முன்னோக்கு

அமெரிக்காவில் ஓமிக்ரோன் மேலோங்கிய வகையாக எழுச்சியடைகையில், பைடென் "தடுப்பூசி மட்டுமே போதும்" மூலோபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 இன் ஓமிக்ரோன் மாறுபாடு இப்போது அமெரிக்காவில் மேலோங்கிய திரிபாக ஆகி இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்ட நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோய்தொற்றுக்களில் ஓமிக்ரோன் 73 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ளது, இது வெறும் ஒரேயொரு வாரத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஏற்பட்ட ஆறு மடங்கு அதிகரிப்பாகும். நியூ யோர்க் நகரம் உட்பட நாட்டின் சில பகுதிகளில், ஏற்கனவே புதிய நோயாளிகளில் 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களிடையே இந்த மாறுபாடு உள்ளது.

வியாழன், டிச. 16, 2021, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில், வெள்ளை மாளிகையின் கோவிட்-19 பதிலளிப்புக் குழு உறுப்பினர்களைச் சந்திக்கும் போது, ஜனாதிபதி ஜோ பைடென் பேசுகிறார். (AP Photo/Susan Walsh)

நோயாளிகள் பாரியளவில் அதிகரித்து வருவதற்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், தனது நிர்வாகத்தின் விடையிறுப்பை விவரிப்பதற்காக இன்று தேசிய தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். அவரது செய்தி தெளிவாக இருக்கும்: அதாவது, இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதுவதற்கு அப்பாற்பட்டு, எந்த நடவடிக்கைகளும் இருக்கப் போவதில்லை.

வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகள் மீது ஓமிக்ரோன் அதிகரிப்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கமே இப்போது வெள்ளை மாளிகையின் முக்கிய பரிசீலனையில் உள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் இந்த நோய்தொற்றுக்கள் பரவுவது சமூக பொதுமுடக்கங்களை நிர்பந்திக்கும், பயணங்களைப் பாதிக்கும் மற்றும் கிறிஸ்துமஸ் விற்பனையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலைகளால், திங்கட்கிழமை, பிரதான குறியீடுகள் சுமார் 1.2 சதவீதம் குறைந்தன. ஓமிக்ரோனுக்கு விடையிறுப்பாக அங்கே 'சமூக பொது முடக்கங்கள் இருக்காது' என்று வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர், இந்த கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழுவுக்கு மறுஉத்தரவாதம் வழங்குவதே பைடெனின் பணியாக உள்ளது.

“தடுப்பூசி செலுத்தியவர்கள் வேலை மற்றும் பள்ளிக்குச் செல்வதை ஓமிக்ரோன் இடையூறு செய்யாதவாறு பார்த்துக் கொள்ள விரும்புகிறோம்,” என்று வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் விடையிறுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி ஜியன்ட்ஸ், பைடென் கருத்துக்களுக்கு முன்னோட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். “தடுப்பூசி செலுத்தப்படாதவர்களைப் பொறுத்த வரையில், உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நீங்கள் கடுமையான நோய் மற்றும் மரணத்தின் குளிர்காலத்திற்குள் கொண்டு செல்கிறீர்கள், நீங்கள் விரைவிலேயே மருத்துவமனைகளை நிரப்பி விடுவீர்கள்,” என்றார்.

“சில காலத்திற்கு முன்னர் 'வைரஸில் இருந்து விடுதலை' என்று ஜம்பமடித்த வெள்ளை மாளிகையின் சேதியில் ஒரு கூர்மையான மாற்றமாக இருக்கக்கூடிய விதத்தில், மறைவதற்கு எந்த அறிகுறிகளும் காட்டாத ஒரு வைரஸுடன் எப்படி வாழ்வது என்று பகிரங்கமான விவாதத்தைத் தொடங்க வேண்டியதன்' அவசியம் குறித்து நிர்வாக அதிகாரிகளிடையே நடந்த விவாதங்களைச் சனிக்கிழமை CNN இன் ஓர் அறிக்கை மறுவிவரிப்பு செய்தது.

“இப்போது நாம் அதன் கடுமை சம்பந்தமான... புள்ளிக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம்,” என்று கடந்த வாரம் பத்திரியாளர்களுடன் நடந்த ஒரு கூட்டத்தில் சுகாதார மற்றும் மனிதச் சேவைகள் துறையின் செயலர் சேவியர் பெசெர்ரா தெரிவித்தார்.

பெசெர்ராவின் அறிக்கை, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாசாங்குத்தனமும் கூட இனி இருக்காது என்பதற்கான ஒரு பிரகடனம் ஆகும். கோவிட்-19 ஐ அவ்வபோதைய பகுதிசார் தொற்றுநோயாக ஆக அனுமதிக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கத்தின் நடைமுறை கொள்கையாக இருப்பது, இப்போது பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. உத்தியோகப்பூர்வ கொள்கையின் நோக்கம் நோய்தொற்றைத் தடுப்பதல்ல, மாறாக அது நோய்தொற்றுக்களின் கடுமையைக் குறைப்பதற்காக களத்தில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதாக உள்ளது.

இந்த 'சேதியில்' அப்பட்டமாக பல பொய்களும் தவறான செய்திகளும் நிறைந்துள்ளன.

முதலில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு நோயின் 'தீவிரம் குறைவாக' இருக்கும் என்ற வாதத்திற்கு ஆதாரம் இல்லை. இப்போதிருக்கும் தடுப்பூசிகள், நோய்தொற்று ஏற்பட்டவர்களின் மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகளைக் குறைக்க உதவும் என்பதை ஆரம்ப விபரங்கள், ஏறக்குறைய, சுட்டிக்காட்டுகின்றன என்றாலும், அதிகளவிலான ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கள் என்பது, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கும் உள்ளடங்கலாக, கடுமையான நோயைப் பாரியளவில் அதிகரிக்கும் என்பதையே அர்த்தப்படுத்தும்.

ஒவ்வொரு நோய்தொற்றும் அபாயகரமான விளைவுகளின் ஆபத்தைக் கொண்டுள்ளது. மருத்துவமனை அனுமதிப்புகளில் 15 சதவீதம் (தடுப்பூசி செலுத்தியவர்களின்) “தடுப்பூசியை மீறி' நோய்வாய்பட்டவர்கள் என்பதையும், இது ஓமிக்ரோன் வகை உருவெடுப்பதற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது, இது தடுப்பூசிகளையே மிகவும் எதிர்க்கின்றன என்பதையும் அமெரிக்க மருத்துவ ஆய்விதழில் (JAMA) கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது. கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட கைய்செர் குடும்ப அமைப்பின் ஒரு பிரத்யேக ஆய்வு குறிப்பிடுகையில், தடுப்பூசியை மீறி நோய்வாய்பட்டவர்களில் 69 சதவீதத்தினர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் உள்ளடங்கி உள்ளதாகவும், இதுவும் ஓமிக்ரோன் வகை உருவெடுப்பதற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது என்றும் அறிவித்தது.

அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 100 அமெரிக்கர்களில் ஒருவர், அல்லது ஏறக்குறைய 600,000 பேர், கடந்த இரண்டாண்டுகளில் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர், இது முதியோர்களுக்கு எதிரான ஒரு போருக்கு நிகராக உள்ளது. ஓமிக்ரோனைக் கட்டுப்பாடின்றி பரவவிடுவது என்பது எண்ணிக்கையின்றி இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் கடுமையான தீவிர நோயால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் உயிரிழப்பார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, நீண்ட கால கோவிட் நோயாளிகள்—அதாவது நீண்ட காலத்திற்கு நோய் அறிகுறிகள் மற்றும் அறிகையில் ஏற்படும் பாதிப்புகளைக் கொண்ட இவர்கள்—தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடையே ஏற்படும் நோயாளிகள் உள்ளடங்கலாக, பொதுவாக “தீவிரம் குறைந்த' நோயாளிகளில் உள்ளடங்கி இருக்கிறார்கள் என்பதை இப்போது கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இரண்டாவதாக, தென் ஆபிரிக்கா மற்றும் பிரிட்டனிலும் குழந்தைகளின் மருத்துவமனை அதிகரிப்புகள் அதிகரித்துள்ளன என்பது ஓமிக்ரோன் வகையின் மிகவும் எச்சரிக்கையூட்டும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது, குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசியும் இல்லை. இந்த புதிய வகை பல வாரங்களாக பரவி வரும் பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 39 சதவீதம் அதிகரித்து 196 ஆக அதிகரித்தது, இது இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பிந்தைய அதிகபட்ச அளவாகும்.

