முன்னோக்கு

அமெரிக்காவின் கோவிட்-19 கொடுங்கனவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 இன் ஓமிக்ரோன் மாறுபாடு பரவி வரும் நிலையில், அது நோய்தொற்றுக்கள், இறப்புக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புக்களை பெரிதும் அதிகரிப்பதற்கு இட்டுச் செல்கிறது.

இன்று, அமெரிக்காவில் தொற்றுநோயின் காரணமான உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 875,000 ஐ எட்டியுள்ளது, மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 45,000 பேர் இறந்துள்ளனர். தி எக்னாமிஸ்ட் நாளிதழில் வெளியான “அதிகப்படியான இறப்புக்களின்” புள்ளிவிபரங்களின்படி, உண்மையான இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனுக்கு அதிகமாக உள்ளது.

ஜனவரி 14, 2022, வெள்ளிக்கிழமை, சியாட்டிலில் உள்ள ஹார்பர்வியூ மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு பதிவுசெய்யப்பட்ட செவிலியர்(AP Photo/Elaine Thompson)

ஒவ்வொரு நாளும், இந்த தடுக்கக்கூடிய நோயினால் சராசரியாக 2,000 அமெரிக்கர்கள் இறக்கின்றனர், அதிலும் சில நாட்களில் தினசரி இறப்பு எண்ணிக்கை உச்சபட்சமாக 2,700 அளவிற்கு அதிகரிக்கிறது. நோயாளிகளின் வெள்ளத்தால் மருத்துவமனைகள் முற்றிலும் மூழ்கிப்போன நிலையில், வரும் வாரங்களில் நாளாந்த சராசரி இறப்பு எண்ணிக்கை 3,000 ஆக உயரக்கூடும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) முன்கணிக்கிறது.

தொற்றுநோயின் முன்னைய அலைகளை விட ஓமிக்ரோன் அலை குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. கடந்த ஆறு நாட்களில் மட்டும், கோவிட்-19 நோயால் 42 குழந்தைகள் இறந்துள்ளனர், அதாவது ஒரு நாளைக்கு 7 பேர் வீதம் இறப்பு நிகழ்ந்துள்ளது. இது, கடந்த இலையுதிர் காலத்தில் டெல்டா எழுச்சியின் உச்சக்கட்டத்தின் போது குழந்தைகள் இறந்த விகிதத்தை விட இருமடங்காகும், இது அமெரிக்காவில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றது. CDC புள்ளிவிபரங்களின்படி மொத்தத்தில், 1,127 அமெரிக்க குழந்தைகள் இப்போது வைரஸூக்கு பலியாகியுள்ளனர். “இலேசான,” பாதிப்புடையவர்களாக வகைப்படுத்தப்பட்ட எண்ணற்ற மற்றவர்கள் நெடுங்கோவிட் பாதிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

தி எக்னாமிஸ்ட் பத்திரிகை குறிப்பிட்ட CDC புள்ளிவிபரங்களின்படி, ஓமிக்ரோன் மாறுபாட்டின் முதல் நோய்தொற்று டிசம்பர் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது முதல் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தை கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் மாநிலத்தில், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை டிசம்பர் 5-11 தேதிகளின் வாரம் முதல் ஜனவரி 2-8 தேதிகளின் வாரம் வரையிலான காலகட்டத்தில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 154,208 ஐ எட்டியுள்ளது, இது முன்னைய எந்தவொரு எழுச்சியை விட கிட்டத்தட்ட 25,000 அதிகமாகும்.

நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கான பைடென் நிர்வாகத்தின் முடிவின் விளைவாகவே நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களின் பாரிய எழுச்சிகள் நிகழ்ந்துள்ளன. அரசாங்கம் கடந்த மாதம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் தேவையை ஐந்து நாட்களாக குறைத்தது, இதனால் நோய்தொற்று பாதிப்புள்ள தொழிலாளர்கள் மற்றவர்களுக்கும் நோயைப் பரப்பும் வகையில் மீண்டும் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதிலும் சில மருத்துவமனைகள் நோய்தொற்று பாதிப்புள்ள ஊழியர்களை முற்றிலும் தனிமைப்படுத்தாமல் வேலைக்குத் திரும்புமாறு வலியுறுத்துகின்றன, இதனால் மருத்துவமனைகளில் கோவிட்-19 இன் பரவல் வீதம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும், சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து தொழில்துறை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான அனுபவங்களையும் நிலைமைகளையும் அடிப்படையாக வைத்து தினசரி அறிக்கைகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.

பள்ளிகளும் உயர்கல்வி வசதிகளும் பாதுகாப்பாக உள்ளன என்று கூறப்பட்டு வகுப்பறைகளுக்கு மீண்டும் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியர்களும் கல்வியாளர்களும், தங்கள் மாணவர்கள் நோய்தொற்றுக்குள்ளாவதையும், அதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 பரவுவதையும் காண்கின்றனர். நியூ ஜெர்சியில் உள்ள ஒரு கல்வியாளர், “கடந்த இரண்டு வாரங்களில், பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருந்ததை நான் அறிவேன், அவர்கள் அதை வீட்டிற்கு கொண்டு சென்றனர், இப்போது அவர்களது பராமரிப்பாளர்கள் (அம்மா மற்றும் பாட்டி) இறந்துவிட்டனர்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முடிந்தளவு பணி வரம்பு நீட்டிக்கப்பட்ட பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ட்விட்டரில் வைரலான ஒரு பதிவில், அவசர மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ரெஜினா ராயன், கிட்டத்தட்ட 9 மாத கர்ப்பிணியான இவர், “39½ வாரங்களாக முழுமையாக கோவிட் நோயாளிகளுக்கு ER சிகிச்சை வழங்கிய கடைசி மாற்றுப் பணி!” என்று தலைப்பிட்டு, மருத்துவமனையின் குளியலறையில் எலாஸ்டோமெரிக் முகக்கவசம் அணிந்தபடி ஒரு செல்ஃபி வெளியிட்டார்.

இத்தாலிய மருத்துவர் ஐரின் டோசெட்டி, “அமெரிக்கா தங்கள் தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறது என்பதைப் பார்ப்பது பயங்கரமானது” என்று கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் கூட, நாட்டின் மருத்துவமனை அமைப்பை அப்படியே தொடர முடியாது. கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரையில் போஸ்டன் குளோப், “நாட்டின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பான மாஸ் ஜெனரல் ப்ரிஹாம், அதன் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுனாமியாக பெருக்கெடுத்து வருவதால் சமாளிக்க முடியாமல், திங்கட்கிழமை முதல், ஒவ்வொரு வாரமும் அது செய்யும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை குறைக்கவுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ முறை சீர்குலைந்து வருகிறது. 'மருத்துவர்கள் பேஸ்புக்கில் உள்ள மருத்துவ குழுக்களுக்கு இடுகையிடுகிறார்கள், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை மாற்றுவதற்காக மருத்துவமனைகளைத் தேடுகிறார்கள், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று மருத்துவர் ஜெர்மி ஃபாஸ்ட் ட்விட்டரில் எழுதினார்.

ஆனால், அதிகப்படியான நோயாளிகளால் மருத்துவமனைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், முக்கிய சேவைகளுக்கு தாமதம் ஏற்படுகின்ற நிலையில், மேலும் மரணத்தின் எழுச்சியை கையாளுவதால் ஏற்படும் மன உளைச்சலுக்குப் பின்னைய மனஅழுத்தத்தை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் நிலையில், தேசிய ஊடகங்களில், “நெருக்கடி முடிந்துவிட்டது; ஓமிக்ரோன் “இலேசானது;” மேலும் பாரிய நோய்தொற்று வெறுமனே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்ற மற்றொரு கதை ஆதிக்கம் செலுத்துகிறது.

“ஓமிக்ரோன் உச்சத்தில் உள்ளதா?” என்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட், தொற்றுநோய் காலம் முழுவதும் அவர் கூறி வந்த தவறான கூற்றை மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், சில செய்தி நிறுவனங்கள் வெகுஜன தொற்றுநோயை தீவிரமாக ஊக்குவிக்கின்றன. 'சிலருக்கு —சமீபத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்— எதிர்பாராத உணர்ச்சி உள்ளது: நிவாரணம்' என்று NBC நியூஸ் எழுதுகிறது. NBC “சமீபத்தில் கோவிட் நோயால் கண்டறியப்பட்ட சிலர், தாங்கள் நீண்ட காலமாகத் தவிர்க்க முயன்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது, குறித்த கவலையிலிருந்து எதிர்பாராத ஓய்வுக்கு வழிவகுத்துள்ளது - அதை மோசமாக்குவதற்குப் பதிலாக.” எனக் குறிப்பிட்டது. இக் கதை, மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களால் பெருமளவில் கண்டனம் செய்யப்பட்டது.

“பரவலை மெதுவாக்குவதா? அதை வேகப்படுத்துவதே பாதுகாப்பானதாக இருக்கலாம்,” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு எதிர்ப்புற தலையங்கம் தெரிவித்தது.

மேலும் மேலும், தொற்றுநோயின் உண்மையான நிலை பற்றிய வெளியீடுகள் மாலை செய்திகளில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறது. தவிர்க்க முடியாமல், பேரழிவின் மத்தியில் “நல்ல செய்தி” முன்னிலைப்படுத்தப்படுகிறது. நேற்று, சில நகரங்களில் நோய்தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகள் உச்சத்தில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த வைரஸ் கிராமப்புறங்கள் உட்பட, நாட்டின் பரந்த பகுதிகளை மூழ்கடித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்ற நிலையில், பாரிய நோய்தொற்றையும் மரணத்தையும் தவிர்க்க முடியாது என வெறுமனே ஏற்றுக்கொள்ள வைக்க பொதுமக்களை கட்டாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களின் கதைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

ஆனால் ஆளும் வர்க்கம் மனித வாழ்வின் மீது காட்டும் முழு அலட்சியம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பின் அடித்தளத்தை வளர்க்கிறது. கடந்த வாரம், சிகாகோவில் உள்ள டஜன் கணக்கான உயர்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வெளிநடப்பு செய்தனர், இந்த ஆசிரியர்கள் தொலைதூர பயிற்றுவிப்பைத் தொடர வாக்களித்த போதிலும், சிகாகோ ஆசிரியர் சங்கத்தால் அவர்கள் மீண்டும் வகுப்பறைக்குள் தள்ளப்பட்டனர்.

நாடு முழுவதுமாக, மருந்தகங்கள், மளிகைக் கடைகள், இரயில்வே மற்றும் பிற பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏற்புடைய ஊதியம் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளை வழங்கக் கோரி போராட்டத்தில் இறங்கினர்.

பைடென் நிர்வாகத்தின் மீது மக்களின் சீற்றம் அதிகரித்து வருகிறது, ஏனென்றால், “விஞ்ஞானம் பின்பற்றப்படும்” என உறுதியளித்திருந்த இது, நோய்தொற்று “வெடித்து பரவட்டும்” என்பதான ட்ரம்ப் நிர்வாகத்தின் பாரிய நோய்தொற்றுக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மக்களின் வருமானம் 99 சதவீதம் குறைந்துவிட்டது, அதேவேளை உலகின் 10 பணக்காரர்கள் தொற்றுநோயின் போது தங்கள் செல்வ மதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளனர் என்று ஆக்ஸ்பாம் இயக்கம் திங்களன்று தெரிவித்தது. ஒட்டுண்ணித்தன நிதிய தன்னலக்குழுவை செழிப்படையச் செய்வது மட்டும் தான் இந்த மரணம் மற்றும் துயரம் அனைத்திற்குமான ஒரே குறிக்கோளாக உள்ளது என்பது அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு மிகத் தெளிவாக உள்ளது.

அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் கடந்து செல்லும் பயங்கரமான அனுபவத்தின் தவிர்க்க முடியாத விளைவு என்பது, சோசலிச உணர்வின் வளர்ச்சியுடன் இணைந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியை அது முன்னெடுக்க வேண்டும் என்பதே.

இந்த பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர முடியும் மற்றும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் எதிர்வினைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் நுழைகையில், உலகளாவிய நோய் ஒழிப்பு மூலோபாயத்திற்காகவும், மற்றும் தனியார் இலாபத்திற்காக மனித உயிர்களை பலியிடுவதற்கான முதலாளித்துவத்தின் கோரிக்கையை நிராகரிப்பதற்காகவும் அவர்கள் போராட வேண்டும்.

Loading