பிலிப்பைன்ஸில் மார்கோஸை "மக்கள் சக்தி" வெளியேற்றியதில் இருந்து முப்பத்தைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிப்ரவரி 26, 1986 அன்று, ஃபெர்டினான்ட் மார்க்கோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், இராணுவத்தின் குறிப்பிடத்தக்க பிரிவினரால் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதையும் மற்றும் வீதிகளில் இறங்கிய மில்லியன் கணக்கான பிலிப்பைன்ஸ் மக்களிடமிருந்து பரந்த எதிர்ப்பை எதிர்கொண்டு, அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களால் மலாக்காநாங் ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். முதலில் அவர்கள் ஹவாய்க்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 1972 முதல் பிலிப்பைன்ஸ் மீது மிருகத்தனமான ஆட்சிபுரிந்த முன்னாள் சர்வாதிகாரி, தனது வாழ்நாள் முழுவதும் வசதியான நாடுகடந்த நிலையில் வாழ்ந்தார்.

மார்கோஸைத் தூக்கியெறிவது எபிபானியோ டி லாஸ் சாண்டோஸ் வீதியில் (Epifanio de los Santos Avenue - Edsa) மார்கோஸின் டாங்கிகளுக்கு முன்னால் தைரியமாக தரையில் நின்ற மில்லியன் கணக்கான சாதாரண பிலிப்பின் மக்களின் வன்முறையற்ற ஒன்றுகூடலுடன் பிரபலமாக தொடர்புடையது. இந்த நிகழ்வானது பின்னர் “மக்கள் சக்தி” என்று பெயர்பெற்றது. ஆனால் யதார்த்த நிலைமை மிகவும் சிக்கலானது. மார்கோஸை அகற்றுவதற்குப் பின்னால் ஒரு இராணுவ சதி, ஒரு முன்னணி மதகுருவின் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் தாமதமான தலையீடு ஆகியவை இருந்தன.

பிப்ரவரி 25, 1986 அன்று சான் ஜுவான் கிளப் பிலிப்பைன்ஸ் நகரில் தலைமை நீதிபதி கிளாடியோ டீஹான்கி சீனியர் முன் கோரசன் அக்கினோ பதவியேற்றார்

மார்கோஸை அகற்றுவதன் மூலம் ஏற்பட்ட முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி பிலிப்பைன்ஸில் ஒரு புரட்சிகர சூழ்நிலைமைக்கு காரணமானது. கோரசன் அக்கினோவின் புதிதாக நிறுவப்பட்ட நிர்வாகம், தனது அதிகாரத்தை பலப்படுத்த ஒரு வருடம் ஆனது. பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) நாட்டில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஆட்சியை மீள்ஸ்திரப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அவர்கள் "தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரதிநிதி" என்று பாராட்டிய அக்கினோவைப் பற்றி தொழிலாள வர்க்கத்திலும் விவசாயிகளிலும் மாயையை ஊக்குவித்தனர்.

மே தினம், 1986 அன்று, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரும், கருத்தியல் தலைவரான ஜோஸ் மரியா சிஸன், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிடல் ராமோஸ் ஆகியோருடன் நாட்டின் முக்கிய உத்தியோகபூர்வ ஒன்றுகூடும் இடமான லுனெட்டா கிராண்ட்ஸ்டாண்டில் பக்கபலமாக நின்றார். அதே நேரத்தில் இதற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்க மற்றும் விவசாய அமைப்புகளும் சர்வதேசிய கீதத்தைப்பாடி மற்றும் சுத்தியல் மற்றும் அரிவாள் கொடியை உயர்த்தின. அக்கினோ தேசிய ஜனநாயக புரட்சியை மேற்கொள்வார் என்றும், 1986 ஆம் ஆண்டிலிருந்து அவரின் நிர்வாகத்தில் நுழைவதற்கு அவர்கள் இயங்கியதாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.

அக்கினோ அதற்கு பதிலாக இராணுவத்துடன் கூட்டணி வைத்து பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் நசுக்க தனது பலத்தை பயன்படுத்தினார். மார்க்கோஸ் சர்வாதிகாரத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் ஆயுதப்படையின் தலைவராக இருந்து, மேலும் அவர் இரு நிர்வாகங்களுக்கிடையில் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறையை ராமோஸ் நிறுவினார். ஜனவரி, 1987 இல், அக்கினோவின் இராணுவ மற்றும் பொலிஸ் படைகள் 17,000 விவசாயிகளின் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நில சீர்திருத்தத்திற்காக ஜனாதிபதியிடம் முறையிட பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் கூடியிருந்தனர்.

கொடுங்கோலன் மார்கோஸை வெளியேற்றுவதைச் சுற்றியிருந்த ஆர்வமும், உற்சாகமும் விரைவாக ஏமாற்றமாக மாற்றமடைந்தன. "மக்கள் சக்தி" காட்டிக் கொடுக்கப்பட்டது. உள்நாட்டின் முதலாளித்துவ உயரடுக்கு அதிகாரத்தில் இருந்ததுடன், அவர்கள் எப்போதும் போலவே மிருகத்தனமாக இருந்தனர். பிலிப்பைன்ஸ் மக்களை எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதுடன், உண்மையில் அவை இன்னும் மோசமடைந்துள்ளன.

மார்க்கோஸ் சர்வாதிகாரம், அதன் வெளியேற்றம், கொராஸன் அக்கினோவின் ஜனாதிபதி பதவி மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு ஆகியவற்றை ஆராயும் ஒரு வரலாற்று பகுதியை உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் வெளியிடுகிறது. கீழே முழுமையாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள இக்கட்டுரை முதலில் ஆகஸ்ட் 2009 இல் அக்கினோ இறந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது.

கொராசன் கோஜுவாங்கோ அக்கினோ, 1933–2009

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதியான கொராசன் அக்கினோ ஆகஸ்ட் 1ம் திகதி பெருங்குடல் புற்றுநோயால் இறந்தார். முக்கிய ஊடகங்கள் அவரது புகழ்பாடுவதை தொடங்கிய முப்பது நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.

அவரது மரணம் யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. அவர் பதினெட்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்ததுடன், இறுதி ஆறு வாரங்களில் அவரது நிலை மிகவும் மோசமடைந்தது.

செய்தி ஊடகங்கள், அனைத்து கருத்தியல் பிரிவுகளின் அரசியல் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்கள் இந்த பெண் காலமானதற்கு தங்கள் பிரதிபலிப்பை தயாரிக்க போதுமான நேரம் இருந்தது. சர்வதேச மற்றும் பிலிப்பைன்ஸ் பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட இரங்கல்களில் வரலாற்று பகுப்பாய்வு இல்லாததை மன்னிக்க எந்தவிதமான காரணமும் இல்லை. அவர்கள் அக்கினோவை தயக்கமின்றி இல்லத்தரசி என்று பாராட்டி, மார்க்கோஸ் ஆட்சியின் மிருகத்தனத்தால் அரசியலுக்குள் தள்ளப்பட்டதாகவும், வன்முறையற்ற புரட்சியால் அதிகாரத்திற்கு வந்ததாக கூறுவது என்பது கீழ்த்தரமான செய்தித்துறையும், முதலாளித்துவ சிடுமூஞ்சித்தனம் மற்றும் வேண்டுமென்றே வரலாற்று அறியாமை காட்டுவதின் கலவையாகும்.

பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் அக்கினோவை உண்மையிலேயே வெட்கமில்லாமல் பாராட்டியுள்ளனர். பிலிப்பைன்ஸ் இடதுசாரிகளின் கட்சிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புகள் அக்கினோவை நினைவுகூரும் கூட்டத்தில் சேர்ந்து ஒவ்வொன்றும் அவர் இறந்தது தொடர்பான தமது சொந்த வருத்தத்தை வெளியிடுகின்றன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அவர்கள் அக்கினோவின் ‘பாசிச ஆட்சியை’ கண்டித்தனர். இன்று அவர்கள் அவரை ஒரு ‘ஜனநாயகத்திற்கான போராளி’ என்றும் ‘சர்வாதிகாரத்தின் கடுமையான எதிர்ப்பாளர்’ என்றும் பாராட்டுகிறார்கள்.

கொராஸன் அக்கினோ கோஜுவாங்கோ குடும்பத்தில் உறுப்பினராக இருந்தார். ஸ்பெயினின் காலனித்துவத்தின் போது தோன்றிய தன்னலக்குழு நலன்கள், குடும்பரீதியான பொருளாதார வம்சங்கள் பிலிப்பைன்ஸில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கோஜுவாங்கோ குடும்பம் மத்திய லுசோன் மாகாணமான டார்லக்கில் 10,000 ஹெக்டர் ஹசிண்டா லூயிசிடா கரும்பு பண்ணை மற்றும் பாரிய நிதிய நலன்கள், விவசாய நகர்ப்புற நில-கட்டிட சாம்ராஜ்யம் உட்பட பரந்த நிலங்களை வைத்திருக்கிறது.

இந்த செல்வம் அரசியலில் கோஜுவாங்கோஸின் ஈடுபாட்டிலிருந்து ஆதரிக்கிறது மற்றும் வெளிப்படுகிறது. கொராஸன் அக்கினோவின் ஜனாதிபதி பதவிக்கு கூடுதலாக, கோஜுவாங்கோஸ்கள் ஆளுநர்கள், மேயர்கள், செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் கொண்டிருந்தனர். இது கசிப்பு ஜனநாயகம் மற்றும் தன்னலக்குழு பொருளாதார ஆட்சியின் சிறப்பியல்பும், ஸ்பானிஷ் மற்றும் அமெரிக்க காலனித்துவத்தின் மரபுமாகும்.

நிதியதன்னலக் குழுவின் மூலவேர்கள்

எந்தவொரு வணிக முயற்சிகளையும், தொழில்துறையையும், சுரங்கதுறையையும், விவசாயத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான நோக்கமும் இல்லாமல், ஸ்பெயின் 350 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸை ஒரு காலனித்துவ உடைமையாக வைத்திருந்தது. மணிலா ஒரு நுழைவாயிலாக, கப்பல்துறை வர்த்தகத்திற்கான வர்த்தக துறைமுகமாக சேவையாற்றியது. சீன பட்டும், பீங்கான் பண்டங்களும், அக்கபுல்கோவிலிருந்து வந்த மெக்சிகோ வெள்ளிக்காக வர்த்தகம் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் பின்னர் ஐரோப்பாவில் அதிக விலைக்கு விற்கப்பட்டன. காலனித்துவ அதிகாரத்துவத்தினர் இந்த வர்த்தகத்தின் உச்சியில் இருந்து நிர்வகிப்பதன் மூலம் இலாபம் ஈட்டினர். கிராமப்புற பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட பிரத்தியேகமாக ஸ்பெயினின் மதகுருக்களால் கட்டுப்படுத்தப்பட்டது, அவர்கள் பரந்த பண்ணைகளை வைத்திருந்தனர்.

