பிலிப்பைன்ஸ் தேர்தலில் கம்யூனிச-விரோத பணிக்குழுவை எதிர்கட்சி வேட்பாளர் ரோபிரேடோ ஆதரிக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2022 ஜனாதிபதித் தேர்தலில் டுரேற்றவிற்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பின் முன்னணி வேட்பாளரான பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி லெனி ரோபிரேடோ, நவம்பர் 26 வெள்ளியன்று இராணுவ உயர்மட்டக் கூட்டத்தில், அவர்களின் கம்யூனிச-விரோத பணிக் குழுவை ஆதரிப்பதாக கூறினார். உள்ளூர் கம்யூனிச ஆயுத மோதலுக்கு (National Task Force to End Local Communist Armed Conflict - NTF-ELCAC) முடிவுகட்ட டுரேற்ற நிர்வாகத்தின் பாசிச தேசிய பணிக் குழுவிற்கு ரோபிரேடோ ஒப்புதல் அளித்தது, அவரது பிரச்சாரத்தின் வலதுசாரி தன்மையின் மற்றொரு நிரூபணமாகும்.

2017 இல் ஆசியான் மன்றத்தில் ரோபிரேடோ [Credit: Office of the Vice President]

மே தேர்தலுக்கான தற்போதைய கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருப்பவர்கள் பேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர்/சாரா டுரேற்ற -கார்பியோ ஆவர். முன்னாள் சர்வாதிகாரியின் மகனும் தற்போதைய பாசிச ஜனாதிபதியின் மகளும் தீவிர வலதுசாரி பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இது மார்க்கோஸின் இராணுவ சட்ட ஆட்சியை மறுவாழ்வு செய்ய முயல்வதுடன் மற்றும் டுரேற்றவின் இரத்தக்களரி சட்டம்-ஒழுங்கு ஆட்சியை தீவிரப்படுத்த முயல்கிறது.

இரண்டாவது முறையாக போட்டியிட முடியாத ரோட்ரிகோ டுரேற்ற, சமீபத்திய காலத்தில் ஆளும் வர்க்க ஆதரவை கணிசமான அளவில் இழந்துள்ளார். மேலும் இப்போது மார்க்கோஸ் யூனியர் மற்றும் அவரது சொந்த மகளுடன் கடுமையாக முரண்படுகிறார். நவம்பர் 30 அன்று, டுரேற்றவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளரும் அவரது வலது கையாளுமான, செனட்டர் பொங் கோ ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பெரும் பகுதி மார்க்கோஸ்/டுரேற்ற -கார்பியோவிற்கு பின்னால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடா, மார்க்கோஸ் பிரச்சாரத்தை ஆதரிப்பதில் அவரது பரம எதிரியான முன்னாள் ஜனாதிபதி குளோரியா மக்காபகல்-அரோயோவுடன் இணைந்துள்ளார்.

ஏனைய முதலாளித்துவ வேட்பாளர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க வலதுசாரி குணம் கொண்டவர்கள். செனட்டராக மாறிய குத்துச்சண்டை வீரரான மானி பாக்கியாவோ, மரண தண்டனை மற்றும் குற்றவாளிகளின் வயதை பன்னிரண்டாகக் குறைப்பதற்கு வலுவான ஆதரவாளர் ஆவார். மார்க்கோஸ் சர்வாதிகாரத்தின் சித்திரவதை எந்திரத்திற்கு செனட்டர் பன்ஃபிலோ லக்சன் தலைமை தாங்கினார். மணிலா மேயர் இஸ்கோ மோரேனோ, சீனக் குடியேற்றவாசிகளைக் குறிவைக்க போதைப்பொருள் மீதான டுரேற்றவின் கொலைகாரப் போரைப் பயன்படுத்த விரும்புகிறார்.

