ஓமிக்ரோன் அலைக்கு மத்தியில் பிரெஞ்சு அரசாங்கத்தின் செயலற்றத்தன்மையை விஞ்ஞானிகள் கண்டிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓமிக்ரோன் நோயாளிகளின் சுனாமியைக் கையாள முற்றிலும் தடுப்பூசிகளை மட்டுமே நம்பி, இவ்வாரம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கொண்டு வந்த சுகாதாரக் கொள்கை, விஞ்ஞானிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. பள்ளிக்குத் திரும்புவதைத் தாமதப்படுத்தவும், அத்தியாவசியமற்ற வேலையிடங்களில் உடல்ரீதியான தொடர்புகளைத் தடுக்கவும் விடுக்கப்பட்ட அழைப்புக்களை நிராகரித்து, பிரெஞ்சு அரசாங்கத்தின் இந்த கொள்கை, நோய் மற்றும் மரணத்தின் பேரலைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

கோவிட்-19 பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்த வாங்குபவர்கள், டிசம்பர் 20, 2021 திங்கட்கிழமை, பாரிஸில் உள்ள Grand Bouvard கடைகள் வழியாக நடக்கின்றனர். (AP Photo/Michel Euler)

தங்கள் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட பிரபல விஞ்ஞானிகள் மக்ரோனின் கொள்கைகளைக் கண்டித்திருப்பது, முற்றிலும் பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்த்து, இந்த வைரஸை அகற்றுவதற்கான விஞ்ஞானபூர்வ பொது சுகாதார கொள்கையைக் கொண்டு வருவதற்காக, தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தற்போது பின்பற்றப்படும் கொள்கை நேராக பேரிடருக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டன் (189,213), ஸ்பெயின் (161,688) மற்றும் இத்தாலி (126,688) இல் ஏற்பட்டதைப் போலவே, பிரான்ஸ் வியாழக்கிழமை புதிய உச்சமாக 206,243 கோவிட்-19 நோயாளிகளைப் பதிவு செய்தது.

பிரெஞ்சு அரசாங்கம் பாரிய நோய்தொற்றுக்கான அதன் கொள்கையை நியாயப்படுத்தப் பயன்படுத்தும் ஊகங்கள் விஞ்ஞான அடித்தளமற்றவை. “ஒரு பொது முடக்கத்திற்கு அப்பாற்பட்டு,” ஓமிக்ரோன் வகையின் 'பரவலைத் தடுப்பது சாத்தியமில்லையென தெரிகிறது,' என்று டிசம்பர் 27 பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை மந்திரி ஒலிவியே வெரோன் ஒப்புக் கொண்டார். இருப்பினும் வெரோனும் பிரதம மந்திரி ஜோன் கார்டெக்ஸூம் பொது முடக்கம் சம்பந்தமான எந்தவொரு கருத்தையும் நிராகரித்தனர், தடுப்பூசிகள் இருப்பதாகவும், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைக்கும் கோவிட்-19 ஆல் ஏற்படும் மருத்துவ அனுமதிப்புகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும்பாலும் 'இடைத்தொடர்பு' இருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் வெரோன் வலியுறுத்தினார்.

உண்மையில், ஓமிக்ரோன் நோயாளிகளின் பேரலை வரவிருக்கும் நாட்களில் நோய்வாய்ப்படல் மற்றும் மரணங்களை ஏற்படுத்தும் ஒரு வெடிப்புக்குத் தயாராகி வருவதையே அனைத்தும் சுட்டிக் காட்டுகின்றன. ஓமிக்ரோன் வகை பரவலின் ஐரோப்பிய குவிமையமாக உள்ள இலண்டனில், நிரம்பி வழியும் மருத்துவமனைகள் அவற்றின் கோவிட்-19 நோயாளிகளைத் தங்க வைக்க, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தோட்டங்களிலும் கூடாரங்களை அமைக்க தயாராகி வருகின்றன.

பிரான்ஸ் சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் கௌரவ ஆராய்ச்சியாளரும் (INSERM), தொற்றுநோய் நிபுணரும் உயிரியியல் புள்ளியியல் நிபுணருமான டொமினிக் காஸ்டலியோலா, ஓமிக்ரோன் அதிகரிப்புக்கு மத்தியில், மக்ரோன் பிரெஞ்சு மக்களின் உயிர்களுடன் விளையாடும் விதத்தை கண்டித்தார்: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, நாம் செயல்பட்டிருந்தால், அதன் பரவலை நாம் குறைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, நாம் ரஷ்ய சூழ்ச்சியில் (Russian roulette) விளையாடவும், நல்லதே நடக்கும் என்றும் முடிவெடுத்தோம், ஆனால் இவ்விதத்தில் ஒரு பொது சுகாதார கொள்கையை நெறிப்படுத்த முடியாது,” என்றார்.

அறுவை சிகிச்சை முகக்கவசங்களை விட சிறப்பாக பாதுகாப்பளிக்கும் FFP2 ரக முகக்கவசங்களைப் பிரெஞ்சு சுகாதார பணியாளர்களுக்கு வழங்கக் கோரிய காஸ்டலியோலா, பள்ளி இளைஞர்களை அரசு முழுமையாக புறக்கணிப்பதையும் கண்டித்தார். அப்பெண்மணி அறிவித்தார்: “பள்ளிகளில் கோவிட் ஐ கையாள்வதற்கான கொள்கை வெறுமையாக உள்ளது, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பள்ளிகளில் காற்றோட்ட வசதி, ஆசிரியப் பணியாளர்களுக்கு FFP2 முகக்கவசங்கள் மற்றும் இதுபோன்ற அவசியமான ஏற்பாடுகளை முயற்சி செய்ய கால அவகாசம் வழங்குவதற்காக ஜனவரி ஆரம்பம் வரை பள்ளிகளை மூடியே வைக்க மருத்துவத்துறை நிபுணர்கள் கோருகின்றனர்,” என்றார்.

பல்கலைக்கழகங்களின் நிலைமையும் இதேபோல பேரழிவுகரமாக உள்ளது. அங்கே பல மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது நோய்தொற்றுக்கு உள்ளான சக வகுப்பறை மாணவர்களுடன் தொடர்பில் வரக்கூடியவர்களாக உள்ளனர், 20-29 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நோய்தொற்று விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் நேரடியாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன, இது இந்த வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்தும்.

“பிரெஞ்சு ரிவியெரா (Côte d'Azur) மற்றும் பாரீஸ் பெருநகரம் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் நோய் விகிதங்களை வைத்துப் பார்த்தால், இளநிலை மற்றும் முதுநிலை உயர்நிலைப் பள்ளிகளில் தொலைதூர கல்வி வகுப்புகளுடன், நாம் 4 ஆம் கட்ட எச்சரிக்கையில் இருக்க வேண்டும்,” என்பதையும் காஸ்டலியோலா சேர்த்துக் கொண்டார். “தொடர்ந்து விதிமுறைகள் மாற்றப்பட்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டு, பள்ளிகளில் சுகாதார நெறிமுறைகளைக் கையாள்வதன் மீது கல்வித்துறை அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோன்கேயையும் அவர் கண்டித்தார்.

“இந்த அலை இன்னும் எவ்வளவு உயரத்திற்குச் செல்லும், அதன் வீரியம் என்னவாக இருக்கும்? என்பதை நாம் பார்க்க போகிறோம். … மருத்துவமனைகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்த வரையில், நாம் இன்னும் 7ல் இருந்து 10 நாட்களில் அவற்றைப் பார்க்க இருக்கிறோம்,” என்று எச்சரித்து அவர் நிறைவு செய்தார்.

உண்மையில் சொல்லப் போனால், மருத்துவமனை அனுமதிப்புகள் பிரான்சில் அக்டோபரில் இருந்தே இடைவிடாது அதிகரித்துள்ளது. தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் 3,506 மருத்துவமனைப் படுக்கைகள் உட்பட மருத்துவமனைகளில் 18,321 படுக்கைகளில் கோவிட்-19 நோயாளிகள் நிரம்பி உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுகள் 69.3 சதவீதம் நிறைந்துள்ளன; பிரெஞ்சு ரிவியெரா மற்றும் கோர்சிகாவில் முழு அளவைக் தாண்டிவிட்டன, ஆல்ப்ஸ், பேர்கண்டி, பாரீஸ் பெருநகர பகுதிகளும் வேகமாக அதேயளவை நெருங்கி வருகின்றன. பிரான்சில் கடந்த வாரம் 1,000 ஐ கடந்துவிட்ட வாராந்தர இறப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மக்கள் கருத்து மாறிக் கொண்டிருப்பதைக் குறித்தும், பாரிய மரணம் அதிகரித்து அது மக்கள் கருத்தை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்தும் கவலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் மக்ரோனின் பாரிய நோய்தொற்று கொள்கையை ஆதரிக்கிறது. இவ்விதத்தில், Le Monde எழுதுகையில், மக்ரோன் 'கோவிட்-19 பெருந்தொற்று மீது அவர் நடத்தியுள்ள இறுக்கமான நடவடிக்கையையே தொடர முடிவெடுத்துள்ளார்,” என்று குறிப்பிட்டது. எவ்வாறிருப்பினும், பிரதான நிதிய சந்தைகளின் இலாபங்களுக்குக் குழிபறிக்கும் பொது முடக்கங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்ற அவசியமான நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு அங்கே ஒருமனதான ஆதரவு உள்ளது.

ஆனால் மக்ரோனின் குறிப்பிடத்தக்க குற்றவியல் கொள்கை மீதான காஸ்டலியோலாவின் உறுதியாக கண்டனத்தை அதிகரித்த எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் எதிரொலித்து வருகின்றனர். “ஆரோக்கியத்தைப் பொருளாதாரம் ஜெயித்து விடுகிறது. அதுவொரு விருப்பத்தெரிவாக உள்ளது,” என்று ஒரு தொற்றுநோய் நிபுணரான பேராசிரியர் ஜோன்-போல் ஸ்டால் BFM-TV இல் சுருக்கமாக தெரிவித்தார்.

இந்த வைரஸை அகற்றக்கூடிய சமூக இடைவெளி நடவடிக்கைகள் குறித்து விஞ்ஞானிகளுக்கு நன்கு தெரிந்துள்ளது. தடுப்பூசி செலுத்துதல், நோயின் தடம் அறிதல் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடுமையான பொது முடக்கங்கள் நோயாளிகளின் எண்ணிக்கையைக் வேகமாக குறைக்கின்றன. இத்தகைய கொள்கைகள் சீனாவில் பின்பற்றப்பட்டுள்ளன, 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாடு 2021 இல் வெறும் இரண்டே இரண்டு மரணங்களைப் பதிவு செய்துள்ளது, ஆனால் சுமார் 700 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா அதே காலகட்டத்தில் 1 மில்லியன் மரணங்களால் பாதிக்கப்பட்டது.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை நடைமுறையில் கொண்டு வர, மக்களையும் மற்றும் பரந்த தொழில்துறை மற்றும் நிதிய ஆதாரவளங்களையும் ஒருமித்து அணித்திரட்ட வேண்டியுள்ளது. தொழிலாளர்களும் சிறுவணிகர்களும் வேலை செய்ய முடியாத இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு முழுமையான நிதி உதவிகள் கிடைக்க வேண்டும். விஞ்ஞானிகள் பரிந்துரைத்த சுகாதார கொள்கைகளைப் போல, இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, உயிர்களை விட இலாபங்களை முன்னிறுத்தும் நிதிய தன்னலக்குழுவும் மற்றும் மக்ரோன் போன்ற அதன் அரசியல் சேவகர்களும் முன்னிறுத்தும் தடைகளைத் தகர்க்க வேண்டியுள்ளது.

சொல்லப் போனால், டிசம்பர் 9 இல், பிரான்சின் விஞ்ஞானக் கவுன்சில், பெருமளவில் கூடும் நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடையே ஓமிக்ரோன் வகை பரவல் இரட்டிப்பாவதைக் குறித்து கவலை வெளியிட்டிருந்தது. அக்கவுன்சில் அறிவித்தது: “தற்போதைய விஞ்ஞானப் புரிதலைக் கொண்டு பார்க்கையில், மிகவும் பயன்விளையக்கூடிய விடையிறுப்பாக, ஓர் ஒருமித்த நல்லிணக்க அணுகுமுறையில், முகக்கவசங்கள் அணிய முடியாத அல்லது அவற்றுக்கு உரிய இடம் இல்லாத மூடிய அறைகளில் எந்தவொரு கூட்டு நிகழ்வுகளும் உடனடியாக கைவிடப்பட வேண்டும், குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படும் எந்தவொரு நிகழ்வுகளும் கைவிடப்படுவதும் அதில் உள்ளடங்கும்.”

அனுமானிக்கத்தக்க வகையில் மக்ரோன் அவரின் சொந்த விஞ்ஞான கவுன்சிலின் ஆலோசனையையே காலடியில் இட்டு நசுக்கினார், இந்த விடுமுறைகளின் போது மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளை மூடுவதை அந்த ஆலோசனை இலக்கில் வைத்திருந்தது.

பாரீஸ் பொது மருத்துவமனைகளின் பேராசிரியர் ரெமி சாலொமன் ட்விட்டரில் பின்வருமாறு எழுதினார்: “இந்த வைரஸைத் தடுக்க தடுப்பூசி இன்றியமையாதது என்றாலும், அதுவே போதுமானதில்லை. முன்பினும் அதிகமாக, மற்றவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதைக் குறைக்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொருவரும், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களும் கூட, தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.” “காற்றோட்டமில்லா அறைகளில் ஒன்று கூட வேண்டாம்; மூடிய அறைகளில் அதிகமாக காற்றோட்ட வசதி ஏற்படுத்துங்கள்; பலர் வந்து கலந்து கொள்ளும் உணவிடங்கள், தேனீர் விடுதிகள் மற்றும் தண்ணீர் குடிக்குமிடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்; அபாயம் இருக்கும் என்றால் FFP2 முகக்கவசங்களைப் பயன்படுத்துங்கள்; உணவகங்கள் போன்ற அபாயமான சூழ்நிலைகளுக்கு செல்வதற்கு முன்னதாக உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்,” என்றவர் கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற பரிந்துரைகளைத் தனிநபர் அடிப்படையில் கடைப்பிடிக்க முடியாது: பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலையிடங்களிலும், பள்ளிகளில் இளைஞர்களுக்கும் இவற்றைப் பின்பற்றுவது சாத்தியமில்லை.

மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய அரசியல் அணித்திரள்வு மூலமாக இந்த வைரஸை அகற்றுவதற்கு அவசியமான விஞ்ஞானபூர்வ கொள்கைகளைத் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் ஐரோப்பிய மற்றும் சர்வதேச சகோதரத்துவக் கட்சிகளும், மற்றும் அதன் இணைய பதிப்பான உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) வேலையிடங்களிலும், பள்ளிகள் மற்றும் அண்டைப் பகுதிகளிலும் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கின்றன. இத்தகைய கமிட்டிகளைக் கட்டமைக்க போராடுவதில் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் WSWS வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.

Loading