அசான்ஜ் விக்கிலீக்ஸை ஸ்தாபித்து பதினைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 4, 2006 அன்று ஆஸ்திரேலிய வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜால் விக்கிலீக்ஸ் ஸ்தாபிக்கப்பட்டு இன்று பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சிறிய ஊடக நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசாங்கம் மற்றும் பெருநிறுவனக் குற்றங்களையும், அத்துடன் இணைய தணிக்கை செய்து சுயாதீன ஊடகத்தை நசுக்கும் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கின் எப்போதுமான கொடூர முயற்சிகளையும் துணிச்சலாக அம்பலப்படுத்தும் தனித்துவமான நிறுவனமாக உருவெடுத்து வந்தது.

விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் தொடர்பான ஏனைய அனைத்து சமீபத்திய ஆண்டுவிழாக்களைப் போலவே, இன்றைய நாளின் சாதனையையும் அசான்ஜ் தனது சகாக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை. அதற்கு மாறாக, பிரிட்டனின் குவாண்டனாமோ விரிகுடா தடுப்பு முகாம் என்று அழைக்கப்டும் இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் அவர் உச்சபட்ச பாதுகாப்புடன், அந்த நேரத்தில் பெரும்பாலும் எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நிலையில் கூட, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜூலியன் அசான்ஜ்

ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜை ஒப்படைக்க கோரிக்கை சமர்ப்பித்ததாலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இது ட்ரம்புக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜோ பைடெனின் ஆட்சியிலும் தொடர்கிறது. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உலகளாவிய இராஜதந்திர சூழ்ச்சிகள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது உட்பட, அதன் வெளியீட்டு நடவடிக்கைகள் குறித்து கடுமையான உளவுச் சட்டத்தின் கீழ், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே அசான்ஜ் மீது வழக்குத் தொடுப்பதில் உறுதியாக உள்ளனர்.

அமெரிக்கக் காவலில் அவர் இறந்துவிடக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஜனவரியில் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்காமல் தடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த மாதம் இறுதியில் அவரை உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவுள்ள ஒரு மேல்முறையீட்டை பிரிட்டிஷ் நீதித்துறை அனுமதித்துள்ளது.

அசான்ஜை அழிக்கவும், விக்கிலீக்ஸை ஒழித்துக்கட்டவும் மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்குவதற்குமான ஒரு அப்பட்டமான முயற்சியாகவே அமெரிக்காவின் வழக்கு பதிவு எப்போதும் இருந்து வருகிறது. எவ்வாறாயினும், மேல்முறையீட்டு விசாரணைகள், சர்வதேச சட்டம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பின் மிக அப்பட்டமான மீறல்களை உள்ளடக்கிய அமெரிக்க வழக்கு ஒரு கிரிமினல் நிறுவனமாக முழுமையாக வெளிப்படும் நிலைமைகளின் கீழ் நடைபெறும்.

கடந்த மாதம், யாகூ நியூஸ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது, அது 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகமும் அதன் அப்போதைய சிஐஏ இயக்குநருமான மைக் பொம்பியோவும் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் அகதியாக இருந்த அசான்ஜைக் கடத்திச் செல்லவும், அவரைக் கொலை செய்யவும் கூட திட்டமிட்டனர் என்பதை அம்பலப்படுத்தியது. ட்ரம்பும் மைக் பொம்பியோவும் அசான்ஜை படுகொலை செய்ய விவாதிக்கப்பட்ட கூட்டங்களில் பங்கேற்றதாக முன்னாள் அதிகாரிகளின் செய்தி வெளியீடுகள் தெரிவித்தன. மேலும், ஐரோப்பாவில் உள்ள ஏனைய விக்கிலீக்ஸ் ஊழியர்களைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் பரப்பப்பட்டன.

விக்கிலீக்ஸின் உண்மையான மற்றும் தகுதிவாய்ந்த செய்திகள் வெளியிடுவதற்கு விடையிறுக்கும் விதமாக, அசான்ஜை ஒப்படைக்கச் செய்து அவர் மீது வழக்கு தொடர தொடர்ந்து போலி சட்ட முயற்சி எடுக்கப்பட்டது போல, சிஐஏ இன் தாக்குதல்களுக்கான திட்டங்களும் வெளிப்படையாக உருவாக்கப்பட்டன.

