முன்னோக்கு

அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கு: “இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது"

விஞ்ஞானிகள் உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான கருத்தை பலமாக முன்வைக்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியும் (IWA-RFC) ஏற்பாடு செய்த 'இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது' என்ற அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்ட உலகெங்கிலுமான முன்னணி விஞ்ஞானிகளின் ஒரு குழு கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு மிகப்பெரியளவில் பலமான கருத்தை முன்வைத்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளம் ஏற்பாடு செய்திருந்த இதற்கு முந்தைய ஒரு இணையவழி கருத்தரங்கும், இந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்வும் மட்டுமே இந்த பெருந்தொற்றின் இயல்பையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நேரம் ஒதுக்கி அளிக்க அர்பணித்திருந்த ஒரே முயற்சியாக இருந்தது. கோவிட்-19 மீது ஏதேனும் விஞ்ஞான விவாதம் இருந்தாலும், அது முக்கியமாக ஒரு சிறிய வட்டத்துக்குள் விஞ்ஞான ஆய்விதழ்களுடன் சுருக்கப்படுகிறது, அது உழைக்கும் மக்கள் நேரடியாக பங்கு பெறும் வகையில் பொது நிகழ்வுகளாக இருப்பதில்லை.

இந்த இணையவழி கருத்தரங்கம் அதன் சர்வதேச தன்மையில் தனித்துவமாகவும் இருந்தது. நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பாகிஸ்தான் என ஐந்து வெவ்வேறு நாடுகளில் இருந்து எட்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இதில் உரையாற்றினார்கள். அந்த நிகழ்வின் போதும், அது ஒளிபரப்பப்பட்டதற்குப் பிந்தைய முதல் 12 மணி நேரத்திலும், உலகம் முழுவதும் 100 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் அதை செவிமடுத்தனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை, அயர்லாந்து, பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், மலேசியா மற்றும் பிரேசில் ஆகியவை அதிக பார்வையாளர்களைக் கொண்ட நாடுகளில் உள்ளடங்கும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் மற்றும் உலக சோசலிச வலைத் தள எழுத்தாளரும் பயிற்சி மருத்துவருமான டாக்டர் பெஞ்சமின் மாத்தேயுஸ் ஆகியோர் அந்நிகழ்வை நெறிப்படுத்தி இருந்தனர். உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இப்போது ஐந்து மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கையில், அந்த இணையவழி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்த நோர்த், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் உயிரிழப்புகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார். உண்மையான இறப்பு எண்ணிக்கை 10 முதல் 20 மில்லியனுக்கு இடையே உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகம் என்று Economist பத்திரிகை செய்தியை மேற்கோளிட்டு நோர்த் சுட்டிக் காட்டினார். 'அரசாங்கங்கள் வேண்டுமென்றே விஞ்ஞானிகள் சொல்வதை கேட்க மறுத்ததற்காக உலகம் ஏற்கனவே பயங்கரமாக விலை கொடுத்துள்ளது,” என்றவர் குறிப்பிட்டார்.

அந்த இணையவழி கருத்தரங்கு முதலில் இரண்டு மணி நேரமே திட்டமிடப்பட்டிருந்தாலும், அது மூன்றரை மணி நேரம் நீடித்தது. விஞ்ஞானிகளில் பலர் அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கம், அந்நோயின் சுகாதார விளைவுகள் மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய உண்மையான தகவல்களை வழங்கும் விரிவான விளக்கப்படங்களோடு தயாரிப்புடன் வந்திருந்தனர்.

அந்த அறிக்கைகளில் இருந்து, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான சில குறிப்பிடத்தக்க முக்கிய உண்மைகள் வெளி வந்தன.

கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தின் உயிரியியல்துறை வளர்ச்சி ஆராய்ச்சியாளரும் கோவிட் இல்லா கனடா அமைப்பின் இணை ஸ்தாபகருமான டாக்டர். Malgorzata Gasperowicz, “SARS2 ஐ அகற்றுவதற்கான விஷயம்' என்ற அறிக்கையை வழங்கினார். கனடாவில் அகற்றுவதற்கான மூலோபாயத்தைப் பின்பற்றிய மாகாணங்களுக்கும் 'தணிப்பு' அல்லது கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயத்தைப் பின்பற்றிய மாகாணங்களுக்கும் இடையே மரணங்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையில் இருந்த மிகப்பெரும் வேறுபாட்டை அவர் ஆவணப்படுத்தினார். தடுப்பூசிகள் மட்டுமே வைரஸ் பரவலைத் தடுக்க போதாது என்பதைக் காட்டும் கணித மாதிரிகளையும் அவர் காட்டினார்.

அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட நாடுகளில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவது, தீவிரமான பரிசோதனை, நோய்தொற்றின் தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை உட்பட தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்த வைரஸை அகற்றி விடலாம் என்பதை அவரின் மாதிரி வடிவங்கள் எடுத்துக்காட்டுவதாக டாக்டர் காஸ்பெரோவிஜ் (Gasperowicz) கூறினார். தேவைப்படும் காலஅளவு மீது சில விவாதங்கள் இருந்தாலும், அத்தகைய மூலோபாயம் சாத்தியமானதும் மற்றும் அவசியமானதும் என்பதை விஞ்ஞானிகள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

'வைரஸ் எல்லா இடங்களிலும் இருப்பதாலும், நம்மிடையே [டெல்டா வகை] இருப்பதாலும் இப்போது அதை அகற்ற முடியாது, காலம் கடந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள்,” ஆனால் இந்த கூற்றுக்கள் தவறானவை என்று டாக்டர். காஸ்பெரோவிஜ் தெரிவித்தார். “கணிதம் அதை எடுத்துக் காட்டுகிறது. நம்மால் வளைவை வளைக்க முடிந்தால், R மதிப்பை [அதாவது பரவல் விகிதத்தை] குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வர முடிந்தால், நம்மால் அதை அகற்ற முடியும்,” என்றார்.

நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தின் கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவரும், நியூசிலாந்து வெலிங்டனில் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் மைக்கேல் பேக்கர், 'கோவிட்-19 ஐ முற்போக்கான முறையில் அகற்றுதல்: இது சாத்தியமா, விரும்பத்தக்கதா?' என்ற விளக்கத்தை வழங்கினார்.

அகற்றுவதற்கான உத்திகள், 'நிச்சயமாக, நிச்சயமாக வேலை செய்யும்' என்றவர் முடித்தார். உலக சுகாதார அமைப்பு போலியோ உட்பட பல நோய்களுக்கு அகற்றும் மூலோபாயத்தைப் பின்பற்றி உள்ளது என்றவர் குறிப்பிட்டார். இந்த பெருந்தொற்றுக்கு அதிகளவில் அல்லது முழுமையாக அகற்றும் மூலோபாயங்களைப் பின்பற்றிய சீனா, நியூசிலாந்து, தைவான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஒரு மில்லியன் பேரில் மூன்றில் இருந்து ஐந்து நபர்களுக்கு இடையே மரணங்களை மட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளன. இதை, அமெரிக்காவில் ஒரு மில்லியன் பேருக்கு அண்மித்து 2,000 உயிரிழப்புகளுடன் ஒப்பிடலாம், இது பிறப்பிலேயே ஆயுட்காலத்தை ஒன்றரை வருடங்கள் குறைய இட்டுச் சென்றுள்ளது.

மகத்தான பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தின் கீழ், நியூசிலாந்து அரசாங்கம் அதன் முந்தைய அணுகுமுறையில் இருந்து 'மாறும்' சமீபத்திய மாற்றங்கள், நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கூர்மையாக அதிகரிக்க சாத்தியமுண்டா என்று டேவிட் நோர்த் கேள்வி எழுப்பிய போது, “அவ்வாறு நிகழ அதிக வாய்ப்புள்ளது,” என்று பேக்கர் குறிப்பிட்டார்.

கொலராடோ, பவுல்டர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், துகள்சார் இயற்பியல் (aerosol physics) வல்லுனருமான டாக்டர் ஜோஸ்-லூயிஸ் ஜிமெனெஸ் (Jose-Luis Jimenez), “SARS-CoV-2 பரவும் விதம்' பற்றிய விளக்கத்தை வழங்கினார். கோவிட்-19 ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 எவ்வாறு நிமிட நேரத்தில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குக் காற்றுத்துகள்களில் செல்கிறது என்பதைக் காட்டும் விளக்கப்படங்களை டாக்டர் ஜிமெனெஸ் வழங்கினார். மக்கள் பேசும் போதெல்லாம் அல்லது சுவாச செயல்பாட்டிலும் கூட அவை வெளிப்படுகின்றன. குறிப்பாக பள்ளிகள் போன்ற காற்றோட்டம் குறைந்த அறைகளில் இந்த நோயின் அதிகமாக தொற்றுந்தன்மை அந்த கணக்கில் வருகிறது.

