சாங்ஜின் ஏரியில் சமர்: கொரியப் போரை துலக்கிக் காட்டாத திரைப்படம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சாங்ஜின் ஏரியில் சமர் என்பது 1950-1953 கொரியப் போரின் போது அமெரிக்கா அடைந்த ஒரு பெரும் தோல்வியைப் பற்றிய சீனத் திரைப்படமாகும். இது முதன் முதலில் செப்டம்பர் 21 இல் 11வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 30 இல் சீனா எங்கும் வெளியிடப்பட்டு பரந்துபட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இது 2021ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமானதோடு, சீனாவில் எக்காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படமுமாயிற்று. 5.757 பில்லியன் ரென்-மின்-பீ (905 மில்லியன் அமெரிக்க டாலர்) ஈட்டியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிராக அடுத்தடுத்து அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாட்டின் புரட்சிகரமான கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள அடுக்கடுக்கான மக்கள் கூட்டத்தில் இருந்து வரும் வேட்கையையே இப்படம் பெற்ற பெரும்புகழ் காட்டுகிறது. கொரியப் போர் அல்லது அதன் காரணங்களைப் பற்றி அறியாத பலருக்கு, சாங்ஜின் ஏரி கடந்த காலத்துக்குள் மூழ்கி எழும் வாய்ப்பை வழங்குகிறது.

சாங்ஜின் ஏரியில் சமர்

பலர் படத்தைப் பார்த்ததற்கான காரணங்கள் வேறு, படம் தயாரிக்கப்பட்டதற்கான காரணம் வேறு. ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரத்துவத்தைப் பொறுத்த வரை, அந்த நேரத்தில் நூறாயிரக்கணக்கான சீனப் படைவீரர்கள் கொரியாவில் தம்மைத் தியாகம் செய்து கொள்ளத் தூண்டிய சீன நிலைமைகளையோ சர்வதேச நிலைமைகளையோ ஆராய்ந்து பார்க்க எதுவும் செய்யாத ஒரு படத்தைக் கொண்டு, குருட்டுத் தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நோக்கமாகும். படைவீரர்கள் சேவை செய்தமைக்கும் உயிரைக் கொடுத்தமைக்கும் நாட்டின் மீதான நேசம் மட்டுமே காரணம் என்றும் படம் பார்ப்பவர் நம்பவேண்டுமாம்!

சாங்ஜின் ஏரியின் வரம்புக்குட்பட்ட, ஒற்றைப் பரிமாணத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், படத்தின் இடம் பொருள் ஏவலைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். இது இந்தப் படத்தில் பெரும்பாலும் காணப்படவே இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உடனடியான காலகட்டம் என்பது ஆசியா முழுவதிலும் புரட்சிக் கொந்தளிப்புகள் நிறைந்த ஒன்று. அநேகமாய் இவை அனைத்துமே அவற்றின் ஸ்ராலினிசத் தலைமையின் விளைவாகப் பெரும் தோல்விகளில் போய் முடிந்தன.

அதுவே சீனாவிலும் நடந்திருக்கக் கூடும். சீனாவில் சோவியத் ஒன்றியத்துக்கு இடைத்தடை அரசுகள் ஆகக் கூடிய ஓர் அரசை, வாஷிங்டனுக்கும் ஏற்புடையவாறு நிறுவுவதே ஸ்ராலினின் கணக்காக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை சியாங் கேய் ஷேக் மற்றும் கோமிண்டாங்கின், அதாவது தேசியவாதிகளின் ஆட்சிக்கு அடிபணியச் செய்ய அவர் முனைந்தார்.

பரவலாக வெறுக்கப்பட்ட கோமிண்டாங்கின் அரசியல் பலவீனத்தின் பிரதிபலிப்பாக சியாங் கேய்-ஷேக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எவ்விதக் கூட்டணியையும் நிராகரித்தார். கோமிண்டாங் சர்வாதிகாரத்தின் ஊழலும் மிருகத்தனமும் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தை ஏற்படுத்தியது; இந்த இயக்கமே 1949 சீனப் புரட்சியில் உச்சங்கண்டது. தேசியவாதிகள் அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பில் தைவானுக்குப் பின்வாங்கினர்.