1820 ஆம் ஆண்டின் மெக்சிகோ புரட்சி செவில்யா-அகாபுல்கோ-மணிலா இடையிலான கப்பற்துறை வர்த்தகத்தை கிட்டத்தட்ட துண்டித்து, பிலிப்பைன்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு பயனற்றதாக கைவிடப்பட்டது. பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் வளர்ச்சியடையாத பிலிப்பைன்ஸில் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆர்வமாக இருந்தனர்.

காலனித்துவ கையகப்படுத்தல் மற்றும் புராட்டஸ்டான்ட் செல்வாக்கிற்கு பயந்து ஸ்பானியர்கள் மணிலாவிற்கு வெளியே வெளிநாட்டவர்கள் வாழ்வதைத் தடுக்கும் தொடர்ச்சியான விசித்திரமான சட்டங்களை இயற்றினர். பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக வணிக நிறுவனங்களை அமைத்து, ஐரோப்பாவில் வழங்கப்பட்ட கடன் பத்திரங்களை ஈடுசெய்யப்போதுமான மூலதனத்துடன் வங்கிகளை உருவாக்கினர். இதனால் அவர்கள் ஆண்டின் பெரும்பகுதியும் மூலதனத்தை வைத்திருந்தனர், மேலும் முதலீட்டிற்கான ஒரு சந்தர்ப்பத்தை கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்தனர். பூர்வீக மக்களின் அங்கத்தவர்களான இண்டியோஸ்களுக்கு அதிக அளவு கடன் கொடுப்பது சட்டவிரோதமாக இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீன ஆண்களின் வருகையும், 1850க்குப் பிறகு இரண்டாவது வருகையும், இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதார இடைவெளியை நிரப்பியது. மேலும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் பிரிட்டிஷ் மூலதனத்திற்கு ஒரு வசதியை வழங்கியது. புலம்பெயர்ந்த மணப்புரியாதோர் உள்நாட்டு இண்டியோஸ்களை மணந்தனர். அவர்களின் குடும்பங்கள் சீன ஸ்பானிய கலப்பினத்தவரானர்.

காலனித்துவ நிர்வாகத்திலிருந்தும், இண்டியோஸ் மக்களிடமிருந்தும் இனரீதியான பழிவாங்கல்களைத் தவிர்ப்பதற்காக, இந்த சீன ஸ்பானிய கலப்பினத்தவரின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே ஸ்பானியர்களாக்கி கொண்டு, ஸ்பானிய பெயர்கள், ஸ்பானிய மொழி மற்றும் ஸ்பானிய பெருநகரத்திலிருந்து கலைப்பொருட்கள், உச்சரிப்புகள், நடத்தை மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டன. ஒரு தலைமுறையினுள், இந்திய மற்றும் சீன வம்சாவளியின் அனைத்து அறிகுறிகளும் அழிக்கப்பட்டுவிட்டன, மரியாதைக்குரிய பட்டமான ஹொக்கியீஸ் கோயோவை தவிர, புதிய குடும்பப்பெயரின் முடிவில் பெரும்பாலும் கோஜுவாங்கோ இணைக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் ஸ்பானியர்கள் முதலாளித்துவ விவசாயத்தை விரைவாக உருவாக்கி, ஏற்றுமதி சார்ந்த மோனோ பயிர், பிரிட்டிஷ் மூலதனத்தால் நிதியளிக்கப்பட்டது மற்றும் கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்களை வேலைக்கு அமர்த்தியது. கத்தோலிக்க மத கட்டளைகளின் பரந்த நில உரிமையாளர்களில் ஸ்பானியர்கள் பெரும்பாலும் குத்தகைதாரர்களாக இருந்தனர். 1869 இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டவுடன், ஐரோப்பாவுடன் நேரடி வர்த்தகம் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் உலகளாவிய முதலாளித்துவத்தில் உறுதியாக இணைக்கப்பட்டது.

1896 இல் ஸ்பெயினுக்கு எதிரான பிலிப்பைன்ஸ் புரட்சியை அடுத்து, அமெரிக்கா தனது சொந்த காலனித்துவ உடைமைகளை வைத்திருக்க ஆர்வமாக இருந்து, இருபதாம் நூற்றாண்டில் நீடித்த ஒரு மிருகத்தனமான பிரச்சாரத்தில் தீவுகளை கைப்பற்றியது. மூன்றாவது தர காலனித்துவ சக்தியாக இருப்பதாக நீண்டகாலமாக கோபமடைந்த ஸ்பானிய தன்னலக்குழுக்கள் ஸ்பெயினை ஒரு ஐரோப்பிய பின்கோடியாக கருதினர். அமெரிக்காவிடம் பிலிப்பைன்ஸ் இருப்பது அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் அபிலாஷைகளை மேலும் முன்னேற்றலாம் என்பதை அவர்கள் உணர்ந்து, அவர்கள் புதிய காலனித்துவவாதிகளை வரவேற்றனர்.

அமெரிக்க காலனித்துவ அரசாங்கம் கடைசியில் தங்கள் மதகுருமாரின் நில உரிமையாளர் உரிமையை அகற்றியதால், பரந்த கரும்புத்தோட்டங்கள் ஸ்பானிய உயரடுக்கின் கைகளில் விழுந்தன. அமெரிக்கர்கள் ஒரு வகையான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நிறுவி, அதை அவர்கள் நெருக்கமாகக் கண்காணித்து, வாக்களிக்கும் உரிமைகளை உடமையாளர்களுக்கு மட்டும் உரித்தானதாக்கினர்.

இரண்டாம் உலகப் போரில் கூட, மக்கள் தொகையில் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. மணிலாவில் அமெரிக்கர்கள் அமைத்த இருதரப்பு சட்டமன்றம், தன்னலக்குழுக்களுக்கு விரைவாக விரிவடைந்துவந்த பொதுச்சேவையில் விரும்பத்தக்க பதவிகளைச் செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இதனால் அவர்களின் பிராந்தியத்திற்குள் தங்கள் ஆதரவின் அதிகாரத்தை விரிவுபடுத்தியது. ஒவ்வொரு குடும்பமும் தமது உறுப்பினர்களை அரசாங்கத்தில் அமர வைக்க முயன்றது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்கர்கள் பிலிப்பைன்ஸுக்கு பெயரளவு சுதந்திரத்தை வழங்கினர். ஆனால் இணையான உடன்படிக்கைகளின் மூலம் தீவுகளின் மீது கணிசமான பொருளாதார கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டனர். நேரடி அமெரிக்க அரசியல் கட்டுப்பாட்டின் முடிவும், மத்திய அரசின் பாரிய பலவீனம் காரணமாக, தன்னலக்குழு அரசியல் அதன் உச்சக்கட்டத்திற்குள் நுழைந்தது. குடும்ப வம்சங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உதிரி பிரிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட தனியார் படைகளை பெற்றன. தேர்தல்கள் இனி வெறுமனே ஊழல் நிறைந்தவை மட்டுமல்ல, அவை இரத்தக்களரியான விவகாரங்களாக இருந்தன. அதில் போட்டியாளர்கள் கொலை செய்யப்பட்டனர் மற்றும் வாக்காளர்கள் வழக்கமாக அச்சுறுத்தப்பட்டனர்.

அமெரிக்க காலனித்துவ காலத்தில், பல முன்னணி குடும்பங்கள் அமெரிக்காவின் சந்தைக்கு சிறப்பு அணுகலின் அடிப்படையில் தங்கள் செல்வத்தை கட்டியெழுப்பியிருந்தன. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் படிப்படியாக, கட்டணங்களும் வர்த்தக தடைகளும் அமைக்கப்பட்டு, அவை இலாபங்களை கடுமையாகக் குறைத்தன.

அரசின் நிதி சக்தியைக் தவறாக கையாளுவதன் மூலம் உயரடுக்கு இதனை ஈடுசெய்தது. "பொருளாதார சுதந்திரம் மற்றும் இறக்குமதி-பிரதியீட்டு தொழிற்துறைமயமாக்கலை ஊக்குவிக்கும் போர்வையில், மாற்றுவீதங்கள் திரிக்கப்பட்டன, ஏகபோக உரிமங்கள் வெளியாருக்கு கொடுக்கப்பட்டன, மிகப்பெரிய, மலிவான, பெரும்பாலும் செலுத்தப்படாத வங்கிக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன, மற்றும் தேசிய வரவு-செலவுத் திட்டம் பாரிய விலைசெலுத்தி நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புற நில-கட்டிட, விடுதிகள், பயன்பாடுகள், காப்பீடு, வெகுஜன ஊடகங்கள் மற்றும் பலவற்றினுள் சில வர்த்தக நுணுக்கம் தெரிந்த வம்சங்கள் தம்மை விரிவுபடுத்திக்கொண்டன”. (Benedict Anderson, “Cacique Democracy in the Philippines,” in The Spectre of Comparisons, London: Verso, 1998, p. 208). அரசியல்வாதிகள் தமது அழுக்கான நோக்கங்களுக்காக வெற்று வாக்குறுதிகளையும் தேசியவாத சொற்றொடர்களையும் பயன்படுத்த கற்றுக் கொண்டனர். இதன் உச்ச கட்டத்தில் பெனிக்னோ “நினாய்” அக்கினோ மற்றும் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஆகியோர் அரசியலில் நுழைந்தனர்.

பேர்டினான்ட் மற்றும் இமெல்டா மார்க்கோஸ்

மார்க்கோஸ் மிகவும் புத்திசாலி. அவரும் அவரது மனைவியும் வரம்பற்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் தன்னலக்குழுவின் கீழ் மட்டத்திலிருந்து இருந்து எழுந்து பிலிப்பைன்ஸ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். மார்க்கோஸ் கசிப்பு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் தனியார் படைகளுக்கு எதிராகவும், 1960 களில் பிலிப்பைன்ஸில் பெரிதும் இல்லாத மற்றும் தயாரிக்கப்பட்ட அச்சுறுத்தலாக இருந்த கம்யூனிசத்திற்கு எதிராகவும் ஒரு கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை செய்தார்.

செப்டம்பர் 24, 1972, Philippine Daily Express ஞாயிறு இதழின் பதிப்பு (Wikimedia)

மார்க்கோஸ் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை வென்றார், ஒரு செயல்படும், ஒழுங்கான அரசாங்கத்தில் தொழில்நுட்ப வல்லுநராக இருக்க விரும்பினார். மார்க்கோஸ் வடக்கு பிலிப்பைன்ஸின் இலோகானோ பேசும் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இலோகானோ விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் சில பிரிவுகளின் ஆதரவைப் பெற்றார். இதுதான் 1965 ஆம் ஆண்டில் மார்கோஸை ஆட்சிக்கு கொண்டுவந்த வர்க்க அடித்தளமாகும்.

பேர்டினாண்ட் மற்றும் இமெல்டா ஆகியோர் மாறிமாறி இணைந்து பணியாற்றி, ஜனாதிபதியின் அலுவலகத்தை தங்கள் தனிப்பட்ட பிரமிக்க வைக்கும் செல்வ செறிவூட்டலுக்காக வெற்றிகரமாகப் பயன்படுத்தினர். இமெல்டா, ஒரே நேரத்தில் அழகாகவும் கோரமாகவும், உலகத்தைப் பற்றிப் பார்த்து, உலகத் தலைவர்களை சந்தித்து மற்றும் பொருட்களை வாங்கிவந்தார். பேர்டினாண்ட் தனது அரசியல் அதிகாரத்தை வியத்தகு முறையில் ஆயுதப்படைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், இலோகானோ அதிகாரிகளை அவரைக் ஆதரிக்கும் அணிகளுள் கொண்டுவந்ததை ஊக்குவிப்பதன் மூலமும் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தினார். இராணுவத்தின் மேலதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கையை வழிநடத்தியதுடன், ஒரு காலத்தில் கசிப்பு தலைவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இராணுவச் சட்டத்தின் போது அரசியல் போட்டியாளர்களிடமிருந்து மார்க்கோஸ் நிறுவனங்களை பறிமுதல் செய்து, அவர் அவற்றை நம்பகமான தளபதிகளின் கட்டுப்பாட்டில் வைத்தார். இராணுவம் ஒரே நேரத்தில் அரசியல்மயமாக்கப்பட்டு மார்கோஸின் இன-உறவுமுறைவாதத்தால் (ethno-nepotism) உந்தப்பட்டது.

மார்கோஸின் வெளியுறவுக் கொள்கையின் பெரும்பகுதியை இமெல்டா மார்க்கோஸ் கொண்டு நடத்தினார். அவர் உலகத் தலைவர்களைச் சந்தித்து, இராணுவ, அரசியல் மற்றும் நிதி-இராஜதந்திர சூழ்ச்சிகளையும் தனிப்பட்ட மோசடியையும் பயன்படுத்தினார். அது அவருடைய நோக்கங்களை நிறைவேற்றும்போது அவர் அப்பாவியாக தோன்றினார். அவர் கையேந்தி, உறவாடி, ஆணவத்துடன் கோரிக்கைகளை வைத்தார். அவர் ஐந்து அமெரிக்க அதிபர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்ததுடன், மேலும் நான்சி ரேகனின் நம்பிக்கைக்குரியவரானார்.

அமெரிக்க அரசியலையும் கொள்கையையும் பற்றி எந்தவொரு அமெரிக்கருக்கும் இருந்ததை விட அவருக்கும் அவரது கணவருக்கும் மிகச் சிறந்த புரிதல் இருந்தது. அவர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அமெரிக்க அரசியல்வாதிகளை தங்கள் தேவைகளுக்கு சேவை செய்வதில் தந்திரமாக கையாள கம்யூனிச அச்சங்களை வைத்து விளையாடுவது, மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு குத்தகையை நீட்டிக்காது விடுவதற்கான சாத்தியங்களை காட்டி தயக்கத்துடன் கூடிக்குலவுவது போன்றவற்றை கையாண்டனர். மார்க்கோஸ் நிக்சனின் 1968 தேர்தல் பிரச்சாரத்திற்கு 1 மில்லியன் டாரலையும், 1972 இல் மற்றொரு மில்லியன் டாலரையும் பங்களித்தார். நிச்சயமாக, இப்பணம் பிலிப்பைன்ஸ் அரசின் திறைசேரியிலிருந்தே வந்தது.

1969 ஆம் ஆண்டில் மார்க்கோஸ் தனது இரண்டாவது பதவிக் காலத்தை பணத்தால் வாங்கினார். அவரது பிரச்சாரத்திற்காக மிகவும் செலவழித்தால், பிலிப்பைன்ஸில் பணவீக்கம் 18 சதவிகிதம் அதிகரித்தது. பணவீக்கத்தை சமாளிக்க மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களின் வாடகைக்கு 100 மில்லியன் டாலரை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கோரி, பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவை நேரடியாக மாதிரியாகக் கொண்ட பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பு, எந்தவொரு ஜனாதிபதிக்கும் இரண்டு தடவை பதவிவகிக்கும் வரம்பை விதித்தது. 1973 ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தல் மார்கோஸின் கவனத்தில் பெருமளவில் அதிகரித்தது. பதவிக்கால வரம்புகளை நீக்க 1971 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை திருத்துவதை கட்டாயப்படுத்த முயன்றார். இதனால் நினாய் அக்கினோ தலைமையிலான போட்டி அரசியல் குடும்பங்களின் கடுமையான எதிர்ப்பை அவர் எதிர்கொண்டு, இந்த சட்டத்தை திருத்தும் முயற்சிகளில் தோல்வியடைந்தார். தனது சட்டரீதியான சூழ்ச்சிகளில் முறியடிக்கப்பட்ட அவர், அதற்கு பதிலாக இராணுவச் சட்டத்தின் அறிவிப்பை நாடினார்.

இராணுவ தளபதிகளின் ஒரு குழுவுடனும் மற்றும் இரண்டு பொதுப்பணியாளர்களான கோரியின் உறவினரும் கசப்பான போட்டியாளருமான எட்வர்டோ “டான்டிங்” கோஜுவாங்கோ மற்றும் பாதுகாப்பு மந்திரி ஜுவான் போன்ஸ் என்ரில் உடன் இணைந்து மார்க்கோஸ் தனது அறிவிப்பிற்கு சதி செய்தார். 1965 ஆம் ஆண்டில் கற்பனை செய்துபார்க்கமுடியாத ஒரு இரத்தக்களரியில் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PKI) 500,000 முதல் ஒரு மில்லியன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் கொன்று இந்தோனேசியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சுஹார்ட்டோவின் தளபதிகளிடமிருந்து அவர் ஆலோசனையைப் பெற்றார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 1972 இல், மணிலா முழுவதும் உள்ள முக்கிய வணிக மற்றும் அரசாங்க கட்டிடங்களில் இரவு ஒரு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மார்க்கோஸ் இந்த குண்டுவெடிப்பை ஒழுங்கமைத்தபோதும், அவர் கம்யூனிஸ்டுகளை குற்றம் சாட்டினார். இராணுவச் சட்டத்தின் முதன்மை கட்டிடக் கலைஞரான என்ரில், தனது சொந்த பரிவாரங்களுடன் பதுங்கியிருந்து, துப்பாக்கி ஏந்தியவர்கள் தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது போன்ற ஒரு நாடகத்தை ஒழுங்கமைத்தார். ஆனால் அவர் தனது பாதுகாப்பு பரிவாரங்களுடன் வேறொரு தனி காரில் சென்றிருந்தார். மார்க்கோஸ் மீண்டும் கம்யூனிஸ்டுகளை குற்றம் சாட்டி, இராணுவச் சட்டத்தை அறிவிக்கும் பிரகடனம் 1081 இல் கையெழுத்திட்டு, தனது அரசியல் போட்டியாளர்கள் அனைவரையும் கைது செய்ய படையினரை அனுப்பினார். இதில் முதலில் கைது செய்யப்பட்டவர் நினாய் அக்கினோ ஆவார்.

அக்கினோ ஒரு கவர்ச்சியான அரசியல்வாதியாக இருந்தார். பல விஷயங்களில் மார்கோஸைப் போலவே இருந்தார். அவரது அரசியல் வாழ்க்கை ஒரு தொடர் வரலாற்றை கொண்டிருந்தது: அவர் வயதில் குறைந்த மேயராக, இளைய துணை- ஆளுநராக மற்றும் 35 வயதில் பிலிப்பைன்ஸ் வரலாற்றில் மிக இளைய செனட்டராக இருந்தார். அவர் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவராவார்.

அவரது தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் சட்டமன்றத்தின் பேச்சாளராக இருந்தார். திரும்பி வந்த அமெரிக்கப் படைகள் மற்றும் புதிதாக சுதந்திரமான பிலிப்பைன்ஸின் முதல் நிர்வாகத்தால் உயரடுக்கு ஒத்துழைப்பாளர்கள் விரைவில் மன்னிக்கப்பட்டனர். அமெரிக்க இல்லாத நேரத்தில் ஜப்பானியர்களுக்கு எதிராக போராடிய விவசாய இராணுவமான ஹுக்பாலஹாப் இன் நிலைமை மிகவும் மோசமாகியது. அவர்கள் கூட்டாக நிராயுதபாணிகளாக்கப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.

அவரது கவர்ச்சி மற்றும் அரசியல் பிரபல்யத்திற்கு அப்பால், நினாய் கோஜுவாங்கோ குடும்பத்தின் நிதியுதவியையும் கொண்டிருந்தார். அவர் 1973 இல் ஜனாதிபதி ஆகியிருந்திருப்பார், ஆனால் 1973 இல் அவர் அகுயினாடோ முகாமில் உள்ள ஒரு சிறையில் இருந்தார்.

ஆள்கொணர்வு மனு நடைமுறைப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டது. மார்க்கோஸ் ஆயிரக்கணக்கான எதிரிகளை கைது செய்தார். அவர் போட்டி குடும்பங்களின் சொத்துக்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அவற்றை தனது கூட்டாளிகளின் கட்டுப்பாட்டிற்கு திருப்பி, அவற்றை கொள்ளையடித்தார். நிதிய தன்னலக்குழுவின் சில பிரிவுகள் மார்கோஸின் கீழ் செழித்து வளர்ந்தன; மற்றவர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.