இந்த பெருந்தொற்று தொடங்கி ஓராண்டுக்குப் மேலான பின்னரும் இந்த வைரஸின் காற்றுவழிப் பரவலை உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புக் கொள்ள மறுப்பதற்காக, உலக சுகாதார அமைப்பைக் கடுமையாக விமர்சித்த ஜிமெனெஸ், இது 'பொது சுகாதாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் மிகப் பெரிய பிழைகளில் ஒன்றாகும்' என்றார். காற்றுவழிப் பரவலை அங்கீகரிக்க மறுப்பதற்கான காரணங்களில் ஒன்று அது அரசாங்கங்களுக்கு 'சௌகரிய' குறைவை ஏற்படுத்தும் என்பதால் ஆகும், ஏனென்றால் அது தனிநபர்களுக்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாத அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களைப் பொறுப்பாக்குகிறது என்றவர் தெரிவித்தார்.

இலண்டன் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார ஆராய்ச்சியாளரான டாக்டர் தீப்தி குர்தாஸ்னி நீண்டகால கோவிட் சம்பந்தமாக ஓர் அறிக்கை வழங்கினார், அதை அவர் 'பெருந்தொற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பெருந்தொற்று' என்று குறிப்பிட்டார். 12-15 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் நீண்ட கோவிட் அறிகுறிகள் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் மொத்த நோயாளிகளில் இரண்டிலிருந்து 14 சதவீதத்தினருக்கு ஏற்பட முடியும் என்பதைக் காட்டும் அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்களை அந்த அறிக்கை மீளாய்வு செய்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், உணர்ச்சிசார், உணர்வுசார் செயல்முறை மற்றும் நினைவகத்துடன் சம்பந்தப்பட்ட உடல் பாகங்களான இருதய நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய் மற்றும் மூளை நிலைக்குலைவு ஆகிய பெரும் ஆபத்தில் இருப்பதை அவர் விளக்கினார்.

நீண்டகால கோவிட் 'நிஜமானது மற்றும் பிரச்சினையானது என்பதை [அரசாங்கங்கள்] ஒப்புக் கொண்டால், பரவலைத் தடுக்க அவை இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கும்,” என்பதால் அவை அது குறித்து பேச விரும்புவதில்லை என்றார்.

பள்ளிகளைப் பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதன் மீது எதிர்ப்பை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றிய ஒரு இங்கிலாந்து பெற்றோரான லிசா டியஸின் ஒரு கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் குர்தாஸ்னி, இங்கிலாந்து அரசாங்கத்தின் கொள்கையை 'வெளிப்படையான குற்றம்' என்று குறிப்பிட்டார். இங்கிலாந்தில் உயர்நிலைப் பள்ளியின் 12 குழந்தைகளில் ஒருவரும் மழலையர் பள்ளியின் 30 குழந்தைகளில் ஒருவரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். 'எல்லா விதத்திலும், நம் அரசாங்கம் குழந்தைகளைப் பாதுகாக்க முற்றிலும் தவறிவிட்டது, அதன் விளைவு குழந்தைகளிடையே பாரியளவில் நோய்தொற்று ஏற்படுவது மட்டுமல்ல, மிகவும் அதிக விகிதத்தில் நீண்டகால கோவிட் நோயும் ஏற்படுகிறது,” என்றார்.

2009 இல் இருந்து 2014 வரை போலியோ ஒழிப்பு முயற்சியில் உலக சுகாதார நிறுவனத்துடன் பணியாற்றிய பாகிஸ்தானிய மருத்துவரான டாக்டர் ஜாயர், தெற்காசியா முழுவதும் இந்த பெருந்தொற்றின் பேரழிவுகரமான பாதிப்பை மீளாய்வு செய்தார். 'இந்த துணைக்கண்டத்தில் மில்லியன் கணக்கில் கூடுதல் இறப்புக்கள் பதிவாகியுள்ளன, அவை அறிவிக்கப்படவே இல்லை,' என்று கூறிய அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் மக்களைப் பாதுகாப்பதில் அவை தோல்வி அடைந்திருப்பதை மூடி மறைக்க முயல்கின்றன,' என்றார். 'இந்த பெருந்தொற்று உச்சத்தில் இருந்தாலும் [கூட], பொருளாதாரத்தைத் திறந்து விடுவது தான் … அவற்றின் முதல் முன்னுரிமையாக உள்ளது.'

