இன்றியமையா பிரச்சாரங்களுக்கு அவசியமான ஆதாரவளங்களைப் பெற உதவும்.

தொற்றுநோயியல், நுண்கிருமியியல் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான பிற துறைகளில் விடாமுயற்சியுடன் பணியாற்றும் விஞ்ஞானிகளது முயற்சிகள் மூலம் மட்டுமே இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டம் வெற்றி பெற்று விடாது. அவர்களின் உன்னதமான முயற்சிகளுக்கு பாரிய ஆதரவு தேவைப்படுகிறது, குறிப்பாக பிற்போக்குத்தனமான சக்திகள் வெட்கமின்றி அறியாமை, குழப்பம் மற்றும் மூடநம்பிக்கையைப் பரப்பி வரும் ஒரு காலக்கட்டத்தில் இது அவசியமாகிறது.

உலக சோசலிச வலைத்தளம் ஏற்பாடு செய்துள்ள அக்டோபர் 24 இணையவழி கலந்துரையாடல், விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும். இந்த விவாதம் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர தேவையான பயனுள்ள பாரிய நடவடிக்கைகளைக் கல்வியூட்டி, தெளிவுபடுத்தி, அவற்றுக்கு அடித்தளம் அமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்.

இன்றே பதிவு செய்யுமாறும், உங்கள் சக தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்குமாறும், சாத்தியமானளவுக்கு இந்த வாரம் இந்நிகழ்வைப் பற்றி சமூக ஊடகங்களில் ஊக்குவிக்குமாறும் சர்வதேச அளவில் நம் வாசகர்கள் அனைவரையும் நாம் வலியுறுத்துகிறோம்.

Loading