முன்னோக்கு

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளும் வர்க்க போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை தொழிலாளர்துறை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க குடும்பங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை கடந்தாண்டு 6.2 சதவீதம் அதிகரித்திருந்தது. இது 1990 க்குப் பிந்தைய அதிகபட்ச உயர்வாகும். அக்டோபரில் மட்டும், முக்கிய பொருட்களின் விலைகள் அண்மித்து 1 சதவீதம் அதிகரித்தது.

ஏப்ரல் 29, 2020 அன்று டல்லாஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில், கோவிட்-19 பரவுவதைப் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், ஒரு வாங்குபவர் இறைச்சிப் பொருட்களைப் பார்க்கும்போது முகமூடியை அணிந்துள்ளார். (AP Photo/LM Otero, File)

உத்தியோகபூர்வ பணவீக்க புள்ளிவிபரங்கள் மட்டுமே கூட இந்த விபரங்களைக் கூறத் தொடங்குகின்றன:

  • உணவுப் பொருட்கள் ஆண்டுக்கு ஆண்டு 5.4 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக பன்றி இறைச்சி 20 சதவீதமும், மாட்டிறைச்சி வறுவல் 25 சதவீதமும் அதிகரித்துள்ளன, இந்த குறியீடு, பன்றி இறைச்சி, மீன் உணவுகள், முட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பொறுத்த வரையில் பொதுவாக 11.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • துரித உணவு வகைகளின் விலைகள் கடந்தாண்டுடன் ஒப்பிட்டால் 7.1 சதவீதம் அதிகரித்துள்ளன. முழு அளவிலான சேவை உணவகங்களில் இதன் விலைகள் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • எரிபொருள் நிரப்புமிடங்களில் எரிவாயு நிரப்பும் கட்டணம் கடந்த 12 மாதங்களில் 49.6 சதவீதம் அதிகரித்துள்ளது. AAA விபரங்களின்படி, செவ்வாய்கிழமை தேசியளவிலான சராசரி கடந்தாண்டின் 2.11 டாலரை விட அதிகரித்து, ஒரு கேலனுக்கு 3.42 டாலராக இருந்தது.
  • எரிபொருட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக 30 சதவீதம் அதிகரித்துள்ளன. குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் வெப்பமூட்டும் எரிபொருளுக்காக 43 சதவீதமும் இயற்கை எரிவாயுக்காக 30 சதவீதமும் அதிகமாக செலவிட நேரிடும் என்று அமெரிக்க எரிசக்தி தகவல் ஆணையம் முன்கணிக்கிறது.
  • வாகன செலவுகளும் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளன. பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் 26.4 சதவீதமும், புதிய கார்களின் விலைகள் 9.8 சதவீதமும், வாடகைக் கார்களின் கட்டணம் 39.1 சதவீதமும் அதிகரித்துள்ளன.
  • வீட்டு உபயோகப் பொருட்கள் (6.6 சதவீதம்), தங்குமிடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோர உணவகங்கள் (25.5), நாற்காலி மற்றும் அறை அலங்கார சாதனங்கள் (12 சதவீதம்), இடம் நகர்த்துவதற்கும் போக்குவரத்துக்குமான செலவுகள் (7.9 சதவீதம்), தபால் (7.2), குப்பை மற்றும் வேண்டாத பொருட்கள் சேகரிப்பு (5.3), புகையிலை (8.5), கணினிகள் (8.4), விளையாட்டுப் பொருட்கள் (8.7), கேமராக்கள் மற்றும் கேமரா உபகரணங்கள் (5.5), அத்துடன் ஆடை துவைப்பு இயந்திரங்கள் (6.9) ஆகியவை மற்ற முக்கிய அதிகரிப்புகளில் உள்ளடங்குகின்றன.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மணி நேர சராசரி வருவாய்கள் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளன என்றாலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு எதிராக நிறுத்தினால், சம்பளங்கள் 1.1 சதவீதம் குறைந்துள்ளன — இது குறிப்பிடத்தக்க ஒரு தொழிலாளியின் சம்பள வெட்டாக உள்ளது.

இதை விட என்னவென்றால், நுகர்வு விலைகளின் அதிகரிப்புகள் பாரபட்சமாக மக்களின் வறிய பிரிவுகள் மீது சுமத்தப்படுகின்றன. ஒரு கேலன் எரிவாயுக்கு ஒரு டாலர் என்பது பணக்காரர்கள் மீது விழுவதை விட பலமாக 2019 இன் சராசரி கூலியான 19 டாலர் சம்பாதிக்கும் ஒரு தொழிலாளர் மீது அதிக சுமையாக விழுகிறது.

