ரஷ்ய-உக்ரேன் போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனின் உள்ளூர் நேரப்படி, வியாழன் அதிகாலை ரஷ்யா அதன் மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஒரு முழு அளவிலான போரின் பிடியில் உக்ரேன் சிக்கியுள்ளது, இது ஆப்கானிஸ்தான் போருக்குப் பின்னர் ரஷ்யா ஈடுபடும் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையாகும்.

பெப்ரவரி, 24, 2022, வியாழனன்று, கிழக்கு உக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள சாலையில் உக்ரேனியப் படையினர் கவசப் பணியாளர்கள் வாகனத்தின் மேல் அமர்ந்துள்ளனர். (AP Photo/Vadim Ghirda)

ரஷ்ய இராணுவம் பல குடியிருப்பு வளாகங்கள் மீது குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்ற நிலையில், பொதுமக்கள் உள்கட்டமைப்பை அது வேண்டுமென்றே குறிவைத்து தாக்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில், ஏராளமான மக்கள் குண்டுவீச்சு முகாம்களிலும், சுரங்கப்பாதை நிலையங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்; மற்றவர்கள் நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் கூற்றுப்படி, 10 அதிகாரிகள் உட்பட 137 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 316 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உயிரிழப்பு விபரங்களை வெளியிடவில்லை. அதேவேளை, உக்ரேனிய இராணுவம் 7 ரஷ்ய விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட டாங்கிகளை அழித்ததாகவும், குறைந்தது 450 ரஷ்ய சிப்பாய்களை கொன்றதாகவும் கூறுகிறது.

இந்த கட்டுரை எழுதப்படும் வரை, ரஷ்ய துருப்புக்கள் கியேவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. தாக்குதல் தொடங்கி சில மணிநேரங்களுக்குள், ரஷ்ய இராணுவம் கியேவ் விமான நிலையத்தையும் தெற்கு உக்ரேனின் சில பகுதிகளையும் கைப்பற்றியது. மேலும், 1986 இல் உலகின் படுமோசமான அணுசக்தி பேரழிவிற்குள்ளான செர்னோபில் விலக்கு மண்டலத்தை (Chernobyl Exclusion Zone) அவர்கள் சுற்றி வளைத்தனர். ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையும் ஒடெசாவுக்கு தெற்கே கருங்கடலில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

பெலாருஸில் இருந்து ரஷ்ய தரைப்படைகள் படையெடுத்ததாக கூறப்படும் அறிக்கைகளை ரஷ்ய மற்றும் பெலாருஸ்ய அரசாங்கங்கள் மறுத்துள்ளன. கியேவில் அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரிகள் நடத்திய பெப்ரவரி 2014 ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து உருவாக்கப்பட்டு, கடந்த திங்களன்று தான் ‘சுதந்திரமானவையாக’ புட்டினால் அங்கீகரிக்கப்பட்டதான, டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் (லுஹான்ஸ்க்) போன்ற சுயமாக-அறிவிக்கப்பட்ட ‘மக்கள் குடியரசுகளின்’ ஆயுதப்படைகளும், உக்ரேனிய இராணுவத்துடன் போராடுவதில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொண்டன. போரின் முதல் நாளில் ரஷ்யா 160 ஏவுகணைகளை உக்ரேன் மீது வீசியதாக பென்டகன் கூறுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழன் இரவு அதன் ‘இலக்குகள்’ அடையப்பட்டதாக அறிவித்தது, அதாவது 80 க்கும் மேற்பட்ட உக்ரேனின் இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டன. பெரும்பாலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள் சண்டை நடந்து வருவதாக தெரிகிறது.

உக்ரேனிய அரசாங்கம், ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டி, அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், போராடத் தயாராகவுள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தீவிர வலதுசாரி படைகள் 2014 ஆட்சிக் கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்ததுடன், கடந்த எட்டு ஆண்டுகளாக போர் தயாரிப்புகளுக்கு ஆயுதம் ஏந்தியுள்ளன, அதேவேளை முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தலைநகரின் பாதுகாப்பை ஒருங்கிணைக்க கியேவில் ஒரு சுயாதீன இராணுவ கட்டளை மையத்தை அமைத்திருப்பதாக தெரிகிறது.

நியூஸ்வீக் பெப்ரவரி 24 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரை, 96 மணி நேரத்திற்குள் உக்ரேன் வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்த்ததை சுட்டிக்காட்டுகிறது. செலென்ஸ்கி அரசாங்கத்திற்கு நெருக்கமான ஆதாரங்கள், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. உக்ரேன் பிராந்தியத்தில் வான்வழிப் போக்குவரத்து தடை விதிப்பதற்கான உக்ரேன் அரசாங்கத்தின் அழைப்புகளை நேட்டோ நிராகரித்துள்ளது, காரணம் அது ரஷ்யாவுடன் நேரடி மோதலை உருவாக்கும் என்று வாதிட்டது.

