ஜேர்மன் வெளியுறவு மந்திரி பெயபொக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கெனும் ரஷ்யாவிற்கு எதிரான போர்வெறியை தீவிரப்படுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 5 அன்று வாஷிங்டனுக்கு ஜேர்மனிய வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் முதல் விஜயத்தின்போது ரஷ்யாவிற்கு எதிரான போர்முழக்கம் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நட்பின் வெளிப்படுத்தல்கள் மையமாக இருந்தன.

வாஷிங்டனில், ஜன. 5, 2022 புதன்கிழமை, வெளியுறவுத் துறையில், ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் உடனான செய்தி மாநாட்டின் போது வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் பேசுகிறார் [Credit: Mandel Ngan/Pool via AP]

'ரஷ்யாவின் நடைமுறையானது ஒரு தெளிவான அடையாளத்தால் குறிக்கப்பட்டுள்ளது,' என்று பெயபொக் எச்சரித்தார். உக்ரேனிய இறையாண்மையை மீறுவது ரஷ்யாவிற்கு 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும். குறிப்பாக உக்ரேன் எல்லையிலும் மற்றும் உலகளவில் பதட்டம் அதிகரித்து வருகிறது. 'எனவே ஐரோப்பியர்களாகிய நாம் நமது அமெரிக்க நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவது முக்கியம்' என்று அவர் மேலும் கூறினார். அட்லான்டிக்கு இடையிலான கடல்கடந்த நட்பைப் புதுப்பிக்க இப்போது ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.

கிழக்கு உக்ரேனில் இராணுவ அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என “அன்புள்ள டோனி” (பெயபொக் தனது அமெரிக்க சகாவை அழைத்தார்) ரஷ்யாவை அச்சுறுத்தினார். 'அது அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் நிலை மட்டுமல்ல,' என்று அவர் வலியுறுத்தினார். 'பல நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளின் கூட்டு நிலைப்பாடுதான் ஒன்று சேர்ந்துள்ளது.'

மாஸ்கோ ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தொடர்வது அல்லது இராஜதந்திரப் பாதையில் செல்வது என்ற விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது என்று பிளிங்கென் கூறினார். ஆக்கிரமிப்பு நிலைப்பாடு, விரைவான மற்றும் 'பெரிய' விளைவுகளை உருவாக்கும். பூர்த்திசெய்யப்பட்டு இன்னும் அங்கீகரிக்கப்படாதுள்ள சர்ச்சைக்குரிய Nord Stream 2 எரிவாயு குழாய் திட்டமானது ஐரோப்பியர்களின் கைகளில் ஒரு நெம்புகோலாக உள்ளது. இந்த நிலைமையில் எரிவாயு குழாய் வழியாக பாயும் என்று கற்பனை செய்வது கடினம்.

ஏற்கனவே கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது Nord Stream 2 ஐ இயக்குவதற்கு எதிராகப் பேசிய பெயபொக், மறைமுகமாக பிளிங்கெனுடன் உடன்பட்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டுடன், 1998 முதல் 2005 வரை பதவியில் இருந்த கடைசி பசுமை வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறார். அன்று அமெரிக்க வெளிவிவகார செயலாளரான மேடலின் ஆல்பிரைட் உடன் இணைந்து ரஷ்யாவின் நட்பு நாடான சேர்பியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கான போலிக்காரணங்களை பிஷ்ஷர் உருவாக்கினார்.

பிஷ்ஷரும் ஆல்பிரைட்டும் கொசோவோ விடுதலை இயக்கமான UÇK இன் தலைவரும் பின்னர் கொசோவோவின் ஜனாதிபதியுமான ஹாஷிம் தாச்சியை நம்பியிருந்தனர். அவர் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் கடுமையான போர்க்குற்றங்களில் சிக்கியிருந்தார். இது போரை மனித உரிமைகளுக்கான பிரச்சாரமாக சித்தரிப்பதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை. இதற்கிடையில், தாச்சி போர்க்குற்றங்கள் மற்றும் போர் தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹேக் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

2014 இல், பசுமைவாதிகளும் அவர்களது ஹென்ரிச் போல் அறக்கட்டளையும் உக்ரேனில் மைதான் சதுக்க ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக தூண்டினர். இவ்வியக்கம் வலதுசாரி தீவிரவாதிகளின் உதவியுடன் உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்து, அவருக்குப் பதிலாக ஒரு தேசியவாத, மேற்கத்திய சார்பு ஆட்சியைக் கொண்டுவருவதற்கான மறைப்பாக செயல்பட்டது. இந்த சதியில் பாசிச சக்திகள் முக்கிய பங்கு வகித்த போதிலும், பசுமைவாதிகள் அதை ஒரு ஜனநாயகப் புரட்சி என்று போற்றினர்.

அப்போதிருந்து, நேட்டோ ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அதை மேலும் இராணுவ ரீதியாக சுற்றி வளைப்பதற்கும் உக்ரேனில் உள்ள மோதலை திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அதன் மக்கள்தொகையில் பெரும் பகுதியை அழிக்கும் ஒரு போரின் மையமாக ஐரோப்பா மாறும் அபாயத்தை நேட்டோ நனவுடன் ஏற்றுக்கொள்கிறது.

பெயபொக் இந்த கொள்கையை தடையின்றி ஏற்றுக்கொண்டு மற்றும் 'மேற்கத்திய மதிப்புகள்' மற்றும் 'மனித உரிமைகள்' பற்றிய வெற்று சொற்றொடர்களால் அதை மறைக்கிறார். வெளியுறவு அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட பின்னர், அவர் 'ஒரு மதிப்பினை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக் கொள்கையை' பின்பற்றுவதாக அறிவித்தார். இதை அவர் வாஷிங்டனிலும் வலியுறுத்தினார்.

ஜேர்மனி இந்த ஆண்டு முன்னணி மேற்கத்திய தொழில்துறை நாடுகளின் G7 குழுவில் அதன் தலைவர் பதவியை 'ஜனநாயகத்தை வலுப்படுத்த' பயன்படுத்தும் என்று பெயபொக் அறிவித்தார். G7 நாடுகளின் பொருளாதார வெற்றியானது அவர்களின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு அரசாங்கங்கள் மற்றும் நியாயமான ஆட்சிமுறைகளை ஆதரிப்பது ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது என்றார்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அதன் பிரச்சாரத்தை ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான போராட்டமாக சித்தரிக்கும் பைடென் நிர்வாகத்தின் வார்த்தையாடல்களுடன் இது ஒத்துப்போகிறது.

ஜனவரி 6, 2021 அன்று, காங்கிரஸ் மீதான தாக்குதலின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, பெயபொக் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ததன் மூலம், இந்த வார்த்தையாடல்கள் எவ்வளவு பொய்யானது என்பதை அறியலாம். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் முயற்சியுடன் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் ஒரு தனிமனித சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான முடிவு மயிரிழையில் தோல்வியடைந்தமை அமெரிக்க ஜனநாயகத்தின் அழுகலை அம்பலப்படுத்தியது.

பைடெனின் கீழ் அது எதுவும் மாறவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களை எதிர்க்க அவரது அரசாங்கம் தயாராக இல்லாததுடன், முடியாதும் உள்ளது. ட்ரம்பும், அரசு எந்திரத்திலும், இராணுவத்திலும், குடியரசுக் கட்சியிலும் சதித்திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர்களும் பொறுப்பேற்க செய்யப்பட மாட்டார்கள். மேலும் அடுத்த சதிக்கு தடையின்றி தயாரிப்பு செய்யவிடப்பட்டுள்ளனர். ஜேர்மனிய 'போக்குவரத்து விளக்கு' கூட்டணி அரசாங்கத்தைப் போலவே — பங்குச் சந்தை, பெருநிறுவனங்கள் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியின் வர்க்கத் தன்மையே இதற்குக் காரணம். அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு போரை நடத்துவதால், அது ஒரு சமூக வெடிப்பைத் தடுப்பதற்கு இவ்வாறான சர்வாதிகாரத்தின் ஆபத்தை குறைத்து மதிப்பிட வேண்டியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் சரிவு, ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய குற்றவியல் போர்களுடன் நேரடியாக தொடர்புடையதுடன் மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் உள்ள முழு சமூகங்களையும் அழித்து நாசமாக்கியது. ரஷ்யாவுடனும், குறிப்பாக சீனாவுடனும் அதிகரித்து வரும் மோதலின் அதிகரிப்பு, மனிதகுலம் உயிர்தப்ப முடியாத ஒரு மூன்றாம் உலகப் போரில் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

பெயபொக்கின் வருகையின் போது நட்பிற்கான அனைத்து வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான பதட்டங்களும் வளர்ந்து வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, ஜேர்மனி கிழக்கு ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் அதன் செல்வாக்கு மற்றும் விரிவாக்கத்திற்கான விருப்பமான பகுதியாகவும், மலிவான உழைப்பு மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரமாகவும், முதலீட்டிற்கான இடமாகவும் கருதுகிறது. எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஐயுறவுடன் பார்க்கிறது.

அதிபர் ஓலாவ் ஷொல்ஸ் மற்றும் ஜேர்மன் பெருவணிகத்தின் பெரும் பிரிவுகள் Nord Stream 2 திட்டத்தினை தொடர் விரும்புகின்றனர் என்பது நன்கு தெரிகின்றது. ரஷ்ய எரிவாயு விநியோகம் இல்லாமல், அணுசக்தி மற்றும் நிலக்கரி எரிப்பதிலிருந்து கிடைக்கும் எரிசக்தியைக் கைவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் ஜேர்மனியால் அதன் எரிசக்தி ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. போக்குவரத்து விளக்கு கூட்டணிக்குள், Nord Stream 2 தொடர்பான மோதலை பகிரங்கமாக அடக்குவதற்கு கணிசமான முயற்சி தேவையாக உள்ளது.

ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகள் பைடெனும் புட்டினும் ஐரோப்பியர்ளுக்கு அப்பாற்பட்டு ஒரு உடன்பாட்டிற்கு வரலாம் என்ற அச்சத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜேர்மன் வெளியுறவு மந்திரி வாஷிங்டனில் பிளிங்கெனை 'ஐரோப்பா இல்லாமல் ஐரோப்பாவில் பாதுகாப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது' என்று பகிரங்கமாக எச்சரித்தார். எதிர்வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 'சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு' 'மத்தியில்' இருக்கும் என்றார்.

'ஐரோப்பிய பாதுகாப்பு பற்றிய கேள்விகள் வரும்போது, ஐரோப்பாவின் தொடர்பில்லாமல் ஐரோப்பா இருக்காது' என்று பிளிங்கென் அவருக்கு உறுதியளித்தார். ஆனால் ரஷ்யாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வியாழனன்று ஒரு சந்திப்பிற்காக உயர்மட்ட பிராங்கோ-ஜேர்மன் தூதுக்குழு மாஸ்கோவிற்குச் சென்றது. அதன் நோக்கம் அமெரிக்கா இல்லாமல் ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரேன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்மண்டியில் செய்யப்பட்ட வடிவத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகும். நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் சிறப்பு இணையவழிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திங்களன்று, ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் தொடங்குகின்றன. இந்த சந்திப்பிற்கு பைடெனும் புட்டினும் தங்கள் கடந்த கோடைகால உச்சிமாநாட்டில் உடன்பட்டிருந்தனர்.

1914 மற்றும் 1939 போன்று பெரும் வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் போருக்கு இட்டுச் செல்லும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச இயக்கம் மட்டுமே இந்த போர்வெறியர்களை நிறுத்த முடியும்.

Loading