மக்ரோனின் சுகாதாரக் கொள்கைக்கு எதிராக பிரெஞ்சு ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்று பிரெஞ்சு ஆசிரியர்கள், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்தினதும், கோவிட்-19 க்கான அதன் பள்ளி சுகாதார நெறிமுறைகளுக்கும் எதிராக, நாடு தழுவிய, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி ஆய்வாளர்களும் செவிலியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இது, பெருகிவரும் கோபத்தின் பிரதிபலிப்பும், ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் பெருமளவில் பரவி வருவதன் பொது எச்சரிக்கையுமாகும்.

இந்த வேலைநிறுத்தம் முதலாளித்துவ அரசாங்கங்கள் சுகாதாரத்தையும் வாழ்க்கையையும் தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சர்வதேச அணிதிரள்வின் ஒரு பாகமாக உள்ளது. பிரான்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகிவிட்ட நிலையில், கடந்த வாரம், சிகாகோ ஆசிரியர்கள் நேரில் கற்றலுக்குத் திரும்புவதை நிராகரிக்க வாக்களித்தனர், நகர நிர்வாகத்துடன் பணிபுரியும் தொழிற்சங்கங்கள் அதை செல்லாததாக்க முயற்சி செய்கின்றன. நியூ யோர்க், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஓமிக்ரோன் அலையின் போது பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன மற்றும் மனுக்கள் பரவி வருகின்றன.

Eugène Delacroix உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவிசென் மருத்துவமனையின் முன் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதில் 'பள்ளியில் கோவிட், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெற்றோருக்கு சமம்' என்று இடதுபுறமும், 'அதிக எண்ணிக்கை கொண்ட வகுப்புகள், நிரம்பிவழியும் மருத்துவமனைக்குச் சமம்' என்று வலதுபுறமும் உள்ள பதாகைகள் குறிக்கிறது. இது திங்கட்கிழமை மார்ச் 29, 2021 பாரிஸின் வடக்கே உள்ள பொபினி இல் நடைபெற்றது. (AP Photo/Michel Euler)

பிரெஞ்சு பள்ளிகளின் நெருக்கடியானது சர்வதேச அளவில் தூண்டப்பட்ட பேரழிவை சுருக்கமாகக் கூறுகிறது, அதே நேரத்தில் பள்ளிகள் உண்மையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால், மேலும் ஐரோப்பாவில் ஒவ்வொரு வாரமும் 7 மில்லியன் மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களில் 3.2 சதவீதமும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 4.7 சதவீதமும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரோன் மூலம், இந்த நிகழ்வு விகிதங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது இரட்டிப்பாகிறது. இன்று ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களில் 5.6 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 3 ஆம் தேதி குளிர்காலம் தொடங்கும் போது கல்வி மந்திரி ஜோன் மிஷேல் புளோங்கேர் (Jean-Michel Blanquer) சுகாதார நெறிமுறைகளை பள்ளி ஊழியர்களுக்கு தெரிவிக்கக் கூட கவலைப்படவில்லை. வகுப்புகள் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்குள், ஜனவரி 2 அன்று அவர் ஒரு ஆரம்ப நெறிமுறையை ஊடகங்களுக்கு வெளியிட்டார். நெறிமுறைகள் குழப்பமான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன, தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு, கோவிட்-19 தொற்றுக்கள் வெடித்தபோதிலும் வகுப்புகளைத் திறந்து வைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவு ஒரு தவிர்க்க முடியாத பேரழிவுவாக உள்ளது.

75 சதவீத ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் நாட்டின் பாதி பள்ளிகள் மூடப்பட்டன. பிரான்சில் 123,000 உயிர்களையும் ஐரோப்பாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களையும் இழந்த பாதுகாப்பற்ற பணியிடங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க அரசாங்கங்கள் கட்டாயப்படுத்தியதால், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் கசப்பான அனுபவங்களை இந்த வெகுஜன ஆதரவு பிரதிபலிக்கிறது.

