அதிகரித்துவரும் போர் அபாயத்தின் பின்னணியில் மாஸ்கோ, வாஷிங்டன் மற்றும் பேர்லினில் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் பேச்சுக்களை நடத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவின் மேற்கு எல்லைகளை அச்சுறுத்துவதற்காக இந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு வந்து சேர்ந்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய (EU) சக்திகள் திங்களன்று உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க மாஸ்கோவுக்கு பயணித்தார், அதே நேரத்தில் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனுக்குச் சென்றார், ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தயாராகி வருவதாக கூறும் நேட்டோ பிரச்சாரத்தைப் பற்றியே இருவரும் விவாதிக்கவுள்ளனர்.

பிப்ரவரி 8, 2022 அன்று பேர்லினில் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (நடு), பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (வலது) மற்றும் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (இடது)

நேற்றைய நிகழ்வுகள், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான இராணுவ விரிவாக்கத்திற்கு ஒரு மென்மையான மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற எந்தவொரு கூற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் இரண்டுமே இராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தாலும், கிழக்கு ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்க திட்டங்களுடன் அவர்கள் தங்களை சந்தேகத்திற்கு இடமின்றி இணைத்துக் கொண்டு, உக்ரேனிலும் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் உள்ள மற்ற நாடுகளிலும் நேட்டோ இராணுவக் கூட்டணி நுழைவதை ஆதரிக்கின்றனர்.

நேற்று மாலை, கிரெம்ளினில் நடத்தப்பட்ட நான்கு மணிநேர நேரடி பேச்சுவார்த்தைக்குப் பின்னர், புட்டினும் மக்ரோனும் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். மக்ரோனின் முன்மொழிவுகள் “நமது மேலதிக கூட்டு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக” இருக்கக்கூடும் என்று புட்டின் கூறிய அதேவேளை, உக்ரேன் நேட்டோவில் இணைந்தால் உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று அவர் அப்பட்டமாக எச்சரித்தார். “இது ரஷ்யாவினது மட்டுமல்ல உலகின் பாதுகாப்பை பற்றிய கேள்வி என்றே நான் நினைக்கிறேன்,” என்று கூறினார். மேலும், “அனைவரும் அமைதியை விரும்பினால், எங்கள் எல்லைகளுக்கு அருகில் தாக்குதல் ஏவுகணை அமைப்புக்களை நிலைநிறுத்தாமல் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது?” என்றும் கேட்டார்.

ஒரு பிரெஞ்சு செய்தியாளரிடம் புட்டின் இவ்வாறு கூறினார்: “ரஷ்யாவுடன் போர் வேண்டுமா என்று உங்கள் வாசகர்களிடம் கேளுங்கள். ஏனென்றால் கிரிமியாவை வலுக்கட்டாயமாக திரும்பப் பெற உறுதிமொழி எடுத்த உக்ரேன் நேட்டோவில் இணைந்தால் அதுதான் நடக்கும், ரஷ்யாவிற்கு எதிராக நீங்கள் போரிடுவீர்கள்.”

கியேவில் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளின் தலைமையில் 2014 இல் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து முடிந்ததன் பின்னர், செவஸ்டோபோலில் ரஷ்ய கடற்படைத் தளத்தைக் கொண்ட ரஷ்ய மொழி பேசும் தீபகற்பமான கிரிமியா, ரஷ்யாவில் மீண்டும் இணைய வாக்களித்தது. நேட்டோ சக்திகள் வாக்களிப்பை அங்கீகரிக்க மறுத்து அதற்குப் பதிலாக, கிரிமியாவைத் தாக்குவதற்கு அச்சுறுத்தும் உக்ரேனிய ஆட்சிக்கு ஆதரவளித்தன. அத்தகைய தாக்குதல், நேட்டோ ஸ்தாபக உடன்படிக்கையின் பிரிவு 5 ஐ தூண்டும் என்ற நிலையில், அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகள் உட்பட நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் நுழைய நேரிடும் என்று புட்டின் குறிப்பிட்டார்.

