தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கையில், ஜேர்மன் அரசாங்கம் நோய்தொற்று முடிந்துவிட்டதாக அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் நோய்தொற்றுக்கள் வெடித்து பரவிக் கொண்டிருக்கையில், ஜேர்மன் அரசாங்கம் நோய்தொற்று முடிந்துவிட்டதாக தீர்மானமாக அறிவிக்கிறது. இந்த வார தொடக்கத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (CDU), “தேசியளவில் தொற்றுநோயின் நிலைமை” நவம்பர் 25 உடன் முடிந்து போகும் என்று அறிவிக்க பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். இது எஞ்சிய பெரும்பாலான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கு வழிவகுக்கும்.

அக்டோபர் 28, 2021, வெள்ளிக்கிழமை, ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட் நோயாளி ஒருவரது சவப்பெட்டியை வெளிர் நீல நிற ஆடையிலுள்ள மருத்துவ ஊழியர்களும், மற்றும் இறுதிச் சடங்கு பணியாளர்களும் மூடுகின்றனர். (AP Photo/Alexandru Dobre)

மார்ச் 2020 இல் தொற்றுநோயின் முதல் அலை தொடங்கியதிலிருந்து, ஜேர்மன் பாராளுமன்றம் (Bundestag) இந்த “தொற்றுநோய் நிலைமையை” தொடர்ந்து நீட்டித்தது. தொற்றுநோய் பாதுகாப்பு சட்டத்தின் (Infection Protection Act) விதிமுறைகளின் கீழ், இது முகக்கவசப் பயன்பாடு அல்லது சமூக இடைவெளி மற்றும் தொடர்பு கட்டுப்பாடுகள் போன்ற தேசியளவிலான விதிமுறைகளுக்கு சட்ட அடிப்படையை உருவாக்குகிறது.

தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் (AfD) கட்சியின் வழியை தீவிரமாக பின்பற்றும் ஸ்பானின் அழைப்புகளுக்கு ஜேர்மன் பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கின்றன. தற்போது அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளைப் போல இடது கட்சியின் பிரதிநிதிகளும் இதை வரவேற்றுள்ளனர். “தொற்றுநோய் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவது” பற்றி இந்த மூன்று கட்சிகளும் புதன்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கை, அவர்கள் ஆட்சிக்கு வரும்போது, “உயிர்களை விட இலாபமே மேலானது” என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்ற திட்டமிட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது.

“தேசியளவிலான தொற்றுநோயின் நிலைமை … நவம்பர் 24, 2021 இறுதியில் முடிவடைகிறது. இது நீடிக்காது. காரணம் அதன் முன்னைய நிலைமைகள் இப்போது இல்லை” என்றும், “கூட்டாட்சி பிராந்தியத்தில் தொற்றுநோய் நிலைமை முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கான நடவடிக்கைகளின் பட்டியல் … இனி பொருந்தாது. மேலும், தற்போது சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சாத்தியக்கூறுகளையும் நாம் அகற்றுவோம் என்ற நிலையில், … தனிப்பட்ட மாநிலங்களின் தொற்றுநோய் நிலைமைகளுக்கு ஏற்ப மாநில அளவில் இந்த அட்டவணை பொருந்தும் என்று மாநில பாராளுமன்றங்கள் அறிவிக்கின்றன” என்றும் இது கூறுகிறது.

இனி அங்கே ஒரு மாற்றமும் இருக்காது. தொற்றுநோய் மீண்டும் ஒருமுறை வெடித்துப் பரவிக் கொண்டிருந்தாலும், SPD, FDP மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை தமது இரகசிய கூட்டணி பேச்சுக்களின்போது, எதிர்காலத்தில் வைரஸைக் கட்டுப்படுத்த அநேகமாக எந்தவித நடவடிக்கைகளும் இருக்காது என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வாறு செய்வதால், தொற்றுநோய்களின் கடுமையான அதிகரிப்பினால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு கிட்டத்தட்ட நிர்மூலமானதும், மற்றும் ஜேர்மனியில் நிலவிய கொடூரமான நிலைமைகளினால் அங்கு மட்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்ததுமான கடைசி குளிர்காலத்தை ஒத்த சூழ்நிலையை அவர்கள் தூண்டுகிறார்கள்.