சாங்ஜின் ஏரியில் சமர்

ஆனால், சீனப் புரட்சி ஊனமுற்றுப் போயிற்று. ஏனென்றால் தொடக்கத்தில் மாவோவும் சீனக் கம்,யூனிஸ்ட் கட்சியும் புரட்சியின் “சோசலிச” கட்டத்துக்கு முன்னதாக, சீன முதலாளி வர்க்கக் கூறுகளுடன் கூட்டுச் சேர்ந்து “ஜனநாயக” கட்டம் எனப்பட்டதன் நீட்சி பெற்ற காலத்துக்குத் திட்டமிட்டனர். உண்மையில் இதன் பொருள், முதலாளித்துவத்தைக் காப்பதும் புரட்சிகரத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் கழுத்தை நெரிப்பதுமே ஆகும்.

கொரியாவின் மீதான அமெரிக்க முன்னெடுப்பும் படையெடுப்பும் இந்தத் திட்டங்களைக் கூர்மையாக மாற்றிப் போட்டன. ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தலையீடு கொரியாவை மட்டுமல்ல, சீனாவையும் குறி வைத்து நடத்தப்பட்டது. இதற்கு மறுவினையாக, சீன புரட்சிகர வெகுஜனங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யும் பொருட்டு தனிச் சொத்துக்கு எதிரான சீர்திருத்தங்கள் உட்பட விரிவான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாயிற்று. பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள் உட்பட சமூகத்தில் காணப்பட்ட மிகவும் பிற்போக்கான நடைமுறைகள் பலவும் ஒழிக்கப்பட்டன. எழுத்தறிவின்மை பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால், சீனத் தொழிலாள வர்க்கமும் விவசாயிகளும் 1949 புரட்சியை ஒரு மகத்தான முன்னேற்றமாகவே தொடர்ந்து பார்க்கின்றனர்.

கொரியப் போர், உத்தியோகபூர்வமாக 1950 ஜூன் 25இல் தொடங்கியது என்றாலும், 1945இல் ஜப்பானியர் சரணடைந்ததிலிருந்தே அதற்கான தயாரிப்பு நடந்து வந்தது. வாஷிங்டன் முதலில் கொரியாவிற்கு ஓர் 'அறங்காவல் உரிமை' (trusteeship) கோரியது, கொரிய தீபகற்பத்தை பிரித்து, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிராகப் பயங்கரவாத ஆட்சியை ஏவியது. பின்னர் வாஷிங்டன் சர்வாதிகார சிங்மன் ரீயை அதிபராக்கியது. அவர் வலதுசாரி பயங்கரவாத அலையைத் தொடர்ந்தார், இறுதியில் இடதுசாரிப் போக்கு உடையவர்கள் என்ற சந்தேகத்திற்குரிய, அல்லது இடதுசாரிகள் என்ற சந்தேகத்துக்குரியவர்களுடன் தொடர்புடைய நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்.

தெற்கில் புரட்சிக்கான அனைத்து ஆதரவையும் துடைத்தெறிந்து, பின்னர் அதை வடக்குக்கும் சீனாவுக்கும் எதிரான நடவடிக்கைகளின் தளமாகப் பயன்படுத்துவது அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. போர் தொடங்கிய போது, மக்களின் ஆழமான வெறுப்புக்குரிய ரீ ஆட்சிக்கு எதிராக வட கொரியப் படைகளின் கை ஓங்கியே இருந்தது. அப்படைகள் தென்கிழக்கில் பூசன் நகரம் ஒன்றைத் தவிர, ஒருசில வாரங்களில் கிட்டத்தட்ட கொரியத் தீபகற்பம் முழுவதையும் கைப்பற்றிவிட்டன.