துணை ஜனாதிபதி ரோபிரேடோ இந்த பிற்போக்குத்தனமான அயோக்கியர்களின் கூட்டத்திற்கு மனிதாபிமான, ஒழுக்கமான விதிவிலக்கு என்று காட்டிக் கொள்கிறார். நீண்டகால மற்றும் செல்வாக்குமிக்க லிபரல் கட்சியின் (LP) தலைவரான ரோபிரேடோவும் வாஷிங்டனின் விருப்பமான வேட்பாளராக உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், டுரேற்ற வாஷிங்டனிலிருந்து பெய்ஜிங்கை நோக்கி பிலிப்பைன்ஸ் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை கணிசமாக மறுசீரமைத்தார். பிலிப்பைன்ஸ் மூலதனத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர், அமெரிக்காவிடமிருந்து கிடைக்காத உள்கட்டமைப்பிற்கான பணத்தைப் பெறுவதற்காக, இந்த சூழ்ச்சியை ஆதரித்தனர். இந்த கொள்கையைத் தொடர மார்க்கோஸ் உறுதியளிக்கிறார், மேலும் அவரது பிரச்சாரத்தைச் சுற்றி திரண்டிருக்கும் சக்திகள் அனைத்தும் அக்கொள்கையுடன் தொடர்புடையவை.

ரோபிரேடோவும் லிபரல் கட்சியும் பிலிப்பைன்ஸ் உயரடுக்கின் அடுக்குகளை இன்னும் நாட்டின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான வாஷிங்டனுடன் பிணைந்துள்ளனர். தென் சீனக் கடல் மீதான பிலிப்பைன்ஸ் உரிமை மற்றும் சீனாவுக்கு எதிரான எதிர்ப்பை மையமாகக் கொண்டு 2021 இல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த 1Sambayan கட்சியின் ஒப்புதலை அவர் பெற்றார். ரோபிரேடோ தனது வேட்புமனுவை அறிவிப்பதில் முதலில் தயங்கினார். ஆனால் அமெரிக்க விடயங்களுக்கு பொறுப்பாளர்கள் அவரை சந்தித்த அடுத்த நாள் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார்.

ரோபிரெடோவின் வேண்டுகோள் எல்லாவற்றிற்கும் மேலாக நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவினரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு சமூக ஸ்திரமின்மை மற்றும் வர்க்க அமைதியின்மை பற்றி கவலை கொண்டுள்ளதுடன் மற்றும் ஒரு சட்டம்-ஒழுங்கிற்கான ஒரு வேட்பாளரை விரும்புகிறது. ஆனால் அதே நேரத்தில் டுரேற்றவின் மோசமான தீவிரத்தால் தள்ளி வைக்கப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, ரோபிரேடோ ஒரு கனிவான முகத்தையும் மிதமான சர்வாதிபத்தியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

துணைத் தலைவர் லெனி ரோபிரேடோ ஒரு வழக்கறிஞர் மற்றும் பெனிக்னோ அக்கினோ III நிர்வாகத்தின் பிரபலமான உள்துறை செயலாளரான ஜெஸ்ஸி ரோபிரேடோவின் விதவை மனைவியாவார். 2012இல் அவரது கணவர் விமான விபத்தில் இறந்தபோது, அடுத்த ஆண்டு காங்கிரசுக்கு போட்டியிட்டார். அவர் 2016 இல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியரை ஒரு சிறிய பெரும்பான்மையினால் தோற்கடித்தார்.

1986 இல் மார்க்கோஸுக்கு எதிராக கொராசோன் அக்கினோ ஒரு கொடுங்கோலரை எதிர்ப்பதற்காக அரசியலில் திணிக்கப்பட்ட ஒரு மனிதாபிமானமுள்ள மற்றும் விதவையாக காட்டப்பட்ட பிரச்சாரத்திற்கும் ரோபிரேடோவின் வேட்புமனுவிற்கும் தெளிவான வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன. அக்கினோ நாட்டின் பணக்கார சர்க்கரை தோட்டங்களில் ஒன்றின் தலைவர் என்ற உண்மையை பிரச்சாரம் மறைத்தது. பதவியேற்றவுடன், அவர் கடுமையாக வலது பக்கம் நகர்ந்தார், அனைத்து வகையான மக்கள் எதிர்ப்பையும் ஆயுத பலத்துடன் நசுக்கினார்.