ஏற்கனவே, நிலைமை பேரழிவுகரமாக உள்ளது. தேசியளவில் புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி ஒவ்வொரு நாளும் கூர்மையாக அதிகரிக்கின்றனது. ராபர்ட் கோச் நிறுவனத்தின் (Robert Koch Institute-RKI) தரவின்படி, இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 100,000 குடியிருப்பாளர்களுக்கு 139.2 என்ற வீதத்தில் இருந்தது. மேலும், இந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய நாளில் 130.2 ஆகவும், ஒரு வாரத்திற்கு முன்னர் 95.1 ஆகவும் இருந்தது. இறப்பு எண்ணிக்கையும் மீண்டும் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 489 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஜேர்மனியின் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையை 95,606 ஆக உயர்த்தியுள்ளது.

மருத்துவமனைகள் சுமையின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. “நாங்கள் ஒரு நெருக்கடியான தொற்றுநோய் சூழ்நிலையில் சிக்கியுள்ளோம்,” என்று ஜேர்மன் மருத்துவமனை சங்கத்தின் தலைமை நிர்வாகி ஜெரால்ட் காஸ், Redaktionsnetzwerk Deutschland இடம் தெரிவித்தார். மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்குள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “இந்த போக்கு தொடருமானால், இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் 3,000 நோயாளிகள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படலாம்,” என்று எச்சரித்துள்ளார். DIVI தீவிர சிகிச்சை பதிவேட்டின் படி, தற்போது, 1,800 க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், மற்றும் அண்ணளவாக 4,300 கோவிட்-19 நோயாளிகள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர்.

நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை உத்தியோகபூர்வமாக நியாயப்படுத்த தடுப்பூசி விகிதம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில், ஜேர்மன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் உட்பட கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் வைரஸூக்கு எதிராக முற்றிலும் பாதுகாப்பற்றவர்களாவர். மேலும், தடுப்பூசி மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பிப்ரவரி முதல் கடந்த வார இறுதி வரை, 117,763 தடுப்பூசி மூலம் பரவிய நோய்தொற்றுக்களை RKI பதிவு செய்துள்ளது. இருப்பினும், RKI இன் கருத்துப்படி, ஜேர்மனியில் 1.9 மில்லியன் மக்கள் மட்டுமே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்டாலும், பொறுப்பற்ற மறுதிறப்புக் கொள்கையின் விளைவாக ஐரோப்பாவின் நிலைமை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட மோசமாக உள்ளது. கடந்த வாரம், ஐரோப்பா முழுவதும் 1.4 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன, இது முந்தைய வாரத்தை விட 18 சதவீதம் அதிகமாகும். அதே கால கட்டத்தில், 25,503 இறப்புக்கள் பதிவாகியுள்ளன, இது 17 சதவீத அதிகரிப்பாகும். இதன் பொருள், ஐரோப்பாவில் கோவிட்-19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக இறந்துள்ளனர். ஆனால், அமெரிக்கா அல்லது இந்தியாவைப் போல, உண்மையான இறப்பு எண்ணிக்கை இங்கும் நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும்.

கிழக்கு ஐரோப்பாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. ரஷ்யாவும் உக்ரேனும் கிட்டத்தட்ட நாளாந்தம் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகளை பதிவு செய்கின்றன. வெள்ளிக்கிழமை, ரஷ்யாவில் 1,163 பேரும், உக்ரேனில் 648 பேரும் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்துள்ளனர். உலகளவில் உச்சபட்ச நோய்தொற்றுக்களைக் கொண்ட நாடுகளில் மூன்று பால்டிக் நாடுகளும் உள்ளன. லாட்வியாவில், ஒரு வாரத்தில் 100,000 குடியிருப்பாளர்களில் உருவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 934.5 ஆக இருந்தது, மேலும் இது எஸ்தோனியாவில் 847.8 ஆகவும், மற்றும் லித்துவேனியாவில் 747 ஆகவும் இருந்தது.

ருமேனியா மற்றும் பல்கேரியாவிலும் கூட இந்த எண்ணிக்கை சுமார் 500 ஆக இருப்பதால் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை. சுமார் 19 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ருமேனியாவில், சனிக்கிழமையன்று 15,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்நாட்டின் சுகாதார அமைப்புமுறையின் வரம்பு மீறிய சுமையின் காரணமாக சுமார் 30 நோயாளிகளை அண்டை நாடான ஹங்கேரிக்கு மாற்ற வேண்டியிருந்தது. புக்கரெஸ்டில் உள்ள அரசாங்கம் சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் அங்கு பேரழிவுகர சூழ்நிலை உருவானது. திங்கட்கிழமை நிலவரப்படி, ருமேனியா முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, மேலும் திருமணங்கள் மற்றும் மாநாடுகள் போன்ற பெரிய நிகழ்வுகள் நவம்பரில் தடை செய்யப்படும்.

