ஓமிக்ரோன் மாறுபாடு COVID-19 தொற்றுநோயின் புதிய உலகளாவிய வெடிப்பைத் தூண்ட அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விஞ்ஞானிகள் ஓமிக்ரோன் (B.1.1.529) என்ற கோவிட்-19 இன் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர், இதை “அக்கறை கொள்ள வேண்டிய மாறுபாடாக” (“variant of concern - VOC) உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த மாறுபாடு தென்னாபிரிக்காவில் தோன்றியதாகத் தெரிகிறது, ஆனால் ஏற்கனவே பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அசாதாரண நட்சத்திர வடிவ பிறழ்வுகள், இந்த மாறுபாட்டை டெல்டா மாறுபாட்டை விட மிக அதிக தொற்றும் தன்மை, மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு திறன் உள்ள மாறுபாடாக்குவதாக ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

WHO அதன் வெள்ளிக்கிழமை அறிக்கையில், டெல்டா மாறுபாடு உட்பட, “மற்ற VOC க்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாறுபாட்டால் அதிகரித்தளவில் மீண்டும் நோய்தொற்றும் அபாயம் இருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ளது. “தென்னாபிரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த மாறுபாட்டினால் உருவாகும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.”

நவம்பர் 9 ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்துதான் ஓமிக்ரோன் மாறுபாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. இருப்பினும், இரண்டே வாரங்களில், தென்னாபிரிக்காவில் அதிவிரைவாக ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக அது உருவெடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவில் புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரி இரண்டே வாரங்களில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களை 265 இல் இருந்து 1043 க்கும் அதிகமாக நான்கு மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது. நேற்று, இந்நாட்டில் 2,465 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களில் 75 சதவீதம் சமீபத்திய மாறுபாட்டினால் உருவானதாகும், இது விரைவில் 100 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்காவின் சிறிய வடகிழக்கு மாகாணமான அதிக நகரமயமாக்கப்பட்ட Gauteng பகுதியில் தான் புதிய நோய்தொற்றுக்கள் வெடித்து பரவி வருகின்றன, இது நாட்டின் நிலப்பரப்பில் 2 சதவீதத்திற்கும் குறைந்த பரப்பளவை கொண்ட பகுதியாகும், இருப்பினும் நாட்டின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் இங்குதான் வசிக்கின்றனர்.

நெல்சன் ஆர். மண்டேலா மருத்துவ பள்ளியில் உயிரித் தகவலியல் நிபுணரும், மற்றும் தொற்றுநோய்க்கான பதில் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் (Centre for Epidemic Response & Innovation) இயக்குநருமான டாக்டர் துலியோ டி ஒலிவேரா, இந்த மாறுபாடு “அதன் பிறழ்வு மேலோங்கிய மட்டத்தினால் உண்மையில் கவலையளிப்பதாக உள்ளது” என்று விவரித்தார். மேலும், இந்த புதிய மாறுபாடு, மனித சுவாச உயிரணுக்களுடன் ஒட்டிக்கொள்ள பயன்படும் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள 32 பிறழ்வுகள் உட்பட, 50 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்கிறார்.

இந்த பிறழ்வுகளில் பல ஆன்டிபாடி (antibody - பிறபொருளெதிரி) எதிர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் புதிய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகளும் சிகிச்சை முறைகளும் குறைந்த திறனுள்ளவையாக இருக்கும் என்ற கவலை ஏற்படுவதாக டாக்டர் டி ஒலிவேரா விளக்கினார்.

ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் அச்சுறுத்தலின் தீவிரத்தை வெளிப்படுத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஐரோப்பிய மையங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டன, அது, இந்த மாறுபாட்டை “டெல்டாவுடன் ஒப்பிடுகையில் அதன் நோயெதிர்ப்புத் தப்பிக்கும் திறன் மற்றும் அதிகரித்த பரவும் திறனின் அடிப்படையில் பார்த்தால், [ஐரோப்பாவில்] மேலதிக நோய்தொற்றின் உருவாக்கம் மற்றும் சமூக பரவலின் நிகழ்தகவு உச்சபட்சத்தில் இருக்கும் என நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று எச்சரிக்கிறது. அது மேலும், “[ஐரோப்பாவில்] டெல்டா மாறுபாடு மீண்டும் எழுச்சி பெறும் சூழ்நிலையில், ஓமிக்ரோனின் அறிமுகம் மற்றும் அதன் மேலும் பரவும் சாத்தியத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்” என்று கூறியது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தொற்றுநோய்களை ஆய்வு செய்து வரும் ஒரு சிக்கல் அமைப்பு இயற்பியலாளர் டாக்டர் யானீர் பார்-யாம் இன் கருத்துப்படி, தற்போதைய தோராயமான மதிப்பீடுகள், ஓமிக்ரோன் மாறுபாடு அசல் மாறுபாட்டை விட ஆறு மடங்கு அதிகமாகவும், டெல்டா மாறுபாட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் நோயை பரப்பும் திறன் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும், ஓமிக்ரோன் காரணமான இறப்பு விகிதம் அசல் மாறுபாட்டை விட எட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் பார்-யாம் மதிப்பிடுகிறார்.

T-cell நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் அந்தோனி லியோனார்டி, “[ஓமிக்ரோன் மாறுபாடு] அநேகமாக எல்லா இடங்களிலும் உள்ளது, இப்போது இது பிறழ்வடையும் ஒரு பெரிய திறனைக் கொண்டுள்ளது. இது டெல்டாவை விஞ்சிவிடும் நிலையில், இன்னும் அதிகமான நோய்தொற்றுக்களை உருவாக்கப் போகிறது. எனவே இது டெல்டாவை விட வேகமாக வெளிப்படும்” என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தார்.

Genomic sequences in South Africa (B.1.1.529(Omicron) in Blue). Dr. Eric Feigl-Ding Twitter feed.

ஹாங்காங், இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளன, அதாவது வைரஸின் தற்போதைய மறுபரவல் தன்மை உலகளவில் பரவியுள்ளது. இஸ்ரேலில், மலாவியில் இருந்து திரும்பிய பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர், முன்பே முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்பதுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பூஸ்டர் ஷாட் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளார். மேலும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு காத்திருக்கின்றனர்.

பெல்ஜியத்தில் அடையாளம் காணப்பட்ட தடுப்பூசி போடப்படாத இளம் பெண், துருக்கி வழியாக எகிப்துக்கு பயணித்துக் கொண்டிருந்தார், மற்றும் அவருக்கு தென்னாபிரிக்காவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

ஐரோப்பிய அரசாங்கங்களும் அமெரிக்காவும் தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்க தீவிரமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், “B.1.1.529 என்ற கவனம் செலுத்த வேண்டிய புதிய மாறுபாட்டின் காரணமாக தென்னாபிரிக்க பிராந்தியத்தில் இருந்து வரும் விமான சேவையை நிறுத்த அவசரகால தடையை உருவாக்க, உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முன்மொழியும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடெனின் தலைமை தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, ஓமிக்ரோன் மாறுபாடு அமெரிக்காவை அடைந்ததற்கான “எந்த அறிகுறியும் இல்லை” என்று அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்க முயன்றார். பைடென் நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகையில், இது பொது மக்களின் கவனத்தையும் கோபத்தையும் திசை திருப்பும் முயற்சியாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி, பைடென் நிர்வாகமும் வெள்ளிக்கிழமை பிற்பகல் தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. “கூடுதல் தகவல் கிடைக்கும் வரை, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,” “தென்னாபிரிக்கா மற்றும் பிற ஏழு நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கூடுதல் பயணக் கட்டுப்பாடுகளை நான் விதிக்கிறேன். இந்த புதிய கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்” என்று பைடென் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த பயணக் கட்டுப்பாடுகள் தற்காலிக நிறுத்த நடவடிக்கைகளின் தன்மையைக் கொண்டுள்ளன, இது உலகளவில் மாறுபாட்டின் பரவலைத் தடுக்க மிகவும் தாமதமாக நடைமுறைக்கு வரும். அமெரிக்கா மற்றும் பிரதான ஐரோப்பிய நாடுகளில் (பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பது உட்பட) வைரஸ் தொடர்புபட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதானது, மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்திருந்தால், அது ஏற்கனவே வேகமாக பரவிக் கொண்டிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நோய்தொற்று விகிதங்கள் பொதுவாக அதிகரிக்கும் குளிர்காலத்திற்குள் நுழைகையில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட, உலகளவில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் ஏற்கனவே வெடித்து பரவியுள்ளன.

பைடென் அமெரிக்கர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அல்லது பூஸ்டர் ஷாட் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துகிறார். “நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றாலோ, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றாலோ,” “இதுவே அதற்கான நேரம்” என்று பைடென் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட தடுப்பூசி ஒரு முக்கியமான கருவிதான் என்றாலும், தடுப்பூசி என்பது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு “மாயவித்தை தோட்டா” அல்ல என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தீவிரமான பரிசோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் பூட்டுதல்கள், நோய்தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த மிகவும் அவசியமாகும். சர்வதேச அளவில் வைரஸை தொடர்ந்து பரவ அனுமதிப்பதானது, தடுப்பூசிகள் வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கக்கூடிய ஓமிக்ரோன் போன்ற புதிய மற்றும் அதிக தொற்றும் தன்மையுள்ள மாறுபாடுகள் உருவெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்னரும், மற்றும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையிலும், தனது நிர்வாகத்தின் தூண்களாக இருக்கும் பள்ளிகளையும் வணிகங்களையும் பைடென் மீண்டும் முழுமையாக திறந்து வைத்துள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் நாளாந்தம் 100,000 க்கு நெருக்கமான மக்கள் நோய்வாய்ப்பட்டும், 1,000 க்கு அதிகமான மக்கள் அதற்கு பலியாகியும் வரும் நிலையில், பைடெனின் மேற்பார்வையின் கீழ், மாநில அளவில் நடைமுறையிலுள்ள முகக்கவச கட்டுப்பாடு போன்ற, கிட்டத்தட்ட அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் மாநில ஆளுநர்கள் கைவிட்டுள்ளனர்.

Loading