பாரியளவிலான மரணங்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில்

2021 இல் 10 நபர்கள் தங்கள் நிகர சொத்து மதிப்பை 500 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2021 ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பாரிய மரணம் மற்றும் துன்பம் நிறைந்ததாக உள்ளது.

பில்லியனர்கள் வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ், மைக்கேல் புளூம்பேர்க், எலோன் மஸ்க் (All originals from Wikimedia Commons)

2021 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோயால் பெருமளவு குறைத்து மதிப்பிடப்பட்டதாகக் கருதப்படும் உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 8.4 மில்லியனாக உள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயால் உலகம் முழுவதும் 97 மில்லியன் மக்கள் வறுமையில் விழுந்துள்ளனர். நிபுணர்கள் 2021 இல் இது தொடரும் என்று நம்புகிறார்கள். புதன்கிழமை, அமெரிக்காவில் மட்டும் தினசரி 484,377 புதிய தொற்றக்கள் உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்களில், மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் 2021 ஆம் ஆண்டை பாரிய போராட்டம் மற்றும் துயரத்தின் ஒன்றாக திரும்பிப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2021 ஆம் ஆண்டை தங்கள் குழந்தையை வைரஸால் இழந்த ஆண்டாக நினைவில் வைத்திருப்பர். வீட்டு வாடகையை செலுத்தவோ, குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவோ முடியாமல் தவித்த ஆண்டாகவே பலர் இதை நினைவுகூருவார்கள். உண்மையில், நாம் 2022 இல் நுழையும்போது, ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்திலும் வீட்டிலிருந்து வெளியேற்றுவதனை தடுக்கும் கட்டுப்பாடு நீக்கப்படுவதால், குழந்தைகளுடன் வசிக்கும் 5.7 மில்லியன் வயதுவந்த வாடகைதாரர்கள் வாடகை நிலுவையை கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறாயினும், 'இந்த தொற்றுநோயின்போது நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்' என்று ஊடக பண்டிதர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் இடைவிடாத பேச்சுக்கள் அனைத்தும், 2021 இல் சமூகத்தின் உயர்மட்ட தட்டினரின் வாழ்க்கையுடன் சராசரி தொழிலாளியால் தம்மை முற்றிலும் அடையாளம் காண முடியாததாகிவிட்டது.

2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய் இலாபம் ஈட்டுபவர்கள் பில்லியன்களை குவிக்கிறார்கள்

உலகின் பணக்காரர்களுக்கு, வாழ்க்கை இப்போதுபோல் சிறப்பாக இருந்ததில்லை.

இந்த வியப்பூட்டும் உண்மையைக் கவனியுங்கள்: 1990 முதல் பில்லியனர் செல்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, ஆனால் இந்தச் செல்வ இலாபங்களில் மூன்றில் ஒரு பங்கு தொற்றுநோய்களின் போது அடையப்பட்டது.

நவம்பர் இறுதியில், பாரிஸை தளமாகக் கொண்ட உலகளாவிய சமத்துவமின்மைக்கான ஆய்வகம், சுமார் 2,750 பில்லியனர்கள் உலகின் செல்வத்தில் 3.5 சதவீதத்தை கட்டுப்படுத்துகின்றனர். இது 1995 இல் 1 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய் தாக்குதலுக்குப் பின்னர் மிக விரைவான இலாபங்கள் வந்துள்ளன. மறுபுறம், பூமியின் மக்கள்தொகையில் மிக ஏழ்மையான பாதிப் பேர் உலக செல்வத்தில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

2021 இல் மட்டும், 10 தனிநபர்களின் நிகர மதிப்பு 500 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதை கண்டனர். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இந்த ஆண்டு உலகின் பணக்காரர் ஆனார். இந்த ஆண்டு ஒரு குறுகிய காலத்திற்கு, மஸ்கின் நிகர மதிப்பு 300 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக, மஸ்க் 2021 இல் தனது நிகர மதிப்பில் 121 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார்.

LVMH (Louis Vuitton, Christian Dior போன்ற ஆடம்பர சின்னங்களின் உரிமையாளர்) ஆடம்பரப் பொருட்களின் கூட்டு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி பேர்னார் ஆர்னோ இந்த ஆண்டு தனது நிகர மதிப்பில் 61 பில்லியன் டாலர்களை சேர்த்தார். ஆர்னோ ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரராவார்.

கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் தனது செல்வத்தில் 47 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார். கூகுளின் மற்ற இணை நிறுவனரான சேர்ஜி பிரின் தனது நிகர மதிப்பை 45 பில்லியன் டாலர்களால் அதிகரித்து, முதல் முறையாக 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் கொண்டு வந்தார். லாரி எலிசன் '100 பில்லியன் டாலர் குழுவில்' சேர்ந்தார், அவர் தனது நிகர மதிப்பில் 29 பில்லியன் டாலர்களை சேர்த்தார்.

முன்னாள் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் 41 பில்லியன் டாலர்களை சம்பாதித்தார். இவ்வாறு தொடரலாம். …

இந்த பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்கள் 2021 ஆம் ஆண்டை தனியார் ஜெட் விமானங்களில் பயணம் செய்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாளிகைகளை வாங்கினார்கள், இல்லையெனில் உலகத்தின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வித கவலையுமற்று (சிலவேளை இந்த உலகத்திற்கு அப்பாலும்) பயணம் செய்தனர். 2021 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோருக்குச் சொந்தமான ராக்கெட்டுகளில் இரண்டு டஜன் 'தொழில்முறை இல்லாதவர்கள்' வேடிக்கைக்காக விண்வெளிக்கு பறந்தனர்.

குறிப்பிடத்தக்க வகையில், 2022 தொடங்கும் போது, ஒமிக்ரோன் மாறுபாடு சுகாதார நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து தொற்றுநோய்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புகளை உச்சத்திற்கு கொண்டு வருகையில், உலகின் 10 பணக்காரர்களின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும்.

உயர்மட்டத்தினால் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்படுகிறது?

சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதியினரால் பதுக்கி வைக்கப்படும் பாரியதொகை பணத்தை பற்றி ஒருவர் சிந்திப்பதே கடினமானதாக இருக்கும்.

பெரும் பணக்காரர்களின் வாழ்க்கைக்கும் ஒரு தொழிலாளியின் வாழ்க்கைக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளியை உணர, பின்வரும் புள்ளிவிபரங்களை கவனியுங்கள்:

  • ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியருக்கான தேசிய சராசரி சம்பளம் 80,000 டாலர்கள் ஆகும். மேலும் அமெரிக்காவில் சுமார் 4.2 மில்லியன் செவிலியர்கள் உள்ளனர். உலகின் பணக்கார 10 நபர்களால் இந்த ஆண்டு பெறப்பட்ட 500 பில்லியன் டாலர்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு செவிலியருக்கும் 11,904 டாலர்கள் மேலதிக கொடுப்னவாக வழங்க முடியும்.
  • ஒரு தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளும் 1,000 டாலர் வழங்கப்பட்டால், 1 பில்லியன் டாலர்களை சேமிக்க 2,740 ஆண்டுகள் ஆகும். எடுத்துக்காட்டாக, லாரி பேஜ், 2021ல் மட்டும் (47 பில்லியன் டாலர்கள்) தனது செல்வத்தில் சேர்த்ததற்குச் சமமானதைச் செய்ய, அது 128,768 ஆண்டுகள் அல்லது 1,694 ஆயுட்காலம் எடுக்கும். இந்தக் கணக்கீடுகள், தொழிலாளி ஒவ்வொரு நாளும் 1,000 டாலரில் ஒரு சதத்தை செலவிடவில்லை என்பதையும் கருத்தில் எடுக்கின்றது.
  • ஜூலை 2021 இல், கடைசியாக விரிவான தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, 6.2 மில்லியன் வாடகைக் குடும்பங்கள் வாடகை செலுத்தாது பின்தங்கியிருப்பதை Surgo Ventures நிறுவனம் கண்டறிந்தது. இது மொத்தமாக சுமார் 23 பில்லியனாகும். 2021 இல் 10 பணக்காரர்கள் (500 பில்லியன் டாலர்கள்) சம்பாதித்த சொத்துக்களை ஒருவர் எடுத்துக் கொண்டால், அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள வாடகையை 20 மடங்கு செலுத்த முடியும். உண்மையில், வாரன் பஃபெட் மட்டுமே பெற்ற 21 பில்லியன் டாலர்கள் கிட்டத்தட்ட முழு கொடுப்பனவையும் செலுத்தமுடியும்.
  • 2021 இல் பணக்கார 10 நபர்களால் உருவாக்கப்பட்ட மொத்தச் செல்வம், அமெரிக்காவில் உள்ள மொத்த மாணவர் கடனில் மூன்றில் ஒரு பங்கைத் இல்லாதொழிக்கக்கூடும். இது 1.5 டிரில்லியன் டாலர்களாகும். உண்மையில், 2021 ஆம் ஆண்டில், ஒரு தொழிலாள மாணவர் கடனின் சராசரி செலவை (39,000 டாலர்கள்) செலுத்த போதுமான பணத்தை ஈலோன் மஸ்க் ஒன்பது நிமிடங்களுக்குள் எடுத்தார்.
  • கோவிட்-19 பரிசோதனைக்கு சராசரியாக 15 டாலர் செலவாகும் என்று வைத்துக் கொண்டால், அதே செல்வத்தினால் 33 பில்லியன் கோவிட்-19 பரிசோதனைகளை வாங்கலாம்.

கார்ல் மார்க்ஸ் மூலதனத்தின் தொகுதி I இல் பின்வருமாறு எழுதினார்: 'ஒரு துருவத்தில் செல்வம் குவிவதால், அதே நேரத்தில் எதிர்த்துருவத்தில் துன்பம், உழைப்பு அடிமைத்தனத்தின் வேதனை, அறியாமை, மிருகத்தனம், உளரீதியான சீரழிவு குவிகின்றது.' இந்த வார்த்தைகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதை விட இன்று மிகவும் உண்மையாக இருக்கலாம்.

பணக்காரர்களாலும், அதிபணக்காரர்களாலும் மகத்தான வளங்கள் பதுக்கி வைக்கப்படுகையில் ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகரமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து தப்பிக்க உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் போராடுகின்றனர் அல்லது அதைவிட மோசமாக வைரஸுக்கு பலியாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோய்களினால் மிகவும் கோரமான முறையில் காட்டப்படும் முதலாளித்துவத்தின் குணவியல்பு, பெருநிறுவன இலாபங்களின் இடைவிடாத குவிப்பு மற்றும் மெகா-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் தனியார் செல்வத்திற்கு சமூகத் தேவையை அடிபணியச் செய்வதாகும்.

Loading