ஒரு தொற்றுநோய் நிபுணரும், சுகாதார பொருளாதார வல்லுனரும், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எரிக் ஃபிய்ல்-டிங் (Dr. Eric Feigl-Ding) கூறுகையில், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகமும் இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் அரசாங்கங்களின் பரந்த கொள்கையும் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பது குறித்து பலமாக ஒரு குற்றப்பத்திரிகை முன்வைத்தார். “பொது சுகாதாரத்தின் தார்மீக முதுகெலும்பு அரசியலால் முற்றிலும் உடைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பத்திரிகைகளில் கோரிக்கைகளும் வாசகர் தலையங்கங்களும் வந்த நாட்கள் முடிந்து விட்டன, ஏனென்றால் 'அது பரவட்டும், அது அத்துமீறட்டும், பாரிய நோய்தொற்று ஏற்படட்டும் என்று 'வைரஸூடன் வாழுங்கள்' என்று அனைத்தையும் மீண்டும் திறந்து விட விரும்பும் அரசியல் சக்திகள், விஞ்ஞான பகுத்தறிவு என்னவாக இருந்தாலும் தெளிவாக அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பது நமக்குத் தெளிவாக தெரிகிறது,” என்று ஃபிய்ல்-டிங் தெரிவித்தார்.

மிகப்பெரியளவில் கொள்கை மாற்றம் இல்லையென்றால் அடுத்த மூன்றில் இருந்து ஆறு மாதங்களில் இந்த பெருந்தொற்று எப்படி இருக்கும் என்று டேவிட் நோர்த்தின் ஒரு கேள்விக்கு விடையிறுத்து, ஃபிய்ல்-டிங் பதிலளிக்கையில், “உலகளவில், நாம் ஆறு மாத காலத்திற்குள் இன்னும் உடல்களை எண்ணிக் கொண்டிருப்போம். வடக்கு அரைக்கோளத்தில் மிகவும் மோசமான குளிர்காலம் வரவிருக்கிறது,' என்றார். அந்த குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற விஞ்ஞானிகளும் இந்த முன்கணிப்புடன் உடன்பட்டனர்.

ஒரு ஓய்வு பெற்ற குடும்ப மருத்துவ நிபுணரும், 2020 வரையில் இலினோய் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மருத்துவ மற்றும் பயிலக கல்லூரியின் துணை பேராசிரியராக இருந்தவருமான டாக்டர் ஹோவர்ட் எர்மன், பைடென் நிர்வாகம் ஊக்குவித்த பள்ளிகளின் மறுதிறப்பைக் கடுமையாக கண்டித்தார். கடந்த ஐந்து வாரங்களில் குழந்தைகளிடையே ஒரு மில்லியன் குழந்தைகளுக்குப் புதிதாக நோய்தொற்று ஏற்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து, இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 588 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களில் 'பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கவும், அவர்களை அச்சுறுத்தவும், இப்போது அவர்களின் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பதற்காக அவர்களைத் தண்டிப்பதற்கும், ட்ரம்ப் மற்றும் பைடென் கீழ் ஒவ்வொன்றையும் செய்துள்ள' ஊடகங்களில் இருப்போரை டாக்டர் எர்மன் விமர்சித்தார்.

விஞ்ஞானிகள் தவிர, அந்த குழுவில் இருந்த பல தொழிலாளர்களும், இந்த பெருந்தொற்று தொழிலாளர்கள் மீதும், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள் மீதும் ஏற்கனவே ஏற்படுத்தி உள்ள பாதிப்பை விவாதித்தனர். பிரிட்டனில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவுகரமான நிலைமைகள் குறித்து லிசா டியஸ் உரையாற்றினார், அதை அவர் 'வாட்டிவதைக்கும் புவிக் கொள்கை' என்று குறிப்பிட்டார்.

ஒரு பாதுகாப்பான பணியிடத்திற்கான அவர் சக பணியாளர்களின் உரிமையைப் பாதுகாத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இலண்டன் பஸ் ஓட்டுநர் டேவிட் ஓ'சுல்லிவன் பேசுகையில், ஜோன்சன் நிர்வாகத்தின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க' கொள்கை பேருந்து ஓட்டுனர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசினார், அது 'விஞ்ஞானம் மீதான மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர். இரண்டும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்கிறது' என்றவர் விவரித்தார்.

