முன்னோக்கு

மூன்றாம் உலகப் போர் முனைவை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் அண்மித்து ஒரு மில்லியன் மக்கள் இறந்துள்ளதுடன், ஒவ்வொரு நாளும் 2,300 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுவரும் ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில், பைடென் நிர்வாகம் முழு கவனத்தையும் அதிகரித்தளவில் ரஷ்யாவுடனான போருக்கான ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தில் செலுத்தி வருகிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் காலம் எதுவும் குறிப்பிடாமல் வரவிருக்கும் நாட்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த 'கொள்கைரீதியில்' உடன்பட்டார்.

பிப்ரவரி 19, 2022 அன்று சனிக்கிழமை பிற்பகுதியில், உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும், உக்ரேனின் ஜோலோட் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் இடையே உள்ள பிளவு கோட்டில் ஒரு அகழியில் நின்று, உக்ரேனிய சேவைகளின் உறுப்பினர் பீரங்கித் தாக்குதலைக் கவனிக்கிறார் (AP Photo/Evgeniy Maloletka)

திட்டமிடப்பட்ட உச்சிமாநாடு பற்றிய அதன் அறிக்கையில் வாஷிங்டன் போஸ்ட் பின்வருமாறு குறிப்பிட்டது, “புட்டின் படையெடுக்க தீர்மானித்திருப்பதை மூத்த அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் ஜென் சாகி ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், 'ஒரு படையெடுப்பு தொடங்கும் வரையில் இராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள' அமெரிக்க அதிகாரிகள் 'பொறுப்பேற்றிருப்பதாக' கூறினார். 'மீண்டும், ஒரு படையெடுப்பு நடக்கவில்லை என்றால்' — பைடென் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதை அப்பெண்மணி உறுதிப்படுத்தினார்,” என்றது குறிப்பிட்டது.

இந்த அறிக்கை அபத்தமானது. வெள்ளிக்கிழமை பைடென் அவரது செய்தியாளர் கூட்டத்தில் கூறியது போல, புட்டின் ஏற்கனவே படையெடுக்க முடிவு செய்திருந்தால், புட்டின் பைடெனை ஒரு சந்திப்புக்கு அழைத்திருக்க மாட்டார். ஒரு பரந்த இராணுவ நடவடிக்கைக்கு இறுதி அனுமதி அளித்து விட்டு, புட்டின் சர்வசாதாரணமாக கைக் கட்டிக் கொண்டிருப்பார் என்று யாராவது தீவிரமாக நம்ப முடியுமா?

திட்டமிடப்பட்ட சந்திப்பு பற்றிய அதன் அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது, “அவ்விரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பின் வடிவம் அல்லது நேரம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்று ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். இது முற்றிலும் ஊகம் என்று தெரிவித்த மற்றொரு அதிகாரி, வரும் நாட்களில் உக்ரேன் மீது படையெடுக்க இன்னும் ரஷ்யாவுக்கு உத்தேசம் இருப்பதை அனைத்து ஆதாரங்களும் எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

அனைத்திற்கும் மேலாக இந்த உச்சி மாநாட்டை அமெரிக்கா முன்னெடுக்கவில்லை, மாறாக கடந்த வாரயிறுதியில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் புட்டினுக்கு இடையே நடந்த கலந்துரையாடல்களில் இருந்து தொடங்கியது.

டைம்ஸ் விபரங்களின்படி:

ஞாயிற்றுக்கிழமை காலை திரு. புட்டின் உடனான தொலைபேசி அழைப்புடன் ரஷ்யாவை நோக்கிய திரு. மக்ரோனின் முயற்சிகள் தொடங்கின, திரு. மக்ரோன் அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதன் போது அவ்விரு தலைவர்களும் 'தற்போதைய நெருக்கடிக்கு இராஜாங்கரீதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியம்' மற்றும் வரவிருக்கும் மணி நேரங்களில் கிழக்கு உக்ரேனில் போர்நிறுத்தத்தை உறுதி செய்ய ஒப்புக் கொண்டனர்.

'நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்,' 'ஐரோப்பாவில் புதிய சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்கை ஏற்படுத்துவதற்கான ஓர் உயர்மட்ட கூட்டத்தை' இராஜாங்கரீதியான பாதை அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.

பின்னர் திரு. மக்ரோன் தொலைபேசியில் திரு. பைடென் உடன் பேசினார்.

திரு. மக்ரோன் அலுவலகத்தில் இருந்து வந்த இரண்டாவது அறிக்கை, திரு. பைடென் மற்றும் திரு. புட்டினுக்கு இடையேயும், பின்னர் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஸ்திரப்பாட்டை விவாதிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையேயும், பிரெஞ்சு ஜனாதிபதி ஓர் உச்சி மாநாட்டை முன்மொழிந்துள்ளதாக குறிப்பிட்டது.