ரோபிரேடோ லிபரல் கட்சியின் தலைவராக உள்ளார். இது நாட்டின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க கட்சிகளில் ஒன்றாகும். இருப்பினும், அவர் தனது சொந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ இணைப்பு இல்லாமல், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் பாரம்பரிய லிபரல் கட்சியின் மஞ்சள் நிறத்தை நிராகரித்து, இளஞ்சிவப்பு நிறத்தில் பிரச்சாரம் செய்கிறார். இந்த தந்திரம், லிபரல் கட்சி பரவலாக அவநம்பிக்கைக்கு உள்ளானது என்ற அவரது உணர்வை வெளிப்படுத்துகிறது. மார்கோஸுக்குப் பிந்தைய ஜனநாயகத்துடன் தொடர்புடைய அக்கினோக்களின் கட்சி, சர்வாதிகாரி பதவியிலிருந்து அகற்ற்றப்பட்டதிலிருந்து மக்களுடைய ஜனநாயக நம்பிக்கைகளை மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுத்தது.

உலக சோசலிச வலைத் தளம், ரோபிரேடோ ஒரு வலதுசாரி பிரச்சாரத்தை நடத்துகிறார் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல இராணுவ சதி முயற்சிகளுக்கு பொறுப்பான அந்தோனியோ ரில்லானஸ் மற்றும் பல முன்னாள் டுரேற்றவின் கூட்டாளிகள் உட்பட பிற்போக்குத்தனமான நபர்களின் வரிசையை அவர் தனது செனட் பதவிகளுக்கான பட்டியலில் கொண்டு வந்துள்ளார்.

ரோபிரெடோ பிரச்சாரத்தின் வலதுசாரி குணாம்சம் நவம்பர் 26 அன்று அகுனால்டோ முகாமில் இராணுவத் தலைவர்களுடன் ஒரு பாதுகாப்பு மாநாட்டை நடத்தியபோது கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. அவள் கூடியிருந்த உயர்மட்டத்திடம், “நான் அறைகளில் உள்ள யானையிடம் பேச விரும்புகிறேன் (ஏனென்றால்) நான் NTF-ELCAC ஐ ஒழிப்பதற்காக இருக்கிறேன் என, ஏற்கனவே நான் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறேன். NTF-ELCAC இருப்பதற்கும் மற்றும் செயல்பாடுகளுக்கு நான் ஆதரவாக உள்ளேன் என்பதை இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.

ரோபிரேடோ ஒப்புதல் அளித்த கம்யூனிச-விரோத பணிக் குழுவான NTF-ELCAC, டிசம்பரில் 2018 டுரேற்ற நிர்வாகத்தால் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது. இதற்கு 20 பில்லியன் பெசோக்கள் ($415 மில்லியன்) ஒரு அதிர்ச்சியூட்டும் வருடாந்த வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் ஒரு பகுதியாக, பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் 24 நாட்கள் வரை கைது செய்துவைத்திருப்பது, தொலைபேசி ஒட்டு, கண்காணிப்பு ஆகியவற்றுக்கு அதிகாரமளிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசியலில் ஈடுபடுபவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் முக்கிய பொது நபர்கள் கம்யூனிஸ்டுகள் என்று NTF-ELCAC ஆல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அரசாங்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். NTF-ELCAC என்பது பெரும் நிதியுதவி வழங்கப்படும் மற்றும் மெக்கார்தியிசத்தின் கொலைகாரத்தன்மையின் வடிவமாகும்.