செப்டம்பர் 15 அன்று, அமெரிக்க இராணுவம், ஐ.நா பணி என்ற போர்வையில், இன்சியானில் படையெடுத்து, வட கொரியர்களை 38ஆம் அட்ச ரேகையை தாண்டிப் பின்னுக்குத் தள்ளி, அக்டோபர் 7 அன்று சீனா மீது படையெடுப்பதாக அச்சுறுத்தியது. வரலாற்றாசிரியர் புரூஸ் கமிங்ஸ் எழுதியுள்ளபடி, 1950 ஜூனுக்கும் அக்டோபருக்கும் இடையே 866,914 கேலன் நாபாம் குண்டுகளை வீசியது உட்பட கொரியத் தீபகற்பத்தையே நாசம் செய்யும் குண்டுவீச்சுகள் கொண்டு அமெரிக்கா ஒரு முழுமையான இனப்படுகொலைப் போரை நடத்தியது.

மெக்ஆர்தர் '30 முதல் 50 அணுகுண்டுகள்” —அவரது சொற்களில்— ”மஞ்சூரியாவின் கழுத்தைச் சுற்றி ஆரமாக” வீசுவது பற்றியும் பேசினார். தைவானிலிருந்து நூறாயிரக்கணக்கான சீன தேசியவாத வீரர்களை மஞ்சூரியாவுக்குள்ளேயும் ஷாங்காயைச் சுற்றித் தெற்கிலும் நுழைப்பது குறித்தும் வாஷிங்டன் பரிசீலித்தது.

சீனப் புரட்சியினால் கிடைத்த புதிய நன்மைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தலையீடு அச்சுறுத்திய போது அவற்றைப் பாதுகாக்க சீன மக்கள் அணிதிரட்டப்பட்டனர். ரீயின் கீழ் கொரியாவை அமெரிக்கா மீண்டும் இணைப்பதைத் தடுப்பதற்காக மட்டுமல்லாமல், மஞ்சூரியா மீது படையெடுப்பதைத் தடுப்பதற்காகவும் சீனத் துருப்புக்கள் மக்கள் தொண்டர் படையாக (People’s Volunteer Army - PVA) கொரியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

1950 நவம்பர் 27 முதல் டிசம்பர் 13 வரை நீடித்த சமரில் சீனப் படைகளும் அமெரிக்கப் படைகளும் சோசின் நீர்த்தேக்கம் என்ற ஜப்பானியப் பெயர் கொண்ட சாங்ஜின் ஏரியில் மோதிக் கொண்டன. இதன் விளைவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பாரிய அடி விழுந்தது. ஆசியக் கண்டத்தில் அது இன்னுங்கூட விரியக் காலூன்ற விடாமல் தடுக்கப்பட்டது. அமெரிக்க இராணுவம் ஹங்னாமிற்குப் பின்தள்ளப்பட்டது, அங்கிருந்து அதுவும் மற்ற ஐ.நா படைகளும் 38வது இணைகோட்டைக் (அட்சரேகையை) கடந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது வரலாற்றில் கடல் வழியாக அமெரிக்காவின் மிகப் பெரிய பின்வாங்கல்களில் ஒன்றாயிற்று.

சாங்ஜின் ஏரியில் சமர்

எவ்வாறாயினும், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான நிகழ்கால மோதலில், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் இத்தகைய புரட்சிகர உணர்வுக்கு எவ்வித அழைப்பும் விடுக்க முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்று முற்ற முழுதாக ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தையே மேற்பார்வையிடுகிறது, அதன் நலன்களை பாரிய சீனத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகப் பாதுகாக்க முனைந்து நிற்கிறது. கட்சியின் அதிகாரத்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் மோதலில் போருக்குத் தயார்செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அது இன்னுங்கூட அஞ்சி நடுங்குவது சீன மக்கட் பெருந்திரளின் எழுச்சியைக் கண்டுதான்.

