ஐரோப்பாவில் ஓமிக்ரோன் நோய்தொற்று வெடித்துப் பரவுகையில், அரசாங்கங்கள் விடுமுறை பேரழிவுக்கு தயாராகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்து, ஸ்காண்டிநேவியா மற்றும் போர்ச்சுகலில் ஓமிக்ரோன் ஆதிக்க வகை மாறுபாடாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசி-எதிர்ப்பு மாறுபாடு மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை விரைவாக மூழ்கடித்து வருகிறது. ஓமிக்ரோன் புத்தாண்டுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறவுள்ள நிலையில், பல ஐரோப்பிய நாடுகளில், உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட நோய்தொற்றுக்கள் சில நாட்களில் இரட்டிப்பாகியுள்ளன.

டிசம்பர் 22, 2021, புதன்கிழமை, இலண்டனில் உள்ள கோவென்ட் கார்டனில் பொருட்கள் வாங்குபவர்கள் தங்கள் கடைசி கிறிஸ்துமஸ் பொருள் கொள்முதலைச் செய்கிறார்கள். (AP Photo/Frank Augstein)

தடுப்பூசி எதிர்ப்பு மாறுபாட்டினால் நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவினாலும், ஐரோப்பிய அரசாங்கங்கள் நோய்தொற்று பரவுவதைக் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்க மறுக்கின்றன.

உண்மையில் பல அரசியல்வாதிகள் ஐரோப்பிய மக்களை குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றுகூட தீவிரமாக ஊக்குவித்தனர். நேற்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், “மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம்” என்று மக்களிடம் கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “கிறிஸ்துமஸை தங்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடவிருப்பவர்கள்” நோய்தொற்று இல்லை என்பதை மீளுறுதி செய்ய விரைவு பரிசோதனையை மட்டும் செய்துகொண்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சமூக இடைவெளிக்கான “தடை சைகைகளை” பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், “இது மார்ச் 2020 அல்லது கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அல்ல” என்று கூறினார்.

இதற்கு நேர்மாறாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவுக்கான தலைவர் ஹான்ஸ் க்ளூக் செவ்வாயன்று “இன்னொரு புயல் வரும்” என்று எச்சரித்து, “புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் கட்டுப்படுத்த முடியாத அளவிலான அதிக மருத்துவமனை அனுமதிப்புகளுக்கும், சுகாதார அமைப்புக்கள் மற்றும் ஏனைய முக்கிய சேவைகளில் பரவலான சிரமங்களுக்கும் வழிவகுக்கும்” என்று கூறினார்.

தற்போதைய நிலைமைகளின் கீழ், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாரிய நோய்தொற்று பரப்பும் நிகழ்வாக இருக்கும். முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் தொடர்ச்சியான தவறான தகவல்களால், மில்லியன் கணக்கான ஐரோப்பிய குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கான அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளை நடத்துவதில் திளைத்திருக்கின்றனர். உண்மையில், நோய்தொற்று விகிதங்கள் உச்சபட்சமாக உள்ளன, மேலும் வானளவு நோய்தொற்றுக்களின் அதிகரிப்பு என்பது கண்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை விரைவில் மூழ்கடிக்கும் என்பதாகும்.

மேற்கு ஐரோப்பாவில், ஓமிக்ரோன் ஆதிக்க வகையாக விரைந்து உருவெடுக்கிறது. இங்கிலாந்தை பொறுத்தவரை புதனன்று 105,330 நோய்தொற்றுக்களும், வியாழனன்று 119,789 நோய்தொற்றுக்களும் பதிவாகியுள்ள நிலையில், வைரஸின் முன்நிகழ்ந்திராத வெடிப்பை அந்நாடு எதிர்கொள்கிறது.

இலண்டன் தற்போதைய நோய்தொற்று எழுச்சியின் மையமாக இருப்பதுடன், டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து மருத்துவமனை சேர்ப்புக்களில் கடும் உச்சத்தை எதிர்கொள்கிறது. டிசம்பர் 20 அன்று, 301 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், இது முன்னைய வாரத்தை விட 80 சதவீத அதிகரிப்பாகும். இந்த கட்டுரை எழுதப்படுகையில், “செயலாக்க தாமதம் காரணமாக” சமீபத்திய நாட்களில் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தரவு இன்னும் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

பிரான்சில், புதன்கிழமை 84,272 நோய்தொற்றுக்களும், வியாழக்கிழமை 91,608 நோய்தொற்றுக்களும் பதிவான நிலையில், இவ்விரண்டு எண்ணிக்கைகளும் ஒட்டுமொத்த தொற்றுநோய் காலத்தின் உச்சபட்ச நாளாந்த எண்ணிக்கைகளாக இருந்தன. தொற்றுநோயின் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், தேசிய இரயில்வே பிராந்திய இரயில் சேவைகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. வியாழனன்று, விஞ்ஞான கவுன்சில், ஜனவரியில் நூறாயிரக்கணக்கில் தினசரி நோய்தொற்றுக்கள் உருவாகும் என்றும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதால் “ஜனவரி தொடக்கத்திலிருந்து சமூக சீர்குலைவுக்கான சாத்தியம் உள்ளது” என்றும் எச்சரித்துள்ளது.

ஸ்பெயினில், டிசம்பர் 20 அன்று நோய்தொற்றுக்கள் 26,568 ஆக இருந்தது, டிசம்பர் 22 அன்று அது 60,041 ஆக இருமடங்காக அதிகரித்தது. பெரும்பாலான நோய்தொற்று வெடிப்புக்களுக்கு ஓமிக்ரோன் தான் வெளிப்படையான காரணமாகவுள்ளது, இதனால் நோய்தொற்று பரவும் வீதம் வெறும் ஒரு வாரத்தில் 3 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து, PSOE-பொடேமோஸ் அரசாங்கம் எடுத்த ஒரே நடவடிக்கை வெளியே செல்கையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே.

ஸ்பானிய தொற்றுநோய் நிபுணர் குயிக் பாசாட், “இந்த கட்டுப்பாடற்ற நோய் பரவலை கட்டுப்படுத்த திறன்வாய்ந்த கடுமையான மற்றும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் நமக்கு தேவை” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஓமிக்ரோன் ஆதிக்கம் செலுத்தும் போர்ச்சுகலில், டிசம்பர் 22 அன்று 8,937 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி மாதத்திற்கு பின்னைய உச்சபட்ச எண்ணிக்கை என்பதுடன், கடந்த ஏழு நாட்களின் சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும். இத்தாலியில் இறப்புக்கள் மே மாதத்திற்குப் பின்னர் உச்சபட்சமாக பதிவாகி வருகின்றன, கடந்த ஏழு நாட்களில் சராசரி இறப்புக்கள் 128 ஆக உள்ளது. புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 27,199 ஆக இருப்பது நவம்பர் 2020 க்குப் பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும்.

ஜேர்மனியில், டெல்டா மாறுபாட்டின் காரணமான நீடித்த நோய்தொற்று அலையைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் சற்று குறைந்தன. கடந்த மூன்று மாதங்களில், அதிர்ச்சியூட்டும் வகையில் 16,000 ஜேர்மனியர்கள் இறந்துள்ளனர். இருப்பினும், டெல்டா காரணமான நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் வீழ்ச்சி ஓமிக்ரோன் மாறுபாட்டின் விரைவான எழுச்சியால் விரைந்து பதிலீடு செய்யப்படுகிறது, இது இப்போது 30 சதவீத நோய்தொற்றுக்களுக்கு காரணமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23 அன்று, ராபர்ட் கோச் நிறுவனம் நாட்டில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் ஏற்பட்ட முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஓமிக்ரோன் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்துகிறது. டென்மார்க்கில், டிசம்பர் 21 அன்று நாளாந்த நோய்தொற்றுக்கள் 13,057 என பதிவானது உட்பட, அங்கு நாளாந்த நோய்தொற்றுக்களின் ஏழுநாள் சராசரி தற்போது 10,000 க்கு அதிகமாக இருந்து வருகிறது. வயது வந்தோருக்கான இரட்டை தடுப்பூசி விகிதம் 96.2 சதவீதமாகவும், மூன்று தடுப்பூசி விகிதம் 46.2 சதவீதமாகவும் உள்ள ஒரு நாட்டில் நிலவும் இந்நிலை, வரும் வாரங்களில் ஐரோப்பா முழுவதும் ஓமிக்ரோன் எந்த அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதையே காட்டுகிறது. மேலும் இறப்புகளுக்கான ஏழு நாள் சராசரி பிப்ரவரிக்குப் பின்னர் இப்போது உச்சபட்சமாக உள்ளது.

நெதர்லாந்தில், முதலாளித்துவ ஊடகங்களால் முத்திரைகுத்தப்பட்ட “கடுமையான” பூட்டுதல் நடவடிக்கைகளை, குறைந்தபட்சம் ஜனவரி 14 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் வீடுகளில் நான்கு விருந்தினர்கள் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள், அத்தியாவசியமற்ற உற்பத்திகள் தொடரப்படும், மேலும் ஜனவரி 10 அன்று பள்ளிகளை மீளத்திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் ஓமிக்ரோன் எழுச்சியிலிருந்து மக்களை பாதுகாக்கவோ அல்லது வைரஸை அழிக்கவோ முடியாது.

ஓமிக்ரோனின் தாக்கம் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஏற்கனவே உணரப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தற்போது கிழக்கு நோக்கியும் வேகமாக நகர்கிறது. பேரழிவு தரும் டெல்டா அலைக்குப் பின்னர் இந்த நாடுகளில் இறப்பு மற்றும் நோய்தொற்று விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், அவை மீண்டும் ஓமிக்ரோனால் இன்னும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.

அக்டோபர் 1 முதல், 90,000 ரஷ்யர்கள், 37,000 உக்ரேனியர்கள், 21,000 ரோமானியர்கள், 17,000 போலந்தியர்கள், 10,000 பல்கேரியர்கள், 8,000 ஹங்கேரியர்கள், 5,500 செக் நாட்டவர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களில் கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் விகித அடிப்படையில் முன்னிலையில் உள்ள 10 நாடுகளில் 9 நாடுகள் கிழக்கு ஐரோப்பிய அல்லது பால்கன் நாடுகளாக உள்ளன. குறைந்த தடுப்பூசி விகிதங்கள், உத்தியோகபூர்வ “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகள் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோஸ்லாவியாவில் முதலாளித்துவ மீட்பினால் அழிக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றால் வைரஸ் தீவிரமாக அபிவிருத்தியடைந்து வருகிறது.

டெல்டா அலை உண்மையில் இன்னும் இந்த நாடுகளில் ஒரு வாரத்திற்கு 10,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், ஓமிக்ரோன் மாறுபாடு ரஷ்யா, உக்ரேன், போலந்து, ருமேனியா, செக்கியா, ஹங்கேரி மற்றும் அனைத்து பால்டிக் நாடுகளிலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும்.

மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் அதிக தடுப்பூசி விகிதங்களைக் கொண்டிருந்தாலும், மற்றும் பூஸ்டர் தடுப்பூசிக்கான பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள போதிலும், மில்லியன் கணக்கானவர்கள் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளனர். கிழக்கு ஐரோப்பாவில், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் முதல் அளவு தடுப்பூசியை மட்டும் பெற்றுள்ளனர் அல்லது முற்றிலும் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர்.

ஐரோப்பாவில் இலையுதிர் காலம் முழுவதும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. பிரான்சில் கோவிட்-19 பாதிப்பால் தற்போது 35 குழந்தைகள் தீவிர கவனிப்பில் இருப்பது உட்பட, மொத்தம் 153 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை, இங்கிலாந்தில் மற்றொரு குழந்தை கோவிட்-19 ஆல் இறந்துள்ளதாக பதிவானது, நோய்தொற்று தொடங்கியதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கையை 121 ஆக உயர்த்தியுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 16 தேதிகளுக்கிடையில், ஜேர்மனியில் 148 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 3 வயதுக்குட்பட்டவர்களாவர்.

ஐரோப்பிய அரசாங்கங்களின் குற்றவியல் செயலற்றத் தன்மைக்கு முரண்பட்டதாக, கடுமையான சுகாதார நடவடிக்கைகள் வைரஸை ஒழித்து உயிர்களைப் பாதுகாக்கும் என்பதை சீனாவின் சுகாதார அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளனர். Xi’an நகரில், 13 மில்லியன் மக்களுக்கு பாரியளவிலான ஒரு சுற்று பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அவர்களில் 127 நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டதும் அப்பகுதி முழுமையான பூட்டுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

ஐரோப்பாவில் ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கள் கடுமையாக வெடித்துப் பரவும் நிலையில், தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். கோவிட்-19 நோயால் நூறாயிரக்கணக்கான மக்கள் இறந்துபோக விடப்படும் சுகாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான பாதையில் தற்போது கண்டம் முன்னேறுகிறது, மேலும் பாழடைந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்களின் சிகிச்சை அளிக்க முடியாத நிலையால் இன்னும் பலர் இறக்கின்றனர்.

முதலாளித்துவ வர்க்கம் அதன் சுகாதாரக் கொள்கையை நோய்தொற்றுக்கள், இறப்புக்கள் அல்லது மருத்துவமனைகளின் மூழ்கிப்போன நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கவில்லை, மாறாக அதன் இலாபம் ஈட்டும் போக்கில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில், அத்தியாவசியமற்ற உற்பத்திகளை கூட தொடர்ந்து இயக்குவதில் தான் அது தீவிரம் காட்டியது. இவ்வாறாக, மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு மாறுபாட்டை எதிர்கொள்ளும் நிலையில் கூட, மனித உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அது மறுக்கிறது.

மார்ச் 2020 இல், இத்தாலிய தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட திடீர் வேலைநிறுத்தங்கள் ஐரோப்பா முழுவதும் பரவி இன்றுவரை சரியான பூட்டுதல்களுக்கு வழிவகுத்தன. இப்போது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மற்றும் அதன் பாரிய நோய்தொற்று கொள்கைகளுக்கும் எதிராக இயக்கப்பட்டதான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான பாரிய இயக்கத்தால் மட்டுமே வைரஸூக்கு எதிரான விஞ்ஞானரீதியான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

Loading