இவையிரண்டிற்கும் தூண்டுதலாக இருந்தது, 2017 இல் விக்கிலீக்ஸ் சிஐஏ ஆவணங்களை அம்பலப்படுத்தியதாகும். உலகில் தீய செய்திகளை பரப்பும் அமைப்பாக சிஐஏ இதை வெளிப்படுத்தியது. அறியப்பட்டபடி, Vault 7 ஆவணங்கள், சிஐஏ இன் மிக நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட சில அழுக்கு தந்திரங்களை வெளிப்படுத்தியது, இதில் ரஷ்யா போன்ற வெளிநாட்டு சக்திகளுக்கு அதன் சொந்த தகவல் திருட்டு நடவடிக்கைகளைக் கற்பிப்பதற்கான நுட்பங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம் வெகுஜன கண்காணிப்புகள் மற்றும் கார் கணினி அமைப்புகளை கையகப்படுத்தும் திறன் பற்றிய அபிவிருத்தி முயற்சிகள் அடங்கும்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பொம்பியோ விக்கிலீக்ஸை “அரசு சாராத விரோத புலனாய்வு நிறுவனம்” என்று முத்திரை குத்தினார். இந்த வரையறை, அமெரிக்க அரசாங்கம் அசான்ஜூக்கு எதிராக முழு ஆயுத அடக்குமுறையை செயல்படுத்த அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டது, ஏனென்றால் ரஷ்ய உளவுத்துறையுடன் இணைந்து விக்கிலீக்ஸ் வேலை செய்தது என்ற தங்களது சொந்த கூற்றுக்கள் மோசடியானதே என்பதை அமெரிக்க அதிகாரிகள் அறிந்திருந்தனர். அதற்கு பதிலாக, அவர்கள் வேறு வகைக்கு மாறினர், முக்கியமாக பயங்கரவாதிகளுக்கு சமமாக அமெரிக்க அரசாங்கத்தை மோசடி செய்த வெளியீட்டு நிறுவனமாக அதனை குற்றம்சுமத்தினர்.

அசான்ஜின் படுகொலை சம்பந்தப்பட்ட விவாதங்கள் இரகசியமாக நடத்தப்பட்டிருந்தாலும், விக்கிலீக்ஸூக்கு எதிராக எடுக்கப்படவுள்ள அசாதாரண நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக திட்டமிடப்பட்டது. உண்மையில், “அரசு சாராத விரோத புலனாய்வு நிறுவனம்” என்பதாக ஒரு அமைப்பிற்கான புதிய வரையறை, 2018 ஆம் ஆண்டிற்கான உளவுத்துறை அங்கீகாரச் சட்டத்தின் (Intelligence Authorization Act) கீழ், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளின் பெரும் ஆதரவுடன் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

யாகூவின் அறிக்கைக்குப் பிந்தைய வாரங்களில், அதன் உண்மைத் தன்மை, அது விவரித்த குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின் “சில பகுதிகள் உண்மையானவை” என்று பகிரங்கமாக அறிவித்த பொம்பியோ, யாஹூவின் ஆதாரங்களாக இருந்த 30 முன்னாள் அதிகாரிகள், 'மத்திய புலனாய்வு அமைப்பிற்குள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட செயல்பாட்டைப் பற்றி பேசியதற்காக வழக்குத் தொடரப்பட வேண்டும்' என்று அறிவித்தார்.

கடந்த வாரம் வெளிப்பாடுகள் பற்றி கேட்டபோது, பைடெனின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்து, சிஐஏ இடம் விசாரிக்குமாறு ஊடகவியலாளர்களுக்கு உத்தரவிட்டார். படுகொலை சதியில் சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளின் பதில் மூச்சுவிடாத மௌனமாக உள்ளது, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் தொடர்ந்து ‘வாய்மூடி’ சாதிக்கின்றனர், அல்லது சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கின்றனர்.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஊடக உரிமைகள் மிக ஆபத்தில் இருந்தாலும், பெருநிறுவன ஊடகங்கள் இந்த விஷயத்தை குறைத்து மதிப்பிடுகின்றன அல்லது ஓரங்கட்டுகின்றன. ரிச்சார்ட் நிக்சனை இராஜினாமாவுக்கு வழிவகுத்ததை விட வெளிப்பாடுகள் மிகவும் பரபரப்பானவை என்றாலும், அவை முற்றிலும் இரண்டாம் நிலை செய்திகளாக கருதப்படுகின்றன. பொதுவான போக்கு, அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் தொகுக்கப்பட்டுள்ளது, இது அதன் சோமாலிய மொழிப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியைத் தவிர யாகூ வின் கூற்றுக்கள் பற்றி ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த பதில், அசான்ஜின் துன்புறுத்தலில் உத்தியோகபூர்வ ஊடகங்களின் முக்கிய பங்கிற்கான மற்றொரு நிரூபணமாக உள்ளது. பல ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மீது இடையறாது அவதூறு சுமத்தப்படுவதானது, 2019 இல் சட்டவிரோதமாக அவர் கைது செய்யப்பட்ட நிலைமைகளுக்கு பங்களிக்கிறது, அப்போதிருந்து அவர்கள் கதையை கைவிட்டனர், மேலும் அமெரிக்க பிரச்சாரத்தின் குற்றவியல் தன்மை வெளிப்படுகிறது. அசான்ஜ் மீதான தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அல்லாமல், பெருநிறுவன ஊடகங்கள் அவரை நடத்தும் விதம் அவை அரசின் கையாளாக மாறிவிட்டதற்கான அடையாளமாக உள்ளது, மேலும் போருக்கான உந்துதலிலும் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒருங்கிணைந்து தாக்குவதிலும் விருப்பமுள்ள கூட்டாளியாகவும் உள்ளது.

அரசாங்கம் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களுக்கு எதிராக விக்கிலீக்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது, மேலும் அதன் வழமையான தணிக்கைக்குட்படுத்தப்பட்ட தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளன.

அசான்ஜ் இந்த நிறுவனத்தை ஸ்தாபித்து சிறிது காலத்திற்குப் பின்னர், அதன் பணி விபரத்தைத் தொகுத்து 2007 அறிக்கையை எழுதினார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சர்வாதிகார ஆட்சிகள் உண்மை, அன்பு மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான மக்களின் விருப்பத்தை எதிர்ப்பதன் மூலம் அவர்களை எதிர்க்கும் சக்திகளை உருவாக்குகின்றன. சர்வாதிகார ஆட்சிக்கு உதவும் திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மேலும் எதிர்ப்பைத் தூண்டும். அதனால்தான் இத்தகைய திட்டங்கள் வெற்றிகரமான சர்வாதிகார சக்திகளால் எதிர்ப்பு வீணாகும் வரை மறைக்கப்படும் அல்லது முழுமையான வலிமையின் செயல்திறனால் ஈடுசெய்யப்படும்”.

மிகவும் பிரபலமான வார்த்தைகளில் கூறுவதானால், 2011 இல் சிட்னி அமைதி அறக்கட்டளையின் தங்கப் பதக்கத்தை ஏற்றுக்கொண்டபோது அசான்ஜ் அதே பணி அறிக்கையை கோடிட்டுக் காட்டினார். அப்போது இவ்வாறு விவரித்தார்:

“சிறந்த கவிஞரும் நாவலாசிரியருமான மே சார்டன் இவ்வாறு சொன்னதை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்: ஒரு கண்ணியமான மனிதனைப் போல செயல்பட விரும்பினால் நீங்கள் ஒரு கதாநாயகனைப் போல சிந்திக்க வேண்டும் ...

“நாம் புறநிலையானவர்கள், ஆனால் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம். புறநிலை என்பது நடுநிலைமைக்கு சமமானதல்ல. புகாரளிக்கும் போது உண்மைகளை சிதைப்பதைவிட நாங்கள் உண்மைகளைப் பற்றி புறநிலையாக இருக்கிறோம். ஆனால் நாம் எந்த மாதிரியான உலகத்தைப் பார்க்க விரும்புகிறோம் என்பதில் நாம் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் இன்னும் நியாயமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறோம்.

“எனது ஊழியர்களையும் என்னையும் பொறுத்த வரை, விக்கிலீக்ஸ் எப்போதும் மக்களுக்கான உளவுத்துறை நிறுவனமாக இருக்கவே பாடுபடும். மேலும், இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் கதாநாயகர்களாக நடிக்க தயாராக இருக்கும் வரை, நாங்கள் எப்போதும் வெறுமனே கண்ணியமான மனிதர்களாக இருப்போம்.”

இந்த நோக்கங்களை மேலும் மேம்படுத்துவதற்காக, விக்கிலீக்ஸ் முன்னோடி கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தியது, அவை பொதுவான கற்பிதம் எதுவுமில்லாமல் பெருநிறுவன விற்பனை நிலையங்கள் உட்பட, மிகப்பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், கசிவுத் தகவல்களைப் பெறுவதற்கு இலக்கமுறை தகவல் பெட்டி (digital dropbox) வளர்ச்சி, மற்றும் உலகெங்கிலும் உள்ள பல ஊடகவியலாளர்களும் மற்றும் ஊடக நிறுவனங்களும் இணைந்த ஒத்துழைப்பு மாதிரி, இரகசிய செய்தி வெளியீட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து அதை வெளியிடுவதற்கு தயார் செய்வது போன்றவை அடங்கும்.

2006 முதல் பல ஆண்டுகளில், விக்கிலீக்ஸ் அதன் பணி அறிக்கையை நிறைவேற்றியது, அநேகமாக வேறு எந்த வெளியீட்டையும் விட அதிக வெடிப்புறும் செய்திகளை வெளியிட்டது. இந்த நிறுவன வெளியீடுகளின் முழு நோக்கமும் மில்லியன் கணக்கான ஆவணங்கள் மற்றும் டஜன் கணக்கான வெளியீடுகளை பரப்பி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கையை தொடுவதாகும்.

அசான்ஜ் குற்றம்சாட்டப்பட்டதற்கு அவற்றில் மிக முக்கியமான வெளியீடுகளே காரணம். அவற்றில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பதிவுகள் அடங்கும், இவை மூடிமறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்பை வெளிப்படுத்தியதுடன், நாஜிக்களின் குற்றங்களுக்குப் பின்னர் அமெரிக்க தலைமையிலான படையெடுப்புக்கள் மிகக் கொடூரமான நவ காலனித்துவ நடவடிக்கையாக இருந்ததை அம்பலப்படுத்தின.

நூறாயிரக்கணக்கான அமெரிக்க இராஜதந்திர இரகசியங்கள், உலகெங்கிலுமான ஆட்சிக்கவிழ்ப்பு சதி, அரசியல் ஊழல் மற்றும் ஜனநாயக விரோத சதி ஆகியவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈடுபாட்டை அம்பலப்படுத்தின.

குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவ சிறையிலுள்ள கைதிகளினது கோப்புகள், ஒரு குற்றமும் செய்யாதவர்கள் என்று அறிந்தே அமெரிக்க அரசாங்கம் அவர்களை சிறைப்பிடித்து சித்தரவதை செய்து உலகளவில் மூடிமறைத்ததை அம்பலப்படுத்தின.

விக்கிலீக்ஸ் மீதான தாக்கம் அதன் வெளியீடுகளின் முக்கியத்துவத்துடன் பொருந்துவதுடன், இந்த அமைப்பை நசுக்க அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளி நாடுகளும் எந்தளவிற்கு உறுதியான முயற்சிகளை எடுக்கின்றன என்பது பற்றி விளக்கவும் உதவுகிறது. பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படுகொலையின் போது அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரில் அமெரிக்க துருப்புக்களை காட்டும் 'கூட்டுக் கொலை' காணொளி, ஈராக் போரின் குற்றத்தின் அடையாளமாக மாறியது. இராஜதந்திர இரகசியங்கள், மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக தீட்டப்பட்டாலும் முதலாளித்துவ அரசியலின் முன்னுதாரணமற்ற விளக்கத்தை அவை வழங்குகின்றன, மேலும் 2011 இல் எகிப்து மற்றும் துனிசியாவில் புரட்சியைத் தூண்ட உதவின.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பரந்த திருப்பத்தின் கூர்மையான வெளிப்பாடாக, விக்கிலீக்ஸூம் அதன் ஸ்தாபகரும் கடுமையாக துன்புறுத்தப்படுவது உள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை விளக்கியது போல: 'மிகவும் அதிக மின்னேற்றமேறிய வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளது தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் எரிந்து போகின்றன அல்லது வெடிக்கின்றன. இதுதான் அத்தியாவசியமாக சர்வாதிகாரம் என்னும் ஷார்ட் சர்க்யூட்டிங் குறித்து நிற்பதாகும்”.

அசான்ஜின் வழக்கு, அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எந்த அரசியலமைப்பில் எந்த ஆதரவும் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் அவரை துன்புறுத்துவதை ஆதரிக்கின்றன, அதேவேளை ஒரு காலத்தில் போலி அனுதாபம் காட்டிய தொழிற்சங்கங்களும் போலி-இடது அமைப்புக்களும் அவரை நீண்ட காலத்திற்கு முன்பாகவே கைவிட்டுவிட்டன.

இது, அசான்ஜை நாடுகடத்தாதே (Don’t Extradite Assange group) என்பது போன்ற உத்தியோகபூர்வ குழுவின் திவால்நிலையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது, ட்ரம்ப் மற்றும் பிடென் போன்ற நபர்களிடம் கண்ணியமான தார்மீக முறையீடுகளுக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு, அசாஞ்சின் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை வலியுறுத்துகிறது.

உண்மையில், அசான்ஜின் விடுதலைக்கான போராட்டம், ஏகாதிபத்திய போர், சர்வாதிகாரம் மற்றும் இரண்டிற்கும் அடிப்படையாகவுள்ள காலாவதியான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. ஆளும் வர்க்கங்களின் குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கும் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அதன் தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டத்தில் இறங்கும் தொழிலாள வர்க்கம், அவர்களது சொந்த ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் அசான்ஜின் சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்க வேண்டும்.

Loading