மக்ரோன், பிரான்சில் வெகுஜன தொற்றுக்கும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய் இரவு, ஐரோப்பா முழுவதும் COVID-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதால், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒரு பிரதம நேர உரையை வழங்கினார். இது, 'பணக்காரர்களின் ஜனாதிபதியின்' கொலைகார ஆணவத்தை உருவகப்படுத்தியது. ஐரோப்பாவில் தினமும் 3,000 பேர் COVID-19 நோயால் இறக்கையிலும், மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) பிப்ரவரிக்கு முன் 500,000 COVID-19 இறப்புகளைப் பற்றி எச்சரித்திருக்கையிலும், அவர் ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை காப்பீடு மீதான புதிய தாக்குதல்களை முன்மொழிந்தார், அதே நேரத்தில் பிரெஞ்சு மக்களை “வைரஸுடன் வாழ வேண்டும்” என்று கோரினார்.'

ஏப்ரல் மாதம் நடைபெறும் மறுதேர்தலுக்கான வேட்புமனுவை அவர் இன்னும் முறையாக அறிவிக்காத நிலையில், மக்ரோன் தனது சொந்த செல்வாக்கற்ற தன்மையில் மிகவும் அக்கறை கொண்டிருந்தபோதிலும், இந்த பேச்சு அவரது மறுதேர்தல் முயற்சியை திறம்படக் குறித்தது. தற்போது மக்ரோன் மற்றும் நவ-பாசிச வேட்பாளர்களான எரிக் செமூர் மற்றும் மரின் லு பென் ஆகியோரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, நடத்தப்படும் பிரச்சாரம் அரசியல் ரீதியாக நச்சுத்தன்மை வாய்ந்தது. மக்ரோனின் பேச்சானது, தொற்றுநோயைத் தடுக்க எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வததோடு, தொழிலாளர்களின் உயிர் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தின் இழப்பில் வங்கிகளின் இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் சிறந்த வேட்பாளர் என்பதை உறுதி செய்வதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டிருந்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன். (Ludovic Marin, Pool via AP)

பிரான்சில் ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மற்றும் டஜன் கணக்கானோர் COVID-19 இறந்துகொண்டிருக்கையில், மக்ரோன் தொற்றுநோய் குறித்த தனது பதிவை முற்றிலும் தவறான விளக்கத்துடன் தொடங்கினார்:

எங்களின் முடிவுகள் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு, நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், விகிதாசாரரீதியாக செயல்பட வேண்டும் என்ற நமது விருப்பம் மற்றும் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு என்பது நமது மிகப்பெரிய பலம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இதுவே 2020 வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் பூட்டுதல்கள் தேவைப்படும்போது இருமுறை முடிவெடுக்க வழிவகுத்தது. பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், எங்கள் அயலவர்கள் எல்லாவற்றையும் மூடிவிட்ட நிலையில், நாங்கள் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொருத்தமான விதிகளுக்குள் நம்மை மட்டுப்படுத்தினோம்.

மக்ரோன் பள்ளிகளுக்கு மேலும் பூட்டுதல் அல்லது தொலைதூரக் கல்வியை நிராகரித்தார், அதற்கு பதிலாக வைரஸ் பரவும் போது இறப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் டிசம்பரில் தொடங்கி, தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸ் பரிந்துரைத்தார். இறுதியில் அவர், 'ஒட்டுமொத்தமாக உலக மக்களும் நோய்த்தடுப்பு மருந்துகள் பெறும் வரை நாம் வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகளுடன் வாழ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்' முடித்தார்.

இந்த நிலைப்பாடு, ஐரோப்பா முழுவதும் நூறாயிரக்கணக்கான மக்களையும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களையும் வைரஸால் இறப்பதைத் தேவையில்லாமல் தண்டிக்கிறது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் இழிவான அழைப்பான, 'இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்' என்பதை மக்ரோன் பின்பற்றுகிறார். வைரஸ் பரந்த அளவில் பரவுவதால், நூறு மில்லியன் கணக்கான தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது குறைந்த சமீபத்திய தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மங்குவதால், இந்தக் கொள்கை மேலும் புதிய மாறுபாடுகள் மற்றும் வெகுஜன நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும்.

அதனால்தான், மக்கள்தொகையில் பெரும்பகுதி தடுப்பூசி போடப்பட்டுள்ளபோதினும், ஐரோப்பா இந்த மாதத்தில் 100,000 COVID-19 இறப்புகளைக் காணும் பாதையில் உள்ளது. பிரான்ஸைப் போலவே அதன் மக்கள்தொகையில் தடுப்பூசி போடப்பட்ட அதே விகிதத்தைக் கொண்ட ஜேர்மனி, ஒவ்வொரு நாளும் 45,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் மற்றும் 150 முதல் 250 இறப்புகளை காண்கிறது.

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறும் மக்ரோனின் கூற்றுக்கள் தவறானவை. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, அவரது அரசாங்கம் வைரஸைப் பற்றி பொய் சொன்னது மற்றும் விஞ்ஞான ஆலோசனைகளை காலடியில் போட்டு நசுக்கியது. தொற்றுநோயைக் கையாண்ட வகையில் இப்போது வழக்குத் தொடரப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் அன்னியேஸ் புஸன், COVID-19 ஐ 'சிறிய காய்ச்சல்' என்று பகிரங்கமாக நிராகரித்தார், அதே நேரத்தில் இந்த வைரஸ் சீனாவில் வெகுஜன இறப்புகளை ஏற்படுத்துகிறது என்று மக்ரோனின் அமைச்சரவைக்கு தனிப்பட்ட முறையில் எச்சரித்தார். பிரெஞ்சு அரசாங்கமும் ஆரம்பத்தில் பெரிய அளவிலான முகமூடிகளை அழித்தது, அவை வைரஸை எதிர்த்துப் போராட பயனற்றவை என்று பொய்யாகக் கூறின.

2020 வசந்த கால பூட்டுதல் குறித்து மக்ரோன் முடிவு செய்யவில்லை: இது இத்தாலியில் இருந்து ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் பரவிய வேலைநிறுத்த அலைகளால் திணிக்கப்பட்டது. 'தொழிலாளர்களின் அழுத்தம் காரணமாக நிறுவனங்கள் செயல்பாடுகளைத் தொடர முடியாதுள்ளது,' என்று பிரெஞ்சு வணிக அமைப்பின் (மெடெஃப்) துணைத் தலைவர் பாட்ரிக் மார்ட்டின் அந்த நேரத்தில் கூறினார், 'தொழிலாளர்களின் அணுகுமுறையில் மிகவும் கொடூரமான மாற்றம்' என்று புலம்பினார். இந்த கடுமையான பூட்டுதல் பிரான்சில் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையை 500 க்கும் கீழே கொண்டு வந்தது மற்றும் பிரான்சில் சுமார் 27,000 மற்றும் ஐரோப்பாவில் 200,000 ஆக ஒரு பெரிய அலையை நிறுத்தியது.

COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை இப்போது ஐரோப்பாவில் 1.3 மில்லியனாகவும், பிரான்சில் 118,000 ஆகவும் இருந்தால், இதற்குக் காரணம், மக்ரோன் நிர்வாகமும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் தொற்றுக்கள் மீண்டும் வளர்வதைத் தடுக்க தொடர்புத் தடங்களை கண்டறிவதை செயல்படுத்த மறுத்துவிட்டன, மேலும் மீண்டும் ஒரு கடுமையான பூட்டுதல் கட்டுப்பாட்டை சுமத்துவதை நிராகரித்துளன. அப்போதிருந்து, அவர்கள் பள்ளிகள் மற்றும் பணியிடங்களைத் திறந்து வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, பெரும் பணக்காரர்களுக்கு இலாபம் தொடர்ந்து வருவதை உறுதிசெய்கிறார்கள். நடைமுறைப்படுத்தப்பட்ட 'பூட்டுதல்கள்' கண்டிப்பானவை அல்ல, அத்தியாவசியமற்ற பணியிடங்களைத் திறந்து வைப்பது மற்றும் குழந்தைகளை பள்ளியில் வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அவர்களின் பெற்றோர்களை வேலையில் வைத்திருக்க முடியும்.

சீனாவுடனான வேறுபாட்டு தன்மையானது மக்ரோன் நிர்வாகத்தின் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு ஆகும். அங்கே, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது 5,000க்கும் குறைவான இறப்புகளுக்குள் மட்டுப்படுத்தியுள்ளது மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகக் குறைவான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்த நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கி 1.25 டிரில்லியன் யூரோக்களை வங்கிப் பிணையெடுப்புகளில் அச்சிட்டது மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) 750 பில்லியன் யூரோ பெருநிறுவன மற்றும் அரசு பிணை எடுப்புத் திட்டத்தைத் தொடங்கியது, அதில் பிரான்ஸ் 100 பில்லியன் யூரோக்களை பெறும் என்று மக்ரோன் அறிவித்தார்.

மக்ரோன் அரசாங்கமும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கமும், இந்த பாரிய பொதுப் பணம் தொடர்ந்து நிதியப் பிரபுத்துவத்தின் பைகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்ரோன் தொழிலாளர்களுக்கு சில சலுகைகளை முன்மொழிகிறார், அதாவது இயற்கை எரிவாயு விலையில் தற்காலிக உச்சவரம்புடன் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு பதிலளிப்பது மற்றும் மாதத்திற்கு 2,000 யூரோக்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு 100 யூரோ காசோலைகளை விநியோகிப்பது. எவ்வாறாயினும், உண்மையான பணம் பில்லியனர்களுக்கு செல்கிறது, அவர்கள் ஐரோப்பாவில் தொற்றுநோய்களின் போது தங்கள் நிகர மதிப்பில் 1 டிரில்லியன் யூரோக்களை சேர்த்துள்ளனர்.

Challenges இதழின்படி, பிரான்சில் உள்ள 500 பணக்கார குடும்பங்கள் இந்த ஒரு வருடத்தில் தங்கள் செல்வத்தில் 30 சதவீதம் அதிகரித்து, இப்போது 1 டிரில்லியன் யூரோக்களுக்கும் சற்று குறைவாக கொண்டுள்ளனர். LVMH ஆடம்பர பொருட்கள் உற்பத்தி நிறுவன உரிமையாளர் பேர்னார்ட் ஆர்னோ 2020ல் இருந்து 57 சதவீதம் அதிகரித்து 157 பில்லியன் யூரோக்களை கொண்டுள்ளார்; ஹெர்மேஸ் குடும்பம், 47 சதவீத அதிகரிப்புடன் 81.5 பில்லியன் யூரோக்களும், L'Oréal வாரிசு பிரான்சுவாஸ் பெத்தான்கூர்-மெய்யர்ஸ், 40 சதவீத அதிகரிப்புடன் 71.4 பில்லியன் யூரோக்களும்; Chanel இன் வேர்தைமர் குடும்பமானது, 67 பில்லியன் யூரோக்களுடன் 26 சதவீதம் அதிகரித்துள்ளது; கெரிங் சொகுசு குழுமத்தின் பிரான்சுவா பினோ, 41.5 பில்லியன் யூரோக்களுடன், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தொற்றுநோய் காரணமாக பிரான்சின் பொருளாதாரம் 8 சதவீதம் சுருங்கியுள்ளது.

மக்ரோனின் உரையின் எஞ்சிய பகுதி, அவரது செல்வந்த ஆதரவாளர்களின் செல்வத்தை மேலும் உயர்த்தும் சிக்கன நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. 'வரவிருக்கும் வாரங்களில்' வேலையின்மை காப்பீட்டை குறைப்பதாக அவர் உறுதியளித்தார்: 'தீவிரமாக வேலை தேடாத வேலையற்றவர்கள் தங்கள் கொடுப்பனவுகள் நிறுத்திவைக்கப்படுவதை காண்பார்கள்.'

உத்தியோகபூர்வ ஓய்வூதிய வயதை 62 இலிருந்து 65 ஆக உயர்த்தவும், ஓய்வூதியங்களை திறம்பட குறைக்க மற்ற நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக மக்ரோன் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், ஒரு சமூக வெடிப்பைத் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று கூறினார்: “நாம் எதிர்கொள்ளும் சுகாதார நிலைமை மற்றும் அது ஐரோப்பா முழுவதும் மோசமடைந்து வருகிறது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வணிக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் பொதுவான விருப்பம் மற்றும் நமது நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கான தேவை என்பது, இன்று இந்த தலைப்புக்கு திரும்புவதற்கான சூழ்நிலைகள் சரியாக இல்லை”.

கடந்த ஆண்டு பாரிய வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டு அவர் நிறைவேற்றிய ஓய்வூதியக் குறைப்பை அறிவிக்க வேண்டாம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார், அது ஏற்கனவே சட்டமாக்க வாக்களிக்கப்பட்டது. எவ்வாறாயினும், மக்ரோன் அல்லது அவரருக்கு பின்னால் வருபவர்கள், பிரான்சில் பொது ஓய்வூதியத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன் சற்று நேரமே தேவைப்படும்.

மக்ரோனின் பேச்சு ஒரு இன்றியமையாத விஷயத்தை எடுத்துக்காட்டுகிறது: தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கௌரவமான சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரங்களை வழங்குவதற்கும் முக்கிய தடைகள் தொழில்நுட்பம் அல்ல, மாறாக அரசியல், ஆளும் வர்க்கத்தின் ஆபாசமான மற்றும் குற்றவியல் சுய-செறிவூட்டல் கொள்கைகளே காரணமாகும். பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு நவ-பாசிஸ்டுகளையோ அல்லது மக்ரோனையோ மற்றும் அவரது பாசிச சாதனையை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்வைத்துள்ள நிலையில், தேர்தல்கள் தானாகவே எதனையும் தீர்க்காது என்பது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

ஆளும் உயரடுக்கின் முறைகேடான சொத்துக்களை அபகரிக்கவும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரவும், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதும், அனைவருக்கும் சமூக சமத்துவம் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தவும் இந்த செல்வத்தைப் பயன்படுத்துவதே முக்கியமான கேள்வி.

Loading