வெகுஜன எதிர்ப்பு மிருகத்தனமான அடக்குமுறையை சந்தித்தது. கடத்தல், சித்திரவதை மற்றும் கூட்டு மரணதண்டனை ஆகியவை இராணுவத்தால் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறை ‘மீட்டெடுத்தல்’ என்று அறியப்பட்டது. 1970 களின்போது, மார்க்கோஸ் தனது வர்க்க ஆதரவை இழந்தார். நகர்ப்புற நடுத்தர வர்க்கம், முந்தைய ஆர்வமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மெதுவாக ஏமாற்றமடைந்தனர்.

நாட்டைவிட்டு வெளியேறக்கூடியவர்கள் வெளியேறினர், அதற்கு இயலாதோர் மார்கோஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் மௌனமாகவும் பொறுமையற்றும் தலையை தொங்கவிட்டுக்கொண்டு அதன் முடிவுவரை பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கோஸின் அதிகாரம் இப்போது அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்று மடங்காகியிருந்த ஒரு இராணுவத்தின் மீதான அவரது உறுதியான கட்டுப்பாட்டின் அடிப்படையில் அமைந்தது.

இராணுவச் சட்டத்திலிருந்து இரண்டு குழுக்கள் பயனடைந்தன: ஒன்று இராணுவம் மற்றையது பிலிப்பைன்ஸின் புதிய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPP) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான புதிய மக்கள் இராணுவம் (NPA) ஆகும்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் இராணுவச் சட்டமும்

1950களின் நடுப்பகுதியில், அதன் பிலிப்பைன் டகாலோக் மொழிப்பெயரான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிப்பினாஸ் (PKP) மூலம் அறியப்பட்ட பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி தேக்க நிலை மற்றும் கலைப்பு காலத்திற்குள் நுழைந்தது. பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸின் கெரில்லா இராணுவமான இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மாற்றியமைக்கப்பட்ட விவசாய ஹுக்பாலஹாப் இன் ஹுக்போ மாபக்பாலயா என்.ஜி. பயானின் (HMB) கிளர்ச்சி உளவியல் யுத்தத்தினதும் மற்றும் சரணடைந்த "ஹக்ஸ்கள்" இற்கான வரையறுக்கப்பட்ட நில சீர்திருத்த திட்டத்தின் ஒருங்கிணைந்த பயன்பாடு மூலம் மாக்சேசே (Magsaysay) நிர்வாகத்தால் வெற்றிகரமாக அடக்கப்பட்டது.

இந்த திட்டமும் மாக்சேசேவின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியும் CIA செயல்பாட்டாளர் எட்வர்ட் லான்ஸ்டேலால் முழுமையாக திட்டமிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், ஏற்கனவே கெரில்லா போரிலிருந்து தந்திரோபாயங்களை சட்டரீதியான போராட்டத்திற்கு மாற்றிய பின்னர், பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸின் தலைமை அதன் "ஒற்றைக் கோப்பு" கொள்கையை அறிவித்தது. அனைத்து பணியாளர்களும் வேறு ஒரு கட்சி உறுப்பினருடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் உத்தரவுகள் "ஒற்றை கோப்பில்" வாய்வழியாக பரப்பப்பட வேண்டும். பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸின் வலைப்பின்னல்கள் மற்றும் ஒழுங்கமைக்கும் குழுக்கள், சாராம்சத்தில் சுயமாக கலைந்துபோயின. ஒரு சில கெரில்லா பிரிவுகள் மெய்க்காப்பாளர்களாகவும், சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பாகவும் இருத்தப்பட்டன. இவ்வாறான பிரிவுகளில் குமாண்டர் டான்டேவின் மத்திய லூசன் கட்டளையகம் இருந்தது. இது புதிய மக்கள் இராணுவத்தின் (NPA) ஸ்தாபக அலகு ஆகும்.

1950 களின் பிற்பகுதியில் பிலிப்பைன்ஸ் சமுதாயத்தில் முதலாளித்துவ தேசியவாத அரசியல் மற்றும் மாணவர் கிளர்ச்சியின் ஒரே நேரத்தில் அலைகள் உடைந்தபோது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட செயலிழந்த அமைப்பாக இருந்தது. இது 1960களில் இந்த மோசமான நிலையில் தொடர்ந்தும் இருந்தது. ஜோன்சன் மற்றும் நிக்சனுடனான தனிப்பட்ட உரையாடல்களில் கம்யூனிச கிளர்ச்சியை இமெல்டா மார்க்கோஸ் வெறித்தனமாகக் கண்டித்து, மில்லியன் கணக்கான டாலர்களை இராணுவ நிதியுதவியைப் பெற்றாலும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து நிலைமைகளின் போதும் முற்றிலும் இயங்காத நிலைக்கு வந்துவிட்டது.

ஜோமா என்று அழைக்கப்படும் ஜோஸ் மரியா சிஸன், 1969 இல் பிலிப்பைன்ஸில் இந்த முறை CPP என்ற சுருக்கத்தின் கீழ் ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். ஜோமா இலோகோஸை பிரதேசத்தை சேர்ந்த ஒரு நில உரிமையாளர் மெஸ்டிசோ குடும்பத்தின் குழந்தையாவார். அவர் 1950 களில் அரசியல்வாதிகளின் வார்த்தையாடல்களின் மத்தியில் வளர்ந்து, மேலும் அவர்களின் தேசியவாதத்தால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

1960 களின் முற்பகுதியில், அவர் சிறிதுகாலம் இந்தோனேசியாவுக்குச் சென்றார். அங்கு அவர் எயிட் (Aidit) இன் கீழ் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிசத்தை எதிர்கொண்டார். அவர் பிலிப்பைன்ஸ் திரும்பி, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மற்றும் ஒரு சுறுசுறுப்பான இளைஞர் பிரிவை நிறுவினார். அவரது செயல்பாடும், அப்போதிருந்த தலைமை மீதான கூர்மையான விமர்சனமும் அவருக்கு மத்திய குழுவின் கோபத்தை உருவாக்கியது. 1960 களின் பிற்பகுதியில் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜனவரி 1969 இன் தொடக்கத்தில், பங்கசினனின் மங்காடரெமின் தொலைதூர பேரியோ பகுதியில், ஜோமா சிஸன் 11 கூட்டாளிகளைச் சந்தித்து பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியைக் நிறுவினார். மாநாடு ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது, ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மாவோ சேதுங்கின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸின் தேதி டிசம்பர் 26, 1968 என பதிவு செய்யப்பட்டது. காங்கிரசில், சிஸன் முன்னர் எழுதப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் "பிழைகளை சரிசெய்து கட்சியை மீண்டும் உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் இருந்தார். பிலிப்பைன்ஸ் சமூகம், அரை நிலப்பிரபுத்துவ, அரை காலனித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருந்தது, மற்றும் ஒரே ஒரு சாத்தியமான தீர்வு "நீடித்த மக்கள் யுத்தமே". இது "இது "நகரத்தை சுற்றி வளைக்க கிராமப்புறங்களைப் பயன்படுத்துவதற்கான கோட்பாட்டின் உலகளாவிய உண்மை வெல்லமுடியாததாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த “மக்கள் யுத்தத்தை” நடத்துவதற்கு மக்கள் இராணுவம் தேவைப்படுகையில், ஜோமா சிஸன், இந்தத் துறையில் இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி ஹுக்போ மாபக்பாலயா என்.ஜி. பயானின் கெரில்லாக்களில் ஒருவரான குமாண்டர் டான்டே என அழைக்கப்படும் பெர்னாபே புஸ்காயினோவை தொடர்பு கொண்டார். குமந்தர் டான்டேவின் தலைமையில், பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் பிரிவு மார்ச் 29, 1969 இல் புதிய மக்கள் இராணுவமாக (NPA) நிறுவப்பட்டது.

பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி-புதிய மக்கள் இராணுவம் ஒரு சிறிய, முக்கியமற்ற அமைப்பாக இருந்தது. இது சிலரை அணிதிரட்டி மற்றும் சிறிதளவு சாதித்தது. எவ்வாறாயினும், இராணுவச் சட்டத்தின் அறிவிப்பு மற்றும் அமைப்புகளின் சட்டரீதியான வடிவங்கள் ஒடுக்கப்பட்டதன் மூலம், பலர் புதிய மக்கள் இராணுவம் மற்றும் மலைகளில் உள்ள கொரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்தனர். குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள், அதிருப்தி அடைந்த விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்கள் அனைவருமே "கிராமப்புறங்களிலிருந்து நகரத்தை சுற்றி வளைக்க" அனுப்பப்பட்டனர். மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை இறுக்கமாக திணித்தமை, மேலும் புதிய மக்கள் இராணுவத்தை செழிக்க வைத்தது. சித்தாந்த ரீதியாக திவாலான பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இதுவரை நடந்த மிகச் சிறந்த விஷயம் இந்த இராணுவச் சட்டமாகும். புதிய மக்கள் இராணுவம் 1970 களில் 60 உறுப்பினராக இருந்து பின்னர் 12,000 ஆக வளர்ந்தது.

நினோய் அக்கினோவின் படுகொலை

1981 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 1970 களில் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் மூலப்பொருட்களின் சர்வதேச விலைகளை அதிகரிப்பதன் மூலமும், அமெரிக்கா மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களின் வெளிப்புற ஆதரவினாலும் ஊக்கமளிக்கப்பட்டது. இப்போது, மார்கோஸின் கூட்டாளிகளால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களின் மோசமான கடன்களும், கடன் சேவை செலவில் அமெரிக்க டாலர் பாராட்டுதலின் விளைவுகளும் பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சுருக்கத்தை உருவாக்கியது. மார்கோஸுக்கு இன்னும் இருந்த நடுத்தர வர்க்க ஆதரவின் எச்சங்கள் மறைந்துவிட்டன.

எவ்வாறாயினும், பொருளாதாரம் மட்டுமல்ல. மார்கோஸுக்கு தோல் புற்றுநோய் இருந்தது. அவர் இறந்து கொண்டிருந்தார். இது மார்க்கோஸ் கூட்டாளிகளின் மிகக் குறைந்த வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருந்தது. மார்க்கோஸ் வெளிப்டையாக தோன்றுவது மிகக்குறைவாகவே இருந்தன. அவர் மெதுவாக, தடித்த குரலில் பேசினார். அவரது நெருங்கியவர்களில், அதிகாரத்திற்காக ஒரு போட்டி இருந்தது. அதாவது மார்கோஸுக்குப் பின் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான போராட்டம் இருந்தது.