வெள்ளியன்று இரவில், உக்ரேனின் வோலோடிமிர் செலென்ஸ்கி, “ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அஞ்சவில்லை. எங்கள் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றி பேசுவதற்கு நாங்கள் பயப்படவில்லை. நடுநிலை நிலையைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. ஆனால் இந்த [நிலை] பேணப்படுவதற்கு எங்களிடம் என்ன வகையான உத்தரவாதங்கள் உள்ளன? எந்த நாடுகள் அதை [அந்த உத்தரவாதங்களை] எங்களுக்கு வழங்கும்? இந்த படையெடுப்பின் முடிவைப் பற்றி நாங்கள் பேச வேண்டும். போரை நிறுத்துவது பற்றி நாங்கள் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலிறுக்கும் வகையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீதான பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன, அவை கிட்டத்தட்ட முழு ரஷ்ய வங்கித் துறையை குறிவைத்து, முழுப் பொருளாதாரப் போரைத் தூண்டும். வியாழனன்று பெரும்பாலும் ரஷ்யாவின் பங்குச்சந்தை மூடப்பட்டது, மேலும் ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டது. உக்ரேனின் ஹிரிவ்னியா மற்றும் கஜகஸ்தானின் டெங்கே உட்பட பிற பிராந்திய நாணயங்களின் மதிப்புகளும் சரிந்துள்ளன. அன்று ரஷ்யா முழுவதும் வங்கிகளில் பரபரப்பு தொடங்கி மாலைக்குள் வங்கிகளில் டாலர்கள் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. மாதத்திற்கு சில நூறு டாலர்களை மட்டுமே சம்பாதிக்கும் சாமானிய மக்கள், தங்களுடைய சொற்ப சேமிப்பின் மதிப்பு சில மணிநேரங்களில் பெரிதும் சுருங்குவதைக் கண்டனர். மேலும், ஐரோப்பிய சந்தைகளில் எரிவாயு விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

உக்ரேனுக்கு எதிரான கிரெம்ளினின் போர் உள்நாட்டில் வர்க்கப் போருடன் சேர்ந்துவிடும் என்பதற்கான தெளிவான அறிகுறியாக, தாக்குதல் தொடங்கப்பட்டதும் உள்நாட்டில் புட்டினின் முதல் நடவடிக்கை பெருவணிகத் தலைவர்களை அவர் சந்தித்ததில் இருந்தது. போருக்குச் செல்வதற்கான தனது முடிவைப் புரிந்து கொள்ளுமாறு தன்னலக்குழுக்களிடம் முறையிட்டு, “உங்களுக்கு நல்ல நிலைமைகளை ஏற்படுத்துவதான, அரசாங்க பணியின் ஒரு பகுதியாக இதை நான் பார்க்கிறேன்… [பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திற்கு] ஒரே ஒரு பதில் மட்டுமே இருக்க முடியும்: அதாவது, தொழில் முனைவோர் நடவடிக்கைக்கு அதிக சுதந்திரத்தை உறுதி செய்வதும் மற்றும் வழங்குவதும் ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.

விண்ணை முட்டும் உணவு விலைகளாலும், கோவிட்-19 நோய்தொற்றுக்களின் பயங்கரமான எழுச்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை ரஷ்ய மக்களுக்கு, இன்றைய போர் வெடிப்பு ஒரு முழுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 142 மில்லியன் மக்களில் 1 மில்லியன் மக்கள் ஏற்கனவே பெருந்தொற்றால் மடிந்துபோன நிலையில், வியாழனன்று ரஷ்யாவில் 130,000 க்கும் மேலான புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நேரப்படி காலை 5.50 மணிக்கு (9.50 p.m. EST) போரின் தொடக்கம் பற்றி அறிவித்து புட்டின் தனது உரையை வழங்கினார், இது ரஷ்யா அல்லது உக்ரேனில் உள்ள சாமானிய மக்களை விட வாஷிங்டனில் உள்ள போர் வெறியர்களுக்கு அவரது நகர்வுகளைப் பின்பற்றுவதை எளிதாக்கியது.