“ரஷ்யா உலகின் முன்னணி அணுசக்தி நாடுகளில் ஒன்றாகும். எனவே இங்கு வெற்றியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்,” என்று புட்டின் எச்சரித்ததுடன், மக்ரோனும் “அத்தகைய முடிவை விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை” என்று கூறினார்.

இருப்பினும், புட்டினின் நிலைப்பாடுகளை மக்ரோன் முற்றிலும் நிராகரித்து, உக்ரேனை நேட்டோவில் சேர அனுமதிக்கும் “திறந்த கதவு” கொள்கையை வலியுறுத்தினார். உக்ரேன் நேட்டோவில் இணைந்தால், ரஷ்யாவின் எல்லையில் நேட்டோ அமைக்கும் ஏவுகணை தளங்கள் குறித்து 'வெளிப்படைத்தன்மை' இருக்க வேண்டும் என்பதற்கான தெளிவற்ற திட்டங்களை மட்டுமே அவர் முன்வைத்தார். அதே நேரத்தில், சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை மீறியதாக ரஷ்யாவைக் கண்டித்து, புட்டினுக்கு மக்ரோன் விரிவுரை செய்தார்.

“நமது கண்டத்தில் இந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளன: அதாவது, பலத்தைப் பயன்படுத்துதல், எல்லைகளை மீறுதல், உள் விவகாரங்களில் தலையிடுதல், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மதிக்கத் தவறுதல் போன்றவை,” என்று கூறினார்.

மக்ரோனின் குற்றச்சாட்டுக்களை, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரேல், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கெனுடன் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அப்படியே எதிரொலித்தார். “எனக்குத் தெரிந்தவரை, பனிப்போர் முடிவடைந்ததன் பின்னர் ஐரோப்பாவில் இப்போது தான் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தான தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன்,” என்று பொரேல் கூறினார், மேலும் இந்த நெருக்கடிக்கு அவர் ரஷ்யாவை முற்றிலும் குற்றம்சாட்டினார். “ஒரு வலுவான அச்சுறுத்தலை” முன்வைப்பதற்கு அல்லாமல், “ஒரு நாட்டின் எல்லையில் பாரியளவில் 140,000 கனரக ஆயுதமேந்திய சிப்பாய்களை நிலைநிறுத்த மாட்டார்கள்” என்று பொரேல் கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாடு எத்தகைய அபாயகரமானது என்பதை அவர் மறுத்தார். 'இது எச்சரிக்கை பற்றியது அல்ல. இவை வெறும் உண்மைகள்” என்றார்.

உண்மையில், ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கத் தயாராகிறது என்ற முற்றிலும் தவறான அனுமானத்தின் அடிப்படையில், ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போர் முனைவிற்கு தலைமை தாங்குவது நேட்டோ சக்திகளே. அதிலும், உக்ரேனில் உள்ள நேட்டோவின் கைப்பாவை ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூட, உக்ரேன் மீதான முழுமையான போருக்கு ரஷ்ய இராணுவம் தயாராகவில்லை என்றே பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆயினும்கூட, உயர்மட்ட நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உக்ரேன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு பாரிய இராணுவக் கட்டமைப்பு அவசியம் என்று முடிவில்லாமல் கூறி வருகின்றனர்.

மக்ரோனின் குற்றச்சாட்டுக்களின் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது: மாஸ்கோவை குற்றம்சாட்டும் அனைத்து விடயங்களிலும் நேட்டோவும் குற்றவாளியாகவே உள்ளது. ஸ்ராலினிச ஆட்சியின் 1991 சோவியத் ஒன்றிய கலைப்புக்கு பின்னைய 30 ஆண்டுகளில், ஏகாதிபத்தியப் போர்களுக்கான முக்கிய இராணுவத் தடைகள் அகற்றப்பட்ட நிலையில், நேட்டோ சக்திகள் முடிவின்றி பலத்தைப் பயன்படுத்தின. ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் மாலிக்கு எதிரான தொடர்ச்சியான நேட்டோ நாடுகளின் படையெடுப்புக்கள் அல்லது தலையீடுகள் கூட்டாக மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நேட்டோ யூகோஸ்லாவியாவை இனரீதியாகத் துண்டித்து அதன் தலைநகரம் பெல்கிரேடில் 1990 களில் குண்டுவீசித் தாக்கியதுடன், 2014 ஆம் ஆண்டில் உக்ரேனுக்குள் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்தது.

இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சக்திகள் மேலும் வலதிற்கு திரும்பியது மறுக்க முடியாதது. 2002-2003 இல், ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கு முன்னர், ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனிடம் “பேரழிவுகர ஆயுதங்கள்” இருப்பதாக புஷ் நிர்வாகம் சொன்ன பொய்களின் அடிப்படையில், பாரிசும் பேர்லினும் மாஸ்கோவுடன் இணைந்து அமெரிக்க போர் முனைப்பை விமர்சித்து எதிர்த்தன. ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய அமெரிக்க போர் பிரச்சாரத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஆளும் வட்டங்களை பற்றிக்கொண்டிருக்கும் போர் வெறி, Le Monde இல் கட்டுரையாளர் Sylvie Kauffmann எழுதிய சமீபத்திய கட்டுரையில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

“இல்லை, 2003 ஈராக் படையெடுப்பு மற்றும் அதன் பேரழிவுகர ஆயுதங்கள் தொடர்பாக மேற்கில் ஒரு பெரும் மோதலை உக்ரேன் மீது நாங்கள் மீண்டும் தொங்க மாட்டோம். ‘புகையும் துப்பாக்கி,’ என்ற நீண்ட கதையின் மீளுருவாக்கம் எதுவும் இருக்காது, சதாம் ஹூசைனின் குற்றங்களுக்கான ஆதாரங்களை சில ஐரோப்பியர்கள் வீணாக அமெரிக்கர்களிடம் கேட்டனர். … கடைசியாக கூட்டாளிகளிடையே தெளிவாக வடிவமைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு வார்த்தை: ஒற்றுமை!”, என்பதே என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “ரஷ்ய ஜனாதிபதி, உக்ரேனியர்கள் தாங்கள் எந்த முகாமில் இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் அவர்களின் உரிமையை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா வெற்றி கொண்ட பனிப்போர் தீர்வையும் அச்சுறுத்துகிறார்” என எழுதினார்.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் பைடெனுடன் பேசி, ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டனுடன் பேர்லின் தன்னை இணைத்துக் கொள்ளும் என்று உறுதியளித்தபோது இந்த நோக்குநிலை காட்சிப்படுத்தப்பட்டது. ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததாக நேட்டோ அறிவித்தால், தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் எதிர்த்து வந்துள்ள ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையேயான Nord Stream 2 எரிவாயு குழாய் இணைப்பை தான் மூடப்போவதாக பைடென் வலியுறுத்தினார். “ரஷ்யா படையெடுத்தால் — அதாவது டாங்கிகள் அல்லது துருப்புக்கள் உக்ரேனின் எல்லையைத் தாண்டினால், Nord Stream 2 இனி இருக்காது,” 'நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்று பைடென் கூறினார்.

நிருபர்கள் வற்புறுத்திய போதிலும், ஷோல்ஸ் குழாய் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வெளிப்படையாக உறுதியளிக்கவில்லை, மாறாக வாஷிங்டன் மற்றும் முழு நேட்டோ கூட்டணியுடன் நெருக்கமாகப் பணியாற்ற உறுதியளித்தார். “உக்ரேனுக்கு எதிராக இராணுவ ஆக்கிரமிப்பு இருக்குமானால், தேவையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க நாங்கள் அனைத்தையும் தீவிரமாக தயார் செய்துள்ளோம்,” என்றும், “நாங்கள் முற்றிலும் ஒன்றுபட்டு இருக்கிறோம், மேலும் வேறுபட்ட நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற இராணுவவாதத்தின் பின்னணியில், வளர்ந்து வரும் வர்க்க மற்றும் சர்வதேச பதட்டங்கள் உலக முதலாளித்துவ அமைப்பை துண்டாடுகின்றன. நேட்டோ, கோவிட்-19 தொற்றுநோயின் போதான வெகுஜன தொற்று கொள்கையால் ஏற்படும் பரந்த மனித விலைகொடுப்பு மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து திசைதிருப்ப ஒரு போர் நெருக்கடியை வரவேற்கிறது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க கோபத்தை எதிர்கொண்டதால் எஞ்சிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் நீக்கிவிட்ட நிலையில், நேட்டோ நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் நோய்க்கு பலியாகியுள்ளதுடன், ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். இந்நிலையில், உள் வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாக ஒரு போருக்குள் திசை திருப்ப முயற்சிப்பதன் மூலம் அவர்கள் பதிலளிக்கின்றனர்.

நேட்டோவின் புவிசார் அரசியல் கணக்கீடுகள் பிரெஞ்சு அதிகாரிகளால் வகுக்கப்பட்டன, அவர்கள், ரஷ்யாவுடனான கடுமையான நிலைப்பாடானது அதை நேட்டோவிற்கு அடிபணிய செய்து சீனாவிற்கு எதிரான ஒரு தளமாக பயன்படுத்த வைக்கும் என்று வலியுறுத்தினர். முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி வெளியுறவு மந்திரி Hubert Vedrine, “ரஷ்யாவுடன் ‘ஆக்கிரமிப்பு பேச்சுவார்த்தை’ அவசியம் என்று Journal du Dimanche க்கு தெரிவித்தார். “[உக்ரேன்] ஒருபோதும் நேட்டோவில் சேர முடியாது என்று எவரும் எழுத்துபூர்வ உறுதிமொழி கொடுக்க மாட்டார்கள்,” “ரஷ்ய உயரடுக்குகள் சீனாவுடனான நல்லுறவு குறித்து மகிழ்ச்சியடைய வாய்ப்பில்லை. இந்த அச்சங்களை நாம் பயன்படுத்த வேண்டும். அவர்கள் எங்களுக்குச் செயல்படுவதற்கான வாய்ப்பைத் தருகிறார்கள்.” என்றும் அவர் கூறினார்.

உண்மையில், மாஸ்கோவில் திவாலாகிவிட்ட சோவியத்துக்கு பின்னைய முதலாளித்துவ ஆட்சி, போருக்கான சர்வதேச தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு முறையிட முடியாமல் மற்றும் விரும்பாததால், இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற அவர்களுக்கு வேறெந்த வழியும் இல்லை. இது, கிழக்கு ஐரோப்பாவில் போரைத் தூண்டக்கூடிய ஒரு ஆக்கிரமிப்புக் கொள்கையை ஆதரிக்கும் பிரிவினருக்கும், நேட்டோவிடம் பரிதாபகரமாக சரணடைவதை ஆதரிக்கும் மற்றவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. பிந்தைய பிரிவு, ரஷ்ய தளபதி லியோனிட் இவாஷோவ் கையொப்பமிட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் தன்னை வெளிப்படுத்தியது, இது உக்ரேனில் ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்கும் நேட்டோவின் கொடூரமான பொய் பிரச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

இவாஷோவ், 'மேற்கின் ஒருங்கிணைந்த சக்திகளுக்கு எதிராக ரஷ்ய கூட்டமைப்பு தனித்து நிற்பதாக தன்னைக் காணும் போரைத் தூண்டும் குற்றவியல் கொள்கையை கைவிட வேண்டும்' என்று அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். புட்டின் 'ரஷ்ய கூட்டமைப்பின் அரசியலமைப்பின் 3 வது பிரிவைப் பயன்படுத்தி இராஜினாமா செய்ய வேண்டும்' என்று கோரினார்.

இந்த கருத்துக்கள், வாஷிங்டனின் முதலாளித்துவ போட்டியாளர்கள் எவரும் ரஷ்யாவிற்கு எதிராக பைடென் நிர்வாகம் முன்னெடுக்கும் போர் உந்துதலுக்கு எந்த மாற்றீட்டையும் வழங்கவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக, போர் அபாயத்திற்கு எதிராக மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான, சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே.

Loading