டிசம்பர் 5 இல், அமெரிக்காவில் 5 இல் இருந்து 11 வயதுக்கு இடையிலான குழந்தைகளில் வெறும் 16.7 சதவீத குழந்தைகள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தனர், 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

18 வயதுக்குக் குறைந்த குறைந்தபட்சம் 1,000 குழந்தைகள் கோவிட்-19 ஆல் உயிரிழந்திருப்பதாகவும், 5 வயதுக்குட்பட்ட 319 குழந்தைகள் இதில் உள்ளடங்குவர் என்றும் கடந்த வாரம் CDC அறிவித்தது. இந்த இறப்புகளில் பாதி கடந்த நான்கு மாதங்களுக்குள் ஏற்பட்டுள்ளன—இது குற்றகரமாக பொறுப்பின்றி பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் திறந்ததால் ஏற்பட்ட விளைவாகும். இதுவும் ஓமிக்ரோன் வகையின் பாதிப்புக்கு முன்னரே ஏற்பட்டதாகும்.

தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் 'கடுமையான நோய் மற்றும் இறப்பின் ஒரு குளிர்காலத்தை' காண்கிறார்கள் என்ற ஜியன்ட்ஸின் அறிவிப்பானது, தடுப்பூசி செலுத்தப்படாத இளம் குழந்தைகள் மற்றும் மழலைகள் அதிகபட்ச எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் இறப்பார்கள் என்பதற்கான ஓர் அறிக்கையாகும். அனைத்திற்கும் மேலாக, இந்த வைரஸால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல மாறாக அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்த சமூகத்திற்கு வைரஸை அவர்கள் கடத்துவார்கள்.

மூன்றாவதாக, ஓமிக்ரோன் வகைக்குத் தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் திறன் இருப்பதால், 'முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்' என்பது மூன்றாவது தவணை மருந்து, அல்லது பூஸ்டர் மருந்து செலுத்தி இருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. வெறும் இரண்டு தவணை தடுப்பூசியின் செயல்திறன், அதுவும் குறிப்பாக இரண்டாவது தவணைத் தடுப்பூசி ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் செலுத்தப்பட்டிருந்தால், அது ஓமிக்ரோன் நோய்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமானதில்லை.

ஆனால், அமெரிக்க மக்களில் வெறும் 18 சதவீதத்தினருக்கு மட்டுமே பூஸ்டர் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் மருந்து செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரித்தாலும் கூட, இந்த பூஸ்டர் மருந்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வாரங்கள் ஆகும், இது நடப்பதற்கு முன்னரே மில்லியன் கணக்கானவர்கள் ஓமிக்ரோன் வகையால் நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும்.

நான்காவதாக, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மில்லியன் கணக்கான மக்களின் (18 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 27 சதவீதத்தினர்) உயிர்கள் மீதான ஈவிரக்கமற்ற அலட்சியமானது, கோவிட்-19 பரவலுக்குத் தனிநபர்களின் அலட்சியமே காரணம் என்று பழி சுமத்தி, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் அமைப்புகளிடம் இருந்து பொறுப்பைத் திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அமெரிக்க மக்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஏன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை, அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை? பருவ வயதடைந்த மில்லியன் கணக்கானவர்கள் இறக்க விரும்புகிறார்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் இறப்பதை விரும்புகிறார்கள் அதனால் தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

உண்மை என்னவென்றால் இரண்டாண்டுகளாக, மக்கள் இடைவிடாமல் தவறான தகவல்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த பெருந்தொற்றின் தீவிரம் ஊடகங்களால் தொடர்ந்து தவறாக விளக்கப்பட்டுள்ளது, “இருளின் முடிவில் விடியல் உள்ளது' என்ற சுகமான வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான், பைடென் அறிவிக்கையில், அமெரிக்கா இந்த வைரஸில் இருந்து அதன் 'விடுதலையை' அறிவிப்பதாகவும், மக்கள் வழமையாக வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்றும் பிரகடனப்படுத்தினார்.

அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் மற்றும் பாசிச வலதின் வழிகாட்டுதலில் ஆளும் வர்க்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க கன்னை, முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது உட்பட மிகவும் போதுமானளவுக்கு இல்லாத தணிப்பு நடவடிக்கைகளைக் கூட எதிர்த்து, ஆரம்பத்தில் இருந்தே பாரிய நோய்தொற்று கொள்கை அல்லது 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை ஊக்குவித்துள்ளது. பிற்போக்குத்தனம், விஞ்ஞான-விரோத கருத்துருக்கள் மற்றும் கேடு விளைவிக்கும் தனிநபர்வாதத்தை ஊக்குவிப்பதற்காக, ஆளும் உயரடுக்கின் நீண்ட நெடிய பிரச்சாரத்தின் விளைவுகளைக் கொண்டு, “தடுப்பூசி ஐயுறவுவாதம்' மற்றும் முகக்கவசங்கள் அணிவதற்கான எதிர்ப்பு ஆகியவை வேண்டுமென்றே ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதே 'தடுப்பூசி மட்டுமே போதும்' மூலோபாயத்தை மிகக் கொடூரமாக அம்பலப்படுத்துவதாக உள்ளது. தடுப்பூசியையே எதிர்க்கும் அதிகமாக பரவும் இந்த வகை பரிணமத்திருப்பது, உலகளவில் ஒருங்கிணைந்த தீவிர பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமாக இந்த வைரஸ் பரவலைத் தடுக்காததன் விளைவாகும்.

முழுமையாக தடுப்பூசியை மட்டுமே சார்ந்திருப்பது தவிர்க்கவியலாமல் இதுபோன்றவொரு பேரழிவை நிச்சயமாக உருவாக்கும் என்றும், ஓமிக்ரோன் கோவிட்-19 இன் கடைசி வகையாக இருக்காது என்றும், இந்த வைரஸ் பரவ அனுமதிக்கப்பட்டிருக்கும் வரை, புதிய இன்னும் அபாயகரமான திரிபுகள் பரிணமிக்கும் தொடர்ச்சியான அபாயம் இருக்கும் என்றும், விஞ்ஞானிகளும், உலக சோசலிச வலைத் தளமும், பல மாதங்களாக எச்சரித்துள்ளனர்.

ஆளும் வர்க்கத்தினருக்கு அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும், அவர்கள் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பாரிய நோய்தொற்று மற்றும் உயிரிழப்புக்கு இட்டுச் செல்லும் என்பதும் நன்கு தெரியும். அமெரிக்காவில் ஓமிக்ரோன் பரவலின் தற்போதைய குவிமையாக ஆகியுள்ள நியூ யோர்க் நகர அதிகாரிகள் இந்தாண்டு டைம்ஸ் சதுக்கத்தில் மிகப் பெரியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தலாமா என்று பேசி வருவதும் கூட, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தில் மேலோங்கியுள்ள பொறுப்பின்மை மற்றும் உதாசீனத்தின் குற்றகரத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

இந்த வைரஸை அகற்றவும் இந்த பெருந்தொற்றை நிறுத்தவும் அவசியமான கொள்கைகள் புரிந்து கொள்ளத் தக்கவையே. இதற்கு அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் நேரடி வகுப்புகளை நிறுத்துவது, பாரிய பரிசோதனை மற்றும் நோயின் தடம் அறிதல், இவற்றுடன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் பிற தணிப்பு நடவடிக்கைகளும் அவசியப்படுகின்றன. இந்த கொள்கை சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, அங்கே இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,000 க்கும் குறைவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அங்கே மக்கள், கடந்த இரண்டாண்டுகளில் பெரும்பாலும், வழமையான வாழ்க்கை வாழ முடிகிறது.

ஆனால் பிரதான முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் ஒரேயொரு காரணத்திற்காகவே ஓர் அகற்றும் மூலோபாயம் நிராகரிக்கப்பட்டுள்ளது: அதுவாவது, அவசியமான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குக் குழிபறிக்கும் என்பதோடு, அவை பெடரல் ரிசர்வ் மற்றும் மத்திய வங்கிகளில் இருந்து கட்டுபாடின்றி வழங்கப்படும் தொகைகளால் எரியூட்டப்பட்ட வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிற நிதிய சந்தைகளின் மிகப்பெரும் ஊகவணிக குமிழியை வெடித்து சிதறடிக்க அச்சுறுத்துகின்றன.

அமெரிக்காவும் இந்த உலகமும் இந்த பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டுக்குள் நுழைகையில், ஓமிக்ரோன் வகை உருவாக்கும் பாரியளவிலான நோயாளிகளின் அதிகரிப்பை எதிர்கொண்டிருக்கையில், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் வெறுமனே ஒரு மருத்துவப் பிரச்சினை அல்ல என்பது முன்பினும் தெளிவாகி உள்ளது. இந்த பெருந்தொற்றை முற்றிலுமாக தடுக்கும் அவசர நடவடிக்கைகளைக் கோரவும் அமுலாக்கவும், தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற அவசியமான, உலகளவில் அகற்றும் மற்றும் முற்றிலுமாக நீக்கும் ஒரு கொள்கைக்கான போராட்டம், அதேநேரத்தில் ஆளும் வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராடத்தையும் அவசியப்படுத்துகிறது.

Loading