எவ்வாறாயினும், 'கவனக்குறைவாக சிவப்பு குறியிடுதலை' எதிர்ப்பதாக ரோபிரேடோ பாதுகாப்பு மாநாட்டில் கூறினார். அவ்வாறு அவர் கூறியதற்கு காரணம் இதற்கு முன் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அவரே ஆதரிக்கும் பணிக் குழுவின் செய்தித் தொடர்பாளரால் கண்டனம் செய்யப்பட்டதாலாகும்.

NTF-ELCAC க்கான ரோபிரேடோவின் ஆதரவு அவரது முழு அரசியல் வாழ்க்கையிலும் தொடர்கிறது.

டிசம்பர் 6, 2017 அன்று, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு 'பயங்கரவாத அமைப்பு' என்று ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்ற அறிவித்ததை ஆதரிப்பதாக ரோபிரேடோ அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வன்முறை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” அவர் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அபு சயாப் மற்றும் ISIS உடன் ஒப்பிட்டார்.

இதேபோல், 30,000 ஏழை பிலிப்பினோக்களின் மரணத்தில் முடிந்த ஒரு கொலைகாரப் போரான, போதைப்பொருள் மீதான டுரேற்றவின் போரைத் தொடர்வதை ரோபிரேடோ ஆதரிக்கிறார். ரோபிரேடோ Philippine Daily Inquirer இடம் தன் நிர்வாகம் போதைப்பொருள் மீதான போரைத் தொடரும் என்று கூறினார்.

'எனது நம்பிக்கையில், அபாயகரமான மருந்து வாரியம் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவுடன், அதன் திட்டம் 'கொல், கொல், கொல்' என்று மட்டும் இருக்காது, ஆனால் திட்டம் மிகவும் விரிவானதாக இருக்கும். தடுப்புமுறைகளில் கடுமையானதாகவும், மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் இருக்கும்' என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய திட்டம் பிரத்தியேகமாக கொல்வதுடன் மட்டும் நிற்காது. அவர் கொலையை மறுக்கவில்லை, வேறு நுட்பங்களையும் அதனுடன் சேர்க்கிறார்.

ரோபிரேடோவின் கணக்கீடுகளில் முக்கியமானது பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) வரம்பற்ற சந்தர்ப்பவாதமாகும், அவர்கள் அவரது வேட்புமனுவுக்கு ஆதரவை வழங்க முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் போக்கைப் பின்பற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகளான மக்காபாயன், பாயன், பாயன் மூனா ஆகியவை அவர் எந்தக் கூட்டணியையும் பகிரங்கமாக நிராகரித்தாலும், அவரது பிரச்சாரத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி குட்டி முதலாளித்துவ பிரிவின் கருத்துக்கு தீவிர உணர்திறன் கொண்டது. அதுதான் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடுக்காகும். இந்த சமூக அடுக்கின் கணிசமான பகுதியானது ரோபிரேடோவின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நோக்குநிலைக்குப் பின்னால் வெகுஜன ஆதரவைக் கொண்டுவர முயற்சிக்கிறது.

பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் கருத்தியல் தலைவருமான ஜோஸ் மரியா சிஸன், நவம்பர் 21 அன்று ரோபிரேடோ 'மிகவும் நம்பகமான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்' என்று அறிவித்தார். மேலும் அவர் மகாபாயனின் ஆதரவை ஏற்க மறுத்த போதிலும், 'நாம் இன்னும் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்' என்று கூறினார்.

லெனி ரோபிரேடோவின் பாசிச NTF-ELCAC க்கு ஒப்புதல் அளித்தது, அவரது அரசியலின் வலதுசாரி இயல்பின் தெளிவான நிரூபணமாகும். அவரது பிரச்சாரத்தின் சிரிக்கும் இளஞ்சிவப்பு முகப்பின் பின்னால் எதேச்சதிகாரமும் அடக்குமுறையும் ஒளிந்துள்ளது.

Loading