இத்தகைய சூழ்நிலையில் SPD-FDP-பசுமைக் கட்சி கூட்டணி அனைத்து கோவிட்-19 பாதுகாப்புக்களையும் முடிவுக்குக் கொண்டுவர தயாராவதானது, வரவிருக்கும் கூட்டாட்சி அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இக்கூட்டணி, SPD-CDU பெரும் கூட்டணியை விட இன்னும் ஆக்கிரோஷமாக “உயிர்களை விட இலாபம் மேலானது” என்ற கொள்கையை செயல்படுத்த முனைகிறது. ஏற்கனவே, தங்கள் ஆய்வு கட்டுரையில், SPD, FDP மற்றும் பசுமை கட்சிகள் அரசியலமைப்பு சமன் செய்யப்பட்ட-வரவு செலவுத் திட்ட திருத்தத்தை மதிக்கவும், “ஒரு வணிகத் தளமாக ஜேர்மனியின் போட்டியிடும் தன்மையை” அதிகரிக்கவும் உறுதியளித்துள்ளன.

இந்த செய்தி தெளிவாக உள்ளது: அதாவது, புதிய அரசாங்கம், கடந்த வசந்த காலத்தின் கோவிட்-19 அவசரகால பிணையெடுப்புக்களின் போது பெரிய வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு வாரியிறைத்த பாரிய தொகையை தொழிலாள வர்க்கதினது உழைப்பிலிருந்து பிழிந்தெடுப்பதை அதன் வேலையாக கருதுகிறது. முதன்மையாக, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது போன்ற தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகள் இந்த திட்டநிரலுக்கு பொருந்தாது.

இந்த இரக்கமற்ற பாரிய நோய்தொற்றுக் கொள்கையின் பின்னணியில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் தங்கியுள்ளன, இது தனது சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பாரியளவில் மீண்டும் ஆயுதம் ஏந்துகிறது. ஆய்வுக் கட்டுரை, “ஐரோப்பா தொற்றுநோயில் இருந்து பெரியளவிலான மற்றும் ஸ்திரமான பொது நிதிகளின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக வலுவாக மீண்டெழுவதை உறுதி செய்வதே” நோக்கம் என கூறுகிறது. இந்த நோக்கத்திற்காக, ஜேர்மன் இராணுவத்தின் ஆயுத பலத்தை மேம்படுத்துவதைப் போல, “தேசிய ஐரோப்பிய இராணுவங்களுக்கு இடையேயான அதிகரித்த ஒத்துழைப்பு” இன்றியமையாதது என அறிவிக்கப்படுகிறது.

உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது வெறும் மருத்துவம் சார்ந்த பிரச்சினை அல்ல என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. அதாவது, சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைப் போல, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு இதற்கு தேவைப்படுகிறது.

கூட்டாட்சி தேர்தலுக்கான அதன் தேர்தல் முறையீட்டில், ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) இவ்வாறு தெரிவித்துள்ளது: “தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் என்பது ஒரு வர்க்கப் போராட்டமாக அபிவிருத்தி காண்கிறது, அதாவது, இது சமரசமற்ற நலன்களைக் கொண்டுள்ள முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கம் என்ற சமூகத்தின் இரு பெரும் வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டமாகும் என்பதை முன்னெப்போதையும் விட இப்போது தெளிவாகக் காட்டுகிறது. உத்தியோகபூர்வ தொற்றுநோய் கொள்கை மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தை முன்னிலைப்படுத்துகிறது. நமது கோரிக்கை என்னவென்றால்:

“தொற்றுநோய் முழு கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும், அத்துடன் சுய தொழில் செய்பவர்களுக்கு உண்மையான உதவியும் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு விரிவான ஆதரவும் வழங்கப்பட வேண்டும்! தடுப்பூசி தேசியவாதம் மற்றும் இலாபவெறிக்கு மாறாக உலகளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்!”

பல மில்லியன் உயிர்களை அச்சுறுத்துவதான ஜேர்மனியிலும் மற்றும் உலகெங்கிலும் பின்பற்றப்படும் ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைகள், இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு போராட்டத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading