முன்னோக்கு

இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசாஞ்சை நாடு கடத்த உத்தரவு: ஒரு போலி சட்ட கேலிக்கூத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான அங்கீகாரம் அளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்ற உத்தரவு, நீதியின் கேவலமான கேலிக்கூத்தாக உள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் [Credit: AP Photo/Matt Dunham] [AP Photo/Matt Dunham]

ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான கொலைகார படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது ஏகாதிபத்திய அரசாங்கங்கள் நடத்திய குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரு துணிச்சலான பத்திரிகையாளரை துன்புறுத்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் 10 ஆண்டுகால அரசியல் சதியின் விளைவுதான் இந்தத் தீர்ப்பாகும்.

அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அனுமதித்து, மால்டன் பிரபு பர்னெட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹோல்ராய்ட் ஆகியோர், அசாஞ்சின் சிகிச்சை குறித்து அமெரிக்காவிற்கு 'உறுதிமொழி வழங்குவதற்கான வாய்ப்பை' கீழ்நீதிமன்றம் வழங்கியிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். மேல்முறையீட்டு விசாரணையில் கூறப்பட்ட அசாஞ்சின் மீது 'படுகொலை, கடத்தல், விஷம் கொடுத்தல்' போன்றவற்றை திட்டமிட்டதாக கூறப்படும் அரசால் இப்போது வழங்கப்பட்ட உத்தரவாதங்கள், அவரது நலன் குறித்த 'கவலைகளை கவனிப்பதற்கு போதுமானவை' என்பதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த தீர்ப்பின் மூலம், ஐக்கிய இராச்சியத்தின் நீதித்துறையானது பிரிட்டிஷ் அரசின் இணக்கமான கருவியாக அதன் செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், பேரழிவு தரும் ஜனநாயக விரோத தாக்கங்களுடன் அதிர்ச்சியூட்டும் குற்றவியல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக முத்திரை குத்த தயாராக உள்ளது.

அசாஞ்சின் வழக்கறிஞர்கள் அமெரிக்க 'உறுதிமொழிகளை' அவ்வாறான ஒன்றும் இல்லை என்று மறுத்து, அவர் CIA ஆல் சட்டவிரோதமாக குறிவைத்ததற்கான விரிவான ஆதாரங்களை அளித்தனர். இதில் Yahoo! News இன் மிகவும் நம்பகமான விசாரணையும் அடங்கும்! அது அவரது கடத்தல் மற்றும் கொலை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் திட்டமிடப்பட்டது என்ற செய்தி மற்றும் ஸ்பெயினில் நடந்து வரும் குற்றவியல் விசாரணை பற்றி எடுத்துக்காட்டியது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு முன் இந்த வாதங்களை பற்றிக் குறிப்பிட்டு, “அமெரிக்காவின் நல்ல நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் பொதுவான கருத்து அறிக்கைகள், அத்தகைய கருத்தை வழங்குவதற்கு பொருத்தமான நிபுணத்துவம் இல்லாதவர்களிடமிருந்து இணைய தேடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர் கருத்தை விட மதிப்பு இல்லை” என்றனர்.

நீதிபதிகள் தொடர்ந்தனர், “உண்மை என்னவென்றால், அமெரிக்காவின் உத்தரவாதங்கள் நல்ல நம்பிக்கையுடன் வழங்கப்படவில்லை அல்லது வேறு சில காரணங்களால் அவை முக மதிப்பில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்ற அடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவாதங்களை நிராகரிக்க இந்த நீதிமன்றம் அழைக்கப்படுகிறது. இது ஒரு தீவிரமான குற்றச்சாட்டாகும், குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா நாடுகடத்துதல் விவகாரங்களில் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்”. ...

அவர்கள் முடிக்கிறார்கள்: 'இந்த நீதிமன்றம் அவர்கள் சொல்வதைப் போன்ற உறுதிமொழிகளை ஏற்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.'

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீதிமன்றம் அசான்சின் தெளிவாக மீறப்பட்ட சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றி சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. மாறாக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் மற்றும் உறவை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மற்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தும் ஒரு தீர்ப்பை அது இப்போது வழங்கியுள்ளது. மேலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான பரவலான தாக்குதலுக்கும் இந்தத் தீர்ப்பு வழி வகுக்கிறது.

அசாஞ்சின் நாடு கடத்தல் இப்போது உடனடியாக நடக்கலாம். அவர் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்திலோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்ய முடியும் என்று நாம் நம்பக்கூடாது. அசாஞ்ச் தன்னிச்சையாக காவலில் வைக்கப்பட்டு, வேவுபார்த்து, வெளிநாட்டு தூதரகத்திலிருந்து கைப்பற்றப்பட்டு, ஈக்வடோர் புகலிடத்தையும் குடியுரிமையையும் பறித்து, உளவியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு, பழிவாங்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்படாமல் பல ஆண்டுகளாக அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள விளக்க நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், விடுதலைக்கான பிரத்தியேகமான சட்டப் பாதை என்பது, இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அனுபவித்து வரும் சகிக்க முடியாத நிலைமைகளின் கீழ், பெல்மார்ஷில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் குறிக்கிறது.

பிலிப்பைன்ஸின் ரொட்றிக்கோ டுறேற்ற மற்றும் பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்ட பாரிய கொலைகாரர்களின் கும்பல் கலந்துகொண்ட 'ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை' அசாஞ்சை துன்புறுத்துபவரான ஜனாதிபதி ஜோ பைடென் நடத்தியபோது அவரின் விதி தொடர்பான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் 'ஆபத்திலுள்ள செய்தித்துறையாளர்களுக்கு இலத்திரனியல் மற்றும் உடலியல்ரீதியான பாதுகாப்பு பயிற்சி, உளவியல் பாதுகாப்பு, சட்ட உதவி மற்றும் பிற வகையான உதவிகளை வழங்க' 3.5 மில்லியன் டாலர்கள் செய்தித்துறை பாதுகாப்பு திட்டம் முன்மொழியப்பட்டது.

அதே நாளில் இங்கிலாந்தில், பிரபுக்களின் மன்றம் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு விவாதத்தை நடத்தியது. அதில் அசாஞ்சை பற்றி ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் கீழ்த்தரமான பாசாங்குத்தனமானது, அதன் அழுகிய அரசாங்கங்களை நியாயமாகவே அவமதிப்புடன் பார்க்கும் பரந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்காது. அவர்கள் கேட்கவேண்டிய கேள்வி “அவர்களால் எப்படி இதைச் செய்ய முடிந்தது?” என்பது அல்ல. ஆனால் 'அவர்கள் எப்படி அதிலிருந்து தப்பிக்க முடியும்?' மற்றும் 'அவர்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?' என்பதாகும்.

எந்தவொரு பதிலும் இந்த கட்டத்தில் நிகழ்வுகளின் கவனமான அரசியல் மதிப்பீட்டில் இருந்து தொடங்க வேண்டும். இப்போது வரை, அசாஞ்சின் சுதந்திரத்திற்கான போராட்டம் நீதிமன்றங்களிடம் நீதிக்காக கோரிக்கை வைப்பதில் கவனம் செலுத்தும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம், தாராளவாத மற்றும் வலதுசாரி தாராளவாதிகளின் சோர்வுற்ற அணிகளின் நல்ல மனிதர்கள் மூலம் நீதியைத் தேடுவது சிறப்பானது என்பதை மையமாகக் கொண்ட உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் கைகளில் விடப்பட்டுள்ளது. இந்த முன்னோக்கு பேரழிவானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் சோசலிச பிரச்சாரக் குழுவின் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அசாஞ்சின் விடுதலைக்கான முக்கியமாக போராடுவோராக கருதப்பட்டனர். ஆனால் அவர்களின் ஆதரவு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்ட அக்கறையுள்ள ட்வீட்கள், பிரதம மந்திரி பொறிஸ் ஜோன்சனிடம் வேண்டுகோள்கள் மற்றும் பிரிட்டிஷ் நீதி பற்றிய பிரசங்கங்களை விட சற்று அதிகமாக மட்டுமே உள்ளது. நேற்றைய தீர்ப்புக்கு ஏழு மணிநேரங்களுக்குப் பின்னர் கோர்பினின் ஒற்றை அநாகரீகமான ட்வீட்டான, 'சங்கடமான உண்மைகளை வெளிப்படுத்தியதற்காக ஜூலியன் அசாஞ்ச் நாடு கடத்தப்படக் கூடாது' என்பது அவர்களின் செயலற்ற தன்மையின் கவனத்தை ஈர்க்க மட்டுமே எழுதப்பட்டதாகும்.

அசாஞ்சை நாடு கடத்துவதை முறையாக எதிர்க்கும் வகையில், 11வது மணிநேரத்தில் இதேபோன்ற கடையை ஊடகங்களும் வைத்துள்ளன. ஆனால் உண்மை என்னவெனில், இந்த நிறுவனங்கள் தங்களைத் தாங்களே வெளியிடக் கொண்டு வரும் தலையங்கங்கள் மற்றும் கருத்துப் பத்திகள் எதுவாக இருந்தாலும், கார்டியன் மற்றும் நியூ யோர்க்டைம்ஸ் இன் தலையங்க அலுவலகங்களில் உள்ள உணர்வு சிரிப்புடனான திருப்தியாகவே இருக்கும். அவர்கள் நேற்றைய தீர்ப்புக்கு வழி வகுத்து பல ஆண்டுகளை கழித்தனர். அந்தந்த ஆளும் வர்க்கங்களுடனான அவர்களின் இணக்கமான உறவை சீர்குலைப்பதாக அச்சுறுத்திய அசாஞ்ச், கடைசியாக நினைவில் இருந்து அகற்றிப்படலாம் என்று அவர்கள் இப்போது நம்புகிறார்கள்.

அரை நூற்றாண்டு கால செய்தித்துறை வரலாற்றில் மிகவும் தாக்கமான விளைவைக்கொண்ட தீர்ப்பின் அறிக்கையை கார்டியன் தனது முதல் பக்கத்தில் “உலகத்தை சுற்றி” என்ற பகுதியில் 'இங்கிலாந்தில் இருந்து' என்பதன் கீழே சில மணிநேரங்கள் மட்டுமே வைத்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவரது வழக்கு, நீதித்துறை அமைப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட பின்னரே அசாஞ்சிற்கான போலி ஆதரவிற்கு கார்டியனும் அதன் கூட்டுக்களும் மாறின. அவரது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தீர்க்கமான காரணியான உலக மக்களிடம் இருந்த விக்கிலீக்ஸிற்கான பாரிய ஆதரவிலிருந்து அவரைத் தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை அவர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தனர்.

அசாஞ்சை ஒரு விலக்கப்பட்டவராக மாற்றுவதற்கான முயற்சிகள் சர்வதேச போலி-இடது அமைப்புகளால் பலவிதமாக ஆதரிக்கப்பட்டன அல்லது எதிர்க்கப்படாமல் விடப்பட்டன. அவற்றில் இங்கிலாந்து குழுவான Counterfire உம் இருந்தது. அதன் முன்னணி உறுப்பினர் ஜோன் ரீஸ் இப்போது, அசாஞ்சை ஒப்படைக்க வேண்டாம் குழுவின் (Don’t Extradite Assange group) தலைவராக உள்ளார். உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் முழு நோக்குநிலையும், அசாஞ்சிற்கு எதிரான குற்றவியல் நிறுவனத்தில் தற்போதைய அல்லது முன்னாள் பங்கேற்பாளர்களை நோக்கியதாக இருக்கின்றது. இவர்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு எந்தப் பங்கினையும் வழங்காத ஒரு சமூக அடுக்கு ஆகும்.

அந்தப் போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் தங்கியுள்ளது. அது, சர்வாதிகாரம் மற்றும் போருக்கான கட்டாய தயாரிப்பில் முதலாளித்துவ சமூக ஒழுங்குடன் இன்னும் வெளிப்படையான மோதலுக்கு வந்து கொண்டிருக்கிறது. இது, தொடர்ச்சியான பெரிய வேலைநிறுத்தங்கள், நிறுவனத்தால் எழுதப்பட்ட ஒப்பந்தங்களை திணிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சிகளுக்கு நேரடி எதிர்ப்பு போன்றவற்றால் அடிக்கடி காட்டப்பட்டது. இது அசாஞ்சை மௌனமாக்குவதற்கான பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து உலகளாவிய சூழ்நிலையில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது.

தொற்றுநோய், உழைக்கும் மக்களைச் சுரண்டுவது, பிணங்கள் நிறைந்த ஒரு மலையினால் உருவான நிலைமையினால் தன்னலக்குழுவினர் இலாபமடைவது, மேலும் மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்தும் அணு ஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவுடனான போருக்கு உந்துதல் ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் தீவிர அலையை முன்னோக்கி செலுத்துகின்றன.

இந்த மகத்தான சமூக சக்தியிடம் தான் அசாஞ்சை விடுவிப்பதற்கான பிரச்சாரம் திரும்ப வேண்டும். உலகெங்கிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதில் இப்போது வெளிப்பாட்டைக் கண்டுவரும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் ஒரு கோஷமாக அவருடைய விடயம் இருக்க வேண்டும். இந்த இயக்கம் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட அனைத்து முற்போக்கு சமூக சக்திகளை தன்பின்னால் அணிதிரட்டிக்கொள்ளும். உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்.

Loading