தொழிலாளர்களால் இந்த அதிகரிப்புகளைத் தாங்க முடியாது. மார்ச் மாதம் Jungle Scout நுகர்வோர் அறிக்கையின் கருத்துக்கணிப்பு, 56 சதவீத அமெரிக்கர்கள் மாதாந்தர சம்பளத்தை முழுமையாக செலவிட்டு உழைக்கும் ஏழைகளாக வாழ்வதைக் கண்டறிந்தது. இந்த வாரம், பெடரல் ரிசர்வ் அறிவிக்கையில், அமெரிக்க குடும்பங்களின் கடன் வரலாற்றில் இல்லாதளவு 15.24 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்திருப்பதாக அறிவித்தது. இது கடன் அட்டை கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் மாணவர் கல்விக் கடன்களால் ஏற்பட்டதாகும்.

இத்தகைய அபிவிருத்திகளைக் குறித்து கருத்துரைத்து CNN எழுதியது, “இப்போது உதவிப்பொதி ஊட்டச்சத்து தீர்ந்து விட்டது, நுகர்வோர்கள் செலவுகளுக்காக அவர்களின் கடன் அட்டைகளுடன் மீண்டும் பழைய வழியில் செல்கிறார்கள்.” அமெரிக்க ஊடகங்களின் குறிப்பிடத்தக்க ஈவிரக்கமற்ற அலட்சியமான மொழியில் கூறப்பட்டிருந்தாலும் இந்த குறிப்பு ஓர் அடிப்படை யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டுகிறது: அதாவது, இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உயிர்வாழ அனுமதித்த அற்ப நிதியுதவியும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, தொழிலாள வர்க்க குடும்பங்கள் அதிகரித்து வரும் அவர்களின் கட்டணங்களைச் செலுத்த கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போதைய இந்த பணவீக்க அதிகரிப்பானது சமூக சமத்துவமின்மை அதிகரிப்பை ஊக்குவித்த தசாப்தகால கொள்கைகளுடன் சேர்ந்து, இந்த பெருந்தொற்றால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடி குறுக்கிட்டதில் இருந்து எழுகிறது.

தசாப்தங்களாக, அமெரிக்க அரசாங்கமும் அரசியல் ஸ்தாபகமும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்கு உட்படுத்தியும், அத்துடன் நிதிய உயரடுக்கிற்கு வரம்பின்றி பணத்தை வாரியிறைத்தும் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல முயன்றது.

1979 இல் கார்ட்டர் நிர்வாகம் பௌல் வோல்க்கரைப் பெடரல் ரிசர்வ் தலைவராக நியமித்தது. வோல்க்கர், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முறிப்பதற்காக வட்டி விகிதங்களை வரலாற்றில் இல்லாதளவில் உயர்த்த நகர்ந்தார்.

1980 இல் ரீகன் தேர்வானதும் இந்த தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் தலையிடாது என்று AFL-CIO இன் உத்தரவாதங்களைப் பெற்ற ரீகன், ஆகஸ்ட் 1981 இல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்கினார். AFL-CIO இன் காட்டிக்கொடுப்பு தொழிலாளர்களுக்கு தோல்விகளின் ஓர் அலையைத் தொடங்கி வைத்தது, அதேவேளையில் தொழிற்சங்க அதிகாரத்துவமோ குறைவூதிய உழைப்பு ஒப்பந்ததாரர்களாக உருமாறியதுடன், அதிகரித்தளவில் அவற்றின் செல்வசெழிப்பான மற்றும் ஊழல்பீடித்த நிர்வாகிகளின் நலனுக்காக தொழிலாள வர்க்கம் மீதான பொலிஸ் பிரிவாக செயல்பட்டன.

ஆனால் இந்தக் கொள்கைகளை உந்துவதற்கு அடியிலிருந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை பொருளாதார நெருக்கடியோ இன்னும் ஆழமடைந்தது. சொத்து குமிழிகளைத் தொடரச் செய்ய ஊகவணிகம் மற்றும் கடனை பெடரல் ரிசர்வ் ஊக்குவித்தது. 1987 இல் தொடங்கி, ஒரு நெருக்கடி மாற்றி ஒரு நெருக்கடியில், பெறுமதியற்ற சொத்திருப்புக்களை விலைக்கு வாங்கவும், வட்டிவிகிதங்களைக் குறைக்கவும், நிதியியல் சந்தைகளுக்குள் பணத்தைப் பாய்ச்சவும் அரசு தலையிட்டது. உயர்மட்ட வர்க்கங்களின் செல்வவளம் ஊதிப் பெரிதாயின, அதிகரித்து வந்த பங்கு விலைகளோ கோரப்பற்களோடு புன்னகைத்தன.