ஒரு பள்ளி ஆசிரியர் WSWS இடம் கூறினார்: “தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை இழந்த மாணவர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் தான் பொறுப்பு என்று நினைக்கிறார்கள்.. அவர்கள் மனம் உடைந்து அழுவதை தேற்றுவது எங்கள் கைகளில்தான் உள்ளது. இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. நாங்கள் பயங்கரமான அனுபவங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

'நான் கோபமாக இருக்கிறேன், மிகவும் கோபமாக இருக்கிறேன்,' என்று அவர் மேலும் கூறினார், புளோங்கேரால் விதிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் நம்பகமற்ற சோதனைக் கருவிகளைக் கண்டித்தார். 'இது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், ஒரு நாளிலிருந்து அடுத்த நாளுக்கு, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளில் மாறும். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாமல் அடுத்த நாள் பெற்றோரை எதிர்கொள்வது எங்களுக்கு சகிக்க முடியாதது! கோவிட்-19 இலிருந்து பள்ளிகளைப் பாதுகாக்கும் எந்தவொரு யோசனையையும் அரசாங்கம் கைவிட்டுவிட்டது.”

மற்றொரு பள்ளி ஆசிரியை, நெடுங்கோவிட் எதிர்காலத்தில் குழந்தைகளின் தலைமுறைகளை பாதிக்கும் என்ற அச்சம் குறித்து WSWS உடன் பேசினார். 'நான் கோபமாக இருக்கிறேன். வைரஸைப் பற்றிய தரவு, அது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், அது உடலுக்குள்ளேயே தொடர்கிறது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் நீடித்த சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. … இந்த தலைமுறையினர் உடல்நல பாதிப்புகளின் அடிப்படையில் என்ன பாதிக்கப்படுவார்கள் என்று தெரியாமல் குழந்தைகளை பள்ளிக்குச் செல்லத் தூண்டி, இதுபோன்ற வைரஸைப் பரவ விடுகிறோம் என்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

இந்த கோபத்தின் வெடிப்பு, பிரெஞ்சு ஆசிரியர் சங்கங்களை இறுதியாக வேலைநிறுத்த நடவடிக்கையை அங்கீகரிக்க நிர்பந்தித்துள்ளது. நவம்பர் 2020 இல் பள்ளிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் திரும்புவதற்கு எதிராக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, மக்ரோனால் அனுப்பப்பட்ட கலகத் தடுப்பு போலீஸ் தாக்கியபோதும் கூட, அதே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தின.

தொழிற்சங்கவாதியான Stéphane Crochet பிரான்ஸ் இன்ஃபோ இடம் கூறினார், “மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களிடையேயும் கோபம் உள்ளது. புதிய நெறிமுறைகளை விளக்குவதற்காக குடும்பங்களுக்குச் செய்திகளை அனுப்புவதற்காக தங்கள் முழு மாலைகளையும் செலவழிக்கும்போது சக ஊழியர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். பதட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. … இந்த அளவு எரிச்சலையும் சோர்வையும் நாங்கள் பார்த்ததில்லை.

ஆசிரியர்களுக்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வர்க்க மோதல் உருவாகி வருகிறது. நேற்றைய தினம் 368,149 நோய்த்தொற்றுகளுடன் பிரான்ஸ் நாளுக்கு நாள் பதிவுசெய்யப்பட்ட நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தாலும், மக்ரோன் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெகுஜன தொற்றுக் கொள்கைகளில் இருந்து, ஒரு அங்குலம் கூட நகர விரும்பவில்லை என சமிக்ஞை செய்கிறார்.

கடந்த மாதம் தொற்றுநோய்க்கான தடுப்பூசி-மட்டும் அணுகுமுறையை நம்பியிருப்பதாகக் கூறிய பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ், பிரான்ஸ் 'அதன் பள்ளிகளை அதிக நேரம் திறந்திருக்கும் நாடு' என்று பெருமையாகக் கூறினார். பள்ளிகளில் நேர்மறையான நோய்த்தொற்றுகள் கண்டறிந்தாலும் வகுப்புகள் மூடப்படாது என்று வலியுறுத்தி, 'இல்லையெனில் பிரான்சில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் மூடப்படும்' 'நாங்கள் பள்ளிகளையோ நாட்டையோ மூட மாட்டோம்' என அவர் உறுதியளித்தார்.

மக்ரோனின் கீழ் கல்வியில் ஊதிய முடக்கத்தை திணித்த புளோங்கேர், பள்ளிகளை குழந்தைகள் தினசரி பராமரிப்பு நிலையங்களாக பயன்படுத்தும் அவரது உத்தியை எதிர்க்கும் ஆசிரியர்களை அவர் அலட்சியப்படுத்தியதை மறைக்கவில்லை, இதன் மூலம் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று வங்கிகளுக்கு இலாபம் ஈட்ட வேண்டும். 'பள்ளிகளைச் சுற்றி தேசத்தின் ஒற்றுமைக்கு' அழைப்பு விடுத்த அவர், அவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று குற்றம் சாட்டி, 'நாங்கள் ஒரு வைரஸுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யவில்லை' என்று விரிவுரை செய்தார்.

ஆசிரியர்கள் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு இரக்கமற்ற அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர், இதில் அவர்களின் இயற்கையான கூட்டாளிகள் சர்வதேச அளவில் வெகுஜன தொற்று கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.

அமெரிக்கா முழுவதும் பள்ளி வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்கிலாந்தின் லீசா டியஸ் போன்ற ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பான பள்ளிகளை ஆதரிப்பவர்கள், ஆபத்தான பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதை எதிர்ப்பதற்காக ஊடகங்களின் கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். ஐரோப்பாவில் தொற்றுநோய் பரவிய சுமார் இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ நோய்த்தொற்றுக் கொள்கைக்கு எதிராக, உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் வெடிக்கும் கோபம் அதிகரித்து வருகிறது.

மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த, ஆசிரியர்கள் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியில் இருந்து போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவிய இரண்டு வருடங்களில் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகிய நிலையில், இந்த அதிகாரத்துவங்கள் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் அடுத்தடுத்த அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்காக ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து, பின்னர் விற்பனை செய்ததற்கான நீண்ட பதிவுகளை கொண்டுள்ளன.

மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை என்பதை கோவிட்-19 தொற்றுநோய் முன்னெப்போதையும் விட தெளிவாக நிரூபித்துள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தைகள், ஏற்கனவே வங்கிகளின் நலன்களுக்காக ஓய்வூதியங்கள், வேலை பாதுகாப்பு, இரயில்வே தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் சம்பளங்களில் வெட்டுக்களை உருவாக்கியுள்ளன. இப்போது வாழ்வாதாரங்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நவம்பரில், ஓமிக்ரான் தோன்றுவதற்கு முன்பு, உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட்-19 ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 500,000 உயிர்களைக் கொல்லும் என்று கணித்துள்ளது. தற்போது, பிரான்சில் 1,500 பேர், ஐரோப்பா முழுவதும் 20,000 பேர் மற்றும் உலகளவில் 46,000 பேர் ஒவ்வொரு வாரமும் இறக்கின்றனர். செவ்வாயன்று, WHO, தற்போதைய போதாத சுகாதார நெறிமுறைகள், மருத்துவமனைகளை மோசமடையச் செய்வது, இறப்புகளில் இன்னும் பெரிய எழுச்சியைத் தூண்டுவது ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பாவின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாதங்களில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் பீடிக்கப்படுவர் என்று எச்சரித்தது. ஆயினும்கூட, பாரிஸ் மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கங்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளை இறுக்குவதன் மூலம் அல்ல, தளர்த்துவதன் மூலம் பதிலளித்தன.

இத்தகைய கொடூரமான கொள்கைகளுக்கு திறன் கொண்ட அரசாங்கங்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி. அது பாரியளவிலான உழைக்கும் மக்களின் நலன்களுக்கான ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கைக்கு, ஆளும் உயரடுக்கின் எதிர்ப்பை எதிர்க்கவும் இறுதியில் நசுக்கவும் வேண்டும்.

முன்னோக்கிச் செல்ல, தொற்றுநோயை நிறுத்துவதற்கும் வைரஸ் பரவுவதை அகற்றுவதற்கும் உலகளாவிய, விஞ்ஞானபூர்வமாக வழிகாட்டப்பட்ட சுகாதாரக் கொள்கையை திணிக்க, வேலைநிறுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க, பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் தொழிற்சங்கங்கள் சாராத, சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக வேண்டும். தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிரான தீவிர வலதுசாரி ஊடகப் பிரச்சாரத்தை அவர்கள் எதிர்த்துப் போராடமுடியும் மற்றும் தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும். இதற்கு சமூக பூட்டுதல்கள், நேரில் கல்வி கற்பித்தலை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் அவசியமற்ற உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவருதல், மற்றும் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைப் பின்தொடர்தல் ஆகியவை அவசியம்.

தத்தமது நாடுகளில் உள்ள இத்தகைய குழுக்களை உருவாக்கி, தொற்றுநோயைத் தடுக்க விரும்பும் ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொண்டு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டமைக்கப் போராடுமாறு, சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) அழைப்பு விடுக்கிறது.

Loading