பாதுகாப்பு மந்திரியும் மற்றும் இராணுவச் சட்டத்தை உருவாக்கியவரான என்ரில், மார்க்கோஸ் பதவி விலகும்போது அவரின் இடத்தைப் பிடிப்பார் என்று நீண்ட காலமாக கருதியிருந்தார். மார்கோஸுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. இமெல்டா தனது வாரிசாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். மார்க்கோஸ் தனது மிருகத்தனமான குண்டர் கொலைகாரனாக இருந்த ஜெனரல் வெர் இல் தனது நம்பிக்கையை வைத்திருந்தார். ஒரு இலோகானோ சிப்பாயான வெர், மார்கோஸின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக இருந்து பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் தலைவராக எழுந்தவராவார். துரோகம்மிக்க என்ரைல் அதிகாரத்தை அடைவதற்கான பிற வழிகளைத் திட்டமிடத் தொடங்கினார்.

மார்கோஸின் நோய் மற்றும் வரவிருக்கும் மரணம் பற்றிய வதந்திகள் பரவின. இப்போது பாஸ்டனில் நாடுகடந்து வாழ்ந்த நினோய் அக்கினோ, வதந்திகளைக் கேட்டு, பிலிப்பைன்ஸுக்குத் திரும்ப முடிவு செய்து, ஜனாதிபதி பதவி கிடைக்கும்போது அங்கிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகஸ்ட் 21, 1983 இல், அக்கினோ மணிலாவில் இறங்கினார். டார்மாக் விமான நிலையத்தில் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியபோது தலையின் பின்புறத்தில் ஒரு முறை சுடப்பட்டார்.

அதற்காக ஒரு பலிக்கடா மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது உடல் டார்மாக்கில் பாதுகாப்புப் படையினரின் தோட்டாக்களால் சிதைக்கப்பட்டு அக்கினோவின் அருகில் கிடந்தது. எவ்வாறாயினும், அக்கினோவின் கொலை மார்க்கோஸ் ஆட்சியால் கட்டளையிடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இமெல்டா மற்றும் வெர் இந்த விஷயத்தில் ஒரு கைவைத்திருந்தனர் என்பது தெளிவாக இருந்தது. அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

கொரசோன் அக்கினோ தனது கணவரின் இறுதிச் சடங்கிற்காக பிலிப்பைன்ஸ் திரும்பினார். அவர் அரசியல் புத்திசாலித்தனத்தைக் காட்டினார். கணவரின் உடலை எவரும் தீண்டக்கூடாது என உத்தரவிட்டார். அவரது உடல் இரத்தம் தோய்ந்த நிலையில் திறந்த பேழையில் காட்டப்பட்டது. நினோய் அக்கினோவின் இறுதி ஊர்வலம் மார்கோஸுக்கு எதிரான ஒரு அரசியல் பேரணியாக மாறியது. அதில் இரண்டு மில்லியன் மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.

நினோய் அக்கினோ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த முயற்சிக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தேசிய முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தை மார்க்கோஸ் கொள்ளையடிப்பதை எதிர்த்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சக்தி மற்றும் சோசலிச புரட்சியின் சாத்தியம் குறித்து பயந்திருந்தது. அக்கினோவிற்கான நீதி, அனைவருக்கும் நீதி (Justice for Aquino, Justice for All- JAJA) என இந்த அமைப்பு அழைக்கப்பட்டதால், மார்க்கோஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் அணிதிரட்ட முயன்றது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வர்க்க நலன்களைப் பின்பற்றுவதைத் தடுக்கவும் முயன்றனர். JAJA நாளாந்தம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

“மக்கள் சக்தி”

1985 இன் பிற்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தம், மார்கோஸை 1986 பிப்ரவரியில் முற்கூட்டிய தேர்தலை நடத்தத் தூண்டியது. எதிர்க்கட்சியின் போட்டியிடும் குடும்ப நலன்கள் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை நடத்துவதைத் தடுக்கும் என்றும், தேர்தலின் முடிவைக் அவரால் கட்டுப்படுத்த முடியும் என நம்பியிருந்தார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஜெய்ம் பேராயர் சின் இன் ஊடுருவல் இல்லாதிருந்திருந்தால் அவரது கணக்கீடுகள் சரியாக இருந்திருக்கும்.

பேராயர் சின், 1970 களில் இருந்து 2005 இல் அவர் இறக்கும் வரை, பிலிப்பைன்ஸின் பிரபல்யமான அரசியல் நபர்களை தீர்மானிக்கும் மற்றும் திறமையாக கணக்கிடும் அரசியல் கையாளுபவராகவும் இருந்தார். அவரது ஒப்புதல் ஒரு அரசியல் வேட்பாளரை உருவாக்கக்கூடும், அவரது மறுப்பு ஒரு அரசியல் வாழ்க்கையின் முடிவை உச்சரிக்கக்கூடும். கார்டினல் சின் எதிர்க் கட்சிகளின் மோதலில் தலையிட்டு, வேதனைக்குள்ளான விதவையான கோரி ஜனாதிபதியாக போட்டியிடுவார் என்றும், எதிர்க்கட்சிக்குள் அவரது முன்னணி போட்டியாளரான சால்வடார் லாரல் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக பணியாற்றுவார் என்றும் ஆணையிட்டார்.

பிப்ரவரி, 1986 தேர்தலில் மார்கோஸின் வெளிப்படையான மோசடி, ஒரு சர்வாதிகாரத்தினால் உருவாக்கப்படும் மோசடியின் தரங்களைக்கூட அதிர்ச்சியூட்டுகிறது. வாக்குப் பெட்டிகள் அடைக்கப்பட்டன, மற்றவை திருடப்பட்டன. வாக்களிப்பு பட்டியலில் இருந்து மில்லியன் கணக்கான பெயர்கள் மறைந்துவிட்டன. பாரிய மோசடி இருந்தபோதிலும், அக்கினோ வென்றது தெளிவாகத் தெரிந்தது.

மார்க்கோஸ் தனது வெற்றியை அறிவித்தார். அக்கினோவின் பதில் தேசிய முதலாளித்துவத்தின் இயலாமைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக இருந்தது. அவர் மார்கோஸின் நட்பு நிறுவனங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார். அவரது ஆதரவாளர்கள் இனி மார்கோஸின் கூட்டாளிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவில்லை. அனைத்து மின்சாரங்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் உட்பட பரந்த அளவிலான தயாரிப்புகளில் ஏகபோக உரிமையை இவ்வாறான நிறுவனங்கள் வைத்திருந்த ஒரு நாட்டில், இது செயலற்றது மட்டுமல்ல, சாத்தியமற்றதுமாகும்.

எவ்வாறாயினும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக என்ரில் இதைக் கண்டார். இராணுவத்தின் மீதான மார்கோஸின் கட்டுப்பாடு பிளவுபட்டு இருந்தது. மார்கோஸின் இன-உறவுமுறையால் பதவி உயர்வு பெறுவதில் தவிர்க்கப்பட்ட கோபமடைந்த நடுத்தர தரவரிசை மற்றும் இளைய அதிகாரிகள் சர்வாதிகாரத்தின் தொடர்ச்சியை எதிர்ப்பதற்கு அதிருப்திகொண்ட பிரிவினரின் ஒரு கூட்டை உருவாக்கினர்.

இந்த வலதுசாரி இராணுவக் குழுவுக்கு ஜனநாயகத்தின் மீதோ அல்லது கொராஸன் அக்கினோவின் வெற்றியிலோ அக்கறை எதுவும் இல்லை. அவர்கள் ஒரு ஒழுக்கமான ஆயுதப்படைகளை விரும்பினர், மார்கோஸின் தம்மவர் நலன்பேணல் இராணுவத்தின் சக்தியையும் செயல்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதைக் கண்டார்கள். என்ரில் மற்றும் மார்கோஸின் இரண்டாவது உறவினரான ஜெனரல் பிடல் ராமோஸ் இந்த எதிர்ப்பை ஏற்பாடு செய்தனர். போட்டியிட்ட தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், மணிலாவின் பெருநகரத்தின் எபிபானியோ டி லாஸ் சாண்டோஸ் வீதியின் (Edsa) இரண்டு இராணுவ தளங்களை அவர்கள் கைப்பற்றினர். என்ரில் மார்கோஸை வெளியேற்றி தன்னை பிரதமராக அறிவிக்க விரும்பினார்.

மார்க்கோஸ் உடல்நிலை சரியில்லாமலும் பலமில்லாமலும் இருந்தார். கிளர்ச்சிக்கு உடனடியாக பதிலளிக்க அவர் தவறிவிட்டார். இருபத்தி நான்கு மணிநேரம் கடந்து, மேலும் அதிகமான துருப்புக்கள் விட்டோடிய பின், பேராயர் சின் மீண்டும் தலையிட்டார். அவர் கத்தோலிக்க வானொலி வெரிட்டாஸ் இல் ஒரு வேண்டுகோளை ஒளிபரப்பினார். கோரியின் ஆதரவாளர்களை எட்ஸாவை நிரப்பி, ஆட்சி கவிழ்ப்பவர்களைச் சுற்றி ஒரு மனித வளைவை உருவாக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சதி, கோரி அக்கினோ சார்பானது என்று அவர் அறிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன் மக்கள் இந்த அழைப்புக்கு பதிலளித்தனர். சதித்திட்டத்திற்கு எதிராக டாங்கிகளை அனுப்ப மார்க்கோஸ் இறுதியாக உத்தரவிட்டபோது, அவை எதிர்ப்பாளர்களால் தடுக்கப்பட்டதைக் கண்டார்கள். நிராயுதபாணியான கன்னியாஸ்திரிகள் டாங்கிகளுக்கு முன்னால் மண்டியிடும் திடுக்கிடும் படங்களை சர்வதேச ஊடகங்கள் வழங்கிய இந்த நிகழ்வு, “மக்கள் சக்தி” என்று பின்னர் குறிப்பிடப்பட்டது. வெர், சுட டாங்கிகளுக்கு உத்தரவிட விரும்பினார், ஆனால் மார்க்கோஸ் மீண்டும் தயங்கினார்.