இந்தக் கொள்கை 2008 இல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அமெரிக்காவில் பெறுமதியற்ற வீட்டு அடமானக் கடன் சொத்திருப்புகள் ஒன்றுமில்லாது போனபோது, அது ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தையும் சுற்றி வளைத்தது. இதற்கு விடையிறுப்பாக பெடரல் ரிசர்வும் ஏனைய மத்திய வங்கிகளும் முதலாளித்துவச் சந்தைகளுக்கு முட்டுக்கொடுக்க முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கைகளை எடுத்தன. புஷ் மற்றும் ஒபாமா நிதிய சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கில் டாலர்களைப் பாய்ச்சியதோடு, நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டைப் பிணையெடுத்தார்கள், அந்த பொறிவுக்குப் பொறுப்பானவர்களை வழக்கில் கொண்டு வர மறுத்ததுடன், வாகனத் தொழில்துறையில் சம்பளங்கள் மற்றும் சலுகைகளை வெட்டி அமெரிக்க உற்பத்தித்துறையை மாற்றியமைத்தார்கள்.

2008 க்கு விடையிறுப்பாக நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சப்பட்டு இருந்த ட்ரில்லியன் கணக்கான டாலர்கள், 2020 வாக்கில், பங்குச் சந்தையை முன்பில்லாத உயரத்திற்கு இட்டுச் சென்றன.

இத்தகைய வெகுமதிகளை இந்த பெருந்தொற்று தற்காலிகமாக சீர்குலைத்த போதும், ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு செல்வந்தர்களுக்கு மற்றொரு மிகப் பெரிய பிணையெடுப்பை முடுக்கி விடுவதாக இருந்துள்ளது. பெடரல் ரிசர்வ் சொத்திருப்புகள் கொள்முதல் செய்யும் ஓர் அவசர திட்டத்தைத் தொடங்கியது. டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட சுமார் 4.5 டிரில்லியன் டாலர்கள் பணம் நிதியியல் சந்தைகளுக்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சொத்திருப்பு கொள்முதல்கள் ஒவ்வொரு மாதமும் 120 பில்லியன் டாலர்கள் வரை தொடர்கிறது. இது தவிர, 2.3 ட்ரில்லியன் டாலர் செலவாகும், கேர்ஸ் சட்டம் (CARES act), பெரும்பாலும் மிகப் பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்குப் பிணையெடுப்பாக இருந்தது, அவற்றில் பல நிறுவனங்களும் நேரடி உதவியாகவே பல பில்லியன் டாலர்களைப் பெற்றன.

இந்த இலவசப் பணம் எல்லா நிதிய சொத்திருப்புகளின் மதிப்பையும் மற்றும் செல்வந்தர்களின் செல்வவளத்தையும் பாரியளவில் ஊதிப் பெரிதாக்குவதற்கு எரியூட்டி உள்ளது.

அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் வாழ்வுக்குக் கட்டளையிடும் இந்த நிதிய தன்னலக்குழு, இந்த பெருந்தொற்றால் தூண்டப்பட்ட நெருக்கடியின் ஒட்டுமொத்த சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த தீர்மானமாக உள்ளது. இந்த மேலோங்கிய கவலை தான் 2020 ஆரம்பத்தில் கோவிட்-19 முன்வைத்த ஆபத்துக்களை மூடிமறைக்கவும், பின்னர் மார்ச் இறுதியில் தொடங்கி பொது சுகாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு கைவிடுவதற்கும், எவ்வளவு பாதுகாப்பற்றதாக அல்லது குறைவூதியமாக இருந்தாலும் எந்தவொரு வேலையாக இருந்தாலும் கிடைத்தால் போதும் என்று ஏற்றுக் கொள்ள தொழிலாளர்களை நிர்பந்திக்கும் நோக்கில், அதைத் தொடர்ந்து உடனடியாக அவசரகால வேலையின்மை உதவித்தொகைகளைக் குறைக்கவும் இட்டுச் சென்றது.

ஆனால் நோய்-நிறைந்த ஆலைகள் மற்றும் சரக்கு கிடங்குகளுக்குள் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் இருந்த போதும், இத்துடன் அது தீவிரப்படுத்திய சர்வதேச பதட்டங்களுடன் சேர்ந்து, இந்த பெருந்தொற்று உலகளாவிய வினியோக சங்கிலியில் ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோயால் பாதிக்கக்கூடிய உடல் நிலமைகளைக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள், அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அவ்வாறு இருந்ததால், அவர்கள் பரவிக் கொண்டிருந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் வறிய கூலி வேலைகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளனர்.

“பிரமாண்ட மறுப்பு' என்றழைக்கப்படுவதிலும், அதாவது குறைவூதிய தொழிலாளர்கள் அவர்கள் வேலைகளைக் கைவிட்டு வருவதிலும் மற்றும் வேலைநிறுத்தங்களிலும் இரண்டிலும் வெளிப்பட்டவாறு, சம்பள உயர்வுக்காக தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோரிக்கைகள் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வழி வகுத்துள்ளது.

இந்த வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு, வொல்வோ, டீர், டானா மற்றும் ஏனைய இடங்களிலும் நடக்கும் மிகப் பெரிய போராட்டங்கள் உட்பட, தசாப்தங்களாக இல்லாதளவுக்கு மிகப் பெரிய வேலைநிறுத்த அலையைத் தூண்டியுள்ளது.

இத்தகைய ஒவ்வொரு போராட்டங்களிலும், தொழிலாளர்கள் அவர்களின் முதலாளிமார்களை மட்டுமல்ல, தொழிற்சங்கங்களையும் எதிர்கொள்கிறார்கள், இவை ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும் திட்டமிட்டு தனிமைப்படுத்தி, நாசப்படுத்தி, முடிவுக்குக் கொண்டு வர செயல்பட்டுள்ளன. இத்தகைய கருங்காலி அமைப்புகள் அவற்றின் வழியில் சென்றால், 2021 வர்க்க போராட்டமும், சம்பளக் குறைப்புகள், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் அதிகரித்த பெருநிறுவன இலாபங்களைப் பெற்ற கடந்த தசாப்தங்களின் போராட்டங்களைப் போல அதை வழியில் செல்லக்கூடும்.

ஆனால் நாடெங்கிலுமான தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில், புதிய சாமானிய தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இவை தொழிலாளர்களின் உண்மையான நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இத்தகைய அமைப்புகள் வெற்றி பெற, இவை, ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலமாக, தொழிற்சங்கங்கள் அவற்றின் மீது திணிக்கும் தனிமைப்படுத்தலை முறிக்க வேண்டும். அதாவது மற்ற துறைகள், மற்ற மாநிலங்கள் மற்றும் முக்கியமாக மற்ற நாடுகளின் தொழிலாளர்களுடன் பிணைப்புகளையும் தொடர்புகளையும் ஸ்தாபிக்க வேண்டும்.

வர்க்க போராட்ட வளர்ச்சியை முகங்கொடுத்து, அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் 'தொழிலாளர் பிரச்சினையை' பலவந்தமாக தீர்க்க ஆலோசித்து வருகின்றன, “துறைமுகங்களை செயல்படுத்த' தேசிய பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்த பரிசீலித்து வருவதாக பைடென் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க ஆளும் வர்க்கம், மரணம் நேர்ந்தாலும் அல்லது பொருளாதார துயரம் ஏற்பாட்டாலும், இந்த நெருக்கடியின் மொத்த செலவையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முனைந்துள்ளனர், அதேவேளையில் உலகின் பில்லியனர்கள் அளவிட முடியாளவில் செல்வவளங்களைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இதுவரை பொறுத்ததே போதும். அமெரிக்க முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட இந்த சுகாதார, சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான செலவுகளை அமெரிக்காவின் சுரண்டப்படும் மற்றும் வறிய தொழிலாளர்கள் அல்ல, மாறாக அமெரிக்காவின் நிதிய தன்னலக் குழுவே ஏற்க வேண்டும் — அமெரிக்க தொழிற்துறையின் நன்மைக்காக வேலையிழப்புகளையும் சம்பள வெட்டுக்களையும் அமெரிக்க தொழிலாளர்களே ஏற்க வேண்டுமென தசாப்தங்களாக அவர்களுக்குக் கூறப்பட்டு வந்துள்ளது.

Loading