முன்னோக்கு

பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுங்கள்! ஓமிக்ரோனைத் தடுக்க தொழிலாளர்கள் செயலில் இறங்க வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சுகாதார அமைப்பு (WHO) ஓமிக்ரோனை 'கவலைப்படுத்தும் வைரஸ் வகை' என்று பெயரிட்டு, அதன் ஆபத்து 'மிகவும் அதிகம்' என்று எச்சரித்து மூன்று வாரங்கள் ஆகின்றன. இந்த மூன்று வாரங்களில் அரசாங்கங்கள் எதுவும் செய்யவில்லை, கோவிட்-19 இன் புதிய வகை உலகெங்கிலுமான மக்கள் மத்தியில் கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்துள்ளன.

இந்த முக்கிய வாரங்களின் போது, சத்தமில்லாமல் ஓமிக்ரோன் பரவியுள்ள நிலையில், நோய்தொற்று ஏற்பட்டவர்கள் அதிகளவில் தொற்றக்கூடிய இந்த வைரஸை அவர்களே அறியாமல் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பரப்பி உள்ளனர். இப்போது கண்ணுக்குப் புலனாகாத இந்த வைரஸின் பரவல் நோயாளிகள் விகிதங்களின் முன்பில்லாத அதிகரிப்பில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது—இரண்டாண்டுக்கு முன்னர் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து எங்கேயும் பார்த்திராத வேகத்தில் இது பரவி வருகிறது.

Nurses walk out of Montefiore New Rochelle Hospital to go on strike over safe staffing issues during the coronavirus pandemic, Tuesday, Dec. 1, 2020, in New Rochelle, N.Y. [Credit: AP Photo/Mark Lennihan]

ஒவ்வொரு நாட்டிலும் என்ன நடக்கவிருக்கிறது என்பதற்கான ஒரு வெள்ளோட்டம் பிரட்டனில் எடுத்துக் காட்டப்படுகிறது. இவ்வார தொடக்கத்தில், ஓமிக்ரோன் இலண்டனில் மேலோங்கிய வகையாக மாறியது. வெள்ளிக்கிழமை பிரிட்டன் முன்பில்லாத அதிகபட்சமாக 93,000 நோயாளிகளைப் பதிவு செய்தது, இது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏற்பட்ட ஒரு நாள் அதிகரிப்பாகும். நோயாளிகளின் எண்ணிக்கை அந்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அதிகபட்ச மட்டங்களுக்கு அதிகரித்துள்ளன, மொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் இரண்டே நாட்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு விடையிறுத்து நுண்கிருமியியல் நிபுணர் ட்ரெவொர் பெட்போர்ட் (Trevor Bedford) கூறுகையில், ஓமிக்ரோன் தொடர்ந்து பரவுவது 'விண்ணை முட்டும் அளவிலான நோயாளிகள் எண்ணிக்கையில்' அதனை வெளிப்படுத்தும் என்று எச்சரித்தார்.

தற்போதைய அதிகரிப்பு விகிதம், 'இங்கிலாந்தில் 2.3 நாட்களுக்கும் ஜேர்மனியில் 3.3 நாட்களுக்கும் இடையே தொற்றுநோய் விகிதம் இரட்டிப்பாவதைக் காட்டுகிறது,” என்று பெட்போர்ட் எச்சரித்தார். அவர் தொடர்ந்து கூறினார், “அடுத்த வாரம் வெகுவாக ஒன்றோடொன்று இணைந்த நகரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென வேகமாக பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்குமென எதிர்பார்க்கிறேன். இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் என்றாலும்' ஓமிக்ரோன் பரவல் விகிதம் 'நமக்கு தெரிய வந்த உடனேயே இது ஒன்றுமில்லை என்றாக்கப்படும்.”

'மிக அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட ஓமிக்ரோன் சுமையைக் கொண்டுள்ள 4 நாடுகள் [டென்மார்க், நோர்வே, பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்கா] ஒவ்வொன்றும் இந்த பெருந்தொற்றில் அவற்றின் புதிய நோயாளிகளுக்கான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை விஞ்சி உள்ளன, இன்னமும் வேகமாக அதிகரித்து வருகிறது,” என்று ஸ்க்ரெப்ஸ் ஆராய்ச்சி அமைப்பின் மூலக்கூறு மருத்துவத்துறை பேராசிரியர் தொற்றுநோயியல் நிபுணர் எரிக் டொபொல் எழுதினார்.

அமெரிக்காவில், ஓமிக்ரோன் வகையின் விளைநிலமாக மாறியுள்ள நியூ யோர்க் நகரில் பரிசோதனையில் நோய்தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை வெறும் நான்கு நாட்களில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, டிசம்பர் 9 இல் 3.9 சதவீதமாக இருந்ததில் இருந்து டிசம்பர் 12 இல் 7.8 சதவீதமாக ஆகியுள்ளது, அந்நகரம் இதுவரையில் இல்லாதளவில் அதன் அதிகபட்ச நோயாளிகள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

இந்த வேகமான பரவலுடன், இந்த புதிய வகையின் பெரும் அபாயங்களை எடுத்துக்காட்டும் நிறைய புள்ளவிபரங்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. ஓமிக்ரோன் 'உருமாறிய நட்பான வைரஸ்' என்று அரசாங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் வலியுறுத்தல்களுக்கு எதிர்முரணாக, அந்நோய் 'தீங்கற்றது' என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை.

ஓமிக்ரோன் நோயாளிகளும் டெல்டா நோயாளிகளைப் போலவே நோய்தொற்று அடையாளங்களுடன் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு உட்படலாம் என்பதோடு, இன்னும் அதிகமாகவே மீண்டும் நோய்தொற்றுகளுக்கு உள்ளாகலாம் என்று இம்பீரியல் இலண்டன் கல்லூரி வியாழக்கிழமை வெளியிட்ட முன்-பிரசுரிப்பு ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

அதன் ஆசிரியர்கள் எழுதினார்கள், “டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் கடுமையில் குறைந்தது என்பதற்கு இந்த ஆய்வு எந்த ஆதாரத்தையும் காணவில்லை, அறிகுறிகளைக் குறிப்பிடுபவர்களிடம் பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதன் விகிதம், அல்லது நோய்தொற்று ஏற்பட்டதற்குப் பின்னர் மருத்துவமனையைத் தேடி வரும் நோயாளிகளின் விகிதம் இவ்விரண்டையும் கொண்டு இது தீர்மானிக்கப்பட்டது.”

இந்த முடிவு முற்றிலும் அனுமானிக்கத்தக்கதே, இதை உலக சோசலிச வலைத் தளம் அனுமானித்திருந்தது. புதிய 'கவலைப்படுத்தும் வகை' என்று உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புக்கு விடையிறுத்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது, “டெல்டா வகையை விட ஓமிக்ரோன் வகை மிகவும் வேகமாக தொற்றுகிறது என்ற உண்மை என்ன அர்த்தப்படுத்துகிறது என்றால், அது சற்றே உயிராபத்து குறைந்ததாக இருந்தாலும் கூட —உண்மையில் இந்த வாதத்திற்கு இதுவரையில் எந்த அடித்தளமும் இல்லை— பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் என்பது நிறைய மருத்துவமனை அனுமதிப்புகளை ஏற்படுத்தும், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால், பாரியளவில் இறப்புகள் அதிகரிக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.”

ஆனால் நடவடிக்கை எடுக்க தவறுவது ஒரு பேரிடரை உருவாக்கும் என்பது நன்கு தெரிந்திருந்தும், உலகெங்கிலுமான அரசாங்கங்கள் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை நிராகரித்தன. அமெரிக்க அரசாங்கம் 'அடைப்புகளையோ அல்லது பொது முடக்கங்களோ' நடைமுறைப்படுத்தாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்தார். அவர் 'நம் நாட்டை மீண்டும் திறந்து வைக்கவும் … நம் வணிகங்களை மீண்டும் திறந்து வைக்கவும்' மற்றும் 'நம் பள்ளிகளை மீண்டும் திறந்து வைக்கவும்' சூளுரைத்தார்.

இந்த புதிய அச்சுறுத்தலைத் தடுக்க அவசரகால நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பைடென் நிர்வாகம் எதிர்விதமானதைக் கோரியுள்ளது: அதாவது, கட்டுப்பாடுகளை மேற்கொண்டு நீக்க கோருகிறது. குழந்தைகள் —தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் உட்பட— கோவிட்-19 நோய்தொற்று தொடர்பில் இருந்திருந்தால், அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்ற பைடெனின் கோரிக்கையை நேற்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டது.

“கோவிட் எங்கேயும் போகப் போவதில்லை. நாமும் அதைப் போல செயல்படத் தொடங்கியுள்ள காலம் இது,” என்று அறிவித்து, நியூ யோர்க் டைம்ஸ் இந்த கொலைபாதக கொள்கையை எதிரொலித்தது. அபாயகரமான இந்த புதிய வகை பரவினாலும் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்று கோரிய டைம்ஸ், நோய்தொற்று தொடர்பில் செல்லும் குழந்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்று அழைப்புவிடுத்தது.

தென்னாபிரிக்காவில் இருந்து வரும் விபரங்களின்படி, ஓமிக்ரோன் வகை குறிப்பாக குழந்தைகளுக்கு அபாயகரமாக தெரிகிறது என்பதை வைத்து பார்த்தால், இந்த கொள்கை வேறு எதையும் விட குற்றகரமாக உள்ளது. கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகையால் நோய்தொற்றுக்கு உள்ளான ஏறக்குறைய ஐந்து சதவீத குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 இன் முதல் அலை முன்னிறுத்திய அபாயத்தின் அளவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் ஜனவரி-மார்ச் 2020 இல் செய்த சூழ்ச்சிகளைப் போலவே, இப்போதும், ஓமிக்ரோனின் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டுவதற்கும் பொதுக் கருத்தை உணர்வற்றநிலையில் வைத்திருப்பதற்குமான நோக்கில் சரமாரியான மிகப்பெரிய பிரச்சாரத்துடன் ஓமிக்ரோனின் அதிகரிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

வெறும் இரண்டே வாரங்களில், அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் பொய்கள் அம்பலமாகி உள்ளன. ஓமிக்ரோன் 'தீங்கற்றது” இல்லை என்பதோடு அதை 'கையாள' முடியாது. இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொறுப்பற்ற கொள்கைகள் ஜனவரியிலும் அதற்கு பின்னரும் இறப்புகளின் ஓர் அலையில் போய் முடியும். முதலாளித்துவ அரசாங்கங்களின், 'தடுப்பூசி மட்டுமே' அணுகுமுறை, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து வெகு தொலைவில், தடுப்பூசிகளின் செயல்திறனையே பாரியளவில் வீரியமிழக்கச் செய்துள்ளன.

பள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறந்து வைப்பதற்கான அதன் வாக்குறுதியை பைடென் நிர்வாகம் இரட்டிப்பாக்கி வருகிற போதும் கூட, பாரியளவில் உள்ளூரில் ஏற்படும் வெடிப்புகளுக்கு விடையிறுப்பாக நாடெங்கிலும் உணவு விடுதிகள், மதுக்கூடங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன என்ற உண்மையே இந்த கொள்கையின் பைத்தியக்காரத்தனத்தை நிரூபிக்கிறது. ஓர் ஒருங்கிணைந்த, பகுத்தறிவார்ந்த மற்றும் முறையான விதத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல், இந்த வைரஸ் பரவல் மக்களின் பெரும் பிரிவினரைத் தொற்றும் ஒரு புள்ளியை ஏற்கனவே எட்டியுள்ளதற்குப் பின்னர், இப்போது இவை முன்ஆயத்தமின்றி திடீரென செய்யப்படுகின்றன.

இப்போது அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது! கொள்கையில் உடனடியான மாற்றம் அவசியப்படுகிறது. Sars-CoV-2 ஐ அகற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு பூஜ்ஜிய கோவிட் கொள்கை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இக்கொள்கை யதார்த்தத்திற்கு முரணானது இல்லை. இது சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் விரைவிலேயே கையாளக் கூடியதாக ஆகி, மாயாஜாலத்தைப் போல கலைந்து விடும் என்ற நம்பிக்கையில், கோவிட்-19 'உடன் வாழ்தல்' சாத்தியமே என்ற கருத்துருவே யதார்த்தத்திற்கு முரணானது, அல்லது இன்னும் துல்லியமாக சொன்னால், முற்றிலும் பகுத்தறிவற்றது. பெருநிறுவன-நிதிய நலன்களால் கட்டளையிடப்படும் இந்த பகுத்தறிவற்ற கொள்கையைத் தொடர்வதால், தவிர்க்கக்கூடிய ஆனால் தேவையற்ற மில்லியன் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் தலையிட்டு, அகற்றும் மற்றும் முற்றிலும் ஒழிக்கும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் இந்த பெருந்தொற்றை நிறுத்த அத்தியாவசிய அவசர நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த கோர வேண்டும். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களை தற்காலிகமாக மூடுவது அவசியமாகும், இதனால் பாதிக்கப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக உதவி வழங்கப்பட வேண்டும், இத்துடன் சேர்ந்து பாரிய பரிசோதனைகள், நோயின் தடம் அறிதல், நோய்தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல், உயர்தரமான முகக்கவசங்கள் வழங்குதல், உலக மக்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்தல் மற்றும் ஏனைய பொது சுகாதார நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.

இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவது ஒரு மருத்துவக் கேள்வியாகும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகள் நன்கறியப்பட்டுள்ளன மற்றும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆளும் வர்க்கமே முக்கிய தடையாக உள்ளது, இதன் பொருளாதார நலன்கள் விஞ்ஞானம் மற்றும் உயிர்களுடன் மோதுகின்றன.

இதற்காக தான் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம், சமூக பொருளாதார கட்டமைப்பின் அடிப்படையான மாற்றத்தை நோக்கமாக கொண்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் இந்த கொலைபாதக கொள்கையை அமுலாக்குவதில் முக்கிய கருவிகளாக சேவையாற்றி உள்ள பெருந்நிறுவன தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் வேலையிடத்திலும் அவர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க வேண்டும்.

இந்த குழுக்கள் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதையும் மற்றும் பள்ளிகளை மூடுவதையும் அமுலாக்க தொழிலாளர்களை ஒழுங்கமைக்க வேண்டும். இந்த பெருந்தொற்று நெடுகிலும் அரசாங்க கொள்கையைத் தீர்மானித்துள்ள கோட்பாட்டை, அதாவது உயிர்களைக் காப்பாற்றுவதை விட தனியார் இலாபங்களை முன்னுக்கு நிறுத்தும் கோட்பாட்டை, தொழிலாள வர்க்கம் மறுத்தளிக்க வேண்டும்.

ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதும் மற்றும் உலகெங்கிலும் அது வேகமாக பரவுவதும் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் அவசரத்தன்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த விசாரணை பணிக்கு ஆதரவைக் கட்டமைக்குமாறு நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம், இந்த பணியை முன்னெடுப்பதில் தகவல் உதவிகள் மற்றும் தொழில்ரீதியான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறு நாங்கள் விஞ்ஞானிகளுக்கும் மற்றும் பொது சுகாதாரத்துறையில் செயலூக்கத்துடன் உள்ள அனைவருக்கும் முறையிடுகிறோம்.

Loading