ரஷ்யா மற்றும் உக்ரேனின் பல சாமானிய மக்கள் மற்றும் இளைஞர்களின் இடுகைகள் உட்பட, ட்விட்டரில் நாள் முழுவதும் ரஷ்யாவில் பதிவிடப்பட்ட #нетвойне (ரஷ்ய மொழியில் ‘போர் வேண்டாம்’) என்ற ஹேஷ்டேக் மிகுந்த பிரபலமாக இருந்தது. ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்: “நான் ரஷ்யன். எங்கள் தலைவர் செய்வதைக் கண்டு நான் பயப்படுகிறேன். போர் தீவிரமாக இருக்கும் வரை வாழ்க்கையைப் பற்றிய எனது கனவுகள் அனைத்தும் மங்கிவிடும். எங்களுக்கு இது வேண்டுமா என்று என்னிடமோ அல்லது வேறு எந்த குடிமகனிடமோ எவரும் கேட்கவில்லை. உக்ரேன் ஒரு எதிரி அல்ல, போர் யோசனையை நான் வெறுக்கிறேன்.” மேலும் மற்றொருவர், “‘பெரும் தேசப்பற்று மிக்கப் போரான, இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நீங்கள் போரை நினைவுகூர வேண்டும்’ என்று குழந்தைப் பருவம் முழுவதும் எங்களுக்கு ஏன் கற்பிக்கப்படுகிறது. அந்த நினைவு இப்போது எங்கே?” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மற்றொருவர், “யாரைக் குறை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்களை குறைகூரக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். …பிராந்தியத்திற்காக மக்கள் போரை விரும்பவில்லை. அரசாங்கத்தின் விவகாரங்களில் மக்களை இழுக்காதீர்கள். தயவுசெய்து இதை நிறுத்துங்கள்” என்று எழுதினார். மேலும், 15-வயது மாணவர் ஒருவர், “எனது பாட்டிக்கு உணவும் மருந்தும் கொடுக்க முடிய வேண்டும், எனது சகோதரன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க முடிய வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், எனது நண்பர்களையும் உறவினர்களையும் இணையத்தில் சந்திக்க முடிய வேண்டும், அவர்களது வீடுகளின் மீது குண்டுகள் வீசப்படக் கூடாது. மருந்துகள் தேவையுள்ள எனது உறவினருக்கு எதிர்காலம் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அமைதி வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

மாஸ்கோவில் நடந்த போர் எதிர்ப்புப் போராட்டங்களில் சுமார் 2,000 பேரும், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பல சிறிய போராட்டங்கள் நடந்தன. ரஷ்ய அரசு வன்முறை கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கியதுடன், 1,700 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க சார்பு தாராளவாத எதிர்ப்பு, போர் குறித்து புட்டின் ஆட்சிக்கு எதிராக ஒரு ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில் பலவற்றை அது ஏற்பாடு செய்துள்ளது. புட்டின் ஆட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய சார்பு விமர்சகராக அமெரிக்கா மற்றும் பேர்லினால் நீண்டகாலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ள அலெக்ஸி நவல்னி, வியாழனன்று விசாரணைக்கு நின்றிருந்தபோது போருக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டார். ரஷ்யாவின் தன்னலக்குழு மற்றும் புட்டினுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டவரும், ரஷ்யா டுடே மற்றும் டாஸ் போன்ற அரசு ஊடகங்களின் நிருபருமான Ksenia Sobchak உட்பட, ஏராளமான அரசியல்வாதிகளும் பொது பிரமுகர்களும், போருக்கு எதிரான முறையீட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் இது குறித்து எச்சரிக்கப்பட வேண்டும்: தன்னலக்குழுவிற்குள் ஒரு ‘அமைதி’ பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக, இந்த அடுக்குகள் ரஷ்யாவை நேட்டோவுடன் நேரடியாக ஒருங்கிணைக்கவும் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவைத் தூண்டாடவும் விரும்பும் தன்னக்குழு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்றன. புட்டின் ஆட்சியைப் போலவே, 1917 அக்டோபர் புரட்சிக்கும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கும் எதிராக ஸ்ராலினிச அதிகாரத்துவம் பல தசாப்தங்களாக காட்டிய எதிர்வினையில் இருந்து அவையும் தோன்றியுள்ளன.

1991 இல் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது, ரஷ்யா மீதான பல தசாப்தங்கள் நீடித்த ஏகாதிபத்திய சுற்றிவளைப்புக்கும், புட்டின் ஆட்சியை இப்போது பேரழிவுகரமான போருக்குத் தூண்டியுள்ள ஏகாதிபத்தியத்தின் அதிகரித்து வரும் ஆத்திரமூட்டல்களுக்கும் அடித்தளத்தை உருவாக்கியது. இந்த எதிர்ப்புரட்சியில் இருந்து தோன்றிய தன்னலக்குழுவின் எந்தப் பிரிவும் தொழிலாளர்களுக்கு போர், சிக்கனம் மற்றும் ஒடுக்குமுறையைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை.

இந்த போருக்கு எதிராக ரஷ்யா, உக்ரேன் மற்றும் எல்லா இடங்களினதும் தொழிலாளர்களின் போராட்டம் என்பது, புரட்சிகர சர்வதேசியத்தின் கொள்கைகளையும், மற்றும் ஏகாதிபத்தியம், ரஷ்யா இரண்டுக்கும் மற்றும் உக்ரேனில் உள்ள தன்னலக்குழுக்களின் அனைத்து பிரிவுகளுக்கும் சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) போர் பற்றிய அதன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறது. உக்ரேன் மீதான படையெடுப்பை எதிர்ப்பதில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக முற்றிலும் பாசாங்குத்தனமான கூற்றுக்களைப் பரப்பும் அமெரிக்க/நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். …உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் போரை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளது. …எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பு சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதன் பொருள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவதாகும்.

Loading