ஓர் அமெரிக்க ஆசிரியரும் டென்னசியின் சாமானிய கல்வியாளர் குழுவின் உறுப்பினருமான டோனா கூறுகையில், அவரும் மற்ற ஆசிரியர்களும் 'எங்கள் தலைவர்களால், எங்கள் நிர்வாகிகளால் மற்றும் எல்லாவற்றிலும் மிக மோசமாக, எங்கள் தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டதாக உணர்கிறோம்' என்றார். 'இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், [தொழிலாளர்களும் விஞ்ஞானிகளும்] நம் அரசாங்கங்கள் மற்றும் வணிகத் தலைவர்களின் இலாப நலன்களுக்கு எதிரான படைகளில் சேர வேண்டும்' என்றார்.

அக்கூட்டத்தை நிறைவு செய்து பேசுகையில், நோர்த் விளக்கினார்: 'இறுதியில் அந்த வைரஸை முற்றிலுமாக ஒழிக்க வழிவகுக்கும் ஒரு பாதையான அகற்றும் விஷயம், விஞ்ஞான நிலைப்பாட்டில் மிகவும் பெரியளவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதற்கு எதிராக வாதிட சாத்தியமுள்ளது என்று புரிந்து கொள்வது கடினம்.'

ஆனால் ஆரம்பத்திலிருந்தே அந்த கொள்கையைத் தீர்க்கமான சமூக நலன்கள் தீர்மானித்துள்ளதுடன், ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்கள் விஞ்ஞானத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. “இந்த இடத்தில் தன்னைச் சிதறடித்துக் கொள்வதைத் தவிர அதன் பணத்தை வேறெந்த சிறந்த வழியிலும் சிறப்பாக பயன்படுத்த சிந்திக்காத ஓர் ஆளும் உயரடுக்கின் முட்டாள்தனத்தை, அபத்தமான, பிரயோசனமற்ற, ஊதாரித்தனத்தைப் பாராட்டும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்,” 'இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை' என்று நோர்த் கூறினார்.

இந்தக் காரணத்திற்காக தான், அந்த இணையவழி கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானபூர்வ தகவல் முதலாளித்துவ ஊடகங்களால் முற்றிலும் ஒதுக்கப்படுகின்றன. இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, உலக சோசலிச வலைத் தள அரங்கத்திற்கு வெளியே, நீண்டகால கோவிட் பற்றிய விஞ்ஞானம் குறித்தோ, காற்றுவழி பரவல், வைரஸ் பரவலில் பள்ளிகள் வகிக்கும் பாத்திரம், அல்லது தொழிலாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஏதேனும் முக்கிய தகவல்கள் குறித்தோ மக்களுக்குக் கல்வியூட்டும் எந்தவித முறையான முயற்சியும் இருக்கவில்லை.

விஞ்ஞானபூர்வ உண்மையுடன் ஒன்றிணைந்த நலன்களைக் கொண்ட சமூக சக்தியும் உள்ளது, அது மக்கள் தொகையில் பெருந்திரளான தொழிலாள வர்க்கம்.

ஆகஸ்டில் நடத்தப்பட்ட கடைசி இணையவழி கருத்தரங்கிற்குப் பின்னர், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் வர்க்க போராட்டத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோர்த் சுட்டிக்காட்டினார். “லீசா டியஸ் எடுத்த முன்முயற்சி, தங்கள் சொந்த போராட்டங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்க சாமானிய தொழிலாளர் குழுக்களின் தொழிலாளர்கள் எடுத்த முயற்சிகள், அவர்களின் ஆலைகளிலும் அவர்கள் பள்ளிகளிலும் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக போராட்டத்தை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான முயற்சிகள் ஆகியவை ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கான அறிகுறிகளாகும்.”

ஃபயர்பாஹ் மீதான மார்க்சின் ஆய்வறிக்கையின் புகழ்பெற்ற கருத்திற்கு நிகராக அதே சாயலில் பின்வருமாறு கூறி நோர்த் நிறைவு செய்தார்: “விஞ்ஞானிகள் இந்த பெருந்தொற்றை விளங்கப்படுத்தி உள்ளனர். அது எவ்வாறு பரவுகிறது, அதை எவ்வாறு நிறுத்தலாம் என்பதை அவர்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவது தொழிலாள வர்க்கத்திற்கான சவாலாகும்.”

அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட தகவல் வளத்தை ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு தொழிலாளரும் படிக்க வேண்டும். இந்த இணையவழி கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானபூர்வ தகவலும் முன்னோக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த பெருந்தொற்றுக்கு எதிரான மற்றும் பாரிய மரணத்திற்கான ஆளும் வர்க்க கொள்கைக்கு எதிரான போராட்டம், சுரண்டல், சமத்துவமின்மை, சர்வாதிகாரம், போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading