ஜேர்மனியின் புதிய பசுமைக் கட்சி வெளியுறவு மந்திரி பெயபொக் ரஷ்யாவையும் சீனாவையும் அணு ஆயுதங்களால் அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் புதிய வெளியுறவு அமைச்சராக அன்னலெனா பெயபொக் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, பசுமைக் கட்சியின் இணைத் தலைவரான இவர் taz செய்தித்தாளுக்கு வெளியுறவுக் கொள்கை விடயங்கள் குறித்து பரவலாக வாசிக்கப்பட்ட நேர்காணலை வழங்கினார். பெயபொக் இன் அறிக்கைகள் இரண்டு விஷயங்களை தெளிவாக்குகின்றன: ஒருபுறம், புதன்கிழமை அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக எடுத்துக் கொள்ளும் சமூக ஜனநாயகவாதிகள் (SPD), சுதந்திர ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சியினர் ஆகியோரின் 'போக்குவரத்து விளக்கு' கூட்டணி, முன்னைய பெரும் கூட்டணியின் போர் மற்றும் மறுஆயுதமயமாக்கல் கொள்கைகளை அணுசக்தி நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை தீவிரப்படுத்தும். இரண்டாவதாக, 1998 மற்றும் 2005 க்கும் இடையில் பசுமைக் கட்சி கடைசியாக ஆட்சியில் இருந்தபோது, நாஜி ஆட்சியின் முடிவின் பின்னரான முதல் ஜேர்மன் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டைத் தொடங்கிய முன்னாள் அமைதிவாதிகளாக பசுமைக் கட்சியினர் மீண்டும் ஒரு முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர்.

தீவிர வலதுசாரி மற்றும் இராணுவவாத வட்டாரங்களில் இருந்து மட்டுமே காணக்கூடிய ஒரு ஆக்கிரோஷத்துடன், ஒரு ஆக்கிரோஷமான வெளிநாட்டு மற்றும் பெரும் சக்திக் கொள்கையை தொடரும் ஜேர்மனியின் திறனை அணுஆயுதமயமாக்கலுடன் பெயபொக் இணைத்தார். 'உலக அரசியலின் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு தீவிரமான ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை எதிர்காலத்தில் நாம் மீண்டும் பின்பற்றுவோம் என்பதை துல்லியமாக இந்த அணு ஆயுதங்கள் பற்றிய கேள்வி தெளிவாக்குகிறது' என்று அவர் விளக்கினார். 'நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பிற்குள் அணுசக்தியின் பங்கெடுப்புடன் நாங்கள் எங்கள் பொறுப்புடன் நிற்கிறோம்.'

அன்னலேனா பெயபொக் (Photo: Stephan Röhl / CC BY-SA 2.0)

இது போதாதென்று அவர் ஒரு படி மேலே சென்றார். ஜேர்மனியில் மட்டும் ஏற்கனவே 100,000 க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கிய தொற்றுநோய்க்கு மத்தியில், இதற்கு எதிராக போராட பொருளாதார வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறப்படும் நிலையில், அணு ஆயுதங்களை கொண்டிருகக்கூடிய புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான போக்குவரத்து விளக்கு கூட்டணியின் அழைப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 'மரபுசார் தகமைகளை மாற்ற வேண்டும் என்பதால், டொர்னாடோ போர் விமானங்களுக்கு பின்னரான திட்டத்தை நாங்கள் வாங்க வேண்டும். எனவே இது அணுகுண்டு விமானங்கள் மட்டும் தொடர்புடையதல்ல. அணுசக்தி வைத்திருப்பதற்கான சான்றிதழ் பிரச்சினை பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும்” என்று அவர் அறிவித்தார்.

இந்தத் திட்டங்களின் அர்த்தம் என்ன என்பதை பெயபொக் அல்லது taz எழுதவில்லை. நிதிய அடிப்படையில், அவை இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து அனைத்து மறுஆயுதத் திட்டங்களையும் சிறியதாக்குகின்றன. குறைந்தது 90 புதிய யூரோ போர்விமானங்கள் மற்றும் 45 அமெரிக்க F-18 போர் விமானங்களை வாங்குவதன் மூலம் காலாவதியான டொர்னாடோ விமானத்தை மாற்ற ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. மொத்த செலவு கிட்டத்தட்ட 20 பில்லியன் யூரோக்கள் ஆகும். மேலும் அது ஆரம்பம் மட்டுமே. ஜேர்மனியும் பிரான்சும் தற்போது ஐரோப்பிய எதிர்கால போர் விமான அமைப்பை உருவாக்கி வருகின்றன. இதற்கு 2040 க்குள் பல நூறு பில்லியன் யூரோக்கள் செலவாகும்.

'அணுசக்தியுடன் பங்கேற்பு' என்றால் தெளிவாக என்ன? ஒரு மோதல் ஏற்பட்டால், ஜேர்மனியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க அணுகுண்டுகளுடன் ஆயுதம் ஏந்திய ஜேர்மன் போர் விமானங்கள் அணிதிரட்டப்படும். ஒருவேளை பேரழிவு விளைவுகளுடன் குண்டுகள் வீசப்படலாம். நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் (மற்றும் / அல்லது சீனா) இடையே ஒரு முழு அளவிலான அணுசக்தி யுத்தம், ஐரோப்பா முழுவதையும் அணுசக்தி பாலைவனமாக மாற்றுவது மட்டுமல்லாமல், முழுகிரகத்தின் அழிவையும் குறிக்கும்.

மறுஆயுதமமாக்கல் முதன்மையாக மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக இயக்கப்பட்டது என்ற உண்மையை பெயபொக் மறைக்கவில்லை. 'ரஷ்யா மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என்று taz கூறியபோது, 'குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அரசுகளின் சட்டபூர்வமான பாதுகாப்பு நலன்கள் தீவிரமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்' என்று பெயபொக் பதிலளித்தார். ஒரு 'மதிப்பு அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கை' என்பது 'எப்போதும் கலந்துரையாடல் மற்றும் கடுமையான நிலைப்பாடு என்பதற்கு இடையிடையே உள்ளது. நீண்ட காலமாக, சமீபத்திய ஆண்டுகளில் சிலரால் அப்படிப் பார்க்கப்பட்டாலும் கூட வாயளவிலான மௌனம் என்பது இராஜதந்திரத்தின் ஒரு வடிவம் அல்ல” என்று அவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: புதிய கூட்டாட்சி அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான போரை நோக்கிய ஆக்கிரமிப்பு போக்கை தீவிரப்படுத்தும். உண்மையில், சமீபத்திய ஆண்டுகளில் மாஸ்கோவை நோக்கிய வெளியுறவுக் கொள்கையானது 'வாயளவிலான மௌனத்தை' கொண்டிருக்கவில்லை. மாறாக ஜேர்மன் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய பெரும் அதிகாரக் கொள்கையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு வழியைப் பின்பற்றுகிறது. 2014 இல், கியேவில் ரஷ்ய எதிர்ப்பு ஆட்சியை நிறுவவும் மாஸ்கோவை பலவீனப்படுத்தவும் உக்ரேனில் வலதுசாரி சதியை பேர்லின் ஆதரித்தது. 2017 முதல், ஜேர்மன் இராணுவம் நேட்டோ மேம்படுத்தப்பட்ட முன்னோக்கிய பிரசன்னம் (eFP) என அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக கிழக்கு ஐரோப்பாவிற்கு போர் படைகளை இடமாற்றம் செய்து வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே பசுமைக் கட்சியினர் குறிப்பாக ஆக்ரோஷமான பாத்திரத்தை வகித்தனர். வலதுசாரி தீவிரவாத சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட கியேவில் உள்ள மைதானில் நடந்த போராட்டங்களில், பசுமைக் கட்சியுடன் இணைந்த ஹென்ரிச் போல் அறக்கட்டளை மற்றும் பல முன்னணி பசுமைக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஸ்வோபோடா தலைவர் ஓலெக் தியாஹ்னிபோக் போன்ற பாசிச பிரமுகர்களுடனான கூட்டணியை வெளிப்படையாக பாதுகாத்து ஆபத்தற்றதாக காட்டினர்.

இப்போது அவர்கள் ஒரு படி மேலே சென்று உக்ரேனிய இராணுவத்தையும் அதனுடன் இணைந்திருக்கும் பாசிச கிளர்ச்சியாளர்களையும் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, இணைத் தலைவரும் துணைவேந்தருமான ரொபேர்ட் ஹேபெக், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் கிழக்கு உக்ரேனில் உரையாற்றுவதற்காகப் பயணம் செய்து, “நாட்டின் கிழக்கில் போரைக் கருத்தில் கொண்டு ஆயுத விநியோகத்திற்கான உக்ரேனின் விருப்பத்தை நியாயமான ஒன்று எனக் கருதுவதாக அறிவித்தார்.

நேட்டோ சக்திகள் எந்த மூலோபாயத்தை பின்பற்றுகின்றன என்பது இப்போது தெளிவாகிறது. அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துச் சென்று உள்நாட்டில் குற்றம்மிக்க தொற்றுநோய் கொள்கையின் தாக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது. நேட்டோ ரஷ்ய எல்லையில் பாரிய இராணுவ பயிற்சிகளை நடத்துகிறது மற்றும் உக்ரேனுக்கு Javelin தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வழிகாட்டப்பட்ட-ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் ஆயுதமாக்குகிறது. ரஷ்யாவுடனான எல்லையில் உக்ரேனிய இராணுவம் 125,000 படையனரை திரட்டுகிறது என்ற ரஷ்ய செய்திகளை கியேவ் அரசாங்கம் மறுக்கவில்லை.

பெயபொக் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் பாதையையும் ஆதரிக்கின்றார். இது அணுசக்தி போரை தூண்டும் அச்சுறுத்தலை குறைக்கவில்லை. 'ஐரோப்பிய ஜனநாயக நாடுகளாகவும், அட்லாண்டிக் நாடுகடந்த ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும்,' நாங்கள் 'சீனா போன்ற ஒரு சர்வாதிகார ஆட்சியுடன் ஒரு திட்டமிட்ட போட்டியில் இருக்கிறோம்' என்று அவர் taz இல் ஆவேசப்பட்டார். இது சம்பந்தமாக, 'ஜனநாயகப் பங்காளிகளுடன் மூலோபாய ஒற்றுமையைத் தேடுவது, நமது மதிப்புகள் மற்றும் நலன்களை ஒன்றாகப் பாதுகாப்பது மற்றும் நமது வெளியுறவுக் கொள்கையில் இந்த மதிப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவது' முக்கியமானது என்றார்.

உண்மையில், ஆபத்தில் உள்ள பிரச்சினை 'மதிப்புகள்' அல்ல, மாறாக உறுதியான பொருளாதார மற்றும் பூகோளப மூலோபாய நலன்கள் ஆகும். 'குறிப்பாக எதிர்கால தொழில்நுட்பத் தலைமை பற்றிய கேள்விக்கு வரும்போது சீனா ஒரு போட்டியாளர்' என்று பெயபொக் ஒப்புக்கொள்கிறார். அதன் சொந்த நலன்களை வலியுறுத்தும் வகையில், ஜேர்மன் தலைமையின் கீழ் சீனா மீது இன்னும் ஆக்ரோஷமான ஐரோப்பிய கொள்கைக்கு பெயபொக் வேண்டுகோள் விடுத்தார். அவர் ஐரோப்பிய சந்தைகளுக்கு சீனாவின் அணுகலைக் கட்டுப்படுத்துவதாக அச்சுறுத்தி மற்றும் பெய்ஜிங்கில் வரவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதை நிராகரிக்கவில்லை.

ஐரோப்பியர்கள் “நாம் இருப்பதை விட சிறியவர்களாக ஆகிக் கொள்ளக்கூடாது. நாங்கள் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு சந்தைகளில் ஒன்றாகும்,” என்று அவர் பெருமையாக கூறினார். குறிப்பாக சீனா 'ஐரோப்பிய சந்தையில் பாரிய நலன்களை' கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 'கட்டாய உழைப்பு பொதுவான நடைமுறையாக இருக்கும் ஜின்ஜியாங் போன்ற பகுதிகளில் இருந்து வரும் தயாரிப்புகளுக்கு இனி எந்த அணுகலும் இல்லை என்றால், சீனா போன்ற ஏற்றுமதி நாட்டிற்கு இது ஒரு பெரிய பிரச்சனை' என்று பெயபொக் கூறினார். இந்த 'பொதுவான உள் சந்தையின் நெம்புகோல்' 'எல்லா 27 உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் கடந்த காலத்தில்போல, மிகப்பெரிய அங்கத்துவ நாடான ஜேர்மனி அதன் சொந்த சீனக் கொள்கையை உருவாக்கவில்லை.' எங்களுக்கு 'சீனா பற்றிய பொதுவான ஐரோப்பிய கொள்கை' தேவை என்று அவர் முடித்தார்.

பசுமைவாதிகள் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் காலநிலை பாதுகாப்பு பற்றிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி குட்டி முதலாளித்துவத்தின் செல்வந்த அடுக்குகளை ஒரு ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மற்றும் போர்க் கொள்கைக்காக அணிதிரட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த ஆதரவாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அவர்களின் கட்சியை வலது பக்கம் நோக்கி திரும்புவதை வேறெவரையும் விட பெயபொக் வெளிப்படுத்துகின்றார். சிவப்பு-பச்சைக் கூட்டணியின் போர்-சார்பு கொள்கைகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கம் உடைந்தபோது, 2005 இல் அவர் பசுமைக் கட்சியில் உறுப்பினரானார்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மூன்றாம் உலகப் போரில் முடிவடைந்தாலும் கூட, வெறுக்கப்படும் போர்க் கொள்கையைத் தொடரும்வகையில், பெயபொக் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்கிறார். ஒரு பேரழிவைத் தடுக்க, வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு தெளிவான அரசியல் முன்னோக்கும் நோக்குநிலையும் தேவை. இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் தொற்றுநோய் தொடர்பான 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' கொள்கைக்கு எதிரான போராட்டத்தைப் போன்று ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு தேவைப்படுகிறது.

Loading