பேர்டினட்டும், இமெல்டா மார்க்கோஸும் அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரேகனுடன் 1982 இல் வெள்ளை மாளிகையில் (Wikimedia)

அமெரிக்க வெளியுறவுத்துறையில் பலர் ரேகனின் மார்கோஸுடனான நெருங்கிய உறவை நீண்டகாலமாக எதிர்த்தனர். மார்க்கோஸ் மக்கள் தொடர்புகளுக்கு மோசமாக இருந்தார்; அவர் வியாபாரத்திற்கு மோசமானவர் எனக்கருதினர். கையாட்களின் கட்டுப்பாட்டில் உள்ள வணிகங்கள் மற்றும் பரவலான ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை அவை செயல்படுத்த விரும்பிய புதிய தாராளவாத சுதந்திர சந்தைக் கொள்கைகளுக்கு உகந்தவையாக இருக்கவில்லை.

எவ்வாறாயினும், 1960 களில் இருந்து ரீகன்கள் மார்கோஸுடன் நெருக்கமாக இருந்தனர். ரொனால்ட் மற்றும் நான்சி கலிபோர்னியாவின் ஆளுநராக இருந்தபோது ஒரு அரச விஜயத்திற்காக பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்தனர். நான்சியும் இமெல்டாவும் ஒருவருக்கொருவர் வாரந்தோறும் தொலைபேசியில் பேசினர். 1980களில் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது துணை ஜனாதிபதி புஷ் மார்கோஸின் "ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றுவதை" பிரபலமாக கண்டித்தார். பிப்ரவரி 1986 முற்கூட்டிய தேர்தலுக்குப் பிறகு, ரேகன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் "இரு தரப்பிலும் வன்முறை மற்றும் மோசடி நடந்திருப்பதாக" அறிவித்தார்.

பிப்ரவரி நிகழ்வுகள் தொடர்ந்தபோது, ரேகனின் நெருங்கிய ஆலோசகர்கள் கூட மார்கோஸைக் கைவிட்டனர். பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை, வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், உயர் ஆலோசகர்களான ஷூல்ட்ஸ், வொல்போவிட்ஸ், அர்மகோஸ்ட் மற்றும் போயிண்டெக்ஸ்டர் ஆகியோர் மார்க்கோஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டனர். CIA இயக்குனர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் காஸ்பர் வெயின்பெர்கர் ஆகியோர் மார்கோஸுடன் இணைந்தனர். ரேகனும் அவ்வாறே செய்தார்.

பல விவாதங்களுக்குப் பின்னர், மார்கோஸுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. செய்தி இரவு 9 மணிக்கு மார்கோஸுக்கு தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 26 அன்று, நான்கு ஹெலிகாப்டர்கள் அவரை, இமெல்டா, அவர்களது குழந்தைகள் மற்றும் வெர் ஆகியோருடன் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவந்தன. அமெரிக்கா தனது ஆதரவை அக்கினோவின் பின்னால் வைத்தது. அவர் சின்னின் சூழ்ச்சிகளின் நன்றியறிதலுடன், ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். அக்கினோவின் கீழ் பாதுகாப்பு மந்திரி பதவியை என்ரில் ஏற்றுக்கொண்டார்.

அக்கினோவின் ஜனாதிபதி பதவிக்காலம்

ஒரு சர்வாதிகாரியை வெளியேற்றியது எப்போதுமே அக்கினோவின் மிகச்சிறந்த சாதனை என்று சித்தரிக்கப்படுகிறது. இரங்கல் உரைகள் அனைத்தும் அவர் ஜனநாயகத்தை பிலிப்பைன்ஸுக்கு மீட்டெடுத்தார் எனக் கூறுகின்றன. அவர் ஒரு சிறந்த ஜனாதிபதி அல்ல என அவர்கள் ஒப்புக்கொண்டாலும், ஆனால் "ஒரு எளிய இல்லத்தரசி அதிகாரத்திற்குள் தள்ளப்பட்டால்" நீங்கள் எதனை எதிர்பார்க்கலாம்? என அவர்கள் கூறினர்.

ஆனால் இது கட்டுக்கதையின் அபாயகரமான மறுபக்கம் ஆகும். உண்மையில் ஒரு இராணுவ சதி, ஒரு முன்னணி மதகுருவின் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் தாமதமான தலையீடு ஆகியவற்றால் தான் மார்க்கோஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மணிலாவில் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் (Wikimedia)

"மக்கள் சக்தி" பிலிப்பைன்ஸ் அரசியலில் ஒரு மந்திர சக்தியின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மரியான் பக்தியினதும், எட்ஸா மற்றும் ஆர்டிகாஸ் வீதிகளின் மூலையில் வர்க்கத்தால் வேறுபடுத்தப்படாத ஏராளமான மக்களை ஒன்று திரட்டும் ஒரு விசித்திரமான கலவை எப்படியாவது பிலிப்பைன்ஸ் சமுதாயத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே இதன் கருத்தாக காணப்படுகின்றது.

இருப்பினும் இது ஒரே கட்டுக்கதை அல்ல. அக்கினோ ஜனாதிபதியாக போட்டியிட்டபோது ஒரு "எளிய இல்லத்தரசி" என்பதிலிருந்து வெகு தொலைவில் இருந்தார். இது ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடுவதற்கு அநீதியால் உந்தப்பட்ட ஒரு "எளிய இல்லத்தரசி" என தனது பிரச்சாரத்தில் தன்னை முன்வைத்தார் என்பது உறுதி. இது ஒரு சக்திவாய்ந்த காட்சியாக இருந்தது. ஆனால் உண்மையிலிருந்து இது வெகு தொலைவில் இருந்தது.

கொராஸன் அக்கினோ 13 ஆண்டுகளாக கொஜுவாங்கோ பேரரசின் பொருளாளராக இருந்தார். அவர் புத்திசாலித்தனமாகவும், கணிப்பிடுபவராகவும் இருந்தார். அதிகாரத்திற்கு பழக்கமான ஒரு பெண், செல்வத்தைப் பெற முடிந்ததுடன், அதை வைத்திருக்கவும் முடிந்தது. அவர் கீழ்பணிவுள்ள மதவாதியுமாவார்.

இதுதான் அவரது ஜனாதிபதி பதவியின் அகநிலையான அடிப்படையை உருவாக்கியது. அவர் ஒரு ஹசெண்டெராவின் உளவியலைக் கொண்டிருந்தார். அவர் பரந்த ஹசிண்டா கரும்புத்தோட்டங்களின் உரிமையாளரும், மற்றும் ஒரு பாரம்பரிய கத்தோலிக்கரின் மனநிலையை கொண்டவரும் ஆவார்.

ஸ்பானியமயமாக்கப்பட்ட சீன ஸ்பானிய தன்னலக்குழு முந்தைய நூற்றாண்டில் மாறிவிட்டது. சீன வம்சாவளியின் எந்த தடயமும் நீண்ட காலமாக வேண்டுமென்றே அழிக்கப்பட்டுவிட்டன. ஸ்பானிய பாரம்பரியம் காஸ்டிலியன் பழக்கவழக்கங்களின் பாசாங்கில் மட்டுமே நீடித்தது. தன்னலக்குழுக்கள் தங்களை டொன்ஸ் மற்றும் டோனாஸ் என்று வடிவமைத்துக் கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் வெளிநாடுகளில், நிதி மற்றும் தொழில்துறை முதலாளித்துவத்தின் ஒவ்வொரு வடிவத்திலும் தன்னலக்குழுக்கள் வாங்கியதால், தோட்டங்களுடனான அவர்களின் நெருங்கிய உறவுகள் பின்னணியில் மங்கிவிட்டன. அவர்கள் இனி தங்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை. அவர்கள் மணிலாவில் உள்ள மாளிகைகளில் வாழ்ந்தனர். இந்த செழிப்பான அரண்மனைகளின் பாதுகாப்பான அரண்கள், ஒரு குறுகிய கால்நடைத்தூரத்தில் உள்ள பரந்த வறுமையான குடியிருப்புகளிலும், அரைக்கும் ஏழ்மையிலும் இருந்து அவர்களை பெரிதும் பாதுகாத்தது.

இந்த கோஜுவாங்கோ வம்சத்தின் வாரிசான கோரியின் உளவியலே அவரது ஜனாதிபதி பதவியின் புறநிலை அடித்தளத்திற்கு அவர் எவ்வாறு பதிலளித்தார் என்பதை வடிவமைத்தது. விரோத வர்க்க சக்திகளின் துண்டு துண்டான மற்றும் பதட்டமான கூட்டணியின் அடிப்படையில் அவர் ஆட்சிக்கு வந்தார்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் இளைய தரவரிசை அதிகாரிகள் அக்கினோ நிர்வாகத்திற்கு ஆதரவாக என்ரிலைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் ஆயுதப்படைகளின் சீர்திருத்தம், முன்னர் கிடைக்காதவர்களுக்கு விரைவான பதவி உயர்வும், மற்றும் மார்க்கோஸ் ஆட்சியின் போது அதிவேகமாக வளர்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு தீவிரமான மற்றும் அணிதிரட்டப்பட்ட நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தின் புதிய அமைப்புகளை உடைத்தெறிய வேண்டும் என்று அவர்கள் கண்டனர்.

மார்க்கோஸ் ஆட்சியின் போது அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டிருந்த தன்னலக்குழு குடும்பங்கள் அனைவரின் ஆதரவும் அக்கினோவுக்கு இருந்தது. அவர்கள் தங்கள் சொத்து மற்றும் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முயன்றனர்.

மார்க்கோஸ் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதில் வெற்றிபெறாத நகர்ப்புற நடுத்தர வர்க்க உறுப்பினர்களிடமிருந்தும் அக்கினோ ஆதரவைப் பெற்றார். சுதந்திரமான மற்றும் ஊழல் இல்லாத, திறமையான, மேற்கத்திய பாணியிலான ஜனநாயகத்திற்குள் ஒரு தொழில்நுட்ப பங்கை வகிக்க அவர்கள் மீண்டும் விரும்பினர். பேராயர் சின் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் முழு ஆதரவையும் அக்கினோ அனுபவித்தார்.

இறுதியாக, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி-புதிய மக்கள் இராணுவம் உடன் நீண்டகாலமாக அதிருப்தி அடைந்த குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள் இப்போது அக்கினோவின் நிர்வாகத்திற்குள் ஒரு இடத்தைத் தேடினர். அவரது சில கொள்கைகளை தளர்வாக வரையறுக்கப்பட்ட சமூக ஜனநாயக இலக்குகளின் திசையில் கொண்டு செல்லலாம் என்று நம்பினார்கள்.

அவரது ஜனாதிபதி பதவியின் முதல் ஆண்டின்போது, அவரது ஜனாதிபதி பதவியின் அடிப்படையை உருவாக்கிய வர்க்க சக்திகளின் கூட்டணி பெருகிய முறையில் விரோதமான மோதல்களினால் பிரிந்தது. அக்கினோ அனைத்து குழுக்களுடனும் இணைந்துபோக முயன்றார் மற்றும் அவர்கள் ஒருவரை ஒருவர் ஆத்திரமூட்டிக்கொண்டனர். அதிருப்தி அடைந்த இராணுவ அதிகாரிகள், கிரிகோரியோ ஹொனாசனின் தலைமையில், ஏழு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். அவை ஒவ்வொன்றும் பெருகிய முறையில் இரத்தக்களரியானதாக இருந்தது. 1986 இன் பிற்பகுதியில் என்ரில் பாதுகாப்பு மந்திரி பதவியை இராஜினாமா செய்தார், மேலும் பல இராணுவ சதித்திட்டங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார்.

சதித்திட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அக்கினோ தனது அரசாங்கத்தை தீவிரமாக வலதுபுறமாக திருப்பினார். அவர் தனது அமைச்சரவையில் சமூக ஜனநாயக புத்திஜீவிகளை தங்கள் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டார். CAFGU கள் (பொது ஆயுதப்படைகள் புவியியல் அலகுகள்) என அழைக்கப்படும் குண்டர்களின் ஆயுதமேந்திய துணைப்படை கம்யூனிச எதிர்ப்பு ஆயுதக் குழுக்களை உருவாக்குவதை அவர் ஆதரித்தார். இந்த விழிப்புணர்வு துணை இராணுவ குழுக்கள் துன்புறுத்தல், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டன. இவை அனைத்தும் உத்தியோகபூர்வ கம்யூனிச எதிர்ப்பின் அனுசரணையில், பிலிப்பைன்ஸ் இராணுவத்தால் நிதியளிக்கப்பட்டன. அக்கினோ CAFGU களை "மக்கள் சக்தியின் ஒரு உதாரணம்" என்று இழிபெயரிட்டார்.

நில சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளுடன் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் பத்திரிகைகளை நிரப்பியது. நில உரிமையாளர் துஷ்பிரயோகங்களின் பிரதிபலிப்பாக அவர்களின் அங்கத்துவம் அதிகரித்த தன்னலக்குழு மற்றும் புதிய மக்கள் இராணுவத்தின் அதிகாரத்தை ஒரே நேரத்தில் உடைப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

இங்கே அக்கினோவின் உண்மையான வர்க்க கூட்டுக்கள் வெளிப்பட்டன. அவர் தொடர்ச்சியான அரை மனதுடன் கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு, அது தவறான பெயரிடப்பட்ட விரிவான விவசாய சீர்திருத்த திட்டத்தில் (CARP) உச்சக்கட்டத்தை அடைந்தது. பெரிய நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை வணிக அல்லது தொழில்துறை நிலங்களாக மறுவகைப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது நிலத்தின் உரிமையை கூட்டு பங்கு உரிமையாக மாற்றுவதன் மூலமாகவோ அல்லது பங்குகளில் ஒரு சிறிய பகுதியை குத்தகை விவசாயிகளுக்கு விநியோகிப்பதன் மூலமாகவோ இந்த சட்டத்தின் கீழ் குத்தகைதாரர்களுக்கு மறுவிநியோகம் செய்வதைத் தவிர்த்தனர்.

கோஜுவாங்கோஸ் தங்கள் நிலத்தில் இரண்டையும் செய்தார். அவர்கள் அதில் ஒரு பகுதியை மறுவகைப்படுத்தி, மீதமுள்ளவற்றை கூட்டு பங்கு உரிமையின் கீழ் வைத்தனர். கோரி குடும்பத்தை ஹேசிண்டா வைத்திருந்தார். நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் படிப்படியாக அக்வினோவிலும் ஏமாற்றமடைந்தனர்.

ஜனவரி 22, 1987 அன்று, அக்கினோ நிர்வாகத்திடமிருந்து உண்மையான நில சீர்திருத்தத்தை கோரி 10,000 விவசாயிகள் குழு மெண்டியோலா பாலம் முழுவதும் அணிவகுத்தனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐம்பது பேர் காயமடைந்தனர். இது மெண்டியோலா படுகொலை என்று அறியப்பட்டது. இது அக்கினோவின் பெருகிய முறையில் கடுமையான அணுகுமுறையையும், தன்னலக்குழுவின் நலன்களை வன்முறையுடன் பாதுகாப்பதற்கான அவரது விருப்பத்தையும் உள்ளடக்கியது.

தேசிய தேர்தல்கள் 1987 மே மாதம் நடைபெற்றது. பிரதிநிதிகள் சபையில் 200 இடங்களில் 169 இடங்கள் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களின் பிரதிநிதிகளுக்கு சென்றன. இவர்களில் 102 பேர் 1986 க்கு முந்தைய மார்க்கோஸ் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 67 பேர் மார்க்கோஸ் சார்புடையவர்கள். இது "தன்னலக்குழு சக்தியினை பன்முகப்படுத்துவதற்கான ஒரு உலுக்கலாகும்."(Benedict Anderson, “Cacique Democracy in the Philippines,” in The Spectre of Comparisons, London, Verso, 1998, p. 222).

அக்கினோ தனது பதவியினை ஏற்ற நேரத்தில் இருந்தே அமெரிக்க தளங்களை விரிவாக்குவதை எதிர்க்கக்கூடும் என்ற எண்ணத்தை அளித்தார். 1991 ஆம் ஆண்டில் குத்தகை புதுப்பிக்க வரும்போது, அக்கினோ அரசாங்கம், நிதி தேவைப்படும் நிலையில், புதுப்பித்தலை பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருந்தது.

பினாட்டுபோ எரிமலை ஜூன் 1991 இல் வெடித்து, கிளார்க் வான்படைத் தளத்தை அழித்தமை அதனை புதுப்பித்தலை ஒரு முக்கிய புள்ளியாக மாற்றியது. அக்கினோ நிர்வாகம் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் சுபிக் கடற்படை தளத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பிலிப்பைன்ஸ் செனட்டில் மறு பேச்சுவார்த்தை குத்தகைக்கு ஒப்புதல் பெற முடியவில்லை. அமெரிக்க கடற்படை 1992 இல் பிலிப்பைன்ஸிலிருந்து விலகியது.

அக்கினோ நிர்வாகம் வளர்ந்து வரும் வறுமை மற்றும் வர்க்க மோதல் அதிகரிப்பதை குறித்து நின்றது. மின்தடை மற்றும் தொலைத்தொடர்பு தோல்விகள் ஆகியவை நீடித்தன. தன்னலக்குழு அரசியல் தொடர்ந்தது. 1992 தேர்தலில், மற்ற வேட்பாளர்களாக டாண்டிங் கோஜுவாங்கோ, இமெல்டா மார்க்கோஸ் மற்றும் பிடல் ராமோஸ் ஆகியோர் பதவிக்கு போட்டியிட்டனர். ராமோஸ் ஒரு சிறிய பன்முகத்தன்மையுடன் ஜனாதிபதி பதவியை வென்றார். அதே அரசியல் நடிகர்கள் அதே அரசியல் சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர். என்ரில் இப்போது செனட் தலைவரானார்; கிரிகோரியோ ஹொனாசன் ஒரு செனட்டரானார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளித்துவ தேசியவாதமும் மற்றும் புரட்சி பற்றிய இரண்டு கட்ட தத்துவமும்

அக்கினோ இறந்தமை பற்றிய பிலிப்பைன்ஸ் ஊடகங்களில் உள்ள புகழ்பாடல் வெவ்வேறு மூலங்களிலிருந்து வந்தது. சிலருக்கு, கோரியைப் பற்றிய அவர்களின் அபிமானம் உண்மையானது, இது வரலாற்றை தவறான விளங்கியதன் விளைவாகும். அக்கினோ அதிகாரத்திற்கு ஏறுவதை ஒரு அரசியல் மாசற்ற கருத்தாக அவர்கள் பார்க்கிறார்கள். அவரை நினைவுகூரும் வகையில், பிலிப்பைன்ஸ் அவதூறோ ஊழலோ இன்றி சர்வதேசத்தின் கண்ணை கவர்ந்த ஒரு நாளாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கு, கோரிக்கு அவர்கள் விரும்பும் பிரியாவிடை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் கடந்த கால பங்கேற்பை நினைவுபடுத்துகிறது. இது குட்டி முதலாளித்துவத்தின் வெற்று மற்றும் வரலாற்று ஆதாரமற்ற ஏக்கமாகும். சர்வாதிகார அபிலாஷைகளைக் கொண்ட ஒரு சிறிய அடாங்காப்பிடாரியான தற்போதைய ஜனாதிபதியான குளோரியா மகாபகல்-அரோயோ திறமை அல்லது கவர்ச்சி இல்லாத மார்க்கோஸ் ஆகும்.

ஆனால் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனைப் போன்றவற்றிற்கும், அக்வினோவின் மரணத்தின் பின்னர் வழங்கப்படும் புகழ்ச்சிகள் மார்க்சிச எதிர்ப்பு இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் திவாலான கொள்கைகளின் தொடர்ச்சியாகும்.

1986 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜனங்களை செயலற்ற முறையில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுத்தது. இது மார்க்கோஸ் அல்லது அக்கினோவுக்கு எவ்வித மாற்றையும் முன்வைக்கவில்லை. புறக்கணிப்புக்கான அதன் அழைப்பு வெகுஜனங்களை தேசிய முதலாளித்துவ மற்றும் அக்கினோவின் கைகளில் கொண்டு சேர்த்தது.

தேர்தலுக்கு முந்தைய நாட்களில் மார்க்கோஸ் மற்றும் அக்கினோ இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அக்கினோ பதவியேற்ற பின்னர், பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அக்கினோவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருந்து, "நல்லிணக்கம்" மற்றும் "ஒரு கூட்டணி அரசாங்கத்தை" ஆதரித்தது. இது மே 1986 இல் தொடர் சொற்பொழிவுகளில் ஜோமா சிஸன் வாதிட்டதுபோல், அக்கினோ அரசாங்கத்திற்கும்" புரட்சிகர சக்திகளுக்கும் "இருதரப்பு சாதகமானது" எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த கூட்டணி அரசாங்கம் தோல்வியுற்றால், அவர் தொடர்ந்தார், “அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்த பெரிய தரகு முதலாளித்துவ மற்றும் நில உரிமையாளர்களின் புதிய குழுவினரின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம், நடுத்தர வர்க்கத்திலிருந்து புதியவர்களைத் அணிதிரட்டுவதன் மூலம் ஆதரவளிக்கப்பட்டு மற்றும் அதே வீழ்ச்சியடைந்த பாசிச சர்வாதிகாரியால் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட இராணுவத்தை பயன்படுத்த செய்யும் என்றார். மேலும் பாசிச சர்வாதிகாரத்தின் சாத்தியமான வருவாயை விரைவுபடுத்துவதற்கும், அதன் விளைவாக ஆயுதப் புரட்சிகர இயக்கத்தின் வெற்றியைப் பெறுவதற்கும் மட்டுமே இது உதவும். சர்வாதிகாரத்தை மீள்சீரமைப்பது புரட்சியின் வெற்றிக்கு உதவும்.” என்றார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான, சோசலிச தொழிலாளர் கழகத்தின் வெளியீடான தொழிலாளர் செய்தியில் 1987 இல் எழுதிய நிக் பீம்ஸ், “சிஸனின் அரசியலும் மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் இருமடங்கு விஷமாகும். ஒருபுறம் அவர்கள் அக்கினோ ஆட்சியில் மாயைகளை ஊக்குவிக்கின்றனர், பின்னர், இராணுவ சர்வாதிகாரத்தின் ஆபத்து வெளிப்படும் போது, அத்தகைய சர்வாதிகாரம் புரட்சிகர சக்திகளின் வெற்றியை விரைவுபடுத்தும் என்ற கோட்பாட்டின் மூலம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குகின்றனர்” எனக்குறிப்பிட்டார்.

எட்ஸாவில் வெகுஜனங்களின் இயக்கமும், பேர்டினாண்ட் மார்கோஸை வெளியேற்றுவதும் பிலிப்பைன்ஸில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு வழி திறந்திருக்கக்கூடும். ஆனால் தேவைப்பட்டது ஒரு புரட்சிகர தலைமையாகும். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் மக்களை பங்கேற்பதைத் தவிர்க்குமாறு கூறியது, பின்னர் புறக்கணிப்புக்கான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்புகளை மக்கள் புறக்கணித்தபோது, அது முதலாளித்துவ தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்க முயன்றது.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தை பின்பற்றுகிறது. பிலிப்பைன்ஸில் புரட்சியின் பணிகள் தேசிய ஜனநாயகமே தவிர சோசலிசம் அல்ல என்று அது கூறுகிறது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் கூற்றுப்படி, பிலிப்பைன்ஸ் ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை காலனித்துவ நாடு. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிலிப்பைன்ஸ் மீது திணிக்கப்பட்ட ஒரு பின்தங்கிய நிலை. ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதிலும், பிலிப்பைன்ஸின் தொழிற்துறைமயமாக்கல் மற்றும் ஜனநாயக வளர்ச்சியிலும் தேசிய முதலாளித்துவம் ஒரு புரட்சிகர பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்கின்றது.

இந்த கொள்கையின் சோகமான முடிவுகளின் எடுத்துக்காட்டுகளுடன் இருபதாம் நூற்றாண்டு நிரம்பியுள்ளது. 1925-1927 ஆம் ஆண்டில், ஸ்டாலின் சீன கம்யூனிஸ்டுகளுக்கு தேசிய முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு அடிபணியுமாறு கட்டளையிட்டார். கோமிண்டாங்கின் தலைவரான சியாங் கே-ஷேக் ஷாங்காயின் தொழிலாள வர்க்கத்தை படுகொலை செய்தார்.

1965 இல் இந்தோனேசியாவில், ஸ்ராலினிச இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி சுகர்னோவின் தேசிய முதலாளித்துவ நிர்வாகத்துடன் ஒத்துழைத்தது, இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தின் அடிப்படையில். சுஹார்டோ அதிகாரத்தைக் கைப்பற்றி 500,000 முதல் 1,000,000 இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை படுகொலை செய்யத் தொடங்கியபோது அது நிராயுதபாணியாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா, சூடான் மற்றும் ஈராக் மற்றும் பிற நாடுகளில் இதே அடிப்படையிலான ஸ்ராலினிசக் கொள்கையிலிருந்து இதேபோன்ற இரத்தக்களரி முடிவுகள் பின்பற்றப்பட்டன. புரட்சியின் இரண்டு கட்ட தத்துவம் பாட்டாளி வர்க்கத்தை அதன் வர்க்க எதிரியான முதலாளித்துவத்தின் முன்னிலையில் நிராயுதபாணியாக்குகிறது.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு ஒரு முதலாளித்துவ வெற்றியாளனைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறது, அவர் "தேசிய ஜனநாயக" புரட்சியை முன்னெடுத்துச் செல்வார். அதன் வார்த்தையாடலில், தேர்தலுக்கு முன்னர் அக்கினோ மார்கோஸிலிருந்து வேறுபட்டவர் அல்ல; சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, அவர் ஒரு சாத்தியமான கூட்டு; சமாதான பேச்சுவார்த்தைகள் முறிந்தபோது, அவர் மீண்டும் ஒரு பாசிசவாதி; இப்போது அவர் இறந்துவிட்டார், அவர்கள் அவரை என்ன செய்ய முடியும்?

ஆகஸ்ட் 2 ம் தேதி ஜோமா சிஸனும் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியின் மற்ற தலைவர்களும், "கொராஸன் அக்கினோ மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான பாசிச எதிர்ப்பு கூட்டணியில் ஒரு சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் நபராக இருந்தார்" என்று எழுதினர். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் அமைப்பான கிலுசாங் மாயோ யூனோ (KMU) பின்வருமாறு எழுதியது: “அவர் பிலிப்பைன்ஸ் மக்களின் கூட்டாளியாக இறந்தார் … அவர் பிலிப்பைன்ஸ் மக்கள் ஒற்றுமையின் சக்தியின் வரலாற்று காட்சியின் ஒரு பகுதியாக இருந்த எட்ஸா 1 வாக இருந்தார். உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்காக போராடும் முடிக்கப்படாத பணியைத் தொடர பரந்த ஒற்றுமையை உருவாக்க இன்று வரலாற்றால் அழைக்கப்படுகிறோம்”. விமர்சனரீதியான வார்த்தை எதுவும் அதில் எழுதப்படவில்லை.

கொராஸன் கோஜுவாங்கோ அக்கினோ "மக்களின் சக்தியை" குறிக்கவில்லை. அவர் பிலிப்பைன்ஸில் முதலாளித்துவ-நில உரிமையாளர் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்தார். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக இருந்தார். அவரை "சர்வாதிகாரத்தின் எதிரி" அல்லது "ஜனநாயகத்தின் தாய்" என்று புகழ்ந்து பேசுவது பிலிப்பைன்ஸ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் பொய் கூறுவதாகும்.

தேசிய முதலாளித்துவம் இயல்பாகவே பின்தங்கிய நாடுகளில் தொடர்ச்சியான புரட்சிகர அல்லது முற்போக்கான பாத்திரத்தை வகிக்க இயலாது. இது ஏகாதிபத்திய மூலதனத்துடனும் நில உரிமையாளர்களின் வர்க்கத்துடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களிடையே பதட்டங்கள் தோன்றக்கூடும் என்றாலும், அவை தமக்குள் பகிர்ந்துகொள்ளும் விரோதத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் அச்சத்திற்கும் அடிபணியச் செய்யப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் போன்ற தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், தேசிய முதலாளித்துவத்தால் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் இலக்குகளை அடைய முடியாது. ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிக்கும் மற்றும் ஜனநாயகத்தை மட்டுமல்ல, சோசலிச நடவடிக்கைகளையும் தொடங்கும் விவசாயிகளின் ஆதரவுடன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே இந்த இலக்குகளை அடைய முடியும். அவற்றை ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் செய்து முடிக்க முடியாது. ஆனால் தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பரந்த சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இயலும்.

அத்தகைய ஒரு புரட்சிகர போராட்டத்தை வழிநடத்தும் முன்னோக்கு சர்வதேசவாதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பிலிப்பைன்ஸில் முதலாளித்துவ அபிவிருத்தியின் நிலை உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒருங்கிணைந்த மற்றும் சமத்துவமற்ற அபிவிருத்தியின் ஒரு பகுதியாகும். உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஆசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம் பிலிப்பைன்ஸ் முதலாளித்துவ மற்றும் பெரிய நில உரிமையாளர்களுக்கு எதிரான தனது போராட்டத்தை நனவுடன் நடத்த வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம். அதன் பணிகள் உலகளாவியவை. சோசலிசத்தை சர்வதேச அளவில் மட்டுமே அடைய முடியும்; பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றிபெற வேண்டுமானால் அது ஒரு சர்வதேச புரட்சியாக இருக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் முதலாளித்துவத்தின் நலன்களுக்கு விரோதமானவை. முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் பாட்டாளி வர்க்கத்தை அடிபணியச் செய்வது, அதாவது "பரந்த ஐக்கியத்தை உருவாக்குதல்" "தேசிய ஜனநாயகப் புரட்சியின்" நோக்கத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு மகத்தான தோல்விகளைத் தயாரிப்பதாகும்.

அவை எழுதப்பட்டபோது இருந்ததைப் போலவே இப்போது பொருத்தமானதாக இருக்கும் நிக் பீம்ஸ் 1986 இல் தனது கட்டுரையை இவ்வாறு முடித்தார்:

"பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலம் ஒரு புரட்சிகர கட்சியை அதிகாரத்திற்கு இட்டுச் செல்வதற்கு கட்டுவதைப் பொறுத்தது. அதனால்தான், பிலிப்பைன்ஸ் புரட்சியாளர்கள் மற்றும் போராளிகளை இப்போது தங்கள் வர்க்கத்தின் நலன்களுக்காக செயல்படவும், தங்களை ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகையின் கீழ் நிறுத்தி, நான்காவது அகிரத்தின் அனைத்துலக் குழுவின் பிலிப்பைன்ஸ் பிரிவை கட்டியெழுப்பும் பணியைத் தொடங்கவும் நாங்கள் அழைக்கிறோம்”.

Loading