சாங்ஜின் ஏரியில் நடந்த சமர் என்ற திரைப்படத்தின் இதயத்தில் பொதிந்திருக்கும் உணர்வுப் பெருக்கு இதுவே. சீனாவின் மீதான அமெரிக்க தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறித்து அச்சம் நிலவும் நேரத்தில், கடந்த காலப் புரட்சிகர இயக்கங்களிலிருந்து மக்களை துண்டிப்பதே இதன் நோக்கம். சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசியவாதத்தை ஊட்டவும், வரலாற்று உண்மையை அடியோடு பூசி மறைக்கவும் முடியும் என்று நம்புகிறது.

படமே பெரிதாகக் குறிப்பிட முடியாததாகவும் இரண்டு மணி நேரம் 48 நிமிட நேரம் இழுத்துச் செல்வதாகவும் உள்ளது.ல்லாத் தவறாகாரணங்ளுக்காகவும் காட்சிகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.திரைப்படத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சமர்கள் இடம்பெறுகின்றன. பாரிய அளவில் கணினி வரைகலையைப் பயன்படுத்திஎடுக்கப்பட்டுள்ளள இப்படம், நகைச்சுவை புத்தகம் ல்லது காணொளி விளையாட்டின் சாயலில் உள்ளது; மிகவும் வன்முறையானதாகவும் அக்கறைப் பொறுப்பற்றதாகவும் உள்ளது.

இத்திரைப்படத்தில் வு ஜிங் 7ஆம் படைக் குழுமத்தின் தளபதி வு கியான்லியாகவும், ஜாக்சன் யீ தளபதி வூவின் தம்பி வான்லியாகவும் நடித்துள்ளனர். 1949 சீனப் புரட்சியில் போரிட்ட பின்னர் கியான்லி தனது ஏழை கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே, கொரியப் போர் மூண்டதால் கடமைக்குத் திரும்ப வேண்டியதாகிறது. வான்லி தனது சகோதரரின் கீழ் பணியாற்ற இராணுவத்தில் சேர முடிவு செய்கிறார்.

கதாபாத்திரங்களின் குணச்சித்திர வளர்ச்சிக்கு எவ்வித முயற்சியும் இல்லை. யூகிக்கக்கூடிய கேலிச்சித்திரங்கள் அனைத்தும் உள்ளன: புத்திசாலித்தனமான தலைவர் (கியான்லி), துடிப்பான இளைஞர் (வான்லி); நரையோடிய மூத்த வீரர் (லெய் சூயிஷெங், இவரது வேடத்தில் நடித்திருப்பவர் ழூ ஜுன்); செல்லம்கொடுக்கும் தந்தை போருக்குத் திரும்புவது தவிர வேறு வழியில்லை என்றாலும் எப்போதும் மகளின் படத்துடன் வரக்கூடியவர் (மீ ஷெங், இவரது வேடத்தில் நடித்திருப்பவர் ஜு யாவென்). படம் முழுக்க இழையோடும் தொனிப் பொருள் சீனப் படைவீரர்கள் எது பற்றியும் யோசிக்காமல் தன்னலமற்ற முறையில் தியாகம் செய்தனர் என்பதே. தங்களைக் காட்டிலும் சிறந்த ஆயுத வலிமை கொண்ட பகைவனைத் தோற்கடிக்க உயிரையும் கை, கால்களையும் துச்சமென மதித்துப் போரிட்டனர் என்பதே.

சீனப் படையினர் காட்டிய வீரதீரத்தை மறுப்பதற்கில்லை. அவர்கள் சீனப் புரட்சியைக் காக்க உறுதியாக நின்றனர்; வெறுக்கத்தக்க கோமிண்டாங் ஆட்சியும் தொழிலாளர்கள், விவசாயிகளின் மீதான ஒடுக்குமுறையும் அமெரிக்கப் படையெடுப்பால் மீண்டும் வந்து விடும் என்பதை அவர்கள் புரிந்திருந்தனர். சீனாவுக்குள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே ஒரு புரட்சிகர எதிர்ப்பு உருவாகும் என்று அஞ்சி, அவ்வெதிர்ப்பின் மிகவும் நனவான வெளிப்பாடாக இருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை சுற்றி வளைத்து சிறையில் அடைத்தது.

திரைப்படத்தில் அமெரிக்கர்கள் மிருகத்தனமான ஆட்களாகவும் இளம் பருவத்தினராகவும் சித்தரிக்கப்படுகிறார்கள், அவ்வப்போது சீனர்களைப் பற்றியும் கொரியர்களைப் பற்றியும் இனவாதமாகவோ இழிவாகவோ பேசக்கூடியவர்களாக வருகின்றார்கள். ஒரு கட்டத்தில், 7ஆம் படைப்பிரிவினர் கொடும்பனியால் உறைந்தும் பட்டினியில் வாடியும் இருக்க, அமெரிக்க வானொலிச் செய்திப் பரப்பல் ஒன்றை ஒற்றுக் கேட்டு ஆத்திரப்படுகின்றார்கள். அந்தச் செய்தியில் அமெரிக்கப் படையினர் கிறிஸ்துமஸ்க்கு வீடு திரும்ப விரும்புவது பற்றிப் பேசியிருப்பார்கள். சீனத் துருப்புக்கள் தங்கள் குடும்பங்களுக்காகவும், நாட்டிற்காகவும் போராடும் போது, அமெரிக்கர்கள் தங்கள் சொந்த இன்பங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்களாம்.

மீண்டும், இது எளிமைத்தனமான ஒரு கேலிச்சித்திரம். இது அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்த கம்யூனிச-எதிர்ப்பு மக்கார்த்திய சூனிய வேட்டையின் குறிப்பிடத்தக்க தாக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆனால், கொரியப் போருக்கு ஒருமனதான ஆதரவு காணப்பட்டதா என்றால் இல்லவே இல்லை. சோசலிசத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் எதிர்ப்பில் வெளிப்படும் உண்மை இதுவே.

சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜேம்ஸ் பி. கனன் அமெரிக்க அரசாங்கத்திற்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் எடுத்துக்காட்டியது போல், கொரியப் போர் 'மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆசியா முழுக்கக் கோடானுகோடி காலனித்துவ நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்த பேரெழுச்சியின் பகுதியே ஆகும். இதுதான் மெய்யான உண்மை. மெய்யான சிக்கல். காலனித்துவ நாட்டு அடிமைகள் இனியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை.”

இந்தத் திரைப்படம் கொரியப் போரை வெறும் கறுப்பு வெள்ளைப் பார்வையுடன் இனவாத நோக்கில் சித்தரித்து 'கெட்ட' அமெரிக்கர்களுக்கு எதிராக 'நல்ல' சீனர்கள் என்று காட்டும் பாணி, சீன, அமெரிக்கத் தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கமுடையதென்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், சீனத் தொழிலாள வர்க்கம் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை வலிமையான கூட்டாளியாகக் காணும். இந்த ஐக்கியத்தை கண்டு வாஷிங்டன் அச்சப்படுவது போலவே பெய்ஜிங்கும் அச்சப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிரான தன் போர் முயற்சியை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அணுஆயுத வல்லரசுகளுக்கு இடையே ஒரு பேரழிவுப் போரை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மட்டுமே. சீனாவுக்கோ, கொரியாவுக்கோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டுக்கும் எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகவோ உண்மையானதொரு போராட்டம் நடத்த வேண்டுமானால், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐக்கியப்படுவதை வேண்டி நிற்கிறது.

சாங்ஜின் ஏரியில் சமர் என்பது சர்வதேசியத்துக்கும் சோசலிசத்திற்கும் நேர் விரோதமான கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மோசமான திரைப்படமாகும்.

Loading