ஆனால் ஐரோப்பாவில் ஒரு மிகப் பெரிய போரைத் தடுப்பதற்கான இந்த புதிய முயற்சிகள், எவ்வளவு முக்கியத்துவம் கொண்டிருந்தன என்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் தெளிவாக இல்லை.

இவை அனைத்தும், மக்ரோனுக்கும் புட்டினுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும், அது ஒரு மோதலைத் தூண்டிவிடுவதிலும் மற்றும் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் முன்கூட்டியே தடுப்பதிலும் உறுதியாக இருப்பதையே தெளிவுபடுத்துகின்றன.

எவ்வாறிருப்பினும் ஞாயிற்றுக்கிழமை இரவு அபிவிருத்திகள், ஊடகங்களில் முடிவின்றி திரும்ப திரும்ப கூறப்படும், பைடென் நிர்வாகத்தின் போர் பிரச்சாரத்தை, யதார்த்தத்தில் இருந்து பிரிக்கும் பரந்த இடைவெளியின் மற்றொரு நிரூபணமாக உள்ளன. ஒட்டுமொத்தமாக உக்ரேன் விவகாரத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியை குணாம்சப்படுத்தி உள்ள பொறுப்பற்ற மற்றும் பொய் அம்சங்களை மட்டுமே இவை அடிக்கோடிடுகின்றன.

நிலைமை மிகவும் ஆபத்தாகவே உள்ளது. பைடென் நிர்வாகம் விரும்பினாலும் கூட, அது தூண்டிவிட்ட இந்த நெருக்கடியை இனி அது கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். கிழக்கு உக்ரைனில் இப்போது ரஷ்ய-சார்பு சக்திகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக தொடர்ந்து கொண்டிருக்கும் தாக்குதலுக்கு நேட்டோவின் ஆதரவு உள்ளதாக உக்ரேனிய இராணுவத்தில் உள்ள பாசிச சக்திகள் நம்புவதற்கு அமெரிக்கா வழிவகுத்துள்ளது. பைடென் நிர்வாகம் அதன் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் ஒரு நிலையில் உள்ளதா?

உக்ரேன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த ரஷ்யா உடனடியாக ஒரு 'சாக்குபோக்கு' நடவடிக்கையைத் தயாரித்து வருவதாக அமெரிக்க ஊடகங்களின் வெறித்தனமான பிரச்சாரத்திற்கு மத்தியில் பைடென்-புட்டின் உச்சிமாநாடு பற்றிய அறிவிப்பு வருகிறது. 'விற்பனை வளாகங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள், மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் உட்பட முக்கிய நகர்ப்புறங்களில் உள்ள பிற பொது இடங்களைத் தாக்குவதற்கான அச்சுறுத்தல்கள்' பற்றி, அமெரிக்க நாட்டினரை எச்சரித்து, மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டது.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முன் ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், சாத்தியமான விதத்தில் ஒரு 'சாக்குபோக்கு' நடவடிக்கையாக 'ரஷ்யாவுக்குள் ஜோடிக்கப்பட்ட ஒரு பயங்கரவாத குண்டுவெடிப்பை' மேற்கோள் காட்டினார். அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை பின்வரும் கேள்வியை எழுப்புகிறது: உக்ரேனுக்குள் பாசிச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்கா, ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிடுகிறதா, மற்றும் போருக்கு ஒரு நியாயப்பாடாக ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் விடையிறுப்பைப் பயன்படுத்த நினைக்கிறதா?

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் இந்த வெறித்தனமான போர் வெறியை இரண்டு காரணிகள் அழுத்துகின்றன.

முதலாவதாக, ரஷ்யாவை எதிர்கொள்வதிலும் மற்றும் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி மற்றும் மத்திய கிழக்கில் அதன் கட்டுப்பாட்டைக் கீழறுப்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால புவிசார் அரசியல் நலன்கள் உள்ளன.

ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றால் தோற்றுவிக்கப்பட்ட பாரிய உள்நாட்டு நெருக்கடியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பாகத்தில் நடத்தப்படும் முயற்சியே இந்த உறுதியான சம்பவங்களில் மேலோங்கி உள்ள காரணியாகும்.

இன்னும் வெறும் ஒரு வாரத்தில், மார்ச் 1 இல் பைடென் காங்கிரசுக்கு வருடாந்திர உரை (State of the Union) வழங்க உள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேன் சம்பந்தமாக நிர்வாகம் உருவாக்கியுள்ள வெறித்தனம் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைகளின் கீழ், பைடென் காங்கிரஸ் சபையில் அவர் உரையை வழங்க விரும்புகிறார். ஒரு 'போர்க் கால ஜனாதிபதி' என்ற போர்வையை அணிந்து கொண்டு, பைடென் குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரிகளுடன் ஐக்கியப்பட முற்படுகிறார், இது வெறும் ஒரு வருடத்திற்கு சற்று முன்னர் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு பாசிச சதியை ஆதரித்தது.

முதலாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் போர்க்களங்களின் நிலைமைகள், பேரழிவுகரமாக 1918 'ஸ்பானிஷ் காய்ச்சல்' பெருந்தொற்று பரவ பங்களித்தன. இப்போதோ, கோவிட்-19 ஏற்படுத்தி உள்ள இந்த பேரழிவுகரமான நிலைமைகள் மொத்த உலகையும் மூன்றாம் உலக போரை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு எரியூட்டி வருகிறது.

அமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்றில் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு மில்லியனைத் தாண்டி விடும். பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் இப்போது கோவிட்-19 பரவலைத் தடுக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கி வருகின்றன, கோவிட்-19 ஐ “நிரந்திர தொற்றுநோய்' (endemic) என்றாக்கும் ஒரு 'புதிய வழமையை' அறிவித்துள்ளன, ஒவ்வொரு ஆண்டும் அது சாத்தியமான விதத்தில் நூறாயிரக் கணக்கானவர்களைப் பாதித்து கொல்லும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

இந்த பெருந்தொற்றாலும் அதற்கு ஆளும் வர்க்கம் காட்டும் விடையிறுப்பால் ஏற்பட்டுள்ள, அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளின் பணவீக்க அதிகரிப்பு உட்பட, சமூக மற்றும் பொருளாதார விளைவுகளாலும் எரியூட்டப்பட்டு, தொழிலாள வர்க்கத்தில் கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராட மறுக்கின்ற அமெரிக்க ஆளும் வர்க்கம் அதேவேளையில் உலகை ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலின் விளிம்புக்குக் கொண்டு வருகிறது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தைப் பீடித்துள்ள உலகளாவிய போர் வெறித்தனத்திற்கு மத்தியில், ரஷ்யா உடனான ஒரு மோதலை ஓர் உலகளாவிய பேரழிவாக அபிவிருத்தி ஆகவிடாமல் இயக்கி விடலாம் என்பதே, அனேகமாக எல்லா பொய்களிலும் மிகப்பெரிய பொய்யாக இருக்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக போர் வேண்டாம்!” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெப்ரவரி 14 அறிக்கை பின்வருமாறு எச்சரித்தது, “வாஷிங்டனிலும் ஐரோப்பியத் தலைநகரங்களிலும் உள்ள மூலோபாயவாதிகள் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் போருக்கு மீண்டும் திரும்புவதென்பது அவர்களது பிரச்சினைகளில் எதுவொன்றையும் தீர்க்கப் போவதில்லை. அத்தகைய பிரளய சம்பவங்களை இயக்கத்திற்குக் கொண்டு வரும் குற்றவாளிகள், வினை விதைத்தவன் வினையறுப்பான் என்ற பழமொழியின் உண்மையை அசௌகரியத்துடன் கண்டுணர்வார்கள். உக்ரேனில் ரஷ்யாவுடனான ஒரு போர், அது எப்படி தொடங்கினாலும் அல்லது ஆரம்ப கட்டங்களில் என்ன பாதையை எடுத்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியாது.”

ஆனால் நிலைமை குறுகிய காலத்தில் அபிவிருத்தி அடைந்து வருவதுடன், இந்த நெருக்கடிக்கு எந்த சமாதானமான தீர்வும் இல்லை. ஏகாதிபத்தியம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு புதிய மற்றும் இன்னும் பேரழிவுகரமான உலகப் போருக்குள் இறங்குவதைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தின் தலையீடு மட்டுமே ஒரே வழியாகும். போருக்கு எதிரான போராட்டமானது, சுரண்டலுக்கு எதிரான மற்றும் இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்புக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

சனிக்கிழமை, பெப்ரவரி 26 இல், உலக சோசலிச வலைத் தளம், “கோவிட்டுக்கு எதிராக போராடுவோம் உயிர்களைக் காப்பாற்றுவோம்! மூன்றாம் உலகப் போர் முனைவை நிறுத்து!” என்ற இணையவழி சர்வதேச கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள் என்பதோடு, போர் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்ட இக்கூட்டும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்தை விவரிக்கும்.

இந்த முக்கிய சர்வதேச நிகழ்வில் கலந்து கொள்ள இன்றே முடிவுசெய்து பதிவு செய்யுமாறு உலகெங்கிலுமான